16 August 2016 1:50 pm
‘தமிழ் இலெமுரியா’ ஆடி இதழ் ‘நூறாவது இதழ்’ என்பதைப் படிக்கப் பெருமிதம் மேலோங்கியது. அதேசமயம் சமரசங்களில் மயங்காது, அயல் மாநிலத்திலிருந்து, வெளிவரும் எங்களின் மனம் கவர்ந்த ‘தமிழ் இலெமுரியா’ சந்திக்கும் இடர்பாடுகளை எண்ணி மனம் வெதும்பியது. நூறாவது இதழில் அதிகப் பக்கங்கள் இல்லையே என வாசகர்கள் யாரும் வருந்த மாட்டார்கள், ஏனெனில் மாம்பழம் சுவையுடன் இருப்பதில்தான் மகிழ்ச்சி, மாந்தோப்பில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதல்லவே? அமரர் சண்முகராசனார் போன்றவர்களின் ஆசிகளுடனும், அயர்ச்சி தளர்ச்சி நீங்கி ‘தமிழ் இலெமுரியா’ 1000 இதழ்கள் என்ற இலக்கை அடைய என் போன்ற எண்ணற்றவர்களின் நல்லெண்ணங்கள் என்றென்றும் துணைநிற்கும். - க. த. அ. கலைவாணன், வேலூர் – 632002கைக்கோப்போம்!தமிழ் இலெமுரியா"வின் நூறாவது இதழுக்கு எங்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இங்கு மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன். அவ்விதழில் ‘தலையங்கம்’ பகுதியை படித்தேன். நெஞ்சம் நெகிழ்ச்சியாகவும் உள்ளம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இதழ் வண்ணங்களில் இல்லாவிடில் என்ன? கருத்துகளிலும் பண்பாட்டு கலாச்சார ரீதியிலும் தரமான செய்திகளிலும் தனித்தன்மையுடன் மின்னுகிறதே!!! சோதனைகளிலும் சாதனையாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தமிழ் இலெமுரியா’வுடன் நாங்களும் கைகோப்போம். - செல்வம் கந்தசாமி, கோவை – 641 402அறிவுச் சுரங்கம்ஆடி இதழில் மருத்துவர் காசிப்பிச்சை எழுதியிருந்த ‘மதங்களும் மனித உரிமையும்’ கட்டுரை சிறப்பான முறையில் எழுதப்பட்டிருந்தது. ‘இராணுவம் ஒழிந்த நாடும் மதம் ஒழிந்த மக்களும் சாத்தியப்படுமானால் மட்டுமே ஒட்டுமொத்த உலக மக்கள் சமுதாயம், நிரந்தர மகிழ்ச்சியில் திளைக்க முடியும்’ என்ற முடிவை மனதார வரவேற்கிறேன். அதேபோல கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் நேர்காணல் அறிவார்ந்ததாக அமைந்திருந்தது. கேள்விகளும் அதற்கு அவர் தந்த பதில்களும் படிப்போருக்கு தெளிவூட்டுவதாக அமைந்திருந்தன. பக்கத்திற்கு பக்கம் அறிவுச்சுரங்கம் ஊற்றெடுக்கும் "தமிழ் இலெமுரியா"வுக்காக மாதந்தோறும் காத்திருக்கிறேன். பாவலர் கொ.வீ.நன்னன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர், செங்கம் – 606 701வளர்ப்போம்…. வளருவோம்!ஆடி இதழ் படித்தேன். உள்ளத்தில் வலியோடு சில கருத்துக்கள்; பொருள் உள்ளோரிடம் தமிழினத்திற்கு உழைக்கும் உள்ளமில்லை. உள்ள முள்ளோரிடையே பொருளில்லை. இவ்விரண்டிற்கு மிடையே ஆலைக் கரும்பாய் பிழியப்படுகிறது தமிழினம். அன்றையப் புரவலர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர். இன்றோ, தன்னலமிக்கோர் மிகுதியானோர் இருக்கிறார்களே தவிர, தமிழைக் காக்கும் புரவலர்களாக இல்லை. இதுதான் தமிழுக்கும் தமிழர்க்கும் பெரிய முட்டுக் கட்டை. பூனை வாழ்கிற வீட்டிலேதான் எலிகளும் வாழவேண்டிய அவல நிலையுள்ளது. எனினும் எங்கிருந்தாவது, தமிழுணர்வு உள்ளோரின் உதவிக்கரம் நீளாமல் போகாது. மானமிகு கலி.பூங்குன்றனாரின் நேர் கானல் இதழுக்கே மகுடம். மூவலூர் இராமாமிர்த அம்மையாரின் தேவதாசி ஒழிப்புப் பணி வரலாற்றுச் சிறப்புமிக்கது. தமிழ் இலெமுரியாவைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை வளர்ப்போம் இதழை! வளருவோம் தமிழாய்!!க. தியாகராசன், குடந்தை – 612 501நல்ல சூழல் வேண்டும்‘மதங்களும் மனித உரிமையும்’ கட்டுரை காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றத் தகவல்களால் நிறைந்துள்ளது. மனிதர் வாழ பூமி வேண்டும். பூமிவாழ நல்ல சூழல் வேண்டும். அதைக் நாம் காக்க வேண்டும்.தேவதாசி கொடுமையை ஒழித்த மூவலூர் இரமாமிர்தம் அம்மையார் குறித்து பேரா. பானுமதி தருமராசன் தந்த கட்டுரையில் பலத் தெரியாதத் தகவல்கள் கிடைத்தது. நன்றி.ம. சுகுமார், கல்பாக்கம் – 603 102வெள்ளிடை மலைதாயகத் தமிழரிலும் புலம் பெயர்ந்த தமிழர்க்கே அறச்சிந்தையும் இனப்பற்றும் மொழியுணர்வும் மிகுதி என்பது வெள்ளிடை மலை. ‘தமிழ் இலெமுரியா’ இக்கூற்றிற்கு வாழும் உண்மை என்றால் அது மிகை இல்லை என்பதை நிலைநாட்டி வருகின்றமைக்கு என் பாராட்டுகள்! வெ.சுப்பிரமணியன், முகப்பேர் – 600 037சாதனையே!"தமிழ் இலெமுரியா"வில், தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் மாத, வார இதழ்களில் காணமுடியாத தூய தமிழ் நடையில் தெளிவான, சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்கள் தொடர்ந்து வருவது படிப்போரை தெளிந்தோராக்கி, அவர்களை பெரிதும் வியப்படைய வைக்கிறது. தலையங்கப் பகுதியில், நாட்டு நடப்பைப் பற்றியும் தமிழர் மற்றும் தமிழ்மொழியின் அடையாளங்களையும் மையக்கருத்தாகக் கொண்டும் சமுதாய விமர்சனங்களை துணிவோடு எதிர்கொள்வதிலும் ‘மாறுபட்ட இதழுக்கு’ மிகவும் பொருத்தமான நிலைதான்.எந்தவித அரசியல் கட்சிகளின் சார்புமின்றி சீரிய முறையில் நேர்த்தியாக விருப்பு, வெறுப்புக்கு ஆட்படாமலும் சமுதாயத்தின் தாழ்வு நிலையையை முன்னிறுத்தி பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையையேயும் ஒரு தேர்ந்த சிற்பி போன்று சிறிது சிறிதாக, செதுக்கி நல்ல தரமான இதழை மக்களுக்கு தருவது என்பது மிகப்பெரிய சாதனையே! அடுத்து நல்ல எழுத்தளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக அவர்களின் படைப்புகளை வெளியிடுவதும் தமிழ் இலெமுரியாவின் தெளிந்த பாதையை பறை சாற்றுகிறது. நிறைவாக, ஒரு செய்தி! எங்கள் வீட்டில் எனது தந்தையார் தமிழ் இலெமுரியாவை படிக்கிறார், திருமணமான நானும் படிக்கிறேன் நாளை எனது பிள்ளைகளும் படிப்பார்கள் என நம்புகிறேன். ஆக மும்பையில் மூன்றாம் தலைமுறையும் படிக்கும் ஒரே மாத இதழ் தமிழ் இலெமுரியாவாக இருக்கும். ஆசிரியர் மற்றும் இலெமுரியா குழுமத்திற்கு வாழ்த்துகள்.ம. சுகந்தி, லோனாவாலா – 410 410உள்ளங்கவர்ந்தன!நமது ‘தமிழ் இலெமுரியா’ஆடி இதழில் அனைத்து படைப்புகளும் அருமை. கவிஞர் கலி. பூங்குன்றனின் நேருரை, ‘சேர்க்கை அழியேல்’ கட்டுரை, கவிதைகள் என அனைத்தும் எமது உள்ளங்கவர்ந்தன; பாராட்டுகள்; வாழ்த்துகள். ம. நாராயணன். வேலூர்- 632009அருந்தமிழ்ப் பணிபல தரப்பட்ட படைப்புகளோடு பவனி வரும் ‘தமிழ் இலெமுரியா’ மேலும் உயரட்டும். அடுத்த மாநிலத்திலிருந்து வெளிவந்தாலும் அருந்தமிழ் பணியை பெரும் பணியாய் பேருவகையுடன் ஆற்றி வருகிறீர்கள் மகிழ்ச்சி. இலெமுரியா அறக்கட்டளையின் பணியானது பல இலக்கிய இதயங்களை உதயமாக்கிட பெரிதும் உதவும். ‘பனித்துளியின் நுனித்துளிகள்’ ‘உலகை மாற்றிய சொல்வெட்டுகள்’ ‘நடை உடை பாவனை’ ஆகிய படைப்புகளை காணும்போது நெஞ்சம் குதூகலம் கொள்கிறது. இரா. நவமணி, அம்பை – 627401மது கரைபுரண்டு ஓடுகிறதே!ஆடி இதழில், ‘மதங்களும் மனித உரிமையும்’ கட்டுரை சிறப்பான தகவல்களை பதிவு செய்திருக்கிறது. ஊரையே பாதுகாக்கின்றதாகச் சொல்லப்படும் கடவுள்களின் திருவிழாக்களுக்கு ஊர் காவல் படையை அமர்த்த வேண்டியிருக்கிறது. பெரியார் கூற்றுப்படி’தமிழ்நாடு தமிழருக்கே என்று மாறினாலும், அதை பாண்டிச்சேரிக்காக அடகு வைத்துவிடுவார்கள். அங்குதான் மது கரைபுரண்டு ஓடுகிறதே! கடவுள் படைத்த மனிதர்களாக மனிதன் இருந்திருந்தால் இப்படி மனிதன் தரங்கெட்டிருக்க வாய்ப்பே இல்லை.‘இதுவும் விடியல்தான்’ கவிதையில், கள்ள மதுவால் விதவையான பெண்ணின் கோலத்தை விளக்கியுள்ளது அருமை. மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் வரலாறு படித்தேன், அதில் 5 வயது குழந்தையை பத்து ரூபாய்க்கு விற்றுச் சென்ற கொடுமை கோபத்தை ஏற்படுத்தியது. மண்வாசம் சிறுகதையில் ஒருமனிதனின் கவலையை காண முடிந்தது. ‘ஏழைக்கு நீதி இன்னும் தொடுவானத்தில்தான்!’ நீதிபற்றிய ஏக்கங்களின் வேதனையை அறிய முடிந்தது. மூர்த்தி, சென்னை- 600100அசத்தல்ஆடி இதழில் முன் அட்டை புதுமையாகவும் வேறுபாடுகளுடனும் வண்ணப் புகைபடமாகவும் இருந்தது. ஐந்து பக்க முதன்மைக் கட்டுரை அசத்தல். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பாக வழங்கிய பேராசிரியர் பானுமதி தருமராசனுக்கு பாராட்டுகள். கா.திருமாவளவன், திருவெண்ணைநல்லூ – 607 203தோழமை மங்காநட்பு‘தமிழ் இலெமுரியா’ 100வது இதழை எங்கள் கரங்களில் தவழச் செய்வதற்கு எப்படியெல்லாம் பாடுபட்டிருப்பீர்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது. கலங்காதிரு மனமே! உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே! என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை பாங்குடன் பாடி, ‘தோழமை மங்கா நட்பு- தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும்’; அது அளப்பரிய வளர்ச்சியை பெற்றுத்தரும் என்று வாழ்த்துகிறேன். ப.லெ. பரமசிவம், மதுரை -625 009பெரியார் எனும் பெயர்கவிஞர் பூங்குன்றன் நேருரையைக் கண்டேன். இது நாள் வரை அவர்தான் மற்றவர்களை நேருரை எடுத்து பத்திரிக்கையில் வெளியிடுவார். தம்மைப்பற்றி எந்த தகவலையும் தெரிவிக்காத, அடக்கம், தன்னம்பிக்கை, எளிமை கொண்ட கவிஞர் என்றும் நம் உள்ளங்களில் நிலைத்து நிற்கும் ஒப்பற்ற மனிதர். நேருரை எடுத்த தருமராசனுக்கு பாராட்டுகள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் சிறப்புமிக்க செயல்களில் தேவதாசி ஒழிப்பு கோயில்களில் பொட்டு கட்டுவதை ஒழித்தது என புரட்சிகரமான செயல்களை செய்தும் ஈ.வெ.ரா என்ற பெயருடன் பெரியார் என்ற சிறப்புப் பெயரை வழங்கப்பட வேண்டுமென பெண்கள் மாநாட்டில், அம்மையாரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தால், ஈ. வெ.ரா. வின் பெயருக்கு முன்னால் பெரியார் என்ற பெயர் நிலைக்கச் செய்தவரின் செயல்களை கட்டுரை வடிவில் தந்த பானுமதி தருமராசனுக்கு நன்றி. ம. தயாளன், நாகர்கோவில் – 629001"