5 June 2013 12:42 pm
தேவநேயப் பாவாணர் மிகச் சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். தேவநேயப் பாவாணர் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7 ஆம் நாள் ஞானமுத்து தேவேந்தரனார் – பரிபூரணம் அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் ஆவார். இவர் 40க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று, மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று, தனித்தமிழ் இயக்கத்திற்கு அடி மரமாய், ஆழ்வேராய் பாடுபட்டார். இவருடைய தமிழறிவும், பன்மொழியியல் அறிவையும் கருத்தில் கொண்டு, மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் என அழைக்கப்படுகிறார்.
தமிழ் மொழி உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்துக்கு தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென உலகிற்குப் பறை சாற்றியவர் தேவநேயப் பாவாணர். கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு தன் சொற்கள் பலவற்றை அளித்தது தமிழ் மொழி என வாதிட்டார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும், செழுமையையும் சுட்டிக் காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரது நூல்களின் மூலம் உலகிற்கு எடுத்து இயம்பினார்.