தமிழர் பண்பாட்டுத் திருவிழாவில் மகாராட்டிரா முதல்வர் பட்நவிசு - தமிழ் இலெமுரியா

16 February 2016 11:02 pm

தமிழர் நலக் கூட்டமைபுப்பு, மகாராட்டிரா சார்பாக தமிழர் பண்பாட்டுத் திருவிழா மும்பை, சண்முகானந்தா கலையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிசு கலந்து கொண்டார். விழாவில் கலைமாமணி விருது பெற்ற  சென்னை சங்கமம் மற்றும் சன் டிவி புகழ் கிராமிய கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.  தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் மகாராட்டிரா சட்ட மன்ற உறுப்பினரும் தமிழர் நலக் கூட்டமைப்பின் தலைவருமான கேப்டன் இரா. தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். புனே சிறி பாலாஜி சொசைட்டி தலைவரும் கூட்டமைப்பின் நிருவாகக் குழு  தலைவருமான கர்னல் அ.பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். ‘தமிழ் இலெமுரியா’ முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் வரவேற்புரையாற்றினார். தமிழர் பண்பாட்டை மும்பை வாழ் மக்களுக்குப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பெற்ற இவ்விழாவில் தெம்மாங்கு, கூத்து, கிராமத்து பாடல்கள், கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மும்பையில் பல்வேறு  துறைகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதமாக அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக மகாராட்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிசு கலந்து கொண்டு உரையாற்றினார். அனைவருக்கும் வணக்கம். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்" என தமிழில் பேசி கலகலப்பை ஏற்படுத்தினார். அரங்கம் முழுதும் எழுந்த கரவொலியைத் தொடர்ந்து "தமிழர்களுக்கும் மராட்டியர்களுக்கும் நிறைய உறவு இருக்கிறது நீங்கள் எல்லாருமே மராட்டிய தமிழர்கள். நான் படிக்கிற காலத்திலேயே தமிழை அறிவேன். காரணம் நான் படித்த பள்ளியில் எனக்கு பாடம் நடத்தியவர்கள் தமிழ் ஆசிரியர்கள். மராட்டிய மாநில சட்டமன்றத்தில் இருக்கும் ஒரே தமிழர் கேப்டன் தமிழ் செல்வன் மட்டும்தான். கட்சியில் இவரது சேவைக்காகத் தான் வேட்பாளராக தேர்வு செய்தோம். சயான் – கோலிவாடா பகுதியில் இருந்து கேப்டன் தமிழ்செல்வன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். நான் மும்பையில் ‘‘தமிழ்நாடு பவன்’’ அமைப்பதற்கு முழு முயற்சி எடுப்பேன். அதே போல் பத்தாவது வகுப்பு வரை தமிழ் வழிக் கல்விக்கு அமைச்சர்களுடன் பேசி நல்லதொரு முடிவை எடுக்கிறேன். தமிழ், மராத்தி என்ற வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. மராட்டியத்திலுள்ள பெரிய அலுவலகங்களிலும் உயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே திறமையாக செயல்படுகிறார்கள். எனக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி சொல்கிறேன்" எனக் கூறி தன் உரையை முடித்தார். விழாவில் தஞ்சை அரசர் எஸ்.பாபாஜி ராஜா போசலே, மராத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டாக்டர் பொன்.அன்பழகன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், மும்பை பா.ச.க தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான ஆசிஷ் ஷேலர், நகைச்சுவை நடிகர் விவேக், நேசனல் கல்விக் குழுமம் தலைவர் டாக்டர் ஆர்.வரதராஜன், பம்பாய் திருவள்ளுவர் மன்றச் செயலாளர் வி.தேவதாசன், மோகன் வரதராஜ (முதலியார்), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழர் நலக் கூட்டமைப்பின் அமைப்பாளர்களான சு.குமணராசன், மா.கருண், ச.இராசேந்திர சுவாமி, செ.அங்கப்பன், இரா.கராத்தே முருகன், வெ.குமார், திருமதி அனிதா டேவிட் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். சமுக ஆர்வலர்கள், பல்வேறு தமிழ்ச் சங்க அமைப்பினர்கள் மற்றும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இது ஒரு பெரும் வரலாற்று நிகழ்வாக அமைந்தது. "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி