கரும்பு தின்னக் கூலியா… - தமிழ் இலெமுரியா

14 April 2014 7:43 am

விளம்பரமே விலாவெலும்பாய்த்  தாங்கி நாளும்விற்பனைக்கே வருகின்ற இதழ்போ லின்றிவளமார்ந்த நற்பண்பே முதுகெ லும்பாய்வயங்குமா ராட்டிரத்தில் தோற்றி எங்கும்உலவிவரும் தமிழிஇலெமு ரியாநல் ஏட்டை உவப்புடனே தமிழார்வ லர்கள் போற்றிநலம் காண்பர்! நற்கரும்பு தின்னக் கூலியாரேனும் கேட்பாரோ புகலு வீரே!- க.அ.பிரகாசம், கொடுமுடி. வணக்கம். கடந்த சில ஆண்டுகளாக எதையும் எதிர்பாராது தமிழ் இலெமுரியா" இதழை மிகச் சிறந்த வகையில் வடிவமைத்து, தமிழர் நலம் காக்கும் இலக்குடன் இதழை வெளியிட்டு வருகின்றீர்கள்.நெஞ்சம் நிறை பாராட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.பொதுவாக அயல் மாநிலம் வாழ் தமிழர்கள் திராவிட இயக்கப் பற்றாளராக இருப்பதும் மரபுக் கவிதையில் ஈடுபாடு காட்டுவதும் வழக்கம் தான். இந்த இயல்பு தமிழ் இலெமுரியா இதழிலும் இருப்பதைக் காண்கிறேன்.இந்த எல்லையையும் தாண்டி, அயல் மாநிலத்திலிருந்து தமிழ்ப் பற்றை அணையாமல் காத்துப் போற்றி வரும் தங்களுக்குத் தாய்த் தமிழகம், பெரிதும் கடன் பட்டுள்ளது. – சிற்பி.பாலசுப்ரமணியம், பொள்ளாச்சி. "தமிழ் இலெமுரியா" மாத இதழ் படித்தேன். நன்றாக இருந்தது. கற்பகத் தருவான பனை நுணாவிலூர் கா.விசயரத்தினம் எழுதிய கட்டுரை படித்து வியந்தேன். பனையில் இத்தனை சிறப்பம்சங்களா? நிறைய தெரிந்து கொண்டேன். இதழ் பணி மென்மேலும் வளர எனது வாழ்த்துகள். – நித்யா கணேசன், சென்னை. முதுமை நிலையில் வாடி நிற்பவர்களின் சோகத்தை "இறுதி நாளிலும் இனிக்கும் தமிழ்ப்பா!" என்ற கரிசனம் நிறைந்த கனிவான கவிதை மூலம் மிக அழகாக எடுத்துச் சொல்லி இமைகளின் ஓரத்தில் நீரை துளிர்க்கச் செய்து விட்டார் முனைவர் கோ.மோகனரங்கன்! பாராட்டுகள்! தமிழின்பால் அதீத பற்று கொண்டு சிறப்பாக செய்திகள் சேர்த்து ஆறு ஆண்டுகளைக் கடந்து ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் "தமிழ் இலெமுரியா" இதழ் இன்னும் பல புதுமைகள் படைத்து அனைத்து இந்திய தமிழ் மக்களின் பாராட்டுகளை பெற்று வான் உள்ள அளவும் இவ்வுலகில் வலம் வந்து உயர்ந்த நிலையை பெற இதய பூர்வமாக வாழ்த்துகிறேன். வாழ்க! வளர்க! உங்கள் தமிழ்ப் பற்றுக்கு தலை வணங்குகிறேன்! – ப.ல.பரமசிவம், மதுரை. "கிராம நிருவாகத்தின் ஆபத்துகள்" கட்டுரை இந்தியாவில் சாதிய ஆதிக்கம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டியது. பெரியாரின் ஐம்பதாண்டுகள் உழைப்பிற்குப் பின்பும் தமிழ்நாட்டு தருமபுரி நிகழ்ச்சி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் அந்த உயர்ந்த நோக்கு காலடியில் சிதைந்து போனதைக் கண்முன் காட்டியது. அந்தக் கட்டுரைக்கு அடுத்த பக்கத்தில் பம்பாய் திருவள்ளுவர் மன்ற விளம்பரத்தில் முக்கிய கடமைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள 1. அநீதிக்கு அடங்க மறு, 2. மாறுதல் விரும்பும் மக்களை ஒன்று திரட்டு, 3. மக்களின் உரிமைகளுக்காக ஓயாது போராடு என்ற கொள்கைகளை ஏற்பதுதான் தீர்வாக அமையும். சாதிகளின் பெயர்கள் அடியோடு ஒழியும் வரை ஒவ்வொரு தழ்த்தப்பட்டவர்களின் வீட்டிலும் பெரியாரும், அம்பேத்கரும் உருவாக வேண்டும். – கருமலைத் தமிழாழன், ஓசூர். "சீர் செய்யும் மருந்து" தலையங்கம் படித்தேன். தலையங்கத்தில் உள்ள கருத்துகளை உள்வாங்கி நமது எல்லா எம்.பி. களும் தேசப் பற்று கடமை உணர்வோடு அற வழியில் அரசியல் பணி செய்தால் நம் இந்திய நாடல்லவோ எல்லா துறையிலும் முதல் இடத்தில் இருக்கும். ஆனால், இந்திய கார்பரேட் நிறுவனங்கள் வைத்துள்ள வரிப்பாக்கிகள் 246 கோடிகளாம்; சுவிஸ் வங்கியில் அரசியல் வாதிகளின் கருப்புப் பணம் 80 இலட்சம் கோடிகளாம். இது இந்தியாவின் கடன் தொகையை விட அதிகமாம். கொண்டு வருவது யார்?சொகுசு கார் வாங்க 7 சதவீத வட்டி, முகேஷ் அம்பானிக்கு 4 விழுக்காடு வட்டி, விவசாயி வாங்குகிற கடனுக்கு 14 விழுக்காடு வட்டி. பிறகு எப்படி இந்த நாடு சீராகும்? – இயற்கைதாசன், கொட்டாகுளம். தமிழ் இலெமுரியா இதழின் "கற்பகத்தருவான பனை" என்ற கட்டுரை என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அதில் எத்தனை வட்டார மற்றும் இலக்கியச்சொற்கள்! முதல் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு முடிக்கும் வரை தமிழில் முதல் மாணாக்கனாக இருந்து, இன்றும் தமிழ் வேர்ச்சொற்கள் ஆய்வில் விடாமல் முயன்று வரும் இந்த 75 வயதானவன் கேட்டிராத படித்திராத இத்தனை சொற்களைப் பார்த்து வியந்து போனேன். என்னிடம் உள்ள 1936-இல் வெளிவந்த சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஒரு லட்சம் சொற்களைக் கொண்ட 7 தொகுதிகளாக வந்துள்ள தமிழ்ப் பேரகராதியில் கூட பல சொற்கள் இல்லை. அதுவன்றி எத்தனை எத்தனை சங்கதிகள்! எத்தனை நாடுகளில் பனை உள்ளது எத்தனை லட்சம் பனைகள் உள்ளன, ‘உள்ளகழ்‘ ‘புறவகழ்‘ என்ற சொற்பதங்கள் எல்லாம் என்னை மயக்கி விட்டன. ஈழத்தில் இருந்து சென்று இன்று இலண்டனில் வசிக்கும் மனிதர் என்றாலும் இத்தனை தமிழ்ச்சொற்களை பட்டிக்காட்டு புழங்கு சொற்களையும் இத்தனை இலக்கியங்களில் பனை பற்றிய செய்திகள் அனைத்தையும் திரட்டியதையும் ஒரு டாக்டர் பட்டம் பெறுதற்கான முயற்சி என்பேன். இதற்காகவே விசயரத்தினத்திற்கு டாக்டர் அல்லது அறிவர் பட்டம் தந்தால் தகும்! - வீ.செ.கருப்பண்ணன், நாமக்கல்.  "சீர் செய்யும் மருந்து" தலையங்கத்தில் இந்தியா வளம் பெறக் கூறிய சிந்தனையில் திட்டங்களுக்குச் செய்யும் செலவுகள் நேர்மையாக செயல்படுத்தப்பட்டால் இந்தியாவை விட சிறந்த ஒரு நாடு உலகில் இருக்க முடியாது என்கிற யோசனை முற்றிலும் உண்மை. தமிழ்ச் சொற் சிறப்பு கட்டுரை அருமை.  பனை சார்ந்த உரையில் பல தகவல்கள். இதில் பல பொருள்கள் நானறியாதவைகள். மௌனம் பேசிய மொழி கட்டுரையில் குருநானக்கின் தகவல் பொதிந்த விழிப்புணர்வு உரை வாசித்தேன். ஊசி கொடுத்து விட்டு மேல் உலகம் வரும் போது என்னிடம் கொடு என்ற காட்சியை படைத்திருக்கிறார் கே.ஆர்.சிறினிவாசன். – மூர்த்தி, வேலூர். தமிழ் இலெமுரியா மாசி இதழ் படித்தேன். பக்கத்துப் பக்கம் பயனுறு செய்திகள் பலவும் இருந்தாலும் "தமிழ் அறிஞர்கள்" என்கிற தலைப்பில் தமிழுக்காக, தமிழர் நலனுக்காக தொண்டாற்றி மறைந்த எண்ணற்ற தமிழறிஞர்களை வருங்காலப் புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துகின்ற புதிய முயற்சி உண்மையிலேயே வியந்து பாராட்டுதற்குரியதாகும். தமிழனுடைய வரலாற்றைத் தமிழனே அறிந்து கொள்ளாததின் விளைவுதான், இன்று சமுதாய, பொருளாதார அரசியல் துறைகளில் படு வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறான். திரைப்பட நடிகருக்காக மொட்டை போட்டுக் கொள்கிறான். பக்தியின் பேரால் அறியாமைச் சேற்றில் கால் வைத்து மீள முடியாமல் அமிழ்ந்து கொண்டிருக்கிறான். "தாய்மொழியைப் படிப்பதே வீண் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். இச்சூழ்நிலையில் பண்டைத் தமிழ்ச் சான்றோர்களின் வரலாற்றை அறிமுகப்படுத்துவது மிகமிக அருமையான முயற்சி. தமிழ் இலெமுரியாவில் அறிமுகப்படுத்தும் தமிழ்ச் சான்றோர்களின் வரலாறு வருங்கால இளைய சமுதாயத்தினருக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பங்குனி மாத தலையங்கத்தின் இறுதி பகுதி தமிழக வாக்காளர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்துகளாகும். இனியேனும் தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களா? மக்களவைத் தேர்தல் முடிவுகளே இதற்கு பதிலாக அமையும். "உட்பகை" எத்தகைய தீமை பயக்க வல்லது என்பதை அழகாக விளக்கி இருக்கிறார் சங்கீதா கண்ணன், தனது உட்பகை ஒழிந்திட கட்டுரையின் வாயிலாக!. தமிழ்நாட்டில் ஆரியம் ஒழியாத வரையில் ஆதிக்கம், ஆளுமை அகலாத வரை உண்மைகள் நிலைக்காது; உட்பகை ஒழியது என்ற வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. ஆலந்தூர் மோகனரங்கன், கடவூர் மணிமாறன், தமிழ் அன்பன் போன்றோரின் சீரிய கவிதைகள், சிறந்த கருத்துக் குவியல்!- க.தியாகராசன், குடந்தை. "வருமுன் காவாதான் வாழ்க்கை" தலையங்கம் வாசித்தேன். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் அர்த்தமிக்கதாயினும் இன்றைக்கு மின் தேவையை ஓரளவேனும் பூர்த்தி செய்கிறது. வந்து முடிந்துவிட்ட ஓர் விடயத்தை அலசி ஆய்வதில் பயன் என்ன? இனிமேலாவது இந்தியாவே மின்சக்தியில்லாமல் இருளற்று போய்விட்டாலும் "அணு உலை" என்கிற ஒன்றை நிறுவாமல் நாட்டைக் காப்போம் என்ற நற்கருத்தைத் தெளிவுப்படுத்தி விட்டது; விழித்து இருப்போம் – வேறு வழிகண்டு ஒளி பெறுவோமாக!- அ.இராசப்பன், கருமத்தம்பட்டி. தமிழ் இலெமுரியா மாசி இதழின் தலையங்கத்தில் ரசியாவிலிருந்து அணுமின் நிலையம் ஒன்றை வாங்க 1988 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தான செய்தி இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. மிக்க நன்றி.  தமிழ் அறிஞர்கள் பற்றிய குறிப்புகளில் தி.நீலாம்பிகை அம்மையார் தொடர்பானவற்றில் தந்தை ஈ.வெ.ராமசாமிக்கு "பெரியார்" என்னும் பட்டம் 1933 இல் வழங்கப்பட்டது எனத் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட நாள் 13.11.1938. – த.நாக ரத்தினம், சென்னை."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி