15 November 2013 2:37 am
இந்திய விடுதலைக்காக இந்தியாவில் பல மாநிலங்களில் பல தலைவர்கள் உருவானார்கள். அவர்களின் உண்மையான தியாகம் சிறைச்சாலை, சித்திரவதைக் கொடுமைகள், சொத்து சுகம், மனைவி, மக்கள் அனைத்தையும் மறந்தது நம் நாடு விடுதலைப் பெறவே. அத்தனை துன்பங்களையும் ஏற்றுக் கொண்டு நல வாழ்வைப் பொசுக்கிக் கொண்ட தியாக மறவர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் வரிசையில் வந்தவர்களில் ஒருவர்தான் நம் தமிழ்நாட்டுத் தேசபக்தர் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார். இந்த நாடு விடுதலை பெற்று, பெரிய மரியாதையோடு நம் நாடு உயர்ந்து நிற்க வேண்டும் என்று வாழ்நாள் எல்லாம் வ.உ.சிதம்பரனார் விரும்பினார். அதற்காக உழைத்தார். அன்னிய நாட்டுத் துணிகளையெல்லாம் தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பைக் காட்டினார். அதுபோலவே கடல் ஆதிக்கத்தை ஒழித்து விட்டால் அன்னியர்கள் ஆதிக்கம் செய்யும் எண்ணத்தை அகற்றிவிட முடியும் என்று எண்ணி, தன் பணம், சொத்து அத்தனையும் இழந்து, பலரிடம் கடன் பெற்றுக் கப்பல் வாங்கிக் கடலில் தமிழரின் கப்பல் மூலம் வணிகம் செய்தார். அந்த வணிகம் செழித்து சீரும் சிறப்போடும் வளரத் தொடங்கியது. அதற்காக, பொறுத்துக் கொள்ள முடியாத ஆங்கில அரசு வ.உ.சியைத் தேசத் துரோகக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தார்கள். பல வகைகளில் கொடுமைப் படுத்தப்பட்டார். செக்கிழுத்த செம்மல் – சிதம்பரனார் என்றும் மக்களால் அழைக்கப்பட்டார். அத்தனைக் கொடுமையும் தாங்கி விடுதலையாகி வெளியே வந்தார். அவர் இவ்வளவு தியாகம் செய்து சொத்து, செல்வத்தை இழந்த நிலையிலும் அவர் உருவாக்கிய கப்பல் நிறுவனம், விடுதலை பெற்றுச் சிதம்பரனார் வந்து பார்த்த போது நம்மவர்கள் அனைவரும் அந்த பங்குகளை எல்லாம் அன்னியர்களுக்கு விற்று விட்டார்கள். அதை அறிந்து மனம் பதறிப் போனார். அந்த வேதனையிலும் அன்னியர்கள் இனி மேல் வ.உ.சி. வழக்குரைஞர் தொழிலும் செய்யக் கூடாது என்று தடுத்து விட்டார்கள். நாட்டு நலன் கருதி தன் சொத்தையும், செல்வ வாழ்வையும் இழந்த அவர் இனி வழக்குரைஞர் தொழில் (சன்னத் என்ற வாதாடும் அனுமதி) செய்வதைத் தடுத்த போது அவர் வருந்தவில்லை. வாழ்நாளெல்லாம் இந்த மக்களுக்காக உழைத்த அவர் நமக்கு உரிய மரியாதை கிடைக்காவிட்டாலும், அலட்சியப்படுத்தி விட்டார்களே என்று நெஞ்சம் கலங்கினார். அப்போதுதான் நம்மவர்கள் இப்படி நடந்து கொண்டாலும், ஆங்கிலேய நீதிபதி வாலஸ்துரை என்பவர் முயற்சி செய்து வ.உ.சிதம்பரனாருக்கு மறுபடியும் வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமையை வாங்கிக் கொடுத்தார். இந்த நிகழ்ச்சி வ.உ.சி.யின் உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது. வாழ்நாளெல்லாம் யாரை அன்னியர் என்று எதிர்த்துப் போராடினோமோ, அந்த அன்னியர் தன்னிடம் கண்ணியமாக பரிவிடன் நடந்து கொண்டதை எண்ணி அவர் மனம் நெகிழ்ந்தார். ஆனால் நம்மவர்கள் என்று நம்பப்பட்டவர்கள் நம்மை ஏளனமும், அலட்சியமும் செய்து விட்டார்கள் என்பதனால் மிகவும் மனம் நொந்து போனார்.