நைஜர் - தமிழ் இலெமுரியா

5 June 2013 3:36 pm

Niger

நைஜர் மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். இது ஓர் நிலம் சூழ் நாடாகும். இதன் கிழக்கே சாடும், தெற்கே நைஜீரியா, பெனின் நாடுகளும், மேற்கே பர்கினா பசோ, மாலி நாடுகளும், வடக்கே அல்ஜீரிய, லிபியா ஆகிய நாடுகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடு நைஜர் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளதால் நைஜர் எனும் பெயர் பெற்றது. நைஜரின் தென்மேற்கே அமைந்துள்ள நியாமி ( Niamey) நகரம் இதன் தலைநகரம் ஆகும். நைஜரின் ஆட்சி மொழியாக பிரெஞ்சும், நாட்டின் தேசிய மொழியாக கௌசா, கனூரி, ஜார்மா ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. இந்நாட்டில் சிஎஃப்ஏ ஃப்ராங் என்கிற நாணயம் பயன்படுத்தப்படுகிறது. சற்றொப்ப 4,89,678 ச.மைல் பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை 2012 கணக்கெடுப்பின் படி, 1,62,74,734 மட்டுமே. நிலப்பரப்பை ஒப்பிடுகையில், மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நாடாக நைஜர் திகழ்கிறது. மேலும் நைஜரின் நிலப்பரப்பில் 80 விழுக்காடு சகாரா பாலைவனத்தால் சூழ்ந்துள்ளது. 

இன்றைய நைஜரின் சகாராப் பாலைவனப் பகுதி 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வளமிக்க புல்வெளி நிறைந்த நிலமாக இருந்தது. கி.மு 7,000 ஆம் ஆண்டு முதல் கி.மு 3,000 ஆண்டு காலவோட்டத்தில் இது பச்சை சகாரா என அழைக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மண்ணின் வளம் குறைந்து பாலைவனப் பகுதியாக மாறியது. முதன் முதலில் 15 ஆம் நூற்றாண்டில் சாங்கை (Songhai) இனத்தவர்களின் ஆட்சி நாடு முழுவதும் பரவி இருந்தது. பின்னர் 1591 ஆம் ஆண்டு மாலி நாட்டிலிருந்து இடம் பெயர்ந்த டென்டி (Dendi) இனத்தவர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக விளங்கினர். இவர்களைத் தொடர்ந்து கௌசா, புலா, கனூரி போன்ற பல்வேறு இனங்கள் ஆட்சி புரிந்தனர். 

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதன் முதலாக ஐரோப்பியர்கள் ஆய்வுப் பயணம் மேற்கொள்வதற்காக நைஜர் வந்தனர். 1904 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி வரம்பு மேற்கு ஆப்பிரிக்கா வரை நீண்டது. பின்னர் 1922 ஆம் ஆண்டில் நைஜர் முழுவதும் பிரெஞ்சின் காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தது. 1946 ஆம் ஆண்டு பிரெஞ்சின் கடல் கடந்த ஆட்சி மண்டலமாக நைஜர் விளங்கியது. இறுதியில் டிசம்பர் 4, 1958 ஆம் ஆண்டு பிரெஞ்சின் தன்னாட்சி உரிமை பெற்ற குடியரசு நாடாக உருவானது. எனினும் ஆகஸ்ட் 3, 1960 ஆம் ஆண்டுதான் பிரெஞ்சின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, நைஜர் முழு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஐந்து அரசமைப்புச் சட்டத்தின் கீழும், 3 இராணுவ ஆட்சிகளின் கீழும் நைஜிரியர்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர் நைஜரின் புதிய அரசமைப்புச் சட்டத்தை 1999 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில், இராணுவத் தலைவரால் பிரகடனம் செய்யப்பட்டது. இறுதியில் 2010 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியின் மூலம், தற்போது நைஜர் ஓர் பலகட்சிக் குடியரசு நாடாக விளங்குகிறது.

நைஜர் அதன் தலைநகர் நியாமி உட்பட ஏழு மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. அந்த ஏழு மாகாணங்களையும் 36 இலாக்காக்களாகவும், அந்த 36 இலாக்காக்களை 265 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

நைஜர் வளரும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் இந்நாடு ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சிப் பட்டியலில், தொடர்ந்து பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. 2011 அளவீட்டின் படி, 187 நாடுகள் அடங்கிய தனிமனித வளர்ச்சிப் பட்டியலில், நைஜர் 186 வது இடத்தில் உள்ளது. நாட்டின் பாலைவனமற்ற பிற பகுதிகளில் அடிக்கடி நிகழும் வறட்சியினாலும், பாலைவனமாதலாலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நைஜரின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலும், சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும், யுரேனியம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது. நாட்டைச் சுற்றி நிலம் சூழ்ந்துள்ள நிலை, பாலை நிலம், மோசமானக் கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத்திட்டங்கள், சுற்றுச் சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கிப் போயுள்ளது.

10 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வட ஆப்பிரிக்காவிலிருந்து பல்வேறு இசுலாமியர்கள் நைஜர் முழுவதும் குடியேறி, பரவ ஆரம்பித்தனர். தற்போது நைஜரில் இசுலாமியர்கள் 93 விழுக்காடும், ஆன்மவாதிகள் (அனிமிஸ்ட்) 6 விழுக்காடும், ஏனைய மக்கள் கிறித்தவர்களாகவும், பிற மதத்தவர்களாகவும் வாழ்கின்றனர். அதாவது நைஜரின் மக்கள் தொகையில் 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இசுலாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். ஏனைய ஆன்மவாதிகளும், கிறித்தவர்களும் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் பொழுது, ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவர்.

நைஜரின் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் அண்டை நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து குடியேறிய கௌசா என்ற இனக் குழுக்களும், மாலி நாட்டிலிருந்து குடிபெயர்ந்த ஜர்மா – சாங்கை என்கிற இன மக்களும் வசிக்கின்றனர். ஏனைய 20 விழுக்காடு மக்கள் ஃபுலானி, கனூரி, அரப்ஸ் போன்ற நாடோடி இனத்தைச் சார்ந்தவர்கள். நைஜரில் சற்றொப்ப 8 விழுக்காடு (8,00,000) மக்கள் அடிமைகளாக வாழ்கின்றனர் என்பதை இந்நாட்டின் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

உலக நாடுகளை ஒப்பிடுகையில், நைஜர் மக்களின் கல்வியறிவு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. 2005 கணக்கெடுப்பின் படி, அந்நாட்டின் கல்வியறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை 28.7 விழுக்காடு மட்டுமே. இதில் ஆண்கள் 42.9%, பெண்கள் 15.1% ஆகும். நாத்து நடுதல், அறுவடை செய்தல் போன்ற காலங்களில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விட வேலைக்குச் செல்லவே நிர்பந்திக்கப் படுகின்றனர். மேலும், நாடோடி இனத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி பயில அனுமதிக்கப் படுவதில்லை. 

நைஜரின் சாலைப் போக்குவரத்து முறைகள் காலனித்துவ ஆட்சியின் போது (1899 – 1960) ஒழுங்கு படுத்தப்பட்டது. நகர் புறங்களில் நவீன பேருந்து வசதிகள் இருந்தாலும், நாட்டின் தெற்குப் பகுதியில் பெரும்பாலும் கால்நடைப் போக்குவரத்து, இழுவண்டி போக்குவரத்து, படகு போக்குவரத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கின்றனர். நைஜர் ஆறு போதிய ஆழமின்மையால் ஆற்றுப் போக்குவரத்தை பெரிய அளவில் ஏற்படுத்த முடியவில்லை. மேலும் நைஜர் முழுவதையும் சகாரா பாலைவனம் சூழ்ந்துள்ளதால் ஒட்டகப் போக்குவரத்து பெரும்பான்மையாக விளங்குகின்றது.

நைஜரின் ஏற்றுமதிப் பொருளாக இரும்பு தாது, நிலக்கரி, ஜிப்சம் போன்ற இயற்கை வளங்களும், யுரேனியமும் திகழ்கின்றன. நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் யுரேனியத்தின் அளவு மட்டுமே 72 விழுக்காடு ஆகும். நைஜரின் 53 விழுக்காடு மக்கள் வேளாண்மை தொழிலிலும், 29 விழுக்காடு மக்கள் கால்நடை வளர்ப்புத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நன்கு உழுது பயிரிடுவதற்கேற்ற சாகுபடி நிலம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 15 விழுக்காடு மட்டுமே.

நைஜர் ஓர் நிலம் சூழ் நாடாதலாலும், பாலைவனப் பகுதியாக இருப்பதாலும் அதன் தட்பவெப்ப நிலை மிகுந்த வெப்பம் நிறைந்ததாக காணப்படுகிறது. நாட்டின் தெற்குப் பகுதியில் நைஜர் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் மிகுந்த வெப்பத்துடன் காணப்படுகிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி