தமிழ் அறிஞர்கள் - தமிழ் இலெமுரியா

14 April 2014 7:26 am

இராமலிங்க அடிகள்: (1823 – 1874)சமய நெறியில் சமரசத்தைப் பரப்ப முன் வந்த பெரியார் இராமலிங்க அடிகள். இறைவன் மீது இவர் பாடிய பாடல்கள் அருட்பா என்ற பெயரில் தொகுக்கப் பெற்றுள்ளன. ஆற்றொழுக்கான உரைநடை நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் தம் கடிதங்கள் திருமுகப் பகுதியில் தொகுக்கப் பெற்றுள்ளன. வடலூரில் சமரச சன்மார்க்க சங்கத்திற்கெனத் தனிமனை வகுத்து இறைத் தொண்டாற்றி வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருட்கவியென இவரைக் குறிப்பிடலாம்.வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினா லிளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்நீடிய பிணியால் வருந்துகின் றோரென்நேருறக் கண்டுளந் துடித்தேன்ஈடின்மா னிகளா யேழைக ளாய்நெஞ்சிளைத்தவர் தமைக் கண்டே யிளைத்தேன்…" - (அருட்பா- பிள்ளை பெரு விண்ணப்பம்)திரு.வி.கல்யாண சுந்தரனார்: (1883 – 1953) சென்னை இராயப்பேட்டை திரு.வி.கல்லியான சுந்தர முதலியார் செந்தமிழ்த் தென்றல். இவர் சென்னை இராயப்பேட்டை வெசிலிக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராய் இருந்தவர். தமிழ்ப் புலவர் குழாத்துள் அரசியலியக்கங்களில், மிகவும் பயின்றவர் இவரே. இவர் "தேசபக்தன்" செய்தித் தாளின் ஆசிரியராகவும், நவசக்தி எனும் செய்தித் தாளின் தலைவராகவும் இருந்தவர். இவர் இயற்றிய செவ்விய உரை நூல்கள் "பெண்ணின் பெருமை", திருக்குறள் விரிவுரை, முருகன் அல்லது அழகு முதலியன. இவரெழுதிய நூல்கள் தமிழறிஞர்கள் பாரட்டத்தக்கன. "பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள், உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள். நமது நாடு நாடாயிருக்கிறதா? நம் அன்னைக்கு முடியுண்டா? உடையுண்டா? போதிய உணவுண்டா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயந்துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை, உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன; எரிக்கின்றன; இந்நோய்களால் அவள் குருதியோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இள ஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்து. அவ்வொளி வீசி எழுங்கள்." - (இளமை விருந்து)ந.மு.வேங்கடசாமி நாட்டார்: (1884 – 1944)அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் புலவராய் விளங்கிய நாவலர் பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் புரைதீர்ந்த தமிழ்ப் பெரும் புலமை பெற்றவர். இவர் மாணவர்களுக்குக் கல்வி போதிப்பதில் ஒப்பற ஊக்கமும், திறமையும் பெற்று விளங்கியவர். சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவர். இக்கால ஆராய்ச்சியிலும் தேர்ந்து விளங்கினார். நல்லிசைப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை நுண்ணிதின் ஆய்ந்து தனித்தனி நூல்கள் எழுதியுள்ளார். இவரியற்றிய சிலப்பதிகார உரையும், அகநானூறு உரையும் வெளி வந்துள்ளன. செந்தமிழ் விளக்கும் பெரும் தொண்டினையே தமது வாழ்வாகவும், வைப்பாகவும் கருதி வாழ்ந்தவர்.  "மக்கள் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனமாயிருப்பது மொழி என்பதே. மொழியே மக்களை மாக்களினின்று வேறுபடுத்துவதாகும். இப்பொழுது உலக மக்களால் எண்ணற்ற மொழிகள் பேசப்படுகின்றன. எம்மொழி எவ்வினத்தவரால் வழிவழியாகப் பேசப்படுகின்றதோ அம்மொழி அவ்வினத்தவருக்குத் தாய்மொழி என்று சொல்லப்படும். "காக்கைக்குந் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பது போல் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி மதிப்பிற்குரியதே. தாய்மொழியிடத்துப் பற்றில்லா தவரும் மக்கள் எனத் தகுவரோ?" – (நமது தாய்மொழி)உ.வே.சாமிநாதையர்: (1855 – 1942) மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்று, கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களிலுள்ள அரசாங்கக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றி, மகாமகோபாத்தியாய, டாக்டர் என்னும் பட்டங்களைப் பெற்று வாழ்ந்தவர், உ.வே.சாமிநாதையர். நீருக்கும், நெருப்புக்கும் இரையாகவிருந்த தமிழைத் தடுத்துக் காப்பாற்றிய தமிழ்த் தாயின் தவப்புதல்வர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கியத்தை அச்சு வாகனத்திலேற்றியவர். எட்டுத் தொகைகளில் ஐந்து நூல்களையும், பத்துப்பாட்டையும், காப்பிய நூல்களையும் மற்றும் எண்ணற்ற இலக்கிய நூல்களையும் செம்மையான முறையில் பதிப்பித்தவர். பல உரைநடை நூல்களைப் படைத்தவர்.  "காலத்துக்கும் நாகரிகத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றபடி மக்களுடைய கருத்துகளும் விருப்பங்களும் மாறி வருகின்றன. செய்யுள் நூல்களே எங்கும் பரவி வசனநடை நூல்கள் அருகி வழங்கிய காலம் ஒன்று. இப்போது செய்யுள் நூல்கள் குறைந்தும், வசன நூல்கள் அதிகமாகவும் வழங்கி வருகின்றன. காரணம் செய்யுளைக் காட்டிலும் வசனம் மூலமாக மக்கள் விடயங்களை சுலபமாகத் தெரிந்து கொள்ள இயல்வதுதான். ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான வசன நூல்கள் பல துறைகளிலும் இயற்றப்பெற்று வெளியாகி வருகின்றன. என் இளமை முதல் என் ஞாபகம் முழுவதும் செய்யுள் நூல்களிலேயே ஊன்றி யிருந்தமையால் வசன நூல்களில் என் கருத்து அதிகமாகச் செல்லவில்லை"."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி