16 October 2016 12:00 pm
அல்லும் பகலும் பாடுபட்டு என்ன பயன். நாலு காசு கையில தங்க மாட்டேங்குது" என்று புலம்பும் உழைப்பாளிகளின் சொற்களை நாம் கேட்டிருப்போம். இந்த அல்லும் பகலும் என்பதில் அல் என்பது இருள், இருட்டைக் குறிக்கும். பகல் என்பது வெளிச்சத்தைக் குறிக்கும், இவற்றில் பகல் என்ற சொல்லைப்பற்றிக் காண்போம். எல் என்றால் கதிரவன். பண்டைத் தமிழர்கள் முதன் முதலில் வணங்கியது இயற்கையையே. அவற்றில் ஒன்றுதான் எல். எல்லை வணங்கிய மக்கள் வாழ்ந்தப் பகுதி எல்லம். எல் + அம் = எல்லம் (அம் பெருமைப் பெயரொட்டு. தமிழ் – தமிழம் என்பது போன்று). பின்பு எல்லம் மருவி ஈழம் ஆயிற்று. எல் மருவி எழு ஆகியது என்றும் எழு பின்பு ஈழம் ஆகியது என்றும் கூறுவதுண்டு. எல்லை வணங்கிய மக்கள் தம் பிறங்கடைகளுக்கு (வாரிசு) எல்லப்பன், எல்லம்மாள், எல்லீசன் எனப் பெயரிட்டு அழைத்தனர். இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் "எல்லே இலக்கம்’’ என்று கூறியுள்ளதைக் காண்க. எல்லானது இருளை நீக்கி ஒளி தருவதால் அதன் ஒளிக்கதிர்கள் பரவும் நேரத்தை பகல் என்றனர். அது எவ்வாறெனின், வகுத்தல் என்றால் இரண்டாகப் பிளத்தல் அல்லது பகுத்தல். தலையின் முடியை இரண்டாகப் பிரிப்பதற்கு ‘வகிடு‘ என்ற சொல் வழங்குதலைக் காண்க. இரவைப் பகுத்துக் கொண்டு எல் வெளி வருவதால் அது பகு + எல் = பகல் என்றானது. அதிகாலையில் எல் வெளிப்படும் நேரம் மங்கிருட்டாக இருக்கும். எல்லும் இருளும் கூடும் வேளை சந்தி என்று அழைக்கப்பட்டது. சந்தியில் சகரமெய் கெட அந்தி என்றும் வழங்கும். சந்திப் பொழுதில் செய்யும் வணக்கம் ‘சந்தியா வந்தனம்‘. ஒரு நாளில் காலை மாலை என இரு முறை மங்கிருட்டாக இருப்பதால் காலை அந்தியா அல்லது மாலை அந்தியா என்பதில் குழப்பம் ஏற்படவே இரண்டிற்கும் வேறுபாடு அறிய வேண்டி தனித்தனிச் சொற்களை அமைத்தனர். காலை அந்தியில் நேரம் செல்லச்செல்ல வானம் வெளுத்துக் காணப்படுவதால் அதை வெள்ளந்தி என்றும் மாலை அந்தியில் வானம் சிவந்திருப்பதால் அதை செவ்வந்தி என்றும் அழைத்தனர். உள்ளதை மறைக்காது பேசுபவரை வெள்ளந்தி என்று கூறுதலைக் காண்க. செவ்வந்தி வேளையில் பூக்கும் பூ செவ்வந்திப்பூ. செவ்வந்திப்பூவை சாமந்திப்பூ என்றும் கூறுகின்றனர். இது தவறு. எல் எழுந்து ஒளி தரும் நேரம் பகல் என்றானது போல் அது சாயும் நேரமும் அதன் பெயராலே வழங்கப் படும். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என நாம் இன்று வகுத்திருப்பினும் பண்டைத் தமிழர் அவற்றை 6 சிறு பொழுதுகளாகப் பிரித்தனர். அவை வருமாறு:காலை – 6 மணிமுதல் 10 மணி வரைநண்பகல் – 10 மணிமுதல் 2 மணி வரைஎற்பாடு – 2 மணிமுதல் 6 மணி வரைமாலை - 6 மணிமுதல் 10 மணி வரையாமம் – இரவு 10 மணிமுதல் 2 மணி வரைவைகறை – 2 மணி முதல் 6 மணிவரை இந்த 6 பொழுதுகளில் காலை முடிந்து நண்பகல் 2 மணிவரை வானின் உச்சிக்கு வந்த எல் அதன் பின்பு படும். படுதல் = சாய்தல், சரிவு. அன்றாடம் நாம் உடலை சாய்த்து அஃதாவது இரவு படுத்து எழுதலை நோக்குக. அவ்வாறு எல் படும் நேரம் எல்படு – எற்படு – எற்பாடு என்றானது. எற்பாடு முடிந்து மாலை இருட்டத் துவங்கி விடுவதால் பணி நிமித்தமாக வீட்டினின்று வெளியில் சென்ற மாந்தரும் மீண்டும் இல்லம் திரும்புவது இயல்பு. உழைப்பினின்று ஓய்வு வேண்டி இல்லம் திரும்பிய மாந்தர் அவர்தம் விழாவினையும் மாலைப் பொழுதினில் வைத்தனர். அவ்வாறு அவர் எடுக்கும் விழாவிற்கு வேண்டிய ஏந்தல்களை முன்கூட்டியே செய்ய வேண்டும். அதுவும் மாலை நேரத்திற்கு முன்பே எற்படும் நேரத்தில் முடித்துவிட வேண்டும் என்பதால் அதை ஏற்பாடு என்று கூறினர். எற்பாடு – ஏற்பாடு. "நிகழ்ச்சிக்கு வேண்டிய ஏற்பாடு ஆகி விட்டதா" என்ற உலக வழக்கைக் காண்க. "எற்படக் கண்போல் மலர்ந்த" (திருமுருகாற்றுப்படை -74) என்பதிலும் "எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி" (புறநானூறு-170) என்பதிலும் உள்ள எல்லின் பொருளுண்மையைக் காண்க.வெய்தல் என்றால் வெம்மை, காய்தல் என்ற பொருளுண்டு. அவ்வாறு வெய்கின்ற எல்லிலிருந்து புறப்படும் கதிரொளியை வெய் + எல் = வெய்யில் – வெயில் என்று கூறுவதுண்டு. ஒருவர் மற்றவரைத் திட்டுவதை ‘வெய்தல்’ என்று கூறும் உலக வழக்கைக் காண்க. எல்லிலிருந்து புறப்படும் கதிர்கள் ஏழு வண்ணங்கள் உடையன. இந்த ஏழு வண்ணங்களையும் பிந்தையர் ஏழு குதிரைகள் எனப் புனைந்துரைத்து எல்லிற்கும் தம்மைப் போன்ற மானிட உருவைக் கற்பித்து அதற்கு சூரியக் கடவுள் என்றும் பெயரிட்டு அந்தச் சூரியரும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருவதாக கற்பனைக் கதையை உலவ விட்டனர். ஆதலால் வடவிந்தியாவில் ஒரியா மாநிலத்தில் கோனார்க் என்னுமிடத்தில் சூரியனாருக்கு தனியாக கோயிலும் எழுப்பினர். அக்கொள்கை வழி தமிழகத்திலும் சிலவிடங்களில் சூரியனாருக்கு கோயில் அமைத்து விட்டனர். ஆனால் பழந்தமிழர் எல் என்பதை தம்மைப் போன்று மனிதராக கருதவில்லை. அதைப் போற்றுதற்கு உரியதாகவே கருதினர். இன்றும் தமிழகத்தில் எல் என்னும் கதிரோனை தை மாதம் முதல்நாள் பொங்கலிட்டு வணங்கி இயற்கையைப் போற்றுதலைக் காண்க. "கனைக்கதிர் கனலியை காமுற லியைவதோ" என்ற கலித்தொகை பாடலால் கதிரோனை பழந்தமிழர் வணங்கிப் போற்றியதும் அறியப்படும். – நெல்லை பைந்தமிழ், மும்பை"