மதவாதமாக மாறிய மதம் - தமிழ் இலெமுரியா

15 March 2016 10:44 pm

‘மதங்களிடம் அடிமைப்பட்ட தமிழர்கள்’ என்னும் முனைவர் க.ப.அறவாணனின் கட்டுரையை நுட்பமாக வாசித்தேன். மதங்களிடம் தமிழர்கள் அடிமைப்பட்ட வரலாற்றைத் தன் பார்வையில் விளக்க முயல்கிறார் கட்டுரையாளர். இராசராசச் சோழனின் தமக்கையார் குந்தவை தமக்குரிய மதச் சார்பை மன்னவரிடம் பரப்பினார்; வெற்றியும் பெற்றார் என்கிற ஒரு கருத்தை வலிமையாகச் சொல்கிறார் ஆசிரியர். சைவக்குரவர் சைவ சமயத்தைப் பரப்பியதைப் பற்றியும் சொல்கிறார். 13, 14-ம் நூற்றாண்டில் மாலிக் காபூரோடு இசுலாம் தெற்கே பரவியதையும் சொல்கிறார். கிறித்துவ அதிகாரிகள் கிறித்துவத்தைப் பரப்புவதில் அக்கறை உடையவராக இருந்தார்கள் எனவும் சொல்லுகிறார். சோழர் காலத்தில், குறிப்பாகப் பக்தி இயக்க காலத்தில் சமணத்தை வீழ்த்தி, சைவம் மேலே எழுந்தது என்பது உண்மைதான். இசுலாமியத்தை பொறுத்தவரையில்  இசுலாமிய  நாடுகளோடு உள்ள வியாபாரத் தொடர்பால் இசுலாமிய சமயம் மாலிக் காபூருக்கு முன்னேயே தெற்கே பரவியது. இசுலாமிய சூஃபிகளும்  தமிழ்நாட்டில் பரவி சமயப் பரப்புதலை செய்தார்கள். இது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னமே நடந்தது என்பது சில இசுலாமிய ஆய்வாளர்கள் சொல்லும் செய்தி. சீர்திருத்தக் கிறித்துவத்தைப் பொறுத்த வரையில், ஆங்கில  ஆட்சியாளர்கள் சமயம்  பரப்பும்  நோக்கம் உடையவர்களாக இல்லை என்பது வரலாறு. நாட்டைச் சுரண்டுவதே அவர்களின் முதன்மையான நோக்கம். சீர்திருத்தக் கிறித்துவ சமயத்தைப் பரப்பவந்த சமயத் தொண்டர்களை ஆங்கில ஆட்சியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் வரலாறு. மதம் எல்லா நாட்டிலும் இருந்தது, இருக்கிறது, இருக்கும். இந்தியாவிலும் இருந்தது. இந்த மதம் எப்போது மதவாதமாக மாறியது? இதுதான் சிக்கல். உலகத்தில் எங்கும் இல்லாமல், இங்கு மட்டும் இந்து மதத்துக்குள்ளே வடிவம் பெற்று, அரசு அதிகாரமும் பெற்று, படிப்படியாக நாட்டையே விழுங்கிவரும் மதவாதம் எது? மனுதர்ம மதவாதம். வேறு வார்த்தையில் சொன்னால், பிறப்பால் தீர்மானிக்கப்படும் நிறதர்ம மதவாதம், வடமொழியில் வர்ணதர்ம மதவாதம். இது பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் நுழைந்தது என்கிறார்கள் வரலாற்றுக்காரர்கள். படிப்படியாக வளர்ந்து சோழ மன்னர்கள் ஆட்சியை கைப்பற்றி, அவர்கள் தங்களை மனுநீதி சோழர்கள் என்று பிரகடனம் செய்யும் அளவுக்கு அது அதிகாரம் பெற்றது. சோழர்கள் மட்டுமல்ல, படிப்படியாக எல்லா மன்னர்களும் மனுநீதிக்கு ஒடுங்கிப் போனார்கள். சமத்துவமாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழ்  சமூகம். பிராமணர், சத்திரியர், வைசியர், பஞ்சமர், பெண்கள் என ஆறடுக்காக உடைக்கப்பட்டு, ஒன்றுக்குள் ஒன்று அடிமையானது. இதனால்தான் மதத்துக்கு மக்கள் அடிமையான சூழல் ஏற்பட்டது. மற்றபடி மதம் என்பது ஒரு நம்பிக்கையாக, ஒரு சடங்கு- சம்பிரதாயமாக, சமூகத்தில் செயல்படுவதில் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. அது அறிவுக்குச் சம மரியாதை தந்து, அதன் வளர்ச்சியைக் கட்டுபடுத்தாமலிருக்கும் வரையில்.- கவிஞர் பொன்னீலன், கன்னியாகுமரி –  629 501நூலில் ஆடும் பொம்மைகள்‘சந்தை தேசியத்தின் அடிமை விலங்கு?’ கலையரசனின் முதன்மைக் கட்டுரை, கணினித் துறை பணியாளர்களின்     தற்போதைய நிலையை மிகத் துல்லியமாக படம் பிடித்து காட்டியுள்ளது. ‘கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் ஐ.டி. தொழிலாளிகள் பெரு மூலதனத்தின் நூலில் ஆடும் பொம்மைகள்’ என்பது சென்னை வெள்ளக்காடான போது, பணியாளர்களின் மன நிலை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், மனிதாபிமானம் இன்றி அவர்களை (மகளிர் உட்பட) உடனடியாக இட மாற்றம் செய்து வேலை வாங்கிய இரக்கமற்ற செயலின் போது தெளிவாகத் தெரிந்தது. சுரபி விஜயா செல்வராஜின் ‘என் அன்புத் தோழியே’, சிறுகதை என் நெஞ்சைத் தொட்டது. இளம் வயதில் பள்ளி நாட்களில் எந்தப் பாகுபாடுமின்றி பள்ளித் தோழர்களிடம் பழகிய நாட்களை நினைவு கூர்ந்தது. வயது ஏற, ஏற, ஏற்றத்தாழ்வு காட்டும் மனிதனின் நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை வெகு இயல்பாக, அழகாக உணர்த்தியுள்ள பாங்கு அருமை. பாராட்டுகள்!- வீ.க.செல்வக்குமார், சென்னை –  600 032மனதை நெகிழ வைத்ததுதமிழர் திருநாள் சிறப்பிதழில் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ எனும் தலைப்பில் உள்ள செய்திகளும் விளக்கங்களும் அருமை. விவசாயிகள் குறித்த ‘பழைய சோறும் பச்சைமிளகாயும்’ கட்டுரையும் படங்களும் சோகக் காட்சியாக மனதை நெகிழ வைத்தன. ‘தமிழ் இலெமுரியா’ இதழை ஆவலுடன் பார்க்க படிக்க விரும்பும் உண்மை வாசகரின் மனமார்ந்த பாராட்டுகள்!-கா.திருமாவளவன், திருவெண்ணைநல்லூர் – 607 203.என்னைக் கவர்ந்த வரிகள்மாசி மாத இதழில் அவுட்சோர்சிங் தொழிலை அடிமை விலங்கு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது உண்மைதான். ஆனால் இன்று அதுதான் நம் நாட்டு கணினிப் பொறியாளர்களுக்கு சோறு போடுகிறது. இரண்டு பேர் வேலையை ஓர் ஆளைக் கொண்டு செய்து அவனுக்கு அரைச் சம்பளம் கொடுத்து, ஒன்றரை ஆள் சம்பளத்தை இலாபக் கணக்கில் காட்டும் நிறுவனங்கள் என்கிற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவுட்சோர்சிங் என்பதற்கு வரைவிலக்கணம் இதுதானோ?எஸ்.மோகன், கோவில்பட்டி – 628 501வரவேற்புக்கு உரியதுகொடுமுடி க.அ. பிரகாசத்தின் ‘ஓர் அஞ்சல் அட்டை’ சிறுகதை நன்றாக இருந்தது. பேச்சு வழக்குச் சொற்களைக் குறைத்து, விழுமியச் சொற்களால் எழுதியது வரவேற்புக்கு உரியது; வாழ்த்துகள்.மா. கந்தசாமி, தஞ்சாவூர் – 613 001அரக்கமனம்‘தமிழ் இலெமுரியா’ இதழில் முதலில் தலையங்கம் படிப்பதையே வழக்கப்படுத்திக் கொண்டுள்ளேன். காரணம் அது ஊடக  நேர்மையும் நடுநிலையும் கொண்டு, அய்யன் திருவள்ளுவர் வழியில் நன்முத்துகளாக இருக்கும். ஆனால் மார்கழி இதழ் தலையங்கத்தில் மனித நேயமற்ற அரக்கமனம் படைத்தவர்களின் ஆட்சி அலங்கோலத்தின் உச்சகட்டத்தையும் காட்டி, அத்தனை கொடுமைகளையும் தாண்டி மலர்ந்த இந்த மனித நேயத்தின் சிறப்பைச் சொல்லியிருந்தால் மனித நேயத்திற்கு மதிப்புக் கூடியிருக்கும்.- ம.கிருட்டிணமூர்த்தி, புதுக்கோட்டை – 622 001அருமைகொசு குறித்த செய்திகள் அருமை. கொசுவை ஒழிக்க முடியாது! என்றாலும் கொசுவம் செடி(நொச்சி) அதன் நச்சு தன்மையை அழிக்கும்! பசு மாட்டின் நறுநீரும் (மூத்திரம்) கொசுவின் நச்சுத்தன்மையை அழிக்க வல்லது. அ.ம.பெ.காவளர் தமிழ்அறிவன், பேட்டைவாய்தலை – 639 112.மகிழ்ச்சி!‘தமிழ் இலெமுரியா’ நல்ல பல அரிய தகவல்களை வெளிக் கொணர்கிறது. மகிழ்ச்சி! மதங்களிடம் அடிமைப் பட்ட தமிழர்கள் கட்டுரையில், ‘புலால் உண்ணாமல் இருக்க முடியாது என்கிறது இசுலாம்’ என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால், புலால் உண்பதை இசுலாம் அனுமதித்துள்ளது. உண்பது அவரவர்களின் விருப்பம். சாப்பிடலாம் அல்லது சாப்பிடாமல் இருக்கலாம். கட்டாயம் இல்லை என சொல்லியிருக்க வேண்டும்.- ப. பீர் இலாஹி, உத்தமபாளையம் – 625 533.தடுமாற்றம்.‘தடமறிந்து சென்றிடுக! தளமறிந்து நின்றிடுக!’ என்கிற தலையங்க கட்டுரையில், தமிழ்நாட்டில் 15ஆவது சட்டப்பேரவை அமைக்கவிருக்கும் முதல்வர் வேட்பாளர்களின் நிலை குறித்து தமிழக மக்கள் தடுமாற்றம் இன்றி வாக்களிக்க வேண்டும் என உணர்வுப்பூர்வமான செய்திகளை, தனித் தமிழில் வள்ளுவரின் குறளை சுட்டிக்காட்டி கூறியிருப்பது பாராட்டுக்குரியது. - வ.பழனிக்குமார், பசுமலை – 625 004.விரட்டி அடிப்போம்!தகுதி படைத்தவர்கள் ஆட்சி செய்து நல் வழியில் நாட்டை  நடத்திச் சென்றனர் அன்று. தன்னலத் தலைமையில் தவறான பாதையில் பதவியில் உயர்ந்து பொருளீட்டி, பண்பிலா பாதாளங்களில் சிக்குண்டு சிதறிக்கிடக்கின்றனர் இன்று, நல்லவர்களைத் தேர்ந்தெடுப்போம், நயவஞ்சகர்களை விரட்டியடிப்போம், நல்லாட்சி அமைவதற்கு கை கொடுப்போம் என ஒருமித்த எண்ணத்துடன்- தமிழர்களே! தடமறிந்து சென்றிடுக! தலை  நிமிர்ந்து நின்றிடுக!- ப.லெ.பரமசிவம்,  மதுரை – 625 009.மூளைச் சலவை.அன்வர் அல் சதாத் குணநலன்களை வாசித்தேன். அவர் ஆற்றிய பணிகளின் ஆபத்தே அவரை இராணுவ அணிவகுப்பில் சுட்டுக்கொல்லப் பட்டதற்கு காரணம் என்பதை அறிந்தேன், நல்ல தலைவர்களை சுட்டுக் கொல்வது சரியல்ல. ‘மதங்களிடம் அடிமைப் பட்ட  தமிழர்கள்’ பற்றிய கட்டுரை வாசித்தேன். மதங்களின் பெயராலும் மூளைச் சலவை செய்வதற்கு ஏற்றவர்கள்  தமிழர்கள். மூளைச்சலவை செய்யப்பட்ட மதமூடர்களை என்னைச் சுற்றிலும் கண்டு வருகிறேன்.- மூர்த்தி, சென்னை – 600100உயர்வுண்டு!சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விருக்கின்ற  தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு தங்களின் தலையங்கம் சிறந்த குறிப்புணர்த்தல்.  உணர வேண்டியவர்கள்  உள்வாங்கி உரிய முடிவெடுத்தால் உயர்வுண்டு தமிழ் நாட்டிற்கு! பாப்பாக்குடி இரா. செல்வமணி, திருநெல்வேலி – 627 011.நற்சான்று !தவத்திரு. தயானந்த சந்திர சேகர சுவாமிகள் அருளிய மதிப்புரையே தங்கள் இதழுக்கு கிடைத்த நற்சான்று! ‘தடமறிந்து சென்றிடுக! தளமறிந்து நின்றிடுக! கால ஓட்டத்திற்கு ஏற்ற பொருத்தமான தலையங்கம். இதழில் இடம்பெற்ற கட்டுரை, கவிதைகள் அனைத்தும் நன்முத்துகள்.த. சுப்ரமணியன், சிகந்தராபாத் – 500 061.பெட்டகம்மாசி இதழ் கண்டேன். அது முற்றிலும் ஆய்ந்தறியப் பட்ட ஆய்வுப் பெட்டகம். மதங்கள் குறித்த கட்டுரையில் வரலாறு அறியாத இனம் வரலாற்றிலிருந்தே அழிந்து போய்விடும் எனும் வரிகள் மிகச் சரியானவையே. இதனை இனியாவது தமிழர்கள் உணர்ந்து எழுச்சி பெறவேண்டும். எனவே, தமிழன் விழித்தால், வெல்வான்! இன்றேல் அய்யா அறவாணன் கூறியது போலவே, அழிவை நோக்கி நடந்து, இனச்சுவடே இல்லாமல் அழிந்தொழிவான். க. தியாகராசன், குடந்தை – 612 501.கற்கண்டு!தமிழ் மக்களுக்கு  தடமறிந்து செல்லவும்  தளமறிந்து நிற்கவும் அறிவுறுத்தியுள்ள ஆசிரிய உரைக்கருத்து அத்துனையும் கற்கண்டு. தேர்தலில்  தடம்புரளா வண்ணம் நல்வழி காட்டிற்று.  என் அன்புத்தோழியே- சிறுகதை சாதியும் பணமும் நாட்டிற்கு ஏற்படுத்தும் கேடுகளைப் போட்டுடைத்து சாதித் திமிரின் சீற்றத்தை, தீண்டாமையின் கோரத்தைத் தோலுரித்துக் காட்டிற்று. தமிழகத்தில் தடம் பதித்த மதங்களின் ஆதிக்கத்திற்கு தமிழன் அடிமைப் பட்டுழன்றாலும் அவன் தாய் மொழி தமிழ் காலத்தை வென்று  தலை நிமிர்ந்து நிற்பதை முனைவர். அறவாணர் வரைந்திருந்த கட்டுரை சிறந்த வரலாற்றுச் செய்தியாகும்.- புலவர்.ந. ஞானசேகரன், திருலோக்கி – 609 804.ஆரவாரங்கள்தான்அரைக்குட ஆராவாரங்கள் கவிதை படித்தேன்.  தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களை, அடுக்கடுக்காக, எடுத்துக் கூறுயுள்ள கவிதை வரிகள் மிகச் சிறப்பு! கல்வி- காசுக்கு விற்பனை, மக்களை மடையர்களாக்கும் மதுவின் கோரத்தாண்டவம், சுகாதாரச் சீர்கேடுகள், வடிகால் இழந்த மழை நீரோட்டம், சுரண்டல், ஊழல், பொய்யர்களின் புனைந்துரைகள் – இன்னம்பிற அனைத்தும் அரைகுடத்தின் ஆரவாரங்கள்தான்!துரை. சௌந்தரராசன், காஞ்சிபுரம் – 631 501.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி