மயக்கத்தில் தமிழன் - தமிழ் இலெமுரியா

20 July 2013 2:37 pm

மயக்கத்தில் இருக்கின்ற தமிழா! சோழன்
மரக்கலத்தில் சென்றன்று வெற்றி கொண்ட
அயலகமா உனக்கந்த ஈழம்! வாழ்வே
அவலமாகித் துடிக்கின்றான் உடன்பிறப்பு
முயன்றங்கே உரிமையினை மீட்ட ளிக்க
முயலாமல் இருப்பதுவோ வெற்றுப் பேச்சில்
தயக்கமென்ன தமிழ்க்கொடியை நாட்டு தற்கே
தடையுடைக்க விழித்தெழுவாய் தோள்கள் தட்டி!

சங்கத்தில் இல்லாத சாதி சேர்த்து
சாதனையாய்க் கட்சிகளின் கொடிகள் தூக்கி 
எங்கிருந்தோ வந்தவர்கள் ஆட்சி ஏற
எடுபிடியாய் அவர்களுக்கே அடிமை செய்து
மயங்காத வீரமெனும் பெருமை பேசி
மயக்கத்தில் இருக்கின்ற தமிழா! உன்றன்
செங்குருதி தனில்மான உணர்வை ஊட்டிச் 
சேரன்போல் வென்றிடுவாய் இமயம் தன்னை!

தாய்மொழியில் கற்றவர்தாம் அறிஞ ராகித்
தரணியிலே சாதனைகள் படைக்கக் கண்டும்
ஆய்வறிஞர் அனைவருமே உலகின் மூத்த
அருமைமொழி கணினிமொழி என்று ரைத்தும்
சேய்களுக்குப் பயிற்றாமல் ஆங்கி லந்தான்
செம்மையென மயங்கிநிற்கும் தமிழா! யார்க்கும்
வாய்க்காத தமிழ்மொழியைக் காக்க நீயும்
வராவிட்டால் இனத்தோடே அழிந்து போவாய்! 

– பாவலர் கருமலைத் தமிழாழன், ஒசூர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி