வாசகர் மடல்கள் - தமிழ் இலெமுரியா

17 February 2015 5:48 pm

அணி செய்யும் பொன் மகுடம்சருக்கரைப் பொங்கலில் தமிழ் அமுதம் கலந்ததாகத் தலையங்கம் இருந்தது. அது பொங்கலின் சிறப்பைப் போற்றுவதாகவும் தமிழனைத் தட்டி எழுப்புவதாகவும் அமைந்திருந்தது கூடுதல் சிறப்பு. தமிழைத் துறக்கத் துடிக்கும் தமிழர்களை, அமிழ்தமிருக்கும் கிண்ணத்தில் இருந்து கொண்டு சாக்கடையை மொய்க்கத் துடிக்கும் ஈக்கள்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது. உலகின் மூத்த குடி என்ற பெருமிதம் மட்டும் போதாது; தமிழன் என்ற உணர்ச்சியும், தமிழை உயிர் போல் காக்கும் கடமையும் தமிழனுக்கு வேண்டும். அடிமைத்தனம், அயல் பண்பாட்டு மோகம், அறியாமை ஆகியவற்றிலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் எனும் தலையங்கக் கருத்தை தமிழன் உள்வாங்கிச் செயல்பட்டால், அது விடியலுக்கு உதவும். மொத்தத்தில் தலையங்கம் இதழை அணி செய்யும் பொன் மகுடம்.- த.இராமலிங்கம், கடலூர் – 607 308விழித்தெழு தமிழா! தலையங்கத்தில் எடுத்துக்கூறியது போன்று தமிழ் என்பது வெறும் மொழிமட்டுமன்று. அது பண்பாடு, நாகரிகம், கலை, வாழ்வியல் ஒழுக்கம் என அனைத்தையும் உலகிற்குக் காட்டும் ஓர் அடையாளம். ஏனைய மொழிகள் எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டும் இலக்கணம் கூறும் பொழுது தமிழில் மட்டுமே பொருளுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அகவாழ்வும் புறவாழ்வும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறியுள்ள ஓரே மொழி தமிழ். வீட்டிற்குள் இலக்கிய, இலக்கண அறுசுவை உணவை வைத்துக் கொண்டு வீதியிலே பிச்சையெடுக்கிறான் இன்றையத் தமிழன். இந்த நிலை நீடிக்குமானால் ஐ.நா மன்றம் அறிக்கையில் கூறிய அழியும் மொழிகளில் எட்டாவது இடத்தில் தமிழ் உள்ளது என்பது உண்மையாகிவிடும். இப்பொழுதாகிலும் நாம் விழிக்கவில்லையெனில் வேட்டி மறைந்தது போல, ஏறு தழுவல் மறைந்தது போல தமிழினமும் மறைந்துவிடும். – கருமலைத் தமிழாழன், ஓசூர் – 635 109ஆனந்தக் கண்ணீரும் இரத்தக் கண்ணீரும் பசுமையான பொங்கல் திருநாள் சிறப்பிதழ் என் எண்ணங்களை வெளிப்படுத்தி மனம் மகிழ்ந்தேன். தமிழ்ச் சான்றோர்களாம் பாவலர் கருமலைத் தமிழாழன், ஆலந்தூர் கோ.மோகனரங்கன், ம.இலெ.தங்கப்பா, ம.நாராயணன் ஆகியோரின் தித்திப்பான கவிதைகளில் ஆனந்தக் கண்ணீர் வடித்தாலும் இரத்தமாகிறது காலை தேநீர் கவிதை கண்ணீரில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது. ஐயன் திருவள்ளுவனின் திருக்குறளைத் தமிழன் மறக்கின்றான் என்பதில் உண்மை சில இருந்தாலும் தமிழ் இலெமுரியாவின் தலையங்கங்கள் மூலம் என்றுமே ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது.  மனம் தூய்மையாக இருக்க உடல் நலம் பேறும் சிறப்பாக இருக்க உதவும் வல்ல மருந்து யோகாக் கலை எனும் சிறப்பினை அறிந்தேன். சூன் மாதம் 1958இல் இலங்கையில் இருந்த நிலைமையை விட தமிழனின் நிலை இன்றும் தரம் தாழ்ந்து சென்று விட்டது என்பது உண்மை. சங்கீதா இரா. கண்ணனின் கட்டுரை சிந்திக்க வேண்டிய கருத்துளடங்கியதாகும்.- காரை.கரு.இரவீந்திரன், பீவண்டி – 421 302பொருத்தமான உரை தமிழ் இலெமுரியா தை இதழில் "திருக்குறளுக்குச் சிறப்புச் சேர்க்க" என்னும் கட்டுரையில் ஆசிரியர் திரு பெ.சிதம்பரநாதன் எழுப்பியுள்ள அய்யம் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.  ‘ஒரு மயிர் உதிர்ந்தாலும் கவரி மான் உயிரிழந்துவிடும்’ என்னும் கூற்று அய்யத்திற்குரியது என்றும் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்றும் சில சான்றுகளுடன் கட்டுரையாளர் கூறியுள்ளதுடன், உரையாசிரியர் பலரின் உரைகளையும் எடுத்துக் காட்டி, அவை மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்று கருத்தறிவித்துள்ளார். குளிர் காலத்தில் மயிர் நீங்கின் குளிரின் கொடுமை தாங்காமல் விலங்குகள் உயிர் வாழ்தல் அரிதாகலாம். குளிர் மிகுந்த பகுதிகளில் மாந்தர் பயன்பாட்டுக்கான கம்பளிப் போர்வைகள், ஆடைகள் போன்றவற்றுக்கான முடியினை விலங்குகளிலிருந்து குளிர் நீங்கிய பின்னரே மழிப்பது வழக்கம்.  இந்தக் கருத்தை இலக்கியச் செம்மல் இளங்குமரனார் தம் ‘திருக்குறள் வாழ்வியலுரை’யில் எதிரொலிக்கின்றார். ‘மயிர்நீப்பின்’ எனத் தொடங்கும் குறளுக்கு எழுதிய உரையில், குளிர்காப்பாம் மயிரை நீக்கினால் உயிரோடு வாழாத கவரிமா என்னும் விலங்கினைப் போன்றவர் என்று கூறுகிறார். ‘கவரிமா’ என்பதை மான் என்று கூறாமல் ஒரு வகை விலங்கு என்று குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது. நமக்குக் கிடைத்த உரைகளுள் இதனை மிகவும் பொருத்தமான உரை என்று கூறலாம் என்று கருதுகின்றேன்.- முத்து. செல்வன், பெங்களூருபத்தையும் அழிக்கும் தீ தைத் திங்கள் இதழில் மது விலக்கு குறித்த கட்டுரையில் மதுவால் பாதிக்கப்படும் பொருளாதாரமும் குழந்தைகளின் எதிர்காலமும் கெடும் அவலங்களை விரிவாகக் காண முடிந்தது. மதுவின் தீமைகளை பலரும் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். மது விலக்கு பரப்புரை செய்வோர் முதலில் தங்களைச் சார்ந்தோரை குடிக்காமல் இருக்க செய்ய உறுதிபடுத்தினாலே அது மது ஒழிப்பில் முதல் வெற்றியாகும் என்கிற கருத்தைக் கண்டேன். பத்தும் செய்யுமாம் பணம் – அந்த பத்தையும் அழிந்து விடும் தீ மதுவாகும். – மூர்த்தி, சென்னை – 600 100நேற்றும் இன்றும் தைப் பொங்கல் சிறப்பிதழ் வண்ணத்தாளில் ரசித்துப் படிக்க உதவியது. நேற்றும் இன்றும் என்ற பாணியில் சுதந்திரன் மற்றும் செந்தமிழ்ச்செல்வியில் வெளியான சிந்தனைகள் சிறப்பாக அமைந்தன. யோகா உலகெங்கும் பரவினால் பாபா ராம்தேவ் தானே பயனடைவார்! திருக்குறளைப் பற்றிப் பெருமிதத்துடன் இறுமாந்து நின்ற தமிழுலகம் மா மற்றும் மான் என்ற நிலையில்  சொற்பிழையுடன் பொருட் பிழையும் இந்நாள் வரை வழங்கி வந்தது பெருமை சேர்க்குமா? "தமிழ் இலெமுரியா" மேம்பட உளமார்ந்த வாழ்த்துகள்! – க.த.அ. கலைவாணன், வேலூர் -632002அறநெறிகளை வாழ வைக்கவே அரசு! தலையங்கம் படித்தேன். தைப்பொங்கல்! தமிழர் திருநாள்! உழவர் பெருநாள்! அதன் அருமை பெருமைகளை சுருக்கமாக, விளக்கமாக உணர்த்தியது சிறப்பு! மதுவிலக்கு கட்டுரை படித்தேன். மதுவினால் ஏற்படும் தீமைகள் அதன் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டிருந்து! மது அருந்துதலில் எந்த வகையிலும் நியாயப்படுத்துதல் தவறு என்பது சுட்டி காட்டப்பட்டிருந்து! மக்கள் அறநெறிகளில் வாழச் செய்யவே நம்மை ஆளும் அரசுகள் தேவை; மற்றவைகள் அல்ல! – துரை.சௌந்தரராசன், காஞ்சிபுரம் – 631 501பொருளாழமிக்க புதுக்கவிதை தை 2046 பொங்கல் மலர் அற்புதம். கவித்தென்றல் பூ.அ.இரவீந்திரனின் பொங்கல் கவிதை பொருளாழமும் புதுக்கவிதைப் பொலிவும் உள்ளதாக இருந்தது. வாழ்த்துக்கள்! – கவிஞர் அழகுதாசன், கோவை – 641 024இதழ் தொண்டுக்கு உண்மை உதாரணம் தை இதழில் கடமை உணர்வு சிறுகதை படித்தேன். அடடா அருமை தமிழ் வாசத்தின் அதே தனிமை. மனிதநேயம், சாதிமறுப்பு, பகுத்தறிவு போன்ற விடயங்களை விரவியிருக்கும் நேர்த்தி கதை வடிவத்தின் தனிச் சிறப்பு. கதையாசிரியருக்கு வாழ்த்துகள். சிந்தையில் கொண்டு செப்பனிடுக தலையங்கத்தில் தமிழ் தமிழருக்குரிய இலக்கியச் செல்வங்கள் மீது அக்கறை கொண்டு அதனை பாதுகாத்து கற்றுத்தேறி மேன்மையோடும் மீள் புகழோடும் வாழ வேண்டுமென கருத்தூன்றி உரைத்திருப்பது தாங்கள் செய்யும் இதழ் தொண்டுக்கு உண்மை உதாரணம்.  – இயற்கை தாசன், கொட்டாகுளம் – 627 805தலையங்கக் கருத்தை சபதமேற்போம் தமிழ்நாட்டுக்கே உரிய "தைப் பொங்கல்" திருவிழாவின் மேன்மையை மனம் உருகி எடுத்துரைத்து, பெருஞ் சிந்தனையாளர் டால்ஸ்டாயின் தமிழ்ப் பற்றை மேற்கோள் காட்டி, தமிழ் மொழியின் தனிச் சிறப்பை இன்றளவும் உணர மறுக்கும் தமிழர்களின் போக்கு கண்டு வேதனையுற்று, தமிழன் என்ற உணர்வு ஒன்றுதான் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தும். அவ்வுணர்வு வளர்ந்தால்தான் தமிழர்களாகிய நாம் நலம் பெற முடியும் என நயம்பட உரைத்த தலையங்கக் கருத்தை சபதமேற்போம்.- ப.லெ.பரமசிவம், மதுரை – 625 009பகலவனாய் ஒளிரும் ஏடுபொங்கலுக்கே இலெமுரி யாதான் பூத்த புதுமலரில் தேன்பொழிவு மிக இனிப்புதங்க மனச் சான்றோர்தம் கட்டுரைப்பு தமிழினத்திற் குணர்வூட்டும் கவிதை உயிர்ப்புசெங்கரும்பாய்ச் சிலம்பினது கதை யினிக்க சிறப்புறவே குறிஞ்சியதன் திணை மணக்கஇங்கிதமாய் அரசியலும் வழிந்தே ஓட இருள் நீக்கும் பகலவனாய் ஒளிர்ந்ததேடே! – அறிவுத் தொகையன், திருலோக்கி – 609804சிந்தனைக்கு விருந்து ஆறு இலட்சம் கோடி இந்தியாவின் கருப்புப் பணம் என்பது இந்தியாவுக்கே இழுக்கு. புண்ணிய பூமியிலே இத்தகைய மனிதனை மனிதனே சுரண்டி வாழும் நிலை இருப்பது வெட்கக் கேடே. "மொழி-மக்கள்-அரசு" அருமையான ஆய்வுக் கட்டுரை. கவரிமான் சிந்திக்க வைக்கும் சிறப்பான செய்தி. இறப்பில்லா மறத் தமிழர்களின் மாணிக்க வரலாறு இளைஞர்களுக்கு ஓர் ஏணிப் படி! பொங்கல், தமிழர் புத்தாண்டு தொடக்க நிகழ்ச்சி பற்றிய கவிதைகள் அனைத்துமே சிந்தனைக்கு விருந்து. மதம் பிடிக்க வைக்கும் மதங்களைப் புறந்தள்ளி மனிதநேயம் காப்போம்! தமிழ்ப் பண்பாடு பேணுவோம்! என மராட்டிய மண்ணிலிருந்து முழக்கம் செய்யும் "தமிழ் இலெமுரியா" தமிழின வளர்ச்சிக்கு உரம் என்பதிலே சிறிதும் ஐயமில்லை.- க.தியாகராசன், குடந்தை – 612 501மக்கள் பயன்படுத்த வேண்டிய ஏடு "தமிழ் இலெமுரியா" மாத இதழ் மிகச் சிறப்பாக உலக நாடுகளிலுள்ள தமிழ் மக்கள் படித்து உணரும் வண்ணம் இதழ் வெளியிட்டு வருகிறீர்கள். தமிழ் சமுதாயத்திற்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கிறீர்கள். மிக்க நன்றியை எங்கள் கோவை முத்தமிழ் அரங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தைப் புத்தாண்டுப் பொங்கல் சிறப்பிதழில் கருத்துமிக்க பண்டைய கால தமிழர் வரலாறுகள் மற்றும் மேன்மைகளை எழுதியுள்ளீர்கள். தமிழறிஞர்களுக்கும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பு அளித்து ஊக்கப்படுத்துகிறீர்கள். கருத்துமிகு கவிதைகள், கட்டுரைகள், வரலாற்றுச் செய்திகளையும் தாங்கி வெளி வருகின்ற ஏடான "தமிழ் இலெமுரியா"வை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டால் தமிழர்களுக்கு நலமாகும்.- இரா.சொ.ராமசாமி, கோவை – 641 045ஆராய்ச்சி உணர்வுக்கு வாழ்த்துகள் கோவை சிதம்பரநாதன் அவர்கள் திருக்குறள் உரைகளில் திருத்தம் வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓர் ஆய்வை மேற்கொண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறார். அவருடைய ஆராய்ச்சி உணர்வுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். கவரிமா – கவரிமான் என வள்ளுவனின் குறளுக்கு விளக்கம் சொன்ன, அந்த சொற்களுக்கு பொருளென்ன என்று சொல்லவில்லை இருப்பினும் தெளிவுபடுத்த வேண்டியது குறள் ஆய்வாளர்களின் கடமையாகும்.- சங்கீதா இரா.கண்ணன், இராசை – 626 117பொங்கும் புதுமை இதழ்! தைத் தமிழ் இலெமுரியா பொங்கல் மலராகப் பொலிந்தது! கண்ணைக் கவரும்படி வண்ணச் செறிவுடன் அமைந்திருந்தது. நிறைந்த பயன்; குறைந்த விலை; கூடுதலான பக்கங்கள்! வியப்பளிக்கிறது. பேரிதழ்களே பலபக்க விளம்பரங்களோடு விலை மிகுந்து விற்பனையாகின்ற போது சிற்றிதழ் வகையைச் சேர்ந்த ஓர் இதழ் இப்படி வருவதென்பது அரிய செயல்!  செட்டிநாடு பெண்கள் காலில் சிலம்பு அணியமாட்டார்கள் என்னும் செய்தி சிறுகதை வழி தெரிந்து கொள்ள முடிந்தது. ஓர் ஊரையே தியாகராஜ பாகவதர் போர் நிதியாகத் தந்த செய்தியும் வியப்பளிக்கிறது. ஒட்டு மொத்தமாகக் கூறினால் "தமிழ் இலெமுரியா" பொங்கல் இதழ் பொங்கும் புதுமை இதழே!- க.அ.பிரகாசம், கொடுமுடி – 638 151"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி