16 July 2013 2:14 pm
காணாமல் போன குழந்தைகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் தினமும் ஏராளமான குழந்தைகள் காணாமல் போகின்றனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்து வருகிறது. இதையடுத்து காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய தகவல்களுக்காக தனியாக trackthemissingchild.gov.in என்ற புதிய இணையதளத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்த இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பது குறித்து மகாராஷ்டிராவில் உள்ள 1,200 போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. போலீசார் மட்டுமல்லாது தொண்டு நிறுவனங்களுக்கும் இதனை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை காணாமல் போய் அது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டால் உடனே போலீசார் அது குறித்த விவரத்தை இணையதளத்தில் உடனே பதிவு செய்து விடவேண்டும். குழந்தை கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனே அது குறித்தும் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும். இதன் மூலம் குழந்தையோடு தொடர்புடையவர்கள் அக்குழந்தையின் நிலை என்ன என்பதையும் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்தும் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு சில மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும்.
இது தவிர குஜராத், சத்திஷ்கர், ஜார்க்கன்ட், மேகாலயா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரகான்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவில் 33 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டியை கிராம மட்டத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கமிட்டியில் கவுன்சிலர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், குழந்தைகள் உரிமை நிபுணர்கள் இடம் பெற்று இருப்பர். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி தனி கால் சென்டர் ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டங்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க முடியும் என்று அரசு கருதுகிறது. மேலும் காணாமல் போன குழந்தைகள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் போது அதனை மற்றவர்களும் பார்த்து காணாமல் போன குழந்தைகளில் யாராவது தங்களது பகுதியில் இருக்கின்றனவா என்பதையும் போலீசாருக்கு தெரிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.