15 March 2014 7:12 am
பழியாவும் அரவணைத்தாய் தமிழா! நந்தம் பழஞ்சிறப்பைக் காற்றினிலே பறக்க விட்டாய்!இழிவுகளைச் சுமக்கின்ற எண்ணம் கொண்டாய் இனமானம், தன்மானம் தொலைத்தாய்; வேண்டும்விழிப்புணர்ச்சி மறந்தனையே! வெற்றுச் சொற்கள் விளம்புவதில் தேர்ந்தாயே! வாழ்வில் எல்லாஅழிவுகளும் உனைத்துரத்த ஆட்பட் டாயே! அன்புணர்வை ஆளுமையை இழந்தாய் ஏனோ?பணம்பதவி பகட்டுக்கே தன்னை விற்றாய்; பண்பாட்டை, தமிழ்மரபை மறக்கக் கற்றாய்;குணமிழந்தாய்; சான்றோர்கள் வெறுக்கும் வண்ணம் குடிப்பழக்கம் குடியமர இடத்தைத் தந்தாய்!மனவமைதி பறிகொடுத்தாய்! பகைவர் முன்னர் மண்டியிடும் வழக்கத்தில் தோய்ந்தாய்! என்றும் தனக்குவமை யில்லாத தமிழை உன்றன் தாய்மொழியைப் புறக்கணிக்கும் தகைமை பெற்றாய்!தொலைக்காட்சி, திரைப்படங்கள் அடிமை ஆனாய்; துணைபோனாய் ஊழலுக்கே; சுற்றுச் சூழல்நிலைகுலைந்து பறிபோகும் அவலம் கண்டாய்; நேர்மைக்கும் உழைப்புக்கும் விடைகொ டுத்தாய்;விலைபோனாய்; பெற்றோரை மறந்தாய்; சாதி வெறிகொண்டாய்; பொதுவாழ்வில் களங்கம் சேர்த்தாய்!அலைபோலும் ஆர்ப்பரிப்பாய்! மேன்மை நல்கும் அருங்கல்வி, வணிகமென ஆயிற்றிங்கே!வாக்குகளை விற்பதற்கே அணியம் ஆனாய்! வன்முறைக்கு வழிவகுத்தாய்! வாழ்வில் எந்தநோக்கமுமே இல்லாமல் துவண்டாய்! நுண்மாண் நுழைபுலமும் அறியாமல் நொடித்துப் போனாய்!ஊக்கத்தை மறந்தவனாய் உழலு கின்றாய்! ஊரினையே கழிப்பறையாய் ஆக்க லானாய்!ஏக்கத்தில் தவிக்கின்றாய்! இழந்த தெல்லாம் என்றைக்கு மீட்பாயோ? திருத்து வாயோ? – முனைவர் கடவூர் மணிமாறன்.