ஓட்டங்கள் - தமிழ் இலெமுரியா

14 February 2014 9:10 am

தாய்தடுத்தப் பொருளொன்றைத் தளிர்கரத்தி லேந்தி தத்தக்கா புத்தக்கா" என்றோடும் மழலை;பாய்ந்தோடிப் பாடங்கள் படிப்பதிலே வாழ்வைப்  பள்ளியிலே தொலைப்பதற்காய்ப் பயணிக்கும் சிறுவன்;நாய்போல நாற்புறமும் காசுக்காய் ஓடி நரகத்தைச் சேமித்து வைக்கின்ற இளைஞன்;ஓய்ந்திங்கே ஓரிடத்தில் சாய்கின்ற வரையில் ஓட்டம்தான் ஓட்டம்தான் ஒவ்வொருவன் வாழ்வும்;காலையிலே எழுந்தவுடன் காற்றாட ஓட்டம்; கடமையென அலுவலக வேலைக்கு ஓட்டம்;சாலையிலே வண்டியதில் சாதனைபோல் ஓட்டம்; சாப்பாட்டுப் பந்தியிலும் இடம்பிடிக்க ஓட்டம்;மாலையிலும் இரவினிலும் மனையடைய ஓட்டம்; மரணத்தை ஏந்தியதாய் மருத்துவத்தின் ஓட்டம்;வாலையிங்கு முறுக்கிவிட்ட காளையினைப் போல வாழ்கின்ற நாளெல்லாம் மனிதர்கள் ஓட்டம்.எதையெதையோ தேடுதற்காய் எங்கெங்கோ ஓட்டம்; இழந்ததையே எட்டுதற்காய் இலக்கற்ற ஓட்டம்;சதையிங்கு சுருங்கிடினும் சாவுவரை ஓட்டம்; சஞ்சலத்தில் உழன்றாலும் சலியாத ஓட்டம்;பதைபதைக்கும் வெயிலிலும் பனியினிலும் ஓட்டம்; பகட்டுக்காய்ப் பைத்தியமாய்ப் பலமிழக்கும் ஓட்டம்;வதைபலவே பட்டாலும் வாட்டமின்றி ஓட்டம்; வாழ்வறியா மானுடரின் வீணான ஓட்டம்.முந்துதலே முக்கியமாய் மூர்க்கமுடன் ஓட்டம்; முன்னிருக்கும் பெருங்குழியைக் காணாத ஓட்டம்;உந்துதலால் வீழ்ந்தாலும் உருண்டபடி ஓட்டம்; ஒன்றுமில்லை என்றுணரா ஓய்வற்ற ஓட்டம்;மந்தியதன் மனம்கொண்டு மதியற்ற ஓட்டம்; மரணத்தை நோக்கித்தான் மாளாத ஓட்டம்;சந்ததமும் ஓடுவதே வாழ்க்கையென ஆமோ? சற்றேநீ சிந்தித்து வாழ்வில்கொள் நாட்டம்!- கே.பி.பத்மநாபன், கோவை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி