தமிழ் அறிஞர்கள் - தமிழ் இலெமுரியா

16 March 2014 12:26 am

டாக்டர் மா.இராசமாணிக்கனார்: (1907 – 1967) பேராசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் பயின்று பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பின் படிப்படியாக உயர்ந்து இறுதியாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், தமிழ் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட அரிய நூல்களையும் எழுதிக் குவித்தவர். கோவில் என்னும் சொல் சங்க காலத்தில் தெய்வங்கள் உறையும் கட்டடத்தையும் அரசன் வாழ்ந்த அரண்மனையையும் குறித்தது. இதனால் அரசன் வாழ்ந்த அரண்மனையும் கோவிலும் பல பகுதிகளில் ஒத்திருந்தன என்று கொள்ளுதல் பொருந்தும். இரண்டும் சுற்று மதில்களையுடையவை; உயர்ந்த வாயில்களை உடையவை; வாயில்கள் மீது உயர்ந்த கோபுரங்களைப் பெற்றவை; வாயில்களுக்குத் துருப் பிடியாமல் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சாந்து பூசப்பெற்ற மாடங்கள் உயரமாகக் கட்டப்பட்டிருந்தன".- ( இவருடைய சைவசமயம் என்ற நூலிலிருந்து)டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார்: (1907 – 1967) கும்பகோணத்தில் தோன்றி முறையாகத் தமிழ் பயின்று பேராசிரியரானவர் டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றிய இவர் தம் கருத்தை அஞ்சாது எடுத்துக் கூறிய சொல்வல்லார். மொழியியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று ஆங்கில – தமிழ் அகராதியொன்றை மிக விரிவான முறையில் தொகுத்தார். இறுதியாக மதுரை தியாகராசர் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார். "தொழுது உண்ணுஞ் சுவை நிரம்பிய பொருளை விட, உழுது உண்ணும் சுவை இல்லாத பொருளும் இனியது என்பது தமிழர் கொள்கை. சிறிதளவு கூழே பெறினும், அவரவரது முயற்சியாலும் அவரவரது உழைப்பாலும் பெற்றால், தன் முயற்சியின்றி கிடைக்கும் அமிழ்தத்தினும் அது சிறந்தது என்பது தொன்று தொட்டு வரும் தமிழர் கருத்து. தெண்ணீர் அடுபுற்கை யாயினும்தாள் தந்தது உண்டலி னூங்கினியது இல்என்றார் திருவள்ளுவர். உழுது உண்டு வாழ்கின்றவரே "வாழ்பவர்" எனச் சிறப்பித்துச் சொல்லத்தக்கவ ரென்பது அவர் கருத்து".வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்: (1870 – 1903) வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் தம் பெயரைப் "பரிதிமாற் கலைஞன்" என மாற்றிக் கொண்ட தனித் தமிழ்ப் பற்றாளர். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். "தமிழ் மொழி வரலாறு" போன்ற ஆராய்ச்சி நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர். "வடமொழி, இலத்தீன், கிரேக்கம் முதலியன போலத் தமிழ் மொழியும் "உயர்தனிச் செம்மொழியாகுமாறு சிறிது காட்டுவாம். தான் வழங்கு நாட்டின் கண்ணுள்ள பலமொழிகட்குந் தலைமையும் அவற்றினும் மிக்கமே தகவுடைமையுள்ள மொழியே "உயர் மொழி". இவ்விலக்கணத்தான் ஆராயமிடத்துத் தமிழ், தெலுங்கு முதலியவற்றிற் கெல்லாந் தலைமையும் அவற்றினும் மிக்கமே தகவும் உடமையால் தானும் உயர்மொழியே என்க. தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றி தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே "தனிமொழி" எனப்படும். தான் பிற மொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொயினுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்குதலொல்லா; மற்றுத் தமிழ் மொழி அவற்றினுதவி யில்லாமலே சிறிது மிடர் படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்க வல்லது".பா.வே.மாணிக்க நாயக்கர்: (1871 – 1931) சென்னை அரசின் அளவைப் பெரும்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாயக்கர் தமிழ்த் தாய்க்குத் தொண்டு புரிந்த தலைமகனாவார். இவரது நுண்மாணுமை புலம் யாவராலும் வியக்கத்தக்கது. சேலத்தில் பிறந்தவர். ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் கண்ணுள்ள எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று காட்டியவர். அறிவியற் கலைச் சொற்களுக்குத் தனித் தமிழ்ச் சொற்கள் அமைத்தவர். தமிழலகைத் தொடர், தமிழ்மறை விளக்கம் போன்ற நூல்களைப் படைத்தவர். "ஆங்கிலத்தில் ‘மூன்று வெண் காக்கைகள்’ காதைபோலச் சில ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லக் கேட்டுச் சொல்லக் கேட்டு நம்க்கெட்டிய விவரங்கள், அகத்தியர் கடலைக்குடித்தல், அகப்பொருளைக் கடவுளே எழுதி படியிடுக்கில் நுழைத்து வைத்தல், குதிரை மாளக் கொண்டு போதல், சங்கப் பலகை தானே விரிதல், தானே சுருங்கி இருந்த இடம் தெரியாமல் போதல் முதலிய இயற்கையில் நிகழாதவைகளும் உட்படுத்தி வருவதால், அவைகளை ஆர்க்கியாலாஜிகல் முறையில் அவ்வாறே ஏற்றுக் கொள்ளவியலா திருக்கின்றது. இக்கேள்வியில் வந்த பழங் காதைகளில் எப்பகுதிகளைத் தள்ளுவது, எப்பகுதிகளை ஏற்று கொள்வதென்பது அவரவர் உள்ளப்போக்கை சார்ந்ததாக இருக்கின்றதேயொழிய, தீர்மானமாக இதுதான் கொள்ளக் கடவதென்று சொல்ல ஒப்புதல் கிடைப்பரிது"."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி