உங்கள் திசை எங்கள் பாதை - தமிழ் இலெமுரியா

14 February 2014 9:06 am

நாங்கள் படிக்கும் பத்திரிக்கைகளில், முதன்மையான இடத்தில் வைத்துள்ள பத்திரிக்கை தமிழ் இலெமுரியா". தங்கள் பணி என்றும் தொடர எங்கள் வாழ்த்துகள். தங்களின் சேவைக்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு.  – அமீது பாய், ஐதராபாத். வாழ்வியல் கருத்துகளையும், மொழி சார்ந்த ஆய்வியல் அறிஞர்களின் கட்டுரைகளும், பாவலர்களின் சுவை சொட்டும் கவிதை வரிகளையும், மூட நம்பிக்கைகளை வேரறுக்கும் சிந்தனைக் கட்டுரைகளையும் ஏந்தி, வாசகர் கரங்களில் தவழும் மார்கழி இதழ் படித்தேன். "அடிமைச் சுமைகள்" தலையங்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதைப் போல தமிழர்களின் முதுகில் ஏற்றி வைக்கப்பட்ட அடிமைச் சுமைகளை இன்னமும் உணராமல், அதனை மகிழ்ச்சியுடன் முதுகில் சுமந்து கொண்டு வாழ்கின்ற தமிழர்களின் நிலை, வரலாற்றில் ஒரு அவல நிகழ்ச்சியாகும். தமிழர் நலனில் அக்கறை கொண்ட நேர்மையான அரசு உழைப்புக்கும் ஒழுக்கத்திற்கும் மதிப்பளிக்கும் மக்கள் என சமுகமே மாறினால், தமிழ்நாடு உலக வல்லரசுகளிலே ஒன்றாகத் திகழ முடியும்!"உலகால உனதுதாய் மிகஉயிர் வாதை அடைகிறாள்!உதவாதினி ஒரு தாமதம்உடனே விழி! தமிழா!என புரட்சிக்குரல் எழுப்பி இருக்கிறார் பாவேந்தர் பரதிதாசன். அந்த விழிப்புணர்ச்சிக்கு தமிழ் இலெமுரியாவும் துணை நிற்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. – க.தியாகராசன், நெய்வேலி. "தமிழ் இலெமுரியா" இதழ் பெயரும், மராத்திய வெளியீடும் முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. படித்துப் பார்த்தால் நூலின் உள்ளடக்கம் இதழுக்கு – இதழ் வியப்பையும் மதிப்பையும் மேலும் உயர்த்தியது அத்துணை அருமை. – மகிழ்நன், பழனி. தை 2045 புத்தாண்டு சிறப்பிதழ் முத்தான, சத்தான, அறிவுக்கு வித்தான கருத்துரைகளைத் தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. சீர்வரிசை சண்முகராசனின் முதல் காதல் முழுமை பெறாமல் போனது மும்பை செய்த புண்ணியமே. மறைநீர் பற்றிய விளக்கம் வியக்க வைத்தது. காலமெல்லாம் நடுவணரசைச் சாடும் மோகம் என்றுதான் குறையுமோ? – அ.கலைவாணன், வேலூர். மறைநீர் பொருளாதாரத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு கட்டுரை சிறப்புற அமைந்திருந்தது. கடைசி ஐந்து வரிகளைக் கொட்டை எழுத்துகளில் போட்டிருக்கலாம். இரா.நல்லக்கண்ணுவின் கட்டுரை இன்றைய அரசியல்வாதிகளைத் தோல் உரித்துக் காட்டுவதைப் போல் அருமையாக இருந்தது. கவிதைகள் அனைத்தும் மிக அருமை.  – அ.முரளிதரன், மதுரை. பொங்கல் சிறப்பிதழில் அட்டவணை, பொங்கலோ பொங்கல் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அனைத்து கவிதைகளும் சிறப்பாக இருந்தது. இலங்கையின் எதிர்காலம் ஒரு நீள்பார்வை தொகுப்புகள் மிகவும் வேதனையாக இருந்தது. எனினும் நமது தேசிய இன விடுதலை நாளை வெல்வோம் என இந்நாளில் சபதம் ஏற்போம். இதழ் வளர வாழ்த்துகள்! – அ.காஜாமைதீன், பழனி. ஏறு தழுவும், வீர விளையாட்டை அட்டைப் படமாகக் கொண்டு, தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழாக மலர்ந்து மணம் வீசும் "தமிழ் இலெமுரியா" படித்தேன். புத்தொளி பரவட்டும் என்கிற தலையங்கமே புத்தெழுச்சியை, புத்துணர்வை படித்தோர் உள்ளங்களில் பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை."மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி கண்டவன் தமிழன்" இன்று மக்களாட்சி காலத்தில், மாற்றானிடத்திலே மண்டியிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இது ஒரு வரலாற்று தலைக்குனிவு. இது அவனே தேடிக் கொண்டதுதானே தவிர, வேறல்ல. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர்ந்திருந்தும் வழுக்கி விழுந்திருப்பது அவனது அறியாமையே! இனியேனும் விழித்துக் கொள்வார்களா? தோழர் இரா.நல்லக்கண்ணு தான் ஒரு பொதுவுடைமைவாதி என்பதை மட்டுமல்ல; ஒரு இலக்கியவாதி என்பதையும்தனது கட்டுரையின் வாயிலாக முத்திரை பதித்திருக்கிறார். தமிழரின் இசைக் கருவிகள் பற்றியக் கட்டுரை, பொங்கல் மணம் கமழும் கவிதைகள், இலங்கை தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அனைத்துமே இதழுக்கு மெருகூட்டுகின்றன. தமிழரால், தமிழில் தமிழர்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரு இதழில் இத்தனை சிறப்புகள் கொண்டிருப்பதே ஒரு புதுமைதான். வளர்க தமிழ் இலெமுரியாவின் பணி! க.தியாகராசன், நெய்வேலி. "தமிழ் இலெமுரியா"வின் பொங்கல் மலர் படித்தேன். எண்ணங்கள் ஏணிப்படிகள்! நா.கருப்பண்ணன் பிரிவு வருத்தம் அளித்தது. "புத்தொளி பரவட்டும்" ஆசிரியருரை மக்கள் தங்கள் வாக்குச் சக்தியை உணர்ந்து கொள்ளப் புத்துணர்ச்சி ஊட்டுவதாய் அமைந்திருந்தது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்துக் கருவூலகங்களாக விளங்கின.  நேர்முகங்கள் அயல் மாநிலத்தில் ஆட்சியர்களின் ஆட்சித் திறம் நேர்மைத் திறத்தால் வெற்றிபெறும் என்பதைப் புலப்படுத்தியது. "மக்களாட்சியில் மக்கள்தான் கண்ணாடி" என்னும் இரா.நல்லக்கண்ணுவின் கட்டுரை இன்றைய தலைமுறை நன்கு படித்து பார்த்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய எச்சரிக்கை உரையாகும்! கொடுத்து வாழ்ந்தவர்கள் வாக்கைக் கொடுத்துப் பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு ஆளாகக் கூடாது! எதிர்காலம் எண்ணற்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும். அதற்கு மக்கள் எடுக்கும் தீர்வே மூலமாகும். க.அ.பிரகாசம், கொடுமுடி. பொங்கல் சிறப்பிதழ் கிடைக்கப்பெற்றேன், மகிழ்ச்சி. எப்போதுமே அருமையாக இருக்கும் "தமிழ் இலெமுரியா" பொங்கல் சிறப்பிதழின் அநேக செறிவார்ந்த கட்டுரைகள் மற்றும் சில சிறப்பு அம்சங்கள் மூலம் கூடுதல் பொலிவுடன் அமைந்துள்ளது. "புத்தொளி பரவட்டும்" எனும் தங்கள் தலையங்கம் மிக அருமை! அனைவரும் அறிந்த தகவல்களேயானாலும் உண்மைகளை மிகக் கூர்மையாய் நுட்பமாய் முன் வைத்துள்ள தன்மை மிகுந்த பாராட்டிற்குரியது. இன்றைய நாள்களில் அரசியலை வெறுப்பதென்பது மக்களிடையே பரவலாய் காணக் கிடைக்கும் போக்காகியுள்ளது. இது தவறு என்பதை மிகக் கரிசனத்துடன் சுட்டிக் காட்டி இது தொடர்பான மக்களின் கடமைகளையும் வெகு நேர்த்தியாய்க் குறிப்பிட்டுள்ளீர்கள். இவை அனைத்தையும் ஒவ்வொரு இந்தியனும் கடைபிடிக்க முன்வந்தால் இத்தேர்தல் ஆண்டிலேயே தலையங்கத்தின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.கூடுதல் பக்கங்கள், தரமான தாள்கள், அதே தரத்திலான அநேக அற்புதமான அம்சங்களுடன் தமிழ் மணக்கும் சிறப்பிதழை வாசகர்களுக்கான பொங்கல் விருந்தாய் அளித்ததற்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சியும் நன்றியும்! தங்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் பராட்டுகளும் வாழ்த்துகளும்! – எழுத்தாளர் சாந்தா தத், ஐதராபாத். அடிமைச்சுமைகளை இன்பச் சுமைகளாகவே மக்கள் ஏற்க பழகி விட்டனர். ஒட்டகத்தின் நிலைமைதான். தத்துவங்களை விட்டுவிட்டு தலைவர்களைத் தம் தலையில் சுமந்து நிற்கின்றனர். சிந்தித்துப் பார்க்கும் சிந்தனையே இன்றிச் செக்கு மாடுகளாகச் சுற்றி வரவே பழகி விட்டனர். பெரிய, சிறிய திரைகளிலே தம்மையே இழந்து மதிமயங்கிக் கிடக்கின்றனர். இந்தியன், தமிழன் என்ற அடையாளங்களின்றி மதம், சாதிகளை அணிந்து கொண்டு பகையிலேயே திரிகின்றனர். மாயையிலிருந்து மக்கள் விடுபடும் நாளே அனைத்தின் விடுதலை நாளாகும். ஏக்கத்தின் எதிரொலி மக்களின் நெஞ்சங்களில் எதிரொலித்தால் தலையங்கம் நாட்டிலே தலை நிமிரும் – பாவலர் கருமலைத் தமிழாழன், ஓசூர். "தமிழ் இலெமுரியா" தலையங்கம் அடிமைச் சுமைகள், நமது நாட்டில் நேற்று வாழ்ந்த அரும்பெருந் தலைவர்கள், இன்றுள்ள தலைவர்கள், மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் மனப்போக்கை நன்கு ஆராய்ந்துள்ளது. இந்தத் தலையங்கப் பகுதியை நகலெடுத்து அனைவருக்கும் அனுப்பி அவர்களைச் சிந்திக்கவும், நல்வழிக்குத் திரும்பவும் தூண்ட வேண்டும்.தீயவை தீயவே பயத்தலால் தீயவைதீயனு மஞ்சப் படும். என்னும் திருவள்ளுவப் பெருந்தகையின் திருக்குறளை அதன் உள்ளார்ந்த உண்மையை மக்களாய் பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து, தீயனவற்றைத் தங்கள் வாழ்வில் இருந்து ஒழித்து, தமிழ்ச் சமுகத்தை மேன்மையுடன் வாழச் செய்வார்களாக தங்களின் அரிய தலையங்கத்திற்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். – பொ.இராமசந்திரன், சென்னை."அடிமைச் சுமைகள்" தலையங்கம் படித்தேன். காந்தியச் சிந்தனை பிற சமுகவியலாளர்களின் எதிர் சிந்தனையை விரிவாக காணவும் முடிந்தது. பாவலர் கருமலைத் தமிழாழன், ஈரோடு தமிழன்பன் கவிதை வரிகள் யாவும் அருமை. காயங்களகும் நியாயங்கள் கட்டுரை படித்தேன். சட்டதின் பிடியிலிருந்து தப்பி வரும் குற்றவாளிகள் பற்றி, படங்களுடன் இடம் பெற்ற உரை, உறைக்கும்படி உள்ளது. தவறான தீர்ப்புகளால், ஏராளமான தீவிரவாதிகள் உள்ளும், புறமும் உற்பத்தி ஆகிறார்கள். அப்பாவிகள் சாகிறார்கள். கனவுப் புதையல் தேடிய அரசின் மூடத்தனங்கள் பற்றியத் தகவல்கள், பத்மநாபசாமி கோயில் புதையல் வியக்க வைத்தது. கனவிலே கிடைக்கிற பணியரன், பசிப் பிணியைப் போக்காது. சாமியார் சுபோன் சர்கார் மட்டுமல்ல; இன்னும் பலர் மூடத்தனமாகக் கனவு கண்டு காலத்தை வீணடிக்கிறார்கள். புத்திசாலிகளின் கனவு உழைப்பினிலே துவங்கும். முட்டாள்களின் கனவு வெறும் கனவுகளிலேயே முடிந்து போகும் அல்லது மடிந்து போகும். – மூர்த்தி, வேலூர்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி