16 December 2014 3:31 pm
நாட்டின் தலையெழுத்து மாறும் மனக்குப்பையை அகற்றாமல் மண் குப்பையை அகற்றுவதால் எந்தப்பயனும் விளையப்போவதில்லை. பிரபலங்களும், நடிகர்களும், மட்டைப்பந்து ஆட்டக்காரர்களும் செய்யும் ஒரு நாள் கூத்தால் நாடு தூய்மையடையப்போவதில்லை. உலக நாடுகளின் குப்பைத் தொட்டியாக இந்தியாவை உருவாக்கி அதிலேயேயும் காசைப்பார்க்கும் அரசியல்வாதிகள் உள்ளவரை இந்தியா தூய்மையடையப் போவதில்லை. தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள ஐம்பெரும் அசுத்தங்களை களைந்தால்தான் நாட்டின் தலையெழுத்தும் மாறும். - கருமலைத் தமிழாழன், ஓசூர் – 635 109காலத்திற்கும் பயன்படும் தலையங்கம் முதல் அனைத்துப் பகுதிகளும் அருமை. காலத்திற்கும் பயன்படும். சேமித்து வைக்கப்பட வேண்டியவை. தங்களின் திறமை, இதழ் செழுமையாக வெளிவர உதவியாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. தமிழ் இலெமுரியா"வின் தமிழ் தொண்டிற்கு என் தலை வணக்கம்.- புலவர் த.இராமலிங்கம், கடலூர் – 607 308அண்ணலவர் அறிந்திட்ட மந்தி வேறு ஐப்பசி இதழ் மிகவும் சிறப்பாயுள்ளது. பாராட்டுகள். எடுத்த எடுப்பிலேயே "மும்மந்தித் தத்துவம்" கவிதை படித்து, கவிஞரின் கற்பனைத் திறனை வியந்து போற்றினேன்! அருமை! அண்ணலவர் அறிந்திட்ட மந்தி வேறு! உண்மைதான். தலையங்கங்கள் எப்போதுமே தரமானது. சிந்திக்கத்தக்கது! உலக நிகழ்ச்சிகள் பலவற்றையும் விவரித்து அவற்றில் உள்ள உள் நோக்கங்களையும் விரிவுபடக் கூறியுள்ளீர்கள். அரசியல் என்பதே, எப்போதுமே நேர்மையானதல்ல! அதில் கள்ள மனமும்கபட எண்ணங்களும் இருக்கத்தான் செய்யும். இதற்கு பாரதப் போரே உதாரணம். - த.சுப்பிரமணியன், செகந்தரபாத் – 500 016நன்நெறிக் கட்டுரையை தாங்கி வரும் இதழ் சுபாஷ் சந்திரன் எழுதிய "பகடிவதை" என்ற கட்டுரையைப் பொறுமையாகப் படித்தேன். கட்டுரையாளர் நன்றாகச் சிந்தித்துணர்ந்து தற்கால இளம் தலைமுறையினரிடையே காணப்படும் தவறான "ராக்கிங்" முறைகள் பற்றியும், பிள்ளைகள் பற்றிய சரியான புரிதல் இல்லாத பெற்றோர்களின் கருத்துத் திணிப்பு, வன்முறை பலாத்காரம் குறித்தும் சமுக நோக்கத்துடன் எழுதியுள்ளார். பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் குறிப்பாக மருத்துவ – பொறியியல் கல்லூரிகளின் நிருவாகம் சிந்தித்து சரியான வழியில் செயல்படத் தூண்டுகிற நன்நெறிக் கட்டுரை இது என்றால் மிகையாகாது.இரா.கனலரசன், சி.என்.பாளையம் – 607 102தூய்மைப் பணி "தமிழ் இலெமுரியா" ஒரு தலைசிறந்த இதழ். 2045 கார்த்திகைத் திங்கள் இதழ் தலையங்கமே தக்க சான்று. குப்பையைக் கூட்டித் தள்ளுதல் நாட்டை சுத்தப்படுத்துதல் ஆகுமா? தலையங்கத்தில் சுட்டியுள்ளபடி நாட்டில் காணப்படும் தீய செயல்களான கையூட்டு வழங்குதல், பெறுதல், சாதி மத பாகுபாடு போற்றுதல், மூட நம்பிக்கையுடமை மட்டுமன்றி கருப்பு பணத்தை களைதலுமே உண்மையாக இந்தியாவை தூய்மைப்படுத்தலாகும் எனக் கருதலாம். குப்பையைக் கூட்டி நீர் நிலைகளில் தள்ளும் மூடப் பழக்கத்தை உடனே மாற்ற வேண்டும். உண்மை, நேர்மை, நாணயம் உடையவர்களாக வாழ்வதே தூய்மையான வாழ்க்கை. திருக்குறளைப் படிப்பவர்களுக்கு தூய்மைக்கு உண்மையான பொருள் புரியும்.- பெ.சிவசுப்பிரமணியன், சென்னை – 600 081நல்ல கல்வியே அனைத்திற்கும் தீர்வு! பகடிவதை குற்றம் குறித்த ஆய்வுக் கட்டுரை வாசித்தேன். ஆய்வு நடத்தி என்னதான் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டு இருந்தாலும், குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒழுக்கத்திற்கு முதலிடம் தராத கல்வி ஏராளமான படித்த குற்றவாளிகளைத்தான் பெற்று தரும். எல்லாவகை குற்றங்களுக்கும் ஒரே தீர்வு நல்ல கல்விதான். நம் கல்வி நல்ல கல்வி அல்ல. நல்ல கல்வி தராமல் 67 ஆண்டுகள் வீணடித்து விட்டோம். இதுவரை சங்கரலிங்கனாரை மொழிப் போராளியாகவே நினைத்து வந்த எனக்கு, மதுவிலக்கு கொள்கைக்காகவும் அவர் உண்ணாநிலை போராட்டம் புரிந்திருக்கிறார் என்ற தகவல் வியப்பாக இருந்தது. - மூர்த்தி, சென்னை – 600 100அறிவு நலம் சார்ந்த கட்டுரைகள் "தமிழ் இலெமுரியா" நல்ல தரக்கட்டுப் பாட்டுடன் அழகாக்கம், அறிவாக்கங்களோடு கண்ணில் ஒற்றிக் கொள்ளத்தக்க வகையில் அழகின் சிரிப்பாய் மலர்வது பற்றி பெரிதும் பாராட்டி மகிழ்கிறேன். அத்தனையும் அறிவு நலஞ் சார்ந்த கட்டுரைகள்; செய்திகள்.- முனைவர் தமிழப்பனார், மதுரை – 625 402உள்ளே இல்லையே… ஐப்பசி இதழ் தலையங்கம் உலகை உற்றாராய வைத்தது. மாந்தன் என்று வாழ்வதற்கே பொருளற்றதாகப்பட்டது. "பகடிவதை" கொடூரமானது; மனிதனை மனிதனாக உருவாக்கும் கல்விச் சாலைகள் வெளித் தோற்றத்தில் தெரியும் அழகு உள்ளே இல்லையே… அயல் மண்ணிலிருந்து தாய் மண்ணுக்குத் தாங்கள் ஆற்றும் பணியே உயர்ந்தது!- க.அ.பிரகாசம், கொடுமுடி – 638 151ஒழுக்க நெறிகள் வளர்க்கப்படல் வேண்டும் தலையங்கம் சிந்திக்கத் தூண்டி எழுத வைத்தது. தங்கள் கருத்து முற்றிலும் உண்மை நிலையைக் காட்டியது. ஆர்.எஸ்.எஸ் உள் நோக்கம் அகண்ட ஆரிய பாரதம். அதற்கு பல்வேறு நிலைகளில் செயல்பாடுகள் தொடர்கின்றன. திராவிடர்கள் பலிகடா ஆக்கப்பட்டு, மொழிகளால் பிரிக்கப்பட்டு, சுருக்கப்பட்ட தமிழ் திராவிட மக்களில் நெருக்குதல்கள் தொடர்கிறது. சிறியதை பெரிதாக்கும் வல்லமை ஆரியத்திடம் உள்ளது. எனவே மனத் தூய்மை ஒழுக்க நெறிகள் வளர்க்கப்படல் வேண்டும்.- பம்பாய் புதியவன், காஞ்சிபுரம் – 603 102தடாலடி எச்சரிக்கை நவம்பர் இதழ் கார்த்திகை விளக்காய் ஒளியுமிழ்ந்தது. நன்றே செய்க! வாசகர்களின் அலட்சியத்திற்கு தடாலடியாக எச்சரிக்கை கொடுத்திருப்பது சிந்தனைக்குரியது! மண் தூய்மையை விட மனத் தூய்மையே உண்மையில் மேலானது என்ற உண்மையை தலையங்கம் உணர்த்திற்று. ஐம்பெரும் அசுத்தங்களாய் குறித்துள்ளவற்றில் சாதி, மதவெறி, மூடநம்பிக்கை மூன்றை முதன்மைப் படுத்தியுள்ளமை தந்தை பெரியாரின் மடமை ஒழிப்புக்கு தோள் கொடுத்து கட்டியம் கூறுவதாயிருந்தது! இதழின் முகப்போடு 52 பக்கங்களில் கொட்டிக் கொடுத்துள்ள கருத்துப் பிழிவுகள் அரிய பயன்பாடாய் மட்டிலா மகிழ்வூட்டி, அறிவூட்டிற்று.-புலவர் ந.ஞானசேகரன், திருலோக்கி – 609 804சரியான சவுக்கடி தூய்மை இந்தியா புறத்தூய்மையை படம் பிடித்து தந்ததே அன்றி, அரசியல்வாதிகளின், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனத் தூய்மையை படம் பிடிக்கவில்லை! நமது நாட்டின் பொருளாதாரத்தைச் செல்லரித்துப் போக செய்யும், சமுதாய உற்றுமையைக் குலைக்கும் ஐம்பெரும் அசுத்தங்கள் பற்றியும் சிந்திக்கப்படவில்லை என்ற வாதம் நாடாளுவோருக்கு நினைவு கூட்டலில் சரியான சவுக்கடி! சனநாயக நெறிவழி, பத்திரிக்கை இயல் உரிமை வகையில் உரத்த குரல் எழுப்பியமைக்கு- பாராட்டுகள்!- துரை சௌந்தரராசன், காஞ்சிபுரம் – 631 501நாமார்க்கும் குடியல்லோம் மனத்தூய்மை வேண்டி மக்களை ஆற்றுப்படுத்திய பாங்கு பாராட்டத்தக்கது. வாய்மையைப் புறந்தள்ளி நாட்டு மக்களை மடமையிலாழ்த்தி வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் தூய்மை நாடகமாடுவதைத் துல்லியமாக எடுத்துரைத்து இன்றையத் தேவைகளின் மீது கவனம் செலுத்தக் கோரியது நாமார்க்கும் குடியல்லோம் என்ற நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. திருக்கார்த்திகை வழியே தீபாவலி(ளி) போகாத ஊருக்கு வழிகாட்டுகிறதே. ஆளுநர் மூலம் மாநில அரசுகளைக் கண்காணிப்பதாகக் கூறப்படும் நடுவண் அரசு மாற்றாந்தாயா? அல்லது வேண்டாத மருமகளா? மொத்தத்தில் "தமிழ் இலெமுரியா"வின் பொழிவு சற்றும் குறையவில்லை என்பது மன நிறைவைத் தருகிறது.- க.த.அ.கலைவாணன், வேலூர் – 632 002நெடிது வாழ்க!நடுநிலையில் தலையங்கம் கருத்தைச் சொல்ல நல்லதுவாய்க் கட்டுரைகள் நெஞ்சம் அள்ளபடுபழமை இலக்கியத்தின் வெளிச்சம் காட்டி பறவையோடு விலங்கினத்தைப் பறைச் சாற்றிநடுவர்மன் றத்தின்வஞ் சகத்தைக் கூறி நம்தாய்அம் மாவுக்காய்க் கதையும் சொல்லிஉடுக்களென கண்சிமிட்டும் நூலோ சைகள் உவந்தீயும் இலெமுரியாதான் நெடிது வாழ்க- பாவலர் அறிவரசன், திருலோக்கி – 609 804மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும் "தமிழ் இலெமுரியா"வின் கார்த்திகைத் திங்கள் இதழில் அதன் முதன்மை ஆசிரியர் எழுதிய தலையங்கம் சிந்திக்கத் தூண்டுவதாய் அமைந்த அருமையான தலையங்கமாகும். தூய்மை இந்தியா திட்டம் பற்றிய செய்திகள் தொலைக் காட்சிகளிலும் ஊடகங்களிலும் அதிக அளவில் விளம்பரப் படுத்தப்படுகின்ற செய்தியாகும். புறத் தூய்மைக்காக மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்ற தலைமையமச்சருக்கு நம் நாட்டிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டிய ஐம்பெரும் அசுத்தங்கள் எவையெவை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர். இந்த தலையங்கம் நாட்டு மக்கள் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கட்டுரையாகும். இதனை ஆங்கிலப் பத்திரிகைகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும். காங்கிரஸ் ஆனாலும், பா.ஜ.க ஆனாலும் சரி, சுவீஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் பணத்தைக் கொண்டு வந்தே தீருவோம் என்று முண்டாத் தட்டினார்களே தவிர சல்லிக் காசு கூட வந்து சேரவில்லை. சொகுசு கார் வாங்க நினைத்தால் அதற்கு இந்திய வங்கிகளில் வட்டி 7 விழுக்காடு. குளிர்பதனக் கிடங்கு கட்டுவதற்கு முகேஷ் அம்பானிக்கு அளிக்கப்பட்ட கடனுக்கு வட்டி வெறும் 4 விழுக்காடு. அதே நேரத்தில் ஓர் விவசாயி ஒரு டிராக்டர் வாங்க வேண்டுமானால் வட்டியோ 14 விழுக்காடு. பணத் திமிலங்கலங்களை மேலும் வளர்ப்பதுதான் இந்திய அரசின் கொள்கை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நாட்டில் நிலவுகின்ற உண்மையான பிரச்சனைகளைப் பற்றி மக்கள் சிந்திக்க விடாமல் அவர்களை திசைதிருபுகின்ற நோக்கத்தில் செய்யப்படுகின்ற ஒரு முயற்சிதான் தூய்மை இந்தியா திட்டம் – ஞான. அய்யாப்பிள்ளை, தாராவி-400 017நெஞ்சில் முள் தைத்த உணர்வு! கார்த்திகைத் திங்கள் இதழில் தலையங்கம், உலகுசார்ந்த கட்டுரைகள், இலக்கியம், அரசியல், சிறுகதை என்று மிக நேர்த்தியாக படைத்து வரும் ஆசிரியர் குழுவை எவ்வளவு பாராட்டுனாலும் தகும்! சுரபி விஜயா செல்வராஜ் எழுதிய "அம்மாவுக்காக…" சிறுகதை படித்தேன். நெஞ்சில் முள் தைத்த உணர்வு இருந்தது! மருமகளாகப் போகிற ஒவ்வொரு பெண்ணும் புகுந்த வீட்டினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளப் போகும் நாள் என்று வரும். காத்திருப்போம் அன்னாள் வரும் வரை! – பி.எல்.பரமசிவம், மதுரை – 625 009ஏற்று போற்றி நடைமுறைப்படுத்தற்கு உரித்தாகும்! மண் தூய்மை அமைவது மாந்திரியல் மனத் தூய்மை நெறியின் வழியதே எனும் கருத்தியல் தலையங்கம் படைப்பு சிறப்புக்குரியது. ஏற்று போற்றி நடைமுறைபடுத்தற்கு உரித்தாகும்! உலகமயமாக்கல் கட்டுரையாளர் அசோகர் "இந்தியாவின் (ஆங்கிலேயர் ஆட்சியில் அமைவுற்றதன் பின்பே இந்தியா) கந்தகார் முதல் கன்னியாகுமரி வரையிலும் அதே போல் கிழக்கே குசராத் வரையிலும் போர் செய்து வெற்றி பெற்று பேரரசை நிறுவிய பிறகு…! என்று எழுதியுள்ளார்! கீழ் கலிங்கம் – குசராத் மேற்கு அமைவிற்கு தெற்கே குமரி வரை மூவேந்தர் பேரரசுகளே அசோகர் காலத்திலும் தனிப் பேரரசுகளாய் அமைவுற்றவையாகும். தமிழண்ணல் தமிழியம் பற்றாளர்; தமிழறிஞர் பெருமுகர்! சமுகவியல் என்பது சரியன்று. குமுகாயம் என்பதே தமிழுறு பொருளுடை சொல்! – அ.ம.பெ.காவளர் தமிழ் அறிவன்"