17 February 2015 6:11 pm
தேவநேயப் பாவாணர்தேவநேயப் பாவாணர் மிகச் சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். தேவநேயப் பாவாணர் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் ஞான முத்து – பரிபூரணம் அம்மையார் இணையருக்கு மகனாக பிறந்தவராவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று, மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று, தனித்தமிழ் இயக்கத்திற்கு அடி மரமாய், ஆழ் வேராய் இருந்தவர். இவருடைய தமிழறிவும், பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் என அழைக்கப்படுகிறார். தமிழ் உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும் உலகிற்குப் பறைசாற்றியவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் ஆகிய மொழிகளுக்கு தன் சொற்கள் பலவற்றை கடன் அளித்ததுள்ளது என வாதிட்டார். மாந்தன் பிறந்தது முதன் முதல் குமரிகண்டமே; அம்மாந்தன் பேசிய மொழி தமிழே, தமிழே உலகத்தின் முதல் மொழி, தமிழே திராவிடத்திற்குத் தாய், தமிழே ஆரியத்திற்கு மூலம், சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே, இக்கொள்கைகளை மெய்ப்பித்துக் காட்டியவர். தமிழின் வேர்ச் சொல் வளத்தையும், செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் மூலம் உலகிற்கு எடுத்து இயம்பியவர். தமிழர் திருமணம், தமிழர் வரலாறு, பழந்தமிழர் ஆட்சி, தி பிரைமரி கிளாசிக்கல் லாங்வேச் ஆப் தி வேர்ல்டு (The primary classical language of the world) போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். தமிழுக்காக வாழ்நாளெல்லாம் போராடிய பாவாணர் 16.01.1981 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் 01.06.1888 ஆம் ஆண்டு செல்வபுரத்தில் தாமரை செல்வம் - இரத்தினம் அம்மையார் இணையருக்கு மூன்றாவது மகனாக பிறந்தவராவார். இவர் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று சனவரி 26,1912 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார். அதே ஆண்டு மார்ச் 22 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்தார். அப்பணியைத் தொடர்ந்து 1926 ஆம் ஆண்டு பன்னீர் செல்வம் தன்னை தீவிரமாக சுயமரியாதை இயக்கத்தில் இணைத்துக் கொண்டு அவ்வியக்கத்தின் பார்ப்பன எதிர்ப்பு, சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து தீவிர பரப்புரை மேற்கொண்டார். இறுதிவரை தன் தலைவரான தந்தை பெரியாரை எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இயக்கப் பணியாற்றினார். தஞ்சை மாவட்ட கழகத் தலைவராக பொறுப்பெற்று பணி செய்த காலத்தில் திருவையாறு சமற்கிருதக் கல்லூரியை அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்ததுடன், சமற்கிருதம் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த நிலையினை மாற்றி தமிழ்க் கல்வியை தொடங்கச் செய்தார் என்ற பெருமை இவரைச் சேரும். தமிழ் கற்போர், புலவர் பட்டம் பெறும் வகையில் அங்கே தமிழ் கல்வி தழைக்கத் தொண்டு செய்தார். 1937 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் உள்துறை நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவருக்கு ராவ்பகதூர், சர் ஆகிய பட்டங்கள் ஆங்கில அரசால் வழங்கப்பட்டது. இரண்டாம் உலக போரின் போது ஆங்கில அரசின் போர்க்கால அமைச்சரவை ஆலோசகராக பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். பதவியேற்புக்காக இராணுவ விமானமான அனிபாலில் இங்கிலாந்து புறப்பட்டார். 01.03.1940 இல் ஓமன் தீபகற்பத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியது அதில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. என் மனைவி, தாயார், அண்ணனின் மகன் இறந்த போதும் இவ்வளவு கலங்கவில்லை. பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களை காணுந்தோறும், தமிழ்நிலை எண்ணும் தோறும் நெஞ்சம் பகீரென்கிறது இவருக்கு பதில் யார் என்றே திகைக்கிறது" என ஏ.டி.பன்னீர் செல்வம் மறைந்த போது தந்தை பெரியார் உருக்கமாகக் குறிப்பிட்டார். "