10 January 2014 2:51 am
வேற்றுமை விதைகள்" நிறையவே விதைக்கப்பட்டாகி விட்டன. இறையாண்மை இன ஆண்மையாக்கப்பட்டதால் வரலாறே மாற்றி எழுதப்பட்டுள்ளது. இலங்கையை போல் இங்கே இந்தியாவிலும் வேற்றுமைகள் விதைக்கப்படுகின்றன. அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாள்களும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் இறுதி நாள்களும் கண்கலங்க வைத்தது. "தமிழ் இலெமுரியா" ஒரு பனுவலாகப் பாதுகாக்க வேண்டிய இதழ்! வளர்க! – க.அ.பிரகாசம், கொடுமுடி. "நம்மவர்களின் அலட்சியம்" கட்டுரைப் படித்தேன். அப்போது, நாட்டு விடுதலைக்காக சிறையில் வதைபட்டும், செக்கிழுத்தும், செல்வங்களை எல்லாம் இழந்தாலும், கவலைப்படாத வ.உ.சிதம்பரனார், நம் மக்கள் தம்மை அலட்சியப்படுத்தி விட்டதற்காக மனம் நொந்துள்ளார்! – அ.இராசப்பன், கருமத்தம்பட்டி. அம்பேத்கரை பற்றிய கட்டுரையைக் கண்டேன். என்னையுமறியாமல் கண்களில் நீர் வழிந்தது. பொருத்தமான நேரத்தில் பொருத்தமான படத்தை கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டுள்ளீர்கள். க.விசயரத்தினத்தின் தொல்காப்பியர் காட்டும் பண்டைத் தமிழர் – வாழ்க்கை நெறி கட்டுரை அருமை. அதை எழுதியக் கரங்களுக்கு நன்றி. – முரளிதரன், மதுரை. முதற்பக்கமும், கட்சிப் பக்கமும் ஒரு கலைஞருக்கும், ஒரு தியாகிக்கும் நினைவஞ்சலியாக மிளிர்ந்தது. நீர்ப்போர் மூளுமா? கட்டுரை இன்றைய உலக நாடுகளை எதிர்நோக்கியுள்ள சிக்கலை அலசி ஆராய்ந்திருந்தது. அப்போரைத் தவிர்க்க இன்றைய தலைமுறை ஆற்ற வேண்டிய பணிகளையும் சுட்டிக் காட்டியிருந்தது. அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாட்கள் கண்ணீருடன்தான் முடிவு பெற்றதா? தொல்காப்பியர் காட்டும் பண்டைத் தமிழர் வாழ்க்கை நெறி பொருளதிகாரத்தைச் சுருக்கிக் கூறியது போன்றிருந்தது. நமது பண்டைய மரபுகளை நினைவூட்ட இதுபோன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து "தமிழ் இலெமுரியா" வெளியிடட்டும்! – அ.கருப்பையா, பொன்னமராவதி. துரோகத்திற்கும் ஒரு சார்பு அரசியலுக்கும் இடையே தமிழின் தனித்தன்மையை பாதுகாப்பது, வளர்ப்பதென்பது ஒரு கடினமான பணி! இந்தச் சூழலில் தமிழின் அல்லது தமிழரின் நலன் கருதும் நோக்கினை மட்டுமே மையமாகக் கொண்டு திங்கள் தோறும் தலையங்கமும், கட்டுரைகளும் வெகு சிறப்பாகவே வந்து கொண்டிருக்கும் நம் "தமிழ் இலெமுரியா" ஒரு வருங்கால வரலாற்று ஆவணம்! – இரா.செல்வமணி, பாப்பாக்குடி. "தமிழ் இலெமுரியா" இதழை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். வட நாட்டிலிருந்து மாதந்தோறும் மலரும் ஒரு மாறுபட்ட மாத இதழ் என்பதற்கு நானுமொரு சாட்சி. மனதுக்கும் அறிவுக்கும் தெளிவைக் கொடுக்கின்ற செய்திகளை இதழ் மூலம் அறிகிறோம். அத்தோடு இது தமிழர்களின் வரலாற்று பொக்கிசம் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். – கவிராஜ், நவிமும்பை. வேற்றுமை விதைகள் தலையங்கம் படித்தேன். இந்தியாவின் அமைப்பு பல மாநிலங்களின் கூட்டிணைப்பு என்பதால் நாம் அடைந்ததோ கையளவு நன்மை. ஆனால், இன்று அதுவே ஓட்டுக்கும் ஊழலுக்கும் ஏமாற்றிப் பிழைப்பதற்குமான விடயமாகிப் போனது என்பதுதான் கடலளவு உண்மை. – இயற்கைதாசன், கொட்டாகுளம் "அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாட்கள்" என்னும் கட்டுரையைப் படிக்கும் போது கண்ணீரால் கண்கள் குளமாயின. துணை இருந்தவர்கள் துணையாய் இல்லாமல் அண்ணலைத் துன்புறுத்துபவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதும் உண்மைதான். அதைப் பார்த்ததாலோ என்னவோ தந்தை பெரியாரும் சிந்தித்துச் சுயமரியாதை பரப்புரைக்கு எவரையும் நம்பாமல் சேர்த்து வைத்த கொள்கையும், செல்வமும் பறிபோகாதிருக்க, உடன் இருப்பவர்கள் என்னென்ன பாதகச் செயல்களைச் செய்தார்கள் எனப் பெரியார் பட்டியலிடுகிறார். "இத்தகைய சமய சஞ்சீவிகளுக்காக நான்கரைக் கோடி மக்களின் தன் மானம் இப்படிக் காற்றில் பறப்பதா என்பதற்கும் மந்திரி பதவியும், நிருவாக சபை மேயர் பதவியும், கவுன்சிலர், பிரசிடென்டு, புத்தக வியாபாரம், கான்டிராக்டு, சொந்த பிள்ளை குட்டிகளுக்கு உத்யோகம், கவர்மெண்டு வக்கீல் ஆகிய எலும்புத் துண்டுகள் ஒன்றிரண்டு கிடைப்பதற்கும், இதற்காக பின்னால் வால்பிடித்து வழிபடுவதால் எறியப்படும் இரண்டு பிச்சைக் காசுகளுக்குமாக இவ்வளவு "மானங்கெட்ட, இனத்துரோக, குலத்துரோக" காரியத்திற்குத் துணிவதா? நமக்கென்று ஒரு கொள்கையில்லையா? இவ்வளவு படித்த, இவ்வளவு செல்வம் படைத்த, இவ்வளவு பிரபலமான வாழ்வுக்கு எவர் தயவும் தேவையில்லாத தக்கவர்கள் என்று சொல்லப்படும் பிரமுகர்கள் இப்படிப் பேசி நடித்துப் பலனடையப் பார்த்தால் வாழ்வுக்கு மானமுள்ள வழியில்லாதவர்களும் வழிமுறையைத் தப்பாக உணர்ந்தவர்களும் வரப்போகும் சந்ததிகளும் எப்படியும் நடந்து கொள்ள மாட்டார்களா? என்று கேட்கிறோம்." – புலவர் சி.சுவாமிநாதன், பந்தலூர்."