17 February 2015 4:29 pm
ஒன்று சேர்வோம் வாரீர்! – தமிழர் உலகரங்கில் தலைநிமிர்ந்து நலம்பெறவே!நன்றெல்லாம் முதன்முதல் கண்டதும் தமிழினமாம்நாமிதை உணராமல் போவதோ நடைப்பிணமாம்!அன்றிலிருந்தே இன்று வரைநமையார்யாரோ மேய்க்கத் தாழ்வதோ?வென்றி தேடிடும் ஆண்மை இலையோ?வீணாகிப் போவதும் தமிழர் கலையோ?எத்தனை எத்தனை நல்லறம் வளர்த்தோம்!எத்திசை யும்கொளப் பொதுமறை வகுத்தோம்!இத்தரைக் கோமுதல் வித்தினைத் தந்தோம்!இன்றோ இழிவெனும் முத்திரை பதித்தோம்!திருக்குறள் போலொரு நூல்திசை உண்டா?சிலம்பினைப் போலொரு காப்பியம் உண்டா?தருக்குடன் உன்சங்கத் தமிழ்நூல்போல் உண்டா?சாவையும் வெல் தமிழ் சரித்திரம் ஓங்கஆரியம் முதல்உன்னை அடுக்கடுக் காகஅவரவர் நெறிகூறி அருமையாய் ஏய்த்தார்!சீரிய உன்னிடம் இருந்ததும் இழந்தாய்!செந்தமிழ் உலகாளும் நிலைகாண விரைவாய்!எவர்வந்து போதனை சொல்லினும் கேட்டாய்இருக்குமுன் குறள்நெறி மதித்திட மாட்டாய்தவற்றினைக் கண்டுநீ தனித்தன்மை காப்பாய்!சால்பிதே உலகரங் கேமுதல் சேர்ப்பாய்!வையகம் வாழ்ந்திட உழைத்தது தமிழ்க்கரம்!வாய்மை விளக்கினை வழங்கியது தமிழ்க்கரம்!மையலை நீக்கிய மாண்புறு தமிழ்க்கரம்!வாழ்ந்தால் உலகினை வாழ்விக்கும் தமிழ்க்கரம்!உலகத் தமிழினம் ஓர் குடைக் கீழ்சேர்க!உலகின் மூத்தஉன் ஓண்டமிழ் ஒளிர்கவே!உலகத் தலைமைகொள்; உலகினை வயமாக்கு!உலகம் வாழ்ந்திட உயிர்த்தமிழ் தலைமைசெய்!உறுதிகொள் தமிழா! நீஓரினம் சேர்க!உள்ளிய தெய்தல் எளிதுதான் முனைக!இறுதிநம் இனமொன்று சேர்வதைக் கருது!ஏரார்ந்த தமிழ்உலகை ஆள்வதோ உறுதி!- பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் -1989 – மொரிசியசு)