18 August 2015 11:26 am
நமது நாட்டின் முதல் தொழில் உழவுத்தொழில் (வேளாண்மை) என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதற்கு அடுத்த நிலையில் உள்ளது நெசவுத் தொழில் என்பதும் நாம் யாவரும் அறிந்த ஒன்று. எனினும் வேளாண் தொழிலை விட நெசவுத் தொழிலிலேயே பிற மொழிக் கலப்பின்றி, தனித் தமிழில் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. இன்றும் நெசவுக் கலைஞர்கள் தங்களின் கைத்தறியின் கருவிகளை குறிப்பிடும்போது தமிழ்ச் சொல்லைத்தான் வழங்கி வருகிறார்கள். இதை அறியும் போது தான் அந்தத் தொழில் எவ்வளவு பழமையானது எனும் உண்மை விளங்குகிறது. வேலை செய்யா சோம் பேறியை – நாடா பளு" என்றும் நேரத்தின் அருமையை – "எட்டிப் பார்த்தால் எட்டு இழை குறையும்" என்றும் கிராமப் புறத்தில் கூறுவதைக் கேட்டிருக்கலாம். இவை நெசவுத் தொழில் சார்ந்து வந்த பழமொழிகளே ஆகும். அதே போல் முந்தானையை நெய்யும் போது – "மடி நெசவு" என்றும் பட்டுச் சேலைகளில் இறுதியில் நூல்களினால் சிறு சிறு முடிச்சுகளை பார்க்கலாம் அவைகளை – "முந்திமுடிச்சு" என்றும் தறியின் கீழே கால்களை கொண்டு மிதிக்க "மிதிக்கட்டை" பொருத்தி இருப்பார்கள் அதற்கு குழி போன்று அமைத்திடுவதால் அதற்கு "கால்குழி" என்றும் சொல்வதுண்டு. இந்த பெயர்கள் இன்றும் காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, குடியாத்தம் மற்றும் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் பரவலாக சொல் வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன. சற்றோப்ப இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலண்டனில் கைத்தறி பிறந்ததாக வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழகத்தின் செவி வழிக்கதைகளாக திருவள்ளுவர் கைத்தறி நெசவு செய்ததாகவும் கூறுவதுண்டு.அப்படி நாம் நோக்கும் போது திருவள்ளுவர் காலம் இரண்டாயிரமாண்டுக்கு முந்தைய காலம் அல்லவா! நாம் தான் கைத்தறியை உலகிக்கு அறிமுகப்படுத்தினோமா? வரலாற்று ஆய்வாளர்கள்தான் கூறவேண்டும். நெசவுக் கருவிகளின் தமிழ்ப் பெயர்களில் சில 1. பட்டுத் தறி / நூல் தறி 2. பாவு நூல் / நெசவு நெய்தல் 3. ஊடை நூல் 4. பரூவட்டம் 5. குழல் 6. விழுது 7. அச்சு / அச்சில் பிணைப்பது 8. இழையீட்டி 9. சுழட்டி 10. படை மரம் 11. பெட்டிப் பலகை 12. காது கட்டை 13. குஞ்சம் 14. சிலம்பை 15. பொந்து 16. இராட்டிணம் 17. சீர் உருளை 18. முன் தண்டு 19. கரக் கோல் 20. மிதிக்கட்டை 21. தத்திக் கயிறு 22. தார் நாடா இப்படி பல கருவிகள் ஏராளமான வார்த்தைகளில் நிரம்ப உள்ளன. - எழிலன் "