மார்கழித் திங்களில் கிடைக்கப்பெற்ற மடல்கள் - தமிழ் இலெமுரியா

15 December 2013 6:53 am

இதழ் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆசிரியர் அவர்களுக்குச் சிறு விண்ணப்பம். தமிழ்நாட்டின் சிறப்பு, மாவட்ட வரலாறு, அந்த மாவட்டத்தின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றியச் செய்திகளை எடுத்துரைத்தால் எங்களைப் போன்ற மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். – ஜெ.ஜெபஸ்தியன், சிவகங்கை. கார்த்திகை இதழில் வேற்றுமை விதைகள்" தலையங்கம் மக்களை விழிப்படையச் செய்யும் என நம்புகின்றேன். சோவியத் உருசியா போலவே ஐக்கிய பேரரசு (க்ணடிtஞுஞீ ஓடிணஞ்ஞீணிட்) நிலை தடுமாறிக் கொண்டுள்ளது. முன்னர் போர் மூலம் அயர்லாந்து பிரிந்து போனது. இப்பொழுது ஸ்காட்லாந்து 2014 செப்டம்பரில் கருத்துக் கணிப்பு மூலம் பிரியவுள்ளது. தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வெளியாகும் "தமிழ் இலெமுரியா" தமிழ்ப் பண்பாட்டைப் பரப்பும் பணியில் தலைசிறந்து விளங்குகின்றது. பண்டைத் தமிழர் வாழ்க்கை நெறிப்பற்றிய தொல்காப்பியச் சிந்தனைக் கட்டுரை, அக்கால தமிழர் பண்பாட்டை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. – பெ.சிவசுப்பிரமணியன்,  ஆட்சி அலுவலர் (ஓய்வு), சென்னை. "தமிழ் இலெமுரியா வலையேற்றப் பக்கத்தில் தலையங்கம் படித்தேன். வலைப்பக்கத்தில் நடப்புச் செய்திகளும், வருவது நன்றாக உள்ளது. கல்வி வணிகமாகிவிட்ட நிலையில் தனியார் கல்வி நிறுவனங்களும், சுயநல அரசியல்வாதிகளும் புதிய கல்வியைத் தருகிறோம் என்ற பெயரில் கூட்டுக் கொள்ளை அடிக்க மேலும் ஒரு வாய்ப்பாகவே இது அமையும். மாநில மக்களின் உணர்வுகளை மதிப்பது என்பது மத்திய அரசுக்கு கிஞ்சித்தும் கிடையாதே. அதனால்தான் பெரியார் ஆகஸ்டு 15, விடுதலை நாளை கருப்பு நாளாக அறிவித்தார். வெள்ளைக்காரனிடமாவது கொஞ்சம் பரிவை எதிர்பார்க்கலாம். தற்போது பொதுநல மாநாட்டிற்கு வந்த வெள்ளைக்கார தலைமையமைச்சர் டேவிட் கேமரூன் அதிரடியாக யாழ் சென்று ஈழ மக்களைச் சந்தித்தார். ஆனால் இந்த கொள்ளைக்காரர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்? – வீ.க.செல்வக்குமார், சென்னை. இராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா பற்றிய பொய்யான அச்சமும், அனாவசிய அங்கலாய்ப்பும் அள்ளி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாகத் தாய்த் தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பயிற்றுவிக்கும் பல்லாயிரம் தனியார் பள்ளிகளைக் கழக அரசுகள் ஊக்குவித்த போது ஓலமிடாததேன்? கிருத்திகா, துர்கா, அனுஷ்கா போன்ற பெயர்களை மதிப்புமிகு திராவிடத் தலைவர்களது குடும்பம் உடனே கைவிட தமிழ் இலெமுரியா முயற்சி எடுக்கலாமே? வ.உ.சி நினைவு நாள் தொடர்பான கட்டுரை, நீர்ப்போர் மூளுமா மற்றும் தொல்காப்பியம் பற்றிய கருத்தோவியங்கள் சுவையாக அமைந்துள்ளன. – க.த.அ.கலைவாணன், வேலூர். கேட்பாரற்றுக் கிடந்ததா கச்சத்தீவு? கட்டுரையில் அளித்துள்ள விபரங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்திற்குப் பதிலாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டியவை. வேலு நாச்சியாரின் வெற்றி என்கிற நூலுக்கு நூலோசை பகுதியில் அளித்துள்ள மதிப்புரை சிறப்பாக இருந்தது. இதுபோன்ற சிறந்த நூல்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள்.  தமிழரின் உணர்வையும், உள்ளக் கிடக்கைகளையும் பகிர்ந்து கொள்ளும் "தமிழ் இலெமுரியா"வின் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்! – அ.கருப்பையா, பொன்னமராவதி. "தமிழ் இலெமுரியா" இதழுக்கென தனித் தகுதி உண்டு! இயற்கை வளம் பற்றிய கருத்தாக்கம்! இளம் தளிர்களின் திறமை போற்றும் எழுத்துச் சுவை! நாட்டின் நலம் பேணும் நடுநிலையான சிந்திக்க வைக்கும் அறிவுசார்ந்த ஆலோசனைகள்! உடல் நலம் காக்கும் மருத்துவத்தின் பலன் பற்றியச் செய்தித் துளிகள்!அரசியல் வாடை இல்லாமல் அறிவுசார்ந்த கருத்துகளோடு உள்ளதை உள்ளபடி எடுத்து வைக்கும் துணிவு! தடைகள் பல இடையில் வந்தாலும் தொடர்களாக்கி தொடர்ந்து நடைபோடும் இலெமுரியா பயணத்தில் என்றும் துணையிருப்போம்! – வெ.சித்தார்த்தன், பெரம்பலூர். கவிஞர் இன்குலாப்பின் கவிதை கருத்துக் குருடர்களின் கண்களைத் திறக்கும். துவக்கமே சிறப்பாக இருந்தது. வளமான தன் வாழ்வியல் கருத்துகளை பகுத்தறிவுச் சிந்தனைகளோடு வழங்கி இருக்கிறார் குன்றக்குடி அடிகளார். பயனுள்ள பண்பாடு பேணும் அரிய கட்டுரை. தலையங்கம் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களுக்கே வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணியோசை. குடிகாரன் திருந்தலாம். ஆனால் "கொடுங்கோலர்கள்" திருந்தியதாக வரலாறில்லை. இதற்கு இராசபக்சே மட்டும் விதிவிலக்காக முடியுமா? கட்டுரைகள் அனைத்துமே புதிய சிந்தனையின் வார்ப்புகள். மராட்டிய மண்ணில் தமிழ்க் குரல். அந்தக் குரல், குறள் போல் புகழ் பெற அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன். – க.தியாகராசன்,  நெய்வேலி. மலைப்பாம்பு முன் மகுடி ஊதலாமா? தலையங்கம் உணர மறுத்த உண்மை. ஒப்புக் கொள்ளப்பட்டது ஆறுதல். ஈழத் தமிழர் துயர், இன்னல், இனப்படுகொலைகள், வடுக்கள் மாறாத் தழும்புகள் ஆகும். இத்தனை தமிழர்கள் இருந்தும் இனப்படுகொலையை தடுக்க இயலாத இவ்வேதனை நிகழ்வுகள் மறக்க முடியாதவை. 2009 நினைவுகள் நமக்கே தாங்க முடியவில்லை எனில், ஈழத் தமிழர்கள் என்ன பாடுபட்டிருப்பார்களோ? – அஞ்சாமை கதிரொளி, மும்பை. "தமிழ் இலெமுரியா" இதழின் அனைத்துப் படைப்புகளுமே தமிழின் பெருமையை விரித்துப் படைப்பதாகவே இருக்கின்றன. மனித வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல அறிவுரைகளைக் கூறுவதாகவே உள்ளன என்பதைப் பாராட்டுகின்றேன். -அகப்பையர் பி.வேலுசாமி, எடப்பாடு. கச்சத்தீவு அனாதை சொத்து அல்ல. இந்தியாவிற்கே சொந்தமானது என்பதைத் தெளிவாக விளக்கிய கல்வெட்டு ஆய்வறிஞர் தொகுப்பு படித்தேன். படித்தவர் எல்லாருக்கும் புரியும்படி தகவல்கள் இருந்தது. செ.இராசு சொல்லிவிட்டார், ஆனால் இதை உச்ச நீதிமன்றம் சொல்வதற்கு எத்தனை காலம் ஆகுமோ? மலைப்பாம்பு முன் மகுடி ஊதலாமா? தலையங்கத்தில் ஐ.நா.வின் கையாலாகாத போக்கைச் சாடியது அருமை. ஐ.நா.வில் மாற்றம் வருகிறதோ? இல்லையோ? இந்திய அரசியலில் பெரும் மாற்றம் கண்டால் மட்டுமே ஈழம் தீர்வு காணும். நீர்ப்போர் மூளுமா? உரை படித்தேன். நீரை மாசுபடுத்தும் கொடும் செயல்களை எல்லாம் உரையில் காண முடிந்தது. அம்பேத்கரின் இறுதி நாட்கள் பற்றிய தகவல்கள் படித்தேன். அம்பேத்கர் கண்ணீர் விட்டது போல், ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக போராட இன்று யாருமே இல்லை. அம்பேத்கர் பின் சென்றவர்கள், தற்போது தரம் கெட்ட தலைமையின் பின்னரும், சாராயத்திடம் அடிமைப்பட்டும், இன்னும் பலர் இலவயங்களைப் பெற்றுக் கொண்டும் ஒதுங்கி விட்டனர். அப்புறம் யார்தான் பாடுபடுவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு. – மூர்த்தி, வேலூர். "மலைப் பாம்பு முன் மகுடி ஊதலாமா?" தலையங்கம் மிக மிக அருமை. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தலையங்கத்தின் அருமையான கருத்துகள், நறுக்கென்று இருந்தன. மோசமும் நாசமும், வெறும் வேசமும்தான் இதுகாறும் மிஞ்சியுள்ளன. இலங்கை நமது நட்பு நாடென்று கூறிக் கொண்டே தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும், இதயக் குமுறல்களுக்கும் செவிமடுக்காத நடுவணரசு, தனது தவறை உணர்ந்து கொண்டால் சரி. காலம் நிச்சயம்ஒரு நாள் பதில் சொல்லும்! – முல்லை.வி.தேவதாசு, ஐதராபாத்.  "வேற்றுமை விதைகள்" தலையங்கம் இன்று நாட்டை கூறு போட நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சூடு. நடுவண் அரசு "ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா" என்கிற பள்ளிக் கல்வி திட்டத்தை தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் திணிக்க திட்டமிடுகின்ற சதிச் செயலை, தலையங்கம் வாயிலாக நடுவண் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. – முத்தமிழ் தண்டபாணி, அம்பர்நாத்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி