வாசகர் பக்கம் - தமிழ் இலெமுரியா

15 September 2015 5:46 pm

ஈடு செய்ய வந்தது! மாநிலங்கடந்து வெளிவரும் ‘தமிழ் இலெமுரியா’ தமிழுக்கு ஆக்கம் தரும் வகையில் அமைந்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. பொதுவான குறைகளின்றி, அச்சும் அமைப்பும் உள. பிழையற்ற நல்ல தமிழ், தேர்ந்தெடுத்த நல்ல கட்டுரைகள், எளியோரை, துன்புறுவோரை உலகத்திற்கு அறிமுகப்படுத்துதல், சீர்த்திருத்தச் சிந்தனைகள், என்றும் வைத்திருந்து பாதுகாக்கத் தூண்டும் பொலிவு. இழந்த இலெமுரியாவுக்கு ஈடுசெய்ய வந்ததுபோல் இவ் இதழ் வளர வேண்டும் என்பது என் அவா. தமிழ் இதழ்கள் இதுபோல் கண்ணும் கருத்துமாக நன் முறையில் வெளிவர இவ்விதழ் ஒரு தூண்டுகோலாகும் என்பது உறுதி. என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!- தமிழண்ணல், மதுரை – 625 020வாழ்த்துகிறேன்! தங்கள் இதழ்கள் கிடைத்த உடனே படித்து முடித்து வருவதுடன், வடக்கே இருந்து (மகராட்டிரம்) அருமையாக தமிழ் மொழியை சிறப்புடன் இதழ்கள் முலம் வெளியிடுவதை எண்ணி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்! வாழ்த்துகிறேன்! பணி சிறக்க எனது கரமும் உதவும்!.ந.குணசீலன், வள்ளியூர் – 627 117இன்னொரு காமராசர்.. தலையங்கத்தை கவனமாக வாசித்தேன். இன்றைய தலைமுறை மதுவினால் ஏற்படும் தீமைகளை ஆராயவில்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த அளவிற்கு மதுவிற்கு அடிமையாகி விட்டார்கள்? எந்த அரசியல் தலைவர்களாவது, தமது தொண்டர்களுக்கு மது அருந்துபவர்கள் தமது கட்சியில் உறுப்பினராக இருக்கக் கூடாது எனத் தைரியமாக அறிவிப்பார்களா? அது முடியாது. எல்லாம் வெறும் நாடகம் தான் நடக்கின்றது என்பதை நாம் அறியாமல் இல்லை.  அதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு அல்ல. உண்மையை மிகவும் துணிச்சலுடன் எழுதிய ஆசிரியருக்கு அன்பு வாழ்த்துக்கள். மறைந்த, அப்துல்கலாம் பற்றிய கட்டுரை நான் அறியாத, தெரியாத செய்தியினை அளித்து உள்ளீர்கள். இன்னொரு காமராசர் ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து உலகத்திற்கே பெரும் புகழை இந்தியாவிற்கு வழங்கி உள்ளார் என்பதே உண்மை. கவிதை மழையில் நனைந்து விட்டேன். நல்லஇதழ்! சீரும் சிறப்புடன் வர வாழ்த்துகள்.- காரை கரு. இரவீந்தரன், பீவண்டி – 421 302இலக்கியச் செறிவு ‘தமிழ் இலெமுரியா’ இதழினை கண்டு வாசித்து மிகவும் மனமகிழ்ச்சி யடைந்தேன். ஒரு தரமான பண்பட்ட இலக்கிய செறிவுடன், அடர்த்தியான கருத்துக்களை கொண்ட இதழாக வெளி வருவதும் வாசிக்க வாசிக்க ஆர்வத்தை தூண்டுவதாகவும், அதே நேரத்தில் சிந்தையை செழுமைப் படுத்துவதாகவும் அமைந்தது. இலக்கியப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்!.- ம.பென்னியமின், கீரிப்பாறை –  629 854நடக்காத காரியமல்லவா? பர்மாவில் ஓர் அத்திப்பட்டி என்கிற முதன்மைக் கட்டுரை உலகெங்கும் இனப்படு கொலைகளை வேடிக்கை பார்க்கும் ஐ.நா. அவையின் கையாலாகாத் தனத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. மகிந்த ராசபக்சேவின் கொடுங் கோலாட்சியில் இலங்கை சென்று சிரித்துப் பேசிமகிழ்ந்து திரும்பிய பா.ஜ.க. அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரோ அல்லது குசராத்தில் இசுலாமியர்களை வன்கொடுமைக்குள்ளாக்கிய முன்னாள் முதல்வரும் இந்நாள் தலைமை அமைச்சரும் ஏதிலிகளாகக் கூடவாழ வழியற்றுப் போன இசுலாமியர்களை ரோகிஞ்சா இனமக்களுக்கு இரங்குவர் என எதிர் பார்ப்பது எவ்வகையிலும் நடக்காத காரியமல்லவா? ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் நமது வாக்குவங்கியில் சேராதவர்களே. சிறுகதையில் நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தம் பளிச்சிட்டது. உலகை மாற்றிய உரை வீச்சுகள் தொடர் உற்சாகமூட்டுகிறது.- க.த.அ.கலைவாணன், வேலூர் – 632 002முதற் பணி தலையங்கக் கட்டுரையில் மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிநிலை, கழிவு நீர் கால்வாயில் இறங்கி பணியாற்றும் அவல நிலை, சாதிய ஏற்றத்தாழ்வு, ஊழலின் அட்டூழியம் போன்ற சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக நிற்பவற்றைத் தகர்ப்பதுதான், தலையாயப்பணி எனவும், மது ஒழிப்பது அடுத்த நிலை எனவும் கூறப்பட்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனைய தீமைகளை விடவும் தீமை பயப்பது மது. தனிமனித ஒழுக்கத்தை மட்டும் குலைப்பதில்லை; தன்னைச் சார்ந்த குடும்பத்தையே அழிக்கிறது. குடும்பத்தை அழிப்பதின் மூலம் சமுதாய சீர்குலைவிற்கும் காரணமாகிறது. உழைப்பைக் குறைத்து, உற்பத்தியைக் குறைத்து நாட்டின் வளர்ச்சிக்கே தடையாக நிற்பது மது. அந்த மதுவை ஒழிப்பதுதான் முதற்பணியாகக் கொள்ள வேண்டும்.- கருமலைத் தமிழாழன், ஓசூர் – 635 109தமிழோசை ‘தமிழ் இலெமுரியா’ தமிழ் வளர்க்கும் இனிய தமிழ்த் தென்றல். உமிழ் நீரையும் கூட உன்னதமாக்கும் அரிய தமிழ்க் குன்று; இதழ்முழுக்க தமிழோசை முழங்குகிறது. உண்மையான உள்ளத்துப் பணியாக விளங்குகிறது. தெளிவாக; படைப்புகள் நன்கு தெரிவு செய்யப்படுவது புரிகிறது. ஒவ்வொரு இதழும் வெகு சிறப்பாக உள்ளது. வெகு தூரத்திலிருந்தும் வெண்ணிலவு என்றே ஒளியூட்டுகிறது.- இரா.நவமணி, நெல்லை – 627 401ரசாயனக் கலவை  ‘சோப் கதை’ எழுதவைத்தது. நாம் அளவுக்கு அதிகமாக விளம்பரங்களில் மயங்கி பணத்தையும் வீணாக்கி தண்ணீரையும் பாழ்படுத்தி வருகிறோம் சோப்பால். தோலின் இயற்கை அமைப்பை ரசாயனக் கலவை சோப்புகள் பாதிப்படையச் செய்யும் நிலை உள்ளது. தோலில் சுரக்கும் உப்புகலந்த வியர்வை சாதாரணத் தண்ணிரில் எளிதாகக் கரைந்து விடும். சோப்பின் வாசனைகள் உலகின் தண்ணீரைப் பாதிக்கின்றன. ரசாயனக் கலவை சோப்புக்களைத் தவிர்த்து இயற்கைப் பொருட்களைப் பயன் படுத்துவதே நலம் பேணும்!- ம.சுகுமார், கல்பாக்கம் – 603 102தீர்க்கமான பார்வை சில சமயங்களில் ஒரு புத்தகம்  அதன்  ஆசிரியர்  உயிருடன்  இருக்கும் காலத்தில் வாசகரை ஈர்க்காமல் போகலாம். ஆனால் அந்தப்  புத்தகம்  கூறும் அறிவுரை காலப்  போக்கில்  மிகத்  தெளிவானதாகிறது!… இம்மாத (ஆகஸ்ட்-15) முதன்மைக்  கட்டுரையில்  அய்யா அப்துல்  கலாமின்  இவ்வரிகளைப்  படித்த போது நூல்கள் குறித்த அவரது தீர்க்கமான பார்வை வியப்பைத்  தந்தது.- இரா.செல்வமணி, திருநெல்வேலி – 627 011மதுவின் தீமைகள்.. மது போதையில் சிக்கி, அது குழந்தைகள் வரை போயுள்ள சூழலில் உங்கள் தலையங்கம் கண்டேன். மதுவின் தீமைகள் குறித்த கடுமையான சிந்தனைகள் இல்லை. மது உயர்ந்தோரை தாழ்ந்தவன் ஆக்கும். தாழ்ந்தோரை ஒருபொழுதும் உயர்ந்தோனாக்காது. ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்து வருபவர்கள் மது விச(ய)த்தில் தள்ளாடுவதில்லை. அவ்வுறுதி மற்றவர்களின் மனதில் இல்லை. கலாம் உரையும் வாசித்தேன். இதில் இளைஞர்களிடம் வீட்டுக்கு ஒரு நூலகம் உருவாக்குவோம் என்கிற கலாமின் பேச்சை கேட்டு, புத்தகக் கடைகளில் ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்ற இளைஞர்கள் பற்றிய தகவல் படித்து மகிழ்ந்தேன். -மூர்த்தி, சென்னை – 600 100எமாளித்தனம்! மனிதநேய பண்பாளர் அப்துல் கலாம் அவர்களது ஒளிப்படம் தாங்கிய ஆவணி இதழ் படித்தேன். துவக்கமே தனித்தியங்கும் செம்மொழித் தமிழ் பற்றிய கால்டுவெல் கருத்துக்கள் உள்ளத்தைத் தொட்டன. தமிழின் பெருமையை, தமிழர்கள் அறிந்ததை விட அயல் நாட்டாரே அதிகம் உணர்ந்திருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று. தமிழன் கெட்டதற்கு அறியாமையும், ஒற்றுமையின்மையும், அலட்சியமும் மட்டுமல்ல காரணம், மது போதையும் எதையும் நம்பும் எமாளித்தனமும் கூட காரணங்கள் தான். இதனைத் தக்க நேரத்தில் தலையங்கத்தின் வாயிலாக சுட்டிக் காட்டி இருப்பது பாராட்டுக் குரியது. தமிழ்த் தேன்றல் திரு.வி.க. வின் தமிழ்த் தொண்டு, நாராயண குரு அவர்களின் சமுதாயப் பணி இரண்டுமே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ‘இலெமுரியா’ அறக்கட்டளையின் அமைதியான புரட்சிப்பணி எதிர்காலத்தில் மிகுதியான பாராட்டுதல்களைப் பெறும். நாத்திகரான நேருவின் உறுதி நாட்டுக்கே உரம் மற்றும் கவிதைகளும் துணுக்குகளும் இதற்க்கு மெருகூட்டுகின்றன. ‘தமிழ் இலெமுரியா’ வளர் பிறையாக வளர வாழ்த்துகிறேன்.- க.தியாகராசன், குடந்தை – 162 501அரசியல் போதை… சாதி போதை, ஊழல் போதை, பொருளீட்டும் போதை ஆகியன மதுவின் போதையைவிடக் கொடுமையானது என்பதை ஆசிரிய உரையில் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். எல்லாவற்றிலும் மேலாக அரசியல் போதையும், திரைக் கவர்ச்சிப் போதையும் இளைஞர்களைக் தடுமாறவும் தவிக்கவும் செய்து வருகின்றன. இவற்றிளின்றும் விடுபட மாற்று வழிகளை ஆய்ந்து ஓடி முன்னிலைப் படுத்த வேண்டியது முகமையான செயல். மறைந்த மாமனிதர் அப்துல் கலாமின் அவர்களின் உரை என்றென்றும் நினைவு கூரத்தக்கது. ‘இலெமுரியா அறக்கட்டளை’ யில் அமைதியான அறப்பணிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.- கடவூர் மணிமாறன், குளித்தலை – 639 104

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி