உயிரையேக் கொடுத்த உத்தமர் - தமிழ் இலெமுரியா

11 November 2013 12:11 am

மகாராட்டிரா மக்களிடம் மூடநம்பிக்கையை எதிர்த்து, பகுத்தறிவுப் பரப்புரைச் செய்து வந்த பகுத்தறிவுப் போராளி, சமுதாயச் சிந்தனையாளர் நரேந்திர தபோல்கர் (65) மதவெறியின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி வீரச்சாவு அடைந்தார். தபோல்கர் தனது மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு,1989 ஆம் ஆண்டு முதல் மக்களிடையே மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு பரப்புரை செய்து வந்தார். கடவுள், மூடநம்பிக்கையின் பெயரால் நடக்கும் சுரண்டல் மோசடிகளை எதிர்த்து வந்தார்.  கிராமங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் அவரது பகுத்தறிவு பரப்புரையின் தாக்கத்தால் வலிமையான ஆதரவுத் தளம் உருவானது. பார்வையற்றவர்களுக்கு தனது அற்புத சக்தியால் பார்வை உண்டாக்க முடியும் என்று ஏமாற்றி வந்த ஒரு மனிதருக்கு நேரில் தன்னுடன் விவாதிக்க தபோல்கர் சவால் விடுத்தார். மேலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண்ணுரிமைகளுக்கும் அவர் போராடினார். நாசிக் நகரில் சாதிக்கு வெளியே காதல் திருமணம் செய்ய விரும்பிய ஒரு பெண்ணை, அந்தத் தந்தையே கொலை செய்துவிட வேண்டும் என்று ஒரு சாதி பஞ்சாயத்து உத்தரவிட, கும்கர்க்கார் என்ற அந்த தந்தையே மகளை கொலை செய்து விட்டான். இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விவாதத்தில் பேசிய தபோல்கர், சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்ததோடு, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாக தாம் அண்மையில் நடத்திய மாநாடு குறித்தும் கருத்துகளைப் பதிவு செய்தார். நரபலி, மாயமந்திரம், பேய், பில்லி சூன்யம் போன்ற மூடநம்பிக்கைகளைத் தடை செய்யவும், அதில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் மகாராட்டிராவில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு தபோல்கர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். 2011 ஆம் ஆண்டு ஆக.10 ஆம் நாள் மராட்டிய மாநில சட்டமன்றத்தில் நரபலி, பில்லி சூன்யம் போன்றவற்றை தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பெற்றது. கடுமையான எதிர்ப்புகளினால் 24 முறை திருத்தப்பட்டு நிறைவேற்றப்படாமலேயே இருந்தது. இந்த மசோதாவின்படி பில்லி சூன்யம், தாயத்து மந்திரம் போன்ற மோசடிகளில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும். விலங்குகளைப் பலியிடுதல், நோய் தீர்ப்பதற்கு ‘அற்புத சிகிச்சை’ முறைகளை இந்த மசோதா தடை செய்கிறது.  தபோல்கர் படுகொலையைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அழுத்தம் வந்ததைத் தொடர்ந்து,  ஆகசுடு 21 ஆம் நாள் மராட்டிய அமைச்சரவைக் கூடி, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. அவர் உருவாக்கித் தந்த மசோதாவை அவரது வீரச்சாவின் நினைவாக மராட்டிய அரசு தற்போது சட்டமாக்கியுள்ளது. இந்தச் சட்டம் தபோல்கர் தனது இறப்பின் வழியாக மராட்டிய மக்களுக்கு பெற்றுத் தந்துள்ள வெற்றியாகக் கருதப்படுகிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி