17 July 2013 5:58 pm
சங்க காலத்தின் ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம் பூ என அழைக்கப்படுகிறது. தொல்காப்பியர் இந்த மரவினத்தை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். “ஆவிரை என்னும் மரப்பெயர் அதன் பகுதிகளைக் குறிக்கும் போது ஆவிரங்கோடு, ஆவிரஞ் செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம் பூ என வரும்” என்கிறார். சங்க காலத்தில் பனை மட்டைகளால் செய்யப்பட்ட குதிரை மீது ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ, தற்போது தைப் பொங்கல் விழாவில் பயன்படுத்தும் பூவாக மாறியுள்ளது. தைப் பொங்கல் கொண்டாட்டத்தின் போது, காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்கு தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம் பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த ஆவாரம் பூ பல நோய்களுக்கு மருந்தாகவும் திகழ்கிறது. நீரிழிவு, மேக நோய்கள், நீர் கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீரக எரிச்சல், வெள்ளைப் படுதல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக ஆவாரம் பூ பயன்படுத்தப்படுகிறது. ஆவாரை இலையை பாசி பருப்பு, பூலாங் கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்து வர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும்.