தோன்றின் புகழொடு தோன்றுக! - தமிழ் இலெமுரியா

14 December 2013 9:38 am

இருபத்தைந்து ஆண்டு கால துடுப்பாட்டப் (கிரிக்கெட்) பயணம் முடிவுக்கு வந்தது. இந்தியத் துடுப்பாட்டத்தில் தலைசிறந்தவராகக் கருதப் பெற்ற சச்சின் இரமேசு டெண்டுல்கர். தனது இறுதி ஆட்டத்தை மும்பை மாநகரில் ஆடி முடித்து விட்டார். சச்சின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில முதன்மை நிகழ்வுகள்… மும்பை நகரில் ஏப்ரல் 24 ஆம் நாள் 1973 ஆம் ஆண்டு சச்சின் பிறந்தார். சச்சின் தந்தை இரமேசு டெண்டுல்கர் மராத்தி மொழியில் நாவலாசிரியர். இவருடைய தாய் இரஜனி – காப்பீட்டுத் துறையில் (இன்சூரன்சு) வேலை பார்த்து வந்தார். இரண்டு மூத்த சகோதரர்களும் ஒரு மூத்த சகோதரியும் இவருடன் உடன் பிறந்தவர்கள். 1988 ஆம் ஆண்டு சச்சின் இந்தியத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார். நவம்பர் 15 ஆம் நாள் 1988 ஆம் ஆண்டு தனது முதல் ஆட்டத்தை (டெஸ்ட்) பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினார். அப்போது சச்சினுக்கு பதினாறு வயது 223 நாள்கள் மட்டுமே. அதே ஆண்டு 18 ஆம் நாள் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார்.  துடுப்பாட்ட உலகில் ஆட்டநாயகன் விருதுகளை அதிகமாகப் பெற்றவர் சச்சின். இதுவரை 62 முறை ஆட்டநாயகன் விருதுகள் வாங்கி உள்ளார். 16 முறை தொடர் ஆட்டநாயகன் விருதுகள் பெற்றுள்ளார். சச்சின் பயன்படுத்தும் மட்டை(பேட்) மற்றவர்கள் பயன்படுத்தும் மட்டையை விடக் கனமானது. அது 1.5 கிலோ எடை கொண்டது. சச்சினுக்கு மற்ற விளையாட்டுப் போட்டி வீரர்களையும் வெகுவாகப் பிடிக்கும். சச்சின் டெண்டுல்கர் இரண்டு உணவகங்களை நடத்தி வருகின்றார். அவை மும்பை – கொலபா பகுதியில் இருக்கும் டெண்டுல்கர்ஸ்" முல்லுண்ட் பகுதியில் இருக்கும் "சச்சின்ஸ்" என்பன. இந்த உணவகங்களை சஞ்சை நாரங் என்பவருடன் வணிக ஒப்பந்தம் செய்து நடத்தி வருகிறார். தன்னுடைய 22ஆவது வயதில் குழந்தைகள் சிறப்பு மருத்துவராக இருந்த அஞ்சலி என்னும் பெண்ணை மணந்தார். அஞ்சலி சச்சினை விட ஆறு வயது மூத்தவர். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர். சச்சின் இடக்கை பழக்கம் கொண்டவர். ஆயினும் துடுப்பாட்டத்தில் வலக்கை ஆட்டக்காரர். சச்சின் மகன் அர்ஜூன் வலக்கை ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாத சச்சின் நிறைய ஹாலிவுட் திரைப்படங்கள் பார்ப்பார். சில்வஸ்டர் ஸ்டாலன், அர்னாட் சுவசிநேகர், டெமி மூர் போன்ற ஹாலிவுட் திரைப்பட நடிகர்களை சச்சினுக்கு வெகுவாகப் பிடிக்கும். உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் சென்று வந்த சச்சினுக்கு மிகவும் பிடித்த சுற்றுலா இடம் கோவா. அவருக்கு கோவாவில் உள்ள தாஜ் ஹோட்டல் மிகவும் பிடிக்கும். எல்லா வகையான உணவு பிடித்தாலும் கடல் சார்ந்த உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுவார். அதிலும் அம்மா கைப்பக்குவத்தில் சமைக்கப்பெற்ற மீன், நண்டு வகை உணவுகள் இவர் மனதை வெகுவாக மகிழ்விக்கும்.- சு.த.தென்னரசு."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி