ஓய்வில்லை…! - தமிழ் இலெமுரியா

16 August 2014 10:18 am

வந்தவ ரெல்லாம் வாழுகின்றார் – தமிழ்மண்ணின் மைந்தரோ வாடுகின்றார் – குறுமந்திக ளெல்லாம் சிங்கமென – ஒளிமகுடம் அணிந்தே உலவுகின்றார் – நல்லசிந்தனை யாளர் தெருவோரம் – பகல்சோற்றுக் கின்றியும் திரிகின்றார் – இந்த நொந்திடும் நிலைதனை மாற்றும்வரை – இதுநிச்சயம் ! எனக்கினி ஓய்வில்லை…! கந்தல் உடையுடன் வருகின்றார் – பட்டுக் குட்டையும் அங்கியும் அணிகின்றார் – கள்ளச் சந்தையில் செல்வம் சேர்க்கின்றார் – மனை சொல்லிய விலைக்குப் பெறுகின்றார் – நாமோ மந்தையென் றிங்கே திரிகின்றோம் – மூன்று மன்னர் பரம்பரை என்கின்றோம் – இந்த  நொந்திடும் நிலைதனை மாற்றும்வரை – என் நினைப்பில் செயலில் ஓய்வில்லை…!மந்திர மென்றால் மயங்குகின்றார் – பொன்மணியுடன் வைரம் வழங்குகின்றார் – மிகத்தந்திர மாகவே புகழ்வோர்க்கே – மனந்தளரா தளித்து மகிழ்கின்றார் – உயிர்எந்திரம் போன்றே உழைப்பவரை – நாளும்ஏய்த்துப் பிழைத்தே உயர்கின்றார் – இந்தநொந்திடும் நிலைதனை மாற்றும்வரை – என்றன்நல்லுயிர் உணர்விற்(கு) ஓய்வில்லை…! கடவுள் பெயரால் ஒருகூட்டம் – மிகு காசுகள் குவிப்பதில் தான்நாட்டம் – பேசும் படங்கள் காட்டும் ஒருகூட்டம் – காமப் பாலினை வார்ப்பதில் தான்நாட்டம் – அருங் கடமை யென்றலரும் ஒருகூட்டம் – பதவி கவர்வதில் கவிழ்ப்பதில் தான்நாட்டம் – இந்த  மடமைகள் முற்றாய் மாய்க்கும்வரை – என்றன் மனத்திற் கென்றும் ஓய்வில்லை…!- முனைவர் ம.நாராயணன், வேலூர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி