16 October 2014 1:16 am
விழிசெவிவாய்ப் பொத்திட்ட மந்தி மூன்று விளக்கிட்ட தத்துவம்தான் மாறிப் போச்சு;விழியடைத்த மந்திசெவி தீதைக் கேட்டு வெளியிடும்சொல் எல்லாமே தீதா யாச்சு;இழிசொல்லைக் கேளாத மந்தி கண்ட எல்லாமே வாய்மொழியில் தீதா யாச்சு;விழிகாண செவிகேட்க வாயை மூடி விளக்கிட்ட மந்திமனம் தீதா யாச்சுமும்மந்தித் தத்துவத்தைக் கடைப்பி டிக்க மூவிரண்டு கரங்கள்தான் வேண்டு மிங்கே;இம்மந்திக் கூட்டங்கள் இன்று இங்கே எதையும்தான் காணாது இருக்க லாச்சு;எம்மந்தி ஏதுரைதான் செய்திட் டாலும் ஏற்பதிலே பேதங்கள் இல்லா தாச்சு;உம்மென்று வாய்மூடி உண்மை யையும் உரைக்காது இருக்கின்ற நிலையு மாச்சு கண்களெலாம் சுவைப்பதின்று ஆபா சந்தான்; கண்ணிமைகள் மூடுவது உறங்க மட்டும்;பண்பாடு இல்லாத பேச்சைக் கேட்கும் பலசெவிகள் மூடாது திறந்திருக்கும்;உண்பதற்குத் திறக்கின்ற வாய்கள் எல்லாம் உண்மையை உரைக்கும்முன் மூடிப் போகும்;அண்ணலவர் அறிந்திட்ட மந்தி வேறு; அர்த்தங்கள் மாறியதே; அறிந்தே தேறு!-கே.பி.பத்மநாபன், கோவை