வாசகர் மடல்கள் - தமிழ் இலெமுரியா

17 November 2014 11:53 am

பாதுகாக்க வேண்டிய இதழ்! ராக்கிங்  என்ற  ஆங்கிலச்சொல்லுக்கு பகடிவதை என்னும் மிக  அருமையான  தமிழ்ச் சொல்லைத் தந்ததோடு, அதன்  பிறப்பு, வளர்ச்சி  பற்றி  அகலமாகவும்   ஆழமாகவும்  ஆய்வு  செய்துள்ளது  கட்டுரை.  பல்வேறு  கோணங்களில்  ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளது.  இந்தியா, இலங்கையைத்  தவிர பிறநாடுகளில்  இந்த இழிசெயல்  இல்லையென்பதையும்  சுட்டிக்காட்டி, மேலைநாடுகளின் நல்ல செயல்களைப்  பின்பற்றாததையும்  கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பெற்றோர், கல்வி நிறுவனம், சமூகம் என்ற  கூட்டு முயற்சியால்தான்  தடுக்கவியலும் எனவும்  முடிவு  தரப்பட்டு  புதிய  நோக்கில்  சிந்திக்க வைத்தது. மேலைநாட்டு மோகத்தாலும், பொருளீட்டும் எந்திர வாழ்க்கை முறையாலும், கூட்டுக் குடும்பமுறை  ஒழிந்து தனிக் குடும்ப முறையாலும் இன்றைக்கு உறவுகளே தெரியாத இளைஞர் தலைமுறை உருவாகி வருகிறது  என்பதைக்  காசிப்பிச்சை  கட்டுரை  தெளிவாக  விளக்குகிறது.  மொழியால்  தமிங்கிலனாக  மாறிவிட்ட தமிழன்  இனத்தாலும்  ஏதிலியாக  ஆகும்  முன்னர்  உறவுகளை  உயிர்ப்பித்துக் கொள்ள  முயல வேண்டும். சிந்திக்கவும்  செயல்படுத்தவும்  தேவையான  கட்டுரைகளைத்  தாங்கி வந்த  ஐப்பசி  இதழ்  பாதுகாக்கப்பட  வேண்டிய  இதழாகும். – கருமலைத் தமிழாழன், ஓசூர் – 635 109இன்றையச் சிந்தனை உலகம் முழுதும் பன்னிரண்டு கோடிபேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதையும் இந்தியாவில் முப்பத்தாறு விழுக்காட்டினர் மிகுதியான மன அழுத்தப் பாதிப்பிலும் ஒன்பது விழுக்காட்டினர் மிதமான பாதிப்பிலும் உள்ளதையும் உலக நலவழி நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப் பெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளதென்பதை 2011 ஆகசுடு திங்கள் தமிழ் இலெமுரியா இதழ் தெரிவித்தது. மனிதரிடம் எழுகின்ற எண்ணம் ஒவ்வொன்றும் மூளையில் இரசாயனத் திரவத்தைச் சுரக்கச் செய்கிறது. இவ்வாறு சுரக்கும் திரவங்களுக்கேற்ப எழுகின்ற உணர்ச்சிகள், ஏற்படுத்தும் அதிர்வுகள், மனநிலைக்கு அடிப்படையாக அமைகின்றன. நல்ல எண்ணங்கள் நல்ல அதிர்வுகளையும் மன நிலையையும் தந்து ஆரோக்கியத்துக்கு அடிப்படை அமைக்கும். மிகவும் ஆர்வமிக்க எண்ணங்களை ஆசையோடு அசை போடுபவர்களே மிகவும் மகிழ்ச்சியான மனிதர்கள்" என்கிறார் வில்லியம் லையான் பெல்ப்சு என்பார். கழிவுகளின் தேக்கமே நோய். எண்ணக் கழிவுகள், எண்ணெய்க் கழிவுகள் போன்றவற்றைத் தவிர்த்து, இதயத்தை இலகுவாக்கி மனநிறைவுடன் வாழ்வோம். கடித இலக்கியம் காணாமல் போய்விடாது காப்பதைக் கடமையாக்குவோம். – நா.முத்தையா, மதுரை 625 016அந்நாள் எந்நாள்? புரட்டாசி இதழில் முதன்மை ஆசிரியரின் வானொலி நேர்க்காணலை வாசித்தேன். மண்ணைப் பொன்னாக்கி விட்டு தன் வாழ்வை மண்ணாக்கிக் கொள்ளும் ஒரு விவசாயி போலத்தான், தமிழர்களுக்கான ஏடு நடத்த முனைவோரின் வாழ்க்கையும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள். எத்தகைய இழப்பு ஏற்பட்டாலும் விவசாயத்தை விட்டு வெளியேற மறுப்பது விவசாயிகளின் இயல்பு. தமிழ் மக்களுக்காக ஏடு நடத்த முனைவோர் பலரின் நிலையும் இதுதான்! இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி, மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் நடப்பதோ? நாடே அறியும்! ஏனிந்த முரண்பாடு? குப்பைத் தொட்டியை கவிழ்த்துப் போட்டுவிட்டு குப்பைகளைக் கூடையில் போடு என்றால் எப்படி போடுவது? ஒரு மொழி வைத்து உலகை ஆண்டவன் தமிழன் என்ற நிலை மாறி இன்று உலகமே தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்க முனைவதற்குக் காரணம் என்ன? தமிழர் ஆரியத்திற்கு அடிமைப்பட்டதாலா? அதனால் பெற்ற அறியாமையாலா? சாதி, மத பேதங்களாலா? ஒற்றுமையுணர்வை இழந்ததினாலா? தங்களுடைய நேர்காணல் பதில்கள் இப்படி பல சிந்தனைகளை எழுப்பியது. குடமுழுக்குக்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கும் வள்ளல்கள் இப்படி தமிழ் மொழி, தமிழினம் காக்கப் போராடும் இதழ்களுக்கும் அள்ளித் தர வேண்டாம் கிள்ளியாவது தந்தால் ஓரளவு தமிழ் ஏடுகள் வெற்றி நடை போடும். அந்நாளே தமிழினம் தன்மானத்தோடு தலைநிமிரும் நன்னாள்! அந்நாள் எந்நாளோ? -க.தியாகராசன், குடந்தை – 612 501நற்பதிவு தமிழ் இலெமுரியா கடந்த மூன்று திங்களாக சீர்வரிசையார் சண்முகராசனாரின் நினைவலைகளைத் தாங்கி அன்னாரின் அரிய தமிழ்த் தொண்டினை பதிவு செய்துள்ளது. ஐயா அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். – வே.அரசு, பெங்களூரு – 560 021சிந்திக்கத் தூண்டியது புரட்டாசி இதழின் தலையங்கம் சிந்திக்கத் தூண்டியது. பாராட்டுகள். வளர்க விழிப்பூட்டும் நற்பணிகள். – ம.சுகுமார், கல்பாக்கம் – 603 102அழகிய தமிழ்நடை! தமிழ் இலெமுரியா இதழ் படித்தேன். அழகுத் தமிழில் அரிய படைப்புகள். தமிழ்நாட்டில் வெளியிடப்படும் திங்கள் / வார இதழ்களில் கூட இத்தகு அழகிய தமிழ் நடை இல்லை. வியத்தகு வடிவமைப்பு! முனைவர் தமிழப்பனார் எழுதியுள்ள "ஐஸ்கிரீம் சாதி" என்ற கட்டுரை இன்றைய சமுதாயத் தேவை. சீரிய கருத்துச் செல்வங்களைச் சிறந்த முறையில் பதிப்பித்து வெளியிடும் தங்களுக்கு எனது வாழ்த்துகள்! – மு.சண்முகம், இலக்கியம்பட்டி – 636 705மறுக்க முடியாத உண்மைகள் சு.குமணராசன் அவர்களின் நேர்காணல் அவருடைய பன்முக ஆற்றலை ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தியது. இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை, பண்பாட்டு அடையாளங்களை வட இந்தியர்கள் பேணத் தவறுகின்றனர் என்பது மிகச் சரியான மதிப்பீடாகும். இந்தியாவின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர்களுக்குத் தனி ஈழம் அமைவதற்கு எதிரானதுதான் என்னும் அவரின் கருத்து மறுக்க முடியாத உண்மையாகும். சு.குமணராசனின் திராவிட இயக்கச் சார்பை வரவேற்கும் அதே நேரத்தில் அவ்வியக்கத்தை எந்த விதமான மறு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவது படு குழியில் தள்ளிவிடும். இழப்புகளைத் தாங்கிக் கொண்டு இதழ் நடத்தும் ஈகியர் சு.குமணராசன் அவர்களைப் பாராட்டுகின்றேன். – க.இந்திரசித்து, உடுமலை – 642 126தமிழ்ப் பணியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தமிழ் இலெமுரியா சிறந்த உணர்வூட்டும் இதழாக விளங்கி வருகிறது. தமிழரின் பண்பு நலன்களை இதழில் படைப்பாக வெளியிடுகிறது. தமிழ்ப் பணியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழ் இலெமுரியாவிற்கு எனது வாழ்த்தும் பாராட்டும்! மேலும் மேலும் தமிழ் வழிக் கல்விக்கு உயிரூட்டி தமிழ் அழிவிலிருந்து தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்க வேண்டுகின்றேன். – தகடூர்த் தமிழ்க்கதிர், கம்பைநல்லூர் – 635 202தமிழ்க் குடும்பங்களுக்கு ஓர் எச்சரிக்கை இம்மாத இதழின் முதன்மை கட்டுரையில் பதின்மப் பருவத்தில் உள்ள குழந்தைகளிடம் பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சற்று விரிவான அளவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது சிறப்பு! மேலும் "தமிழ் உறவுகளுக்குத் தற்கொலை" கட்டுரை நடப்பு வாழ்வில் புரிந்தும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் குடும்பங்களுக்கு ஓர் எச்சரிக்கையாக தரப்பட்டிருந்தது. வரப்போகும் சமுதாயம் இதனை உணர்ந்து அனாதையாகாமல் இருந்தால் தமிழ்ச் சமுகம் உறவுகளை இழக்காமல் உறுதிப்படும்! – பாப்பாக்குடி.இரா.செல்வமணி, திருநெல்வேலி – 627 011பேணுவோம் பெண்ணுரிமை தமிழ் இலெமுரியா புரட்டாசி இதழில் "பேணுவோம் பெண்ணுரிமை" தலையங்கத்தில் மிக மிகத் தெளிவாக இன்றைய ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள், சமூகப் போரளிகள் என்று தங்களை முன்னிலைப்படுத்தும் அரசியல் கட்சிகள், அரசு சாரா நிறுவனங்களின் பெருமக்கள் ஆகியோர் ஆரியச் சிந்தனைகளின் ஊற்றாக விளங்குகிறார்கள் என்று எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.  தமிழர்களை, திராவிடர்களை தன் பகுத்தறிவுத் தடியால் அடித்து மூடத் தனங்களில் இருந்து விழித்து எழச் செய்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பாதையில் நடந்து முன்னேறியவர்கள். ஒரு சொல், ஒரு வரி, ஒரு சிறு செயல் கூட பகுத்தறிவுக்கெதிராக சொல்லாத, எழுதாத, செய்யாதவர்கள்தான். ஆனால் இன்று? ஏன் திசைமாறி, நிலை கெட்டுப் போனார்கள்? இந்த வினாவிற்கு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நமக்கு விளக்கம் கொடுத்துள்ளார். "பணம் வந்தால் பக்தி வந்துவிடும். பக்தி வந்தால் புத்தி போயிடும்" என்று கூறியுள்ளார். அதுதானே இன்று நடைபெறுகிறது.  – பொன்.இராமசந்திரன், சென்னை – 600 075சவால் நிறைந்த "தமிழ் இலெமுரியா" சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல்"எனும் வள்ளுவரின் கருத்துக்கொப்ப இன்றைய இந்தியச் சமுதாயத்தின் "பெண்ணுரிமைக் கொள்(ளை)கை"யைச் சாடி நிற்கும் முதன்மை ஆசிரியரின் கருத்துகள் வரவேற்கத்தக்கன. அறிவியல் சார்ந்த உளவியல் கட்டுரை "வளர்ப்பும் வாழ்வும்" வித்தியாசமாக கோணத்தில் விதைக்கப்பட்டுள்ளது. இதைத் தந்த மதுரை நா.முத்தையாவுக்கு வளமான வாழ்த்துகள். எறும்புகள் ஊர்ந்த நகரைத் தந்த கவிஞர் வதிலை பிரபாவிற்கு பாராட்டுகள். பல்வேறுபட்ட கருத்துருக்கள் பற்றிய தங்கள் கொள்கைகளை ஆசுத்திரேலிய வானொலிப் பெட்டியின் மூலம் கூறியுள்ள தாங்கள் வேற்று மாநிலமான மகாராட்டிரத்தில் இருந்து கொண்டு சவால் நிறைந்த "தமிழ் இலெமுரியா"வைத் தரமாக வெளியிட்டு வருவதற்கு எமது பாராட்டுகள்  – செ.வ.மதிவாணன், கள்ளக்குறிச்சி – 606 202அரிய சாதனை! புரட்டாசி இதழ் தலையங்கம் பெண்ணுரிமையைப் பற்றி பேசுகிறது. காலங்காலமாகப் பெண்ணடிமையே மேலோங்கி வந்திருக்கிறது. பாரதக் கதையில் ஒரு பெண்ணைச் சூதுப் பொருள் ஆக்கியது, அரிச்சந்திரன் வரலாற்றில் பெண்ணை விற்றதும் பல பக்திக் கதைகளில் பெண்கள் ஒரு அஃறிணைப் பொருள் போல் ஆக்கப்பட்டதும் எல்லாம் ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டமே! விடுதலை என்பது வேண்டுவதல்ல! வெற்றி நோக்குடன் தட்டிப் பறிப்பதாகும்" எனும் தலையங்கத்தின் முடிப்பு ஒரு சாட்டை அடி! நேர்முகம் "தமிழ் இலெமுரியா" ஆசிரியரை முழுமையாகக் காட்டியது. ஒரு கடல்சார் பொறியாளர், இதழாசிரியர், எழுத்தாளர், சமுகப் போராளி, தமிழாக வாழ்பவர் என்பதை எண்ணி வியப்படையச் செய்தது. மகாராட்டிராவிலிருந்து இப்படி ஒரு சிறப்பான இதழைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடுநிலையோடு நடத்துவதென்பது அரிய சாதனைதான்! மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் நல்ல கொள்கையுள்ள "தமிழ் இலெமுரியா" தன் பெயரிலேயே அதை ஏந்தி நிற்கிறது! தமிழின் சிறப்பையும் அது சார்ந்தவர்களின் பிறப்பையும் இலெமுரியா உணர்த்துகிறது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பு போற்றப்பட வேண்டும். நல்லதே வாழும். நாமார்க்கும் குடியல்லோம்! எனும் கொள்கைகள் காட்டும் "தமிழ் இலெமுரியா" வளர்க! வாழ்க! வாழ்த்துகள் பற்பல! – க.அ.பிரகாசம், கொடுமுடி – 638 151"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி