14 October 2013 10:02 am
நம் நாட்டு நாடாளுமன்ற மக்களாட்சியின் அவலங்களைத் தலையங்கத்தில் மிகச் சரியாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். சிறந்த படைப்புகளைத் தாங்கி, திங்கள் தோறும் வெளிவரும் தமிழ் இலெமுரியா" இதழ் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பரவ வேண்டும். இதழ் வெளியிடுவது வணிக நோக்கில் அல்லாது, சமூக நோக்கில் என்ற வகையில் இதழ் பல்கிப் பரவ வாழ்த்துகள். – வழக்குரைஞர் தமிழகன், முத்தரசநல்லூர். பொருளாதார வல்லுநர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டும் நாடு ரூபாய் மதிப்பு சரிவடையும் நிலைக்கும், தேவையற்ற சட்டத் திருத்தங்களுக்கும், மேலும் பொருளாதாரச் சரிவை மேற்கொள்ளும் திட்டங்களும் முனைப்பு கொள்கின்றதெனில், தலையங்கம் தந்த குறள்நெறி மிகவும் சரியானதே! தேவை மறு ஆய்வு! ஆனால் அவை மீண்டும் அரசியல் ஆதாயச் சூழலுக்கு உட்படக் கூடாதே? மதவாதக் கட்டுரை, ஆழ்ந்த கருத்துகள், உயரிய அரசு அலுவலர் பணியில் உள்ளோர் கூட தாம் சார்ந்த மதத்திற்காக பிற மதத்தை இழித்து பேசுவதும், பெரியாரின் கருத்துகளை பறை சாற்றுவோரும் "மதப்பித்து" பிடித்து அலையும் அவலம். மதவாத உணர்வுகள் படிப்பறிவு இல்லா பாமரனை விட படிப்பறிவு பெற்றவர்களாலே உணர்ச்சி வசப்பட்டு எழுச்சியுறுகிறது. புரட்டாசித் திங்கள் தமிழ் இலெமுரியாவில் தலையங்கம் படித்தேன். வட்டிக்கு கடன் வங்கி வெட்டிச் செலவு செய்தால் வீடுதான் விளங்கும? குடும்பம்தான் தழைக்குமா? அதே நிலையில்தான் இன்றைய இந்திய அரசு, அந்நியக் கடனுதவி பல பல கோடிகளில்… அதற்கான செலவோ திட்டப் பணிகளில் கால் பங்கு கூட எட்டாத நிலை! நெல்லுக்கு பாயும் நீரை, களைகளே உறிஞ்சிடுவது போல சுய ஆதாயத் தேடலுகும், சுரண்டலிலும் நிதி ஆதாரங்களின் விரயம். உள்நாட்டு உற்பத்தி மேலாண்மையை பெருக்க முனையாமல் அந்நிய இறக்குமதியை தாராளமாக்கிய அவலம். பொருளாதாரச் சரிவிற்கே இட்டுச் சென்றது. நாணயம் வீழ்ச்சியுற்றது. பட்டபின்பாவது தெளிவு பிறக்க வேண்டும். அதற்கான அறிகுறியே தென்படவில்லையே! நாணயமும் வீழ்ச்சியுற்று, நாட்டின் வளமும் சிதையுண்டு போனதுதான் விடுதலை பெற்ற இந்தியாவின் 66 ஆண்டு சாதனையோ! ஆதங்கப்பட வேண்டிய சூழலே. – ச.பரமசிவன், மூலைக்கரைப்பட்டி. கவிஞர் அழகன் கருப்பண்ணனின் "வெட்டி வீழ்த்த வேண்டிய மரம்" கவிதை ஒரு உணர்ச்சிப் பிழம்பு, உண்மையின் உரைகல்! மறைமுகமாய் மனிதன் இழைக்கும் பண்பற்ற கொடுஞ் செயல்களுக்கு "சாதியும்", நீதியும் பார்க்க மாட்டான். – அ.இராசப்பன், கோயம்பத்தூர். பல்வேறு தேசிய இன மக்களின் உணர்வு, உரிமை ஆகியவற்றை நீதியுடன் முன்னெடுத்துச் செல்லும் தகுதி வாய்ந்த தலைமையோ, அரசியல் கொள்கையோ நம்மிடத்தில் இன்று இல்லை என்று வருத்தப்பட்டு நம்முடைய அரசியலமைப்பு ஆவணம் மறு ஆய்வுக்கு உட்படுத்தபட வேண்டும் என்று கூறியிருந்த தலையங்கக் கருத்து சிந்தனைக்குரியதே. "இழப்பதற்கு இனி எதுவும் இல்லை" கட்டுரை நாம் மொழியை மட்டும் இழந்து கொண்டிருக்கவில்லை; பண்பாட்டையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று அன்றாட நடைமுறை மாற்றங்களைப் பட்டியலிட்டிருந்தது. நாம் செய்ய வேண்டிய பணியை யார் தொடங்குவது? அரசே அதற்குத் தடையாக இருக்கிறதே! – அ.கருப்பையா, பொன்னமராவதி. "உழவனின் பசி" ஒரு அருமையான கவிதை. இறுதியில் "ஏங்க மீதிக் கஞ்சி இருக்கா?" என்கிற வரி மனதை உலுக்கி விட்டது! "தலையங்கம்" மக்களாட்சி நம் நாட்டில் படும் பாடு எத்தகையது என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது! 51 விழுக்காடு பெற்றால்தான் ஆளுங்கட்சியாக வர முடியும் என்ற ஏற்பாடு வர வேண்டும். அதற்கான வழிமுறைகளை வரையறைப்படுத்த வேண்டும். செய்வார்களா? வேண்டாம் மதவாதம் அருமையான கட்டுரை! நமது நாடு மதவெறியால்தான் பீடிக்கப்பட்டுள்ளது. அது சாபக்கேடு. "இழப்பதற்கு இனி எதுவுமில்லை" அற்புதமான கட்டுரை! தமிழன் தன் தனித்தன்மை அத்தனையும் இழந்து விட்டான். இழந்தது கூடத் தெரியாமல் வாழ்கிறான்! தனிப்பெருமை பெற்ற "ழ"கரத்தைக் கூடச் சரியாக உச்சரிப்பதில்லை. – த.சுப்பிரமணியன், செகந்தராபாத். "தமிழ் இலெமுரியா" வாசித்து மகிழ்ந்தேன். தலையங்கம் காலத்திற்கேற்ப அருமையான, பின்பற்ற வேண்டிய பாடம். கட்டுரைகள், கவிதைகள் அனைத்தும் கருத்துக் கருவூலங்கள். மகாராட்டிராவிலிருந்து தனித்தமிழை வாரி வழங்கும் பாங்கு பாரட்டிற்கும், வாழ்த்திற்கும் உரியவையே! மென்மேலும் வளர, தொடர நெஞ்சார வாழ்த்துகிறேன். – இராம.இளங்கோவன், பெங்களூர். சுற்றுச்சூழல் அறிஞர் தியோடர் பாசுகரனின் கருப்பொருள் அழிக்கும் மனிதர்கள் என்னும் தலைப்பில் இயற்கையை நேசிக்கத் தூண்டும் கட்டுரை ஒரு கருத்துக் களஞ்சியமாகும். ஒரு பறவை அமர்ந்திட மரம் இல்லாத, பட்டாம்பூச்சிகள் தேனிருந்த மலர்கள் இல்லாத வீடு எப்படி வீடாகும் என்ற கேள்வி தற்போது இயற்கையை அழித்து தாண்டவமாடும் அரக்கர்களின் நெஞ்சைக் குடைந்தெடுக்கும் கேள்விக் கணையாகும். – இயற்கைதாசன், கொட்டாகுளம்.தமிழ் இலெமுரியாவில் வெளியிடப்படுகின்ற செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் எதுவுமே எனக்குப் புரிவதில்லை. இதைச் சொல்ல நான் வெட்கப்பட வில்லை. கடந்த இதழில் "உழவனின் பசி" என்றொரு கவிதையில் உழவனின் பசியை எடுத்துக் காட்டுகிறது என்றுதான் நினைக்கிறேன். இன்றைய இந்தியாவில் எந்த உழவன் கஞ்சி (உணவு) இல்லாமல் கடினப்படுகிறான்? எனவே இது இந்தியாவிற்கு பொருத்தமற்றது. – ஜான் சாமுவேல், மும்பை. பேரறிஞர் அண்ணாவின் செவ்வாழை சிறுகதை இன்றைக்கும் பொருத்தமான கருத்தோட்டம் உள்ளதாகத்தான் உள்ளது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு இந்தியாவுக்குக் கல்லறை கட்டிவிடும்! ஈரோடு புத்தகத் திருவிழாச் செய்திருக்கும் மற்ற தகவல்களும் இதழுக்கு நிறைவு தந்திருக்கின்றன. வளர்க தமிழ் இலெமுரியா! – க.அ.பிரகாசம், கொடுமுடி. இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமே உரிமை உடையதன்று. இயற்கையை அழிக்க மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மொத்த உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ இயலும். ஒன்றுக்கு இடையூறு ஏற்பட்டாலும் மொத்த உயிரினங்களுக்கும் அது இடையூறாக அமையும் என்பதைக் கட்டுரையாளர் தியோடர் பாசுகரன் மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் உரைத்துள்ளார். -பாவலர் கருமலைத் தமிழாழன், ஓசூர்.(அக்டோபர் – 2013)"