16 October 2014 1:14 am
எங்கெங்கும் கோயிலொடு ஆன்மி கத்தை ஏந்திருக்கும் நாடாக மட்டு மன்றிச் சங்கத்துத் தமிழனன்றே கண்டு ரைத்த சரியான அறிவியலின் வழியி லின்று தங்கமகன் தமிழனவன் துணையி னாலே தலைநிமிரும் சாதனையாய் ஏவி விட்ட மங்கள்யான் விண்கலத்தால் இந்தி யாவின் மாண்பின்று உயர்ந்ததுவே உலக ரங்கில் ! நவகிரகம் எனநாளும் சுற்றி வந்து நாம்வணங்கும் சந்திரனில் காலை வைத்தார் உவப்போடு செவ்வாடை அணிய வைத்தே உளம்துதித்த செவ்வாயில் கலத்தை வைத்தார் குவலயத்தார் வியந்திடவே அப்துல் கலாமின் கூரறிவால் அணுக்குண்டை வெடித்த தைப்போல் துவளாத முயற்சியுடன் மங்கள் யானால் துவக்கிட்டோம் புதுசரிதம் விண்ண ரங்கில் ! பொறியியலில் கணினிதனில் மருத்து வத்தில் பொறித்திட்ட முத்திரையைப் போல யின்றோ அறிவியலில் படைத்திட்ட சாத னைபோல் அரசியலில் நேர்மையினை நாம்ப டைத்தால் வெறியேற்றும் மதச்சாதி மாய்ந்து கங்கை வெள்ளமெல்லாம் காவிரியில் கலந்தி டாதோ நெரிக்கின்ற வறுமைபோய் நாட்டோர் நெஞ்சில் நெறிவளர்ந்து வளமைதாம் பூத்தி டாதோ !-பாவலர் கருமலைத்தமிழாழன்