தமிழ் அறிஞர்கள் - தமிழ் இலெமுரியா

14 February 2014 8:48 am

அண்மையில் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற இளம் நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று வ.உ.சி. என்பவர் யார்? இளம் நடிகையின் பதில்: அவர் ஒரு பாடலாசிரியர்; திரு.வி.க. என்றால் யார்? என்ற மற்றொரு கேள்விக்கு இளம் நடிகையின் பதில் அவர் ஒரு இயக்குநர் என்பதாகும். தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் தமிழர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுபோன்று விடையளிக்கப்படுவதும், அந்த விடைகளை விளையாட்டாக எடுத்துக் கொண்டு சிரித்து மகிழும் கூட்டமும் நிரம்பி வருவது வேதனைக்குரிய ஒன்றாகும். தமிழுக்காக, தமிழர்களின் நலனுக்காக தொண்டாற்றிய எண்ணற்ற தமிழறிஞர்களின் நினைவைப் போற்றி புதிய தலைமுறையினருக்கு புரிய வைப்பது நம் கடமை என்கிற நோக்கில் ஒவ்வொரு இதழிலும் தமிழ்ச் சான்றோர்கள் குறித்து ஒரு சிறு குறிப்பு வெளியிடப்படும். – ஆசிரியர்.விபுலானந்தர்: (1892 – 1947) சுவாமி விபுலானந்தர் என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்பெற்ற இவர் இலங்கை, யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதியில் உள்ள காரைத் தீவில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும். இவர் தனது பதினாறாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மேல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இலண்டன் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் தேர்வில் வென்றவர். தமிழ் மீது கொண்ட காதலால் மதுரைத் தமிழ்ச் சங்க பண்டிதர் தேர்வினையும் முடித்தார். 1924 ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் ஆனார். தமிழறிஞர்கள் இவரை விபுலானந்த அடிகள் என்றழைத்தனர். ஆங்கிலத்திலும், தமிழிலும் வளமான எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் பெற்று பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவரது பெரு முயற்சி பண்டைய தமிழர் கண்ட யாழை மீண்டும் உயிர்ப்பிக்க ஊக்கியது. பண்டைத் தமிழிசையின் பெருமைகளையும், தனித்த இயல்புகளையும் எடுத்துக்காட்டும் வகையில் யாழ் நூல்" என்னும் அரிய இசையாராச்சி நூலை எழுதியவராவார். இவர் சிறந்த சொற்பொழிவாளர். "யாழ் நூல்" அரங்கேற்றம் பெற்ற அடுத்த திங்கள் 19.7.1947 அன்று அடிகளார் மறைந்தார்.தி.நீலாம்பிகை அம்மையார்: (1903 – 1945) திருவரங்க நீலாம்பிகை அம்மையார் தமிழறிஞர் மறைமலையடிகளின் மகளாவார். தன் தந்தையைப் போன்ற மொழியறிவு நிரம்பியவர். தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பிய இவர், தமிழில் மிகுந்து கலந்திருந்த பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து தனித் தமிழ் நடையைப் பரப்பினார். இதற்கு உதவியாக "வடசொற்றமிழ் அகரவரிசை", வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்கிற நூல்களை வெளியிட்டார். தனித்தமிழிலேயே முற்றிலும் எழுதப்பெற்ற இவரது "தனித் தமிழ் கட்டுரை" என்னும் உரைநடை நூல் தமிழில் கட்டுரை எழுதுவதற்கு முன்மாதிரியான நூலாகும். இவர் எழுதிய "முப்பெண்கள் வரலாறு", பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்பவையும் தனித்தமிழ் நூல்களாகும். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சராக விளங்கிய திருவரங்கனார் இவருடைய வாழ்க்கைத் துணைவராவார். நாற்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தாலும் தமிழ் மொழியின் மேன்மைக்கு இவர் பதித்துள்ள தடம் வரலாற்றில் மறையாது. 1933 ஆம் ஆண்டு நடைபெற்ற "தமிழ்நாடு பெண்கள் மாநாட்டுக்குத் தலைமையேற்ற பகுத்தறிவு தந்தை ஈ.வே.ராமசாமிக்கு "பெரியார்" என்னும் பட்டத்தை வழங்கியவராவார்.செய்கு தம்பிப் பாவலர்: (1876 – 1950) நாஞ்சில் நன்னாட்டினரான செய்கு தம்பிப் பாவலர் சதாவதானி, தமிழ் பெரும்புலவர், கலை கடல். வடலூர் வள்ளலாரின் அருட்பாவை மருட்பாவென்று மறுத்தோரை எதிர்த்து "அருட்பா அருட்பாவே" என்று நிலை நாட்டியவர். சீறாப் புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர். கேட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், அழகப்பக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் "சதாவதானம்" என்னும் கலையில் சிறந்து விளங்கியவர். செய்கு தம்பிப் பாவலர் பிறப்பால் முகம்மதியர். சதாவதானக் கலையில் வல்லவராக விளங்கினார். ஒரே நேரத்தில் 100 செயல்களைச் செய்வதுதான் சதாவதானம். பொதுவாக ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்யும் அஷ்டாவதானக் கலையே கடுமையானது. அதிலும், சதாவதானக் கலையில் வல்லவராக இருப்பது மிக அபூர்வம். செய்கு தம்பிப் பாவலரின் சதாவதானம் அறிஞர் பெருமக்களால் போற்றப்பட்டது. முதுகில் விழுந்து கொண்டிருக்கும் மல்லிகைப்பூ, தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் மணிநாதம் போன்றவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் உள் மனத்தில் எண்ணிக் கொண்டே வருவார் பாவலர். எப்போது நிறுத்தி எண்ணிக்கை குறித்துக் கேட்டாலும் பதில் சொல்வார். தவிர கூட்டத்தில் யாராவது வெண்பாவிற்கு ஈற்றடி கொடுப்பார்கள். தளை தட்டாமல் கொடுக்கப்பட்ட ஈற்றடியில் வெண்பா யாத்துச் சொல்வதும் மூன்று அவதாரத்தில் ஒன்று. ஒருமுறை சதாவதானம் நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஓர் அன்பர் பாவலரை சிக்க வைக்கும் எண்ணத்துடன் ஒரு விந்தையான வெண்பா ஈற்றடியைக் கொடுத்தார். துருக்கனுக்கு ராமன் துணை என்பதுதான் ஈற்றடி. செய்கு தம்பிப் பாவலர் பிறப்பால் துருக்கர். முகம்மதிய மதத்தை சார்ந்த அவர் இந்த ஈற்றடிக்கு எப்படிதான் பாடல் எழுதப் போகிறார் என்று சபையினர் திகைத்துக் காத்திருந்தனர். பாவலர் இறுதி அடிக்கு முந்தைய அடியில் ராமனின் தம்பிகளான "பரத, இலட்சுமண, சத்" என்று வருமாறு அமைத்தார். இந்த அமைப்பின் மூலம் "துருக்கனுக்கு ராமன் துணை" என்ற கடைசி அடி "சத்துருக்கனுக்கு ராமன் துணை" என்று எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய பொருளைப் பெற்றது. குறும்பு செய்ய நினைத்தவர் முகத்திலும் அரும்பியது மகிழ்ச்சியும் நிறைவும் கலந்த புன்முறுவல்.புதுமைப் பித்தன்: (1906 – 1948) சொ.விருத்தாச்சலம் என்கிற இயற்பெயரைக் கொண்ட புதுமை பித்தன் தமிழ் இலக்கிய உலகில் ஒரு தவிர்க்க முடியாத முன்னணி எழுத்தாளர். பத்திரிக்கை முகவராகப் பணியாற்றிய இவர் 200 க்கும் மேற்பட்ட கவிதைகள், சிறுகதைகள் எழுதி உள்ளார். மேலும் கீழைநாடுகளின் நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்துள்ளார். இவருடைய கதைகள் பெரும்பாலும் அடிமட்ட மக்களின் வேதனைகளை விளக்குவதாகவே இருக்கும். சொல்லும் செய்திகளை நகைச்சுவை உணர்வுடன் எழுதுவதில் வல்லவர். புதுமைப் பித்தனின் சிறுகதையான "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்" என்கிற நூல் தமிழின் முதல் அறிவியல் சிறுகதையாகும். இவரது வாழ்க்கைப் பயணம் வெறும் நாற்பத்திரண்டு ஆண்டுகளேயெனினும், தமிழ் இலக்கியத்திற்கு இவர் செய்துள்ள தொண்டு போற்றுதலுக்குரிய ஒன்றாகும்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி