15 July 2014 4:31 am
ஒரு முதியவரின் ஏக்கம் வணக்கம். ஐம்பதுகளில் பதின்பருவத்தில் இருந்த யான், தன் தொன்னூற்று நான்கு வயதிலும், தன் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு, ஊர் ஊராய் ஓடியோடி, தன் உயிர் போகும்வரை, மடமை நிறைந்த இத்தமிழ்ச் சமுதாயத்தை மானமும், தன்மதிப்பும் கொள்ள வைத்த, ஈரோட்டுக் கிழவனின் கொள்கைகளால் கவரப்பட்டவன். காசு கொடுத்தாகிலும் இவர் பேச்சைக் கேட்க இயலாதா என்று ஏங்கும் அளவு பேசிய அண்ணாவின் அருந்தமிழில் போதை கொண்டவன். தமிழின் மேன்மையினையும், தமிழர்தம் பெருமையினையும், தன்மான உணர்வினையும் தட்டி எழுப்பிய அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர் அன்பழகன், சிற்றரசு, தமிழ்த் தென்றல் திரு.வி.க, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை, தமிழ்க்கடல் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன் இன்னோரான்ன தமிழ் உணர்வாளர்களின் பேச்சுகளாலும், எழுத்துக்களாலும் கவிதைகளாலும் கவரப்பட்டவன். தமிழர் திருநாளாம் பொங்கல் வந்தால், நான் கடித்துத் தின்னும் கரும்பின் சுவையினை விட, விடுதலை, திராவிட நாடு, முரசொலி, நம்நாடு, மன்றம், முத்தாரம், கலைப் பொன்னி ஆகியவைகளின் பொங்கல் மலரின் கட்டுரைகளைப் படிப்பதில் அதிக சுவையினைக் கண்டவன். ஆனால் இன்றோ? தமிழையும், தமிழ் உணர்வையும் பேசிப் பேசியே வளர்ந்தவர்கள் வீட்டு பெயரர்களுக்குக் கூட வட மொழியிலும், சமயச் சார்பானப் பெயர்களையும் சூட்டும் நிலைமை. கடந்த கால மொழிப் பற்று எங்கே சென்றது? கடந்தகால இனப்பற்று எங்கே சென்றது? சுயநலத்தின் கூண்டுக்குள் சென்று மறைந்து விட்டதோ? தமிழ் உணர்வினையும், தமிழ் பற்றையும் தமிழ் இன உணர்வையும் ஊட்டக்கூடிய இதழ்கள் ஒன்று கூட தமிழ்நாட்டில் காணப்படவில்லையே! அத்தனையும் வணிக நோக்கத்துடன் அவிக்கப்பட்டு விட்டன போலும். ஒன்றேனும் இன உணர்வை ஊட்டக் கூடிய இதழ் வருமோ என்று ஏங்கி, ஏங்கித் தவித்து, இவ்வெழுபத்திரண்டு அகவையிலும் அவ்வுணர்வுகள் மங்காது, மறையாது இருக்கும் என் மனத்தின் மகிழ்விற்காக, அவ்வப்போது பெரியார் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பான பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள்" என்னும் மூன்று தொகுதிகளையும், பேரறிஞர் அண்ணாவின் "தம்பிக்கு"க் கடிதத் தொகுப்புகளையும், அக்காலத்தில் வந்த திராவிட நாடு, முரசொலி, காஞ்சி, கலைப்பொன்னி ஆகியவற்றின் பொங்கல் மலர்களையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதைத் தொகுப்புகளையும் படித்து மனநிறைவு கொள்வேன். ஆனால் 90களில் திரு.அருணாசலம் என்பவரால் "நந்தன் வழி" என்று ஒரு இதழ், இழந்து விட்ட உணர்வுகளையெல்லாம் ஊட்டக் கூடிய அளவு வந்தது. ஆனால் அதுவும் அப்போதைய ஆளவந்தார்களின் அச்சுறுத்தலால் அடக்கப்பட்டுவிட்டது. காமக்கதைகளும், கவர்ச்சிப் படங்களும் நிறைந்த இதழ்கள் வெளியாகின்ற இந்நிலையில், தங்களின் "தமிழ் இலெமுரியா" இதழ் காணப்பெற்றேன். அய்யா! தங்கட்கு இப்படிப்பட்ட சிந்தனை எப்படி வந்தது என்று எண்ணி, எண்ணி வியக்கின்றேன். தமிழ்நாடு அல்லாத ஒரு மண்ணில் இருந்து கொண்டு, சமுதாய சிந்தனை மிக்கக் கட்டுரைகளையும், தமிழ் உணர்வுமிக்கக் கட்டுரைகளையும், தமிழ் விழுமியங்களைப் போற்றிக் காக்கின்ற கட்டுரைகளையும், சமுதாய மேன்மைமிக்கக் கட்டுரைகளையும், அறிவியல் கட்டுரைகளையும், சிறந்த உணர்வுமிக்கக் கவிதைகளையும், பாவாணரின் தூயதமிழில் வெளியிடுகின்றீரே. இவை அத்தனைக்கும் முத்தாய்ப்பாக தங்களின் ஒப்பற்ற சமுதாய சிந்தனை மிக்க தலையங்கம். வியக்கின்றேன். வியக்கின்றேன். அதே நேரத்தில் உள்ளம் இன்பத்தால் துள்ளுகின்றது. இன்னும் தமிழ் உணர்வும், இன உணர்வும் சுயநல வாதிகளாலும், அரசியல்வாதிகளாலும், வீழ்த்தப்பட்டாலும் தங்கள் இதழ் போன்றவைகளால் மீண்டும், மீண்டும் துளிர்த்துக் கொண்டே இருக்கும் என்று எண்ணும் போது, என் இதயம் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் செல்கின்றது. எப்படி! எப்படி! உங்களால் இத்தகைய போற்றற்குரிய செயல்பாடு. தமிழ்நாட்டில் உள்ள எல்லா உணர்வுகளும், சுயநல அரசியல் வாதிகளால் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், தங்களின் இவ்வொப்பற்ற பணி போற்றுதலுக்குரியதாகும். பொதுவாக இதழ் நடத்தும் எண்ணம் கொண்டவர்கள் வணிக ரீதியாக செயல்பட்டு, ஆளவந்தாரின் அருட்பார்வை பெற்று, உரிய விளம்பரங்களையும் கொண்டு இதழ் நடத்துவர். ஆனால் நீங்களோ அருமையான அச்சடிப்பு; அற்புதமான மொழிநடை; தமிழ் இனத்தின் உணர்வுகளை மேம்படுத்தும் நோக்கு. இத்தன்மை கொண்ட தங்கள் இதழ் வணிக ரீதியில் வெற்றி பெறுமா? வணிக ரீதியாக செயல்படும் இதழ்களே, அரசின் விளம்பரம் பெறும் இதழ்களே, மக்களின் மடமையையே மூலதனமாக இயங்கும் இதழ்களே, நட்டத்தில் இயங்கி, இறுதியில் இல்லாமலே போய் விடுகின்ற இக்காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கொள்கையின் அடிப்படையில், அழகான தாளில் அற்புதமான அச்சு வடிவத்தில், கவரத்தக்க வடிவமைப்பில், அறிவியல் கட்டுரைகளையும், மான உணர்வூட்டக் கூடிய கவிதைகளையும், பாவாணரின் தூய மொழியில், இப்படிப்பட்ட இதழை நடத்திக் கொண்டிருகிறீர்கள் என்றால், உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை. உங்களின் இவ்வரிய செயல்பாடு இப்படியே தொடருமா? இல்லை; அரசியல் ஆசாபாசத்திற்கும், சுயநலத்திற்கும் உட்பட்டு, சராசரி மனிதர்களைப் போன்று திசை திரும்பி விடுமா? எது எப்படியிருப்பினும் ஒவ்வொரு திங்களிலும், தங்கள் இதழ் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்து வந்ததும் ஒரே மூச்சில் படித்து, என் ஏக்கமுற்ற இதயத்தை இன்பத்தால் நிரப்பிக் கொள்கின்றேன். இவ்விதழ் இவ்விலக்கோடு தொடர்ந்து வந்து கொண்டுள்ள தன்மையினை, என் நண்பர்கள் அனைவரிடமும் தெரிவித்துள்ளேன். வாழ்த்துகள். – பா.செகதீசன், காமோட்டே-நவி மும்பை – 410 209வேளாண்மையை ஒதுக்கலாமா? தமிழ் இலெமுரியா ஆனி இதழில், மானுடவியல் பகுதியில் மாற்றங்களை வரவேற்பபோம் என்ற கட்டுரை படித்தேன். எவ்வளவு அறிவியல் மாற்றங்கள் வந்தாலும் பழமைவாதிகள் அப்படியேதான் இருப்பார்கள் என்பதை உணர்த்த வந்த கட்டுரையாளர், உணவு சமைக்க மண் சட்டிகளைப் பயன்படுத்துவதை முரணாகச் சித்தரித்துள்ளார். இரசாயண உரங்கள் பூச்சி மருந்துகள் இட்டதினால் மண்வளம் மாசுபட்டதையும், பல்லுயிர் இனப்பெருக்கம் அழிந்து வருவதையும் வரவேற்க இயலுமா? "நெல் விலையை கூட்டு மறுபுறம் அரிசி விலையைக் குறை" என்று குழப்பவாதிகள் கூச்சலிடுவார்கள் என்கிறார். பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கும் அரசைப் பார்த்து, டாஸ்மாக் மூலம் தம் மக்களிடம் இலாபமீட்டும் அரசசைப் பார்த்து, பல இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விலையைக் கூட்டிக் கொடு என்று முழக்கமிடுவதைக் கொச்சைப்படுத்தலாமா? சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஆலைகளினால், பூச்சிக்கொல்லிகளால் புற்றுநோய், பன்றிக்காய்ச்சல் போன்ற புதிய நோய்கள் பெருகி வருவதை மாற்றத்தினால் வந்த ஏற்றம் என்று எடுத்துக்கொள்ளலாமா? அறிவியல் வளர்ச்சியை ஆதரிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சியைப் பாராட்டும் அதே வேளையில், அவர் இயற்கை வேளாண்மையை ஒதுக்குவதையும், நவீன மருந்துகளைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பழைய பாட்டி வைத்தியமான நிலவேம்பு கசாயம் தான் சிக்கன் குனியாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்று பக்கம் பக்கமாக ஊடகங்களில் அரசு விளம்பரம் செய்ததை கண்கூடாகப் பார்த்தோமே! கட்டுரையாளரே கடைசியில் குறிப்பிட்டுள்ளபடி "மக்களுக்கு நன்மை பயக்கும் மாற்றங்களை வரவேற்போம்".- வீ.க.செல்வக்குமார், சென்னை – 600 088தன்னம்பிக்கை மராட்டிய மாநிலத்திலிருந்து "தமிழ் இலெமுரியா" தமிழ் பரப்பிடுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. 2045 ஆனி மாத இதழில் தமிழ்நாட்டின் நீர்நிலைப் பெயர்களையும், விளக்கத்தையும் வழங்கியுள்ள பாங்கு உள்ளபடியே உவகையளிக்கின்றது. இச்சொற்கள் பெரும்பாலும் இன்னமும் வழக்கத்தில் உள்ளன என்பது தமிழ் மொழியின் சிறப்பம்சமாகும்! ஆனால் தண்ணீருக்குத்தான் பஞ்சம்! இவ்விதழில் தன்னம்மிக்கையுடன் தளராது விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றியைப் பெறலாம் எனும் உண்மையை எளிமையாக "விடாமுயற்சியும் வெற்றியும்" என்ற நெல்லை சலீமின் கட்டுரை இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி! – பெ.சிவசுப்பிரமணியன், சென்னை – 600 081புதிய மாதவியின் மாற்பட்ட சிந்தனை "தமிழ் இலெமுரியா" ஆனித் திங்கள் இதழில் வெளியான தலையங்கம் அருமை. பெண்ணியம் பற்றிய புதியமாதவியின் புதிய கோணம் சிந்தனையைத் தூண்டியது. – பெ.சிதம்பரநாதன், பொறுப்பாசிரியர் ஓம்சக்தி மாத இதழ், கோவை – 641 002மாறுபட்டு சிந்திக்கும் எழுத்தாளர்கள் தேவை ஆனி மாத இதழில் வெளியான தலையங்கம், சேது குமணன் நேர்காணல், தேர்தலும் ஊழலும் பற்றி தெளிவான ஆய்வு என அனைத்துக் கட்டுரைகளும் போற்றத்தக்கவையாகும். மும்பை எழுத்தாளர் கவிஞர் புதிய மாதவியின் "தசரதபுரம்" ஒரு அருமையான படைப்பாகும். மூட நம்பிக்கைகளிலும், தனிமனித வழிபாட்டிலும் மூழ்கியிருக்கும் இச்சமூகத்தில் புதிய மாதவி போன்று மாறுபட்டு சிந்திக்கும் எழுத்தாளர்களே இன்றையத் தேவையாகும். தங்களின் தொடர்ந்த தமிழ்த் தொண்டுக்கு வாழ்த்துகள். – சங்கீதா கண்ணன், இராசபாளையம் – 626 117வெளியிலிருந்துதான் சிந்திக்க முடியுமா? ஆனி மாத இதழில் வெளியான கட்டுரைகள், தலையங்கம், கவிதைகள், சிறுகதை என அனைத்து அம்சங்களும் மிக அருமை. தமிழ்நாட்டிற்கு வெளியிலிருந்து தான் இப்படி சிந்திக்க முடியுமோ? – வீ.கருப்பண்ணன், நாமக்கல் – 637 002மூச்சுக்காற்று விற்பனையா? தேர்தல் கணக்கு கண்டேன். இதற்கு உத்தேசமான மொத்த செலவு கணக்கு கண்டதும் வயிறுதான் எரிந்தது. எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள்!. ஆனால் நம்ம ஊரு வாக்காளர்களுக்கோ 100 முதல் 500 ரூபாய் வரைதான் பணம் வந்து சேர்ந்தது. வாக்காளர்கள் மனசு மாறும் வரை தேர்தல் கணக்கில் வெற்றியைப் பெறப் போவது மக்கள் அல்ல; அரசியல் வாதிகள்தான். மாசற்ற காற்று தேவைக்காக இடம் பெற்ற யோசனைகள் படித்தேன். ஆக்சிஜன் பார்லர் இந்தியாவில் இருக்கிற தகவலும் கண்டேன். இந்திய மண்ணை மாசுபடுத்தும் ஆலைக் கழிவுகளின் தாக்கங்களைக் கண்டால், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பில் வாயுக் குடுவைகளின் விற்பனையும் கூட வந்து விடும் போலத் தெரிகிறது. போகப் போக பூமியைத் தோண்டிக் கொண்டே போனால் நீர் கிடைக்கிறதோ இல்லையோ நிலத்தடியில் நிறைய வாயுக்கள் வேண்டுமானலும் கிடைக்கலாம். நில மாசு, நீர் மாசு எச்சரிக்கைகளை மதிக்கத் தவறினால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல உரை கண்டேன். இலங்கைக்குத் துணை நின்ற கும்பல்களின் ஆட்சி அழிந்து, புதிய ஆட்சி வந்து விட்டது. மீனவர்களைத் தாக்கும் இலங்கை பணியும் காலம் துவங்கி விட்டது. புதிய அரசின் பாணி இனி காணலாம். – மூர்த்தி, வேலூர்.தேனாய் இனித்தது! தனித்தன்மையோடு அரிய பயனுள்ள கருத்துகளை ஏந்தி வெளிவந்திருக்கும் "தமிழ் இலெமுரியா" மே இதழில் உள்ள கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியச் செல்வங்கள் அத்தனையும் தென்றலாய்த் தழுவி, தேனாய் இனித்தது. ஆம்! ஒவ்வொன்றும் ஒருசுவை. நகைச்சுவை கூட தப்பவில்லை. விழிப்புணர்ச்சியும், ஒற்றுமையும் மட்டும் இருந்து விட்டால், தமிழினம் உலகுக்கே மீண்டும் வழிகாட்டும் ஒளி விளக்காக ஒளிரும். தமிழ் இலெமுரியா விழிப்புணர்வுக்குத் தூண்டு கோலாக இருப்பது தமிழர் உள்ளங்களில் மகிழ்ச்சியைக் காட்டுகிறது. வளர்க! வாழ்க!! – க.தியாகராசன், குடந்தை – 612 501நீடுழி வாழ்க! உலகெங்கும் வாழும் தமிழர் நலம் காக்கப்பட வேண்டும்; உணர்வுகள் மதிக்கப் பெறல் வேண்டும் எனும் தூய நோக்கத்தோடு இயங்கும் "தமிழ் இலெமுரியா" வாழ்க. இயக்கும் தாங்களும் நீடுழி வாழ்க! – ம.நாராயணன், வேலூர் – 632 009சிந்திக்கத் தூண்டியது! "தமிழ் இலெமுரியா"வின் ஆனி மாத இதழின் தலையங்கம் அருமை. மக்களும் அரசும் சிந்திக்க வேண்டும். பா.ஜ.க வின் ஓட்டுக்கள் எதிர்மறையானவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். நன்றி. – தமிழொழி இராசமாணிக்கம், ஐதராபாத்."