14 April 2014 6:50 am
வடக்கெங்கும் மதபாணம் எய்து மக்கள் வாக்குகளைக் கேட்டலையும் மாயை காட்டி அடக்குமுறை ஆதிக்க வெறிக்கு மாறாய் அங்கிருந்தால் உயிர்க்குறுதி இல்லை யென்னும் படப்பிடிப்பால் பாடங்கற்றுப் பதைத்து நின்றோர் பயந்தளித்த வாக்குகளால் பதவி காண்பார் நடக்கவிருக் கும்தேர்தல் களத்தால் நாட்டின் நல்லிணக்கம் சிதையாமல் இருந்தால் நன்றே!கணித்துவிட்ட கணக்கெல்லாம் மாயத் தோற்றம் கண்சிமிட்டும் நேரமதில் வருமே மாற்றம் துணிந்துவிட்டால் துரும்பினையும் தூணாய் ஆக்கும் தொகைமதிக்க முடியாத மக்கள் வாக்கை அணியணியாய் கூட்டமைத்தோர் பகிர்ந்து கொண்டார் அறுதிபெரும் பான்மையெனும் கணக்கு வீணே தனித்துவிடப் பட்டகையோ தவித்து நின்றால் தலைநகரைச் சோகமயம் தாக்கும் தானே?கும்பிடுவார் வாக்கொன்றே குறியாய்க் கொள்வார் குழைந்திடுவார் குறுகிடுவார் குனிந்தும் செல்வார் தம்பியென்பார் அண்ணனென்பார் தாயே என்பார் தமக்கைநீ தங்கைநீ என்றும் சொல்வார் நம்புங்கள் நானுங்கள் வீட்டுப் பிள்ளை நாள்தோறும் நாடியோடி வருவே னென்பார் தெம்புடனே தேர்தலிலே வென்ற பின்பு தெரியவில்லை நீங்கள்யார்? என்பார் பாரே! -தென்மாவை தருமு