தலைதெறிக்க ஓடும் தம்பிகளே! - தமிழ் இலெமுரியா

20 July 2013 5:00 pm

தலைதெறிக்க ஓடும் தம்பிகளே நில்லுங்கள்!
தமிழ்எழுத்து எத்தனை தெரிந்தவர் சொல்லுங்கள்?
தெரியாதோர் அதிகம்! உண்மைநிலை இதுதான்.
தமிழராய் வாழ தகுதியுனக்கு வருமா?

தமிழ்மரபு அறியாமல் தமிழராய் வாழ்வதா?
தமிழுயர்வு புரியாமல் தலைநிமிர்ந்து நிற்பதா?
உன்னுயர்வு தெரியாமல் மனிதனாக வாழ்வதா?
ஊறிப்போய் மங்கிப்போய் உணர்வற்ற பேதையா?

வீட்டுக்கே உழைத்து எவ்வுயர்வு கண்டிட்டாய்?
பங்களிப்பு நாட்டுக்கு எந்தளவு கொடுத்திட்டாய்?
தனிமனித உயர்வில்கூட தகுதிநிலை அடையலையே!
உன்மனது உருத்தலையா? உணர்வற்ற களிமண்ணா?

எங்கு பிறப்பினும் தமிழனாய் வாழ்கிறாயா?
இங்கு பிறப்பினும் அந்நியன் அந்நியனே!
வெள்ளுடையில் கரையன்றோ பிறசொற்கள் கலந்திடுதல்!
நற்சோற்றில் துளிநஞ்சு நெஞ்சம் துடிக்கலையா?

இருகாலில் நடக்கநீ எழுந்திருந்த போதளவே
எழுப்பிய குரலொலிகள் வரிசைதானே தமிழ்மொழி!
இயற்கையாய் பிறந்த செம்மொழியே உந்தன்மொழி!
முதலில்நீ புரிந்துவிடு! ஊருக்குப்பின் உணர்த்திவிடு!

தமிழ்மொழியில் பேசினால்தான் தமிழன்நீ! புரிந்துகொள்.
தமிழ்நாட்டில் பிறந்துவிட்டால் தமிழனில்லை! தெரிந்துகொள்.
“கரைபடியா கற்புத்தாய்” தமிழோடு வாழ்ந்துகொள்
கலப்படம் செய்திடாதே! கசடனாய் மடிந்திடாதே!

– இயற்கை மருத்துவர் காசிபிச்சை, அரியலூர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி