14 April 2014 6:10 am
அகங்கைக்குள் அதிகாரம் குடிபு குந்தால் ஆணவத்தின் அரசாட்சி கொடிபி டிக்கும்;முகமெங்கும் அகங்கார அனல்ப றக்கும்; மொழியெல்லாம் செருக்கினையே உமிழ்ந்திருக்கும்;நகங்கூட நாட்டாமை யாய்ந டக்கும்; நரைமுடியும் கர்வத்தால் சிலிர்த்து நிற்கும்;நிகரில்லை ஒன்றென்று நாவி சைக்க நெஞ்சுக்குள் மமதைபேய் நடன மாடும்.பேராசை மதுச்சுவையை நுகர்த்து விட்டால் பெரும்புகழி"ன் போதைக்குள் வீழ்தல் திண்ணம்;ஊராளும் ஆசைத்தீக் கொழுந்து விட்டு உள்ளத்துள் தானெரியும்; அறிவு நீங்கும்;பாராளும் படைப்பினையே பாதத் திட்டுப் பந்தாடிப் பரிகசிக்கும் கொட்டம் ஓங்கும்;வேராக இறுமாப்பு படர்ந்து விட்டால் வெற்றேதான் வாழ்வென்று ஆகிப் போகும்.பெண்ணாசை பேராசைக் கடித்த ளம்தான்; பெரும்பொன்னின் ஆசைதான் தீய பாதை;மண்ணாசை மண்டைக்குள் மமதை ஏற்றும்; மதசாதி ஆசையெலாம் கர்வம் கூட்டும்;அண்ணாந்துப் பார்க்கின்ற அகங்கா ரத்தால் அழிந்திட்டோர் பலகோடி; வரலா றுண்டு;ஒண்ணாத ஆசைகளை ஒழித்து விட்டால் உள்ளத்துள் நேயம்தான் ஆட்சி செய்யும்!ஆணவத்தின் ஆட்சியெலாம் அரைவி னாடி; அன்புநேய ஆட்சியதன் வாழ்நாள் கோடி;வீணரெனத் தேய்ந்தழிய செருக்கே போதும்; வெற்றிதரும் வாழ்வுக்குப் பணிவே போதும்;நாணலது போல்வளைந்தால் நலமே வாழ்வு; நானென்னும் மமதையதால் நலிவு; தாழ்வு;ஆணவத்தை அடக்கியவர் தாள்வ ணங்கி அடிபணியும் அகிலம்தான்; அன்பே வெல்லும்!- கே.பி.பத்மநாபன், கோவை."