16 November 2014 9:13 pm
கத சொல்லு அப்பாயீ… என் செல்ல மகள் அம்மாவை நச்சரிப்பது கேட்டதும்… பழைய நினைவுகளில் என் உதடுகளில் புன்னகை பூக்க, அம்மா என்ன கதை சொல்லப் போகிறாள் என்று நானும் சின்னக் குழந்தையைப் போல் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டேன்.கதை சொல்லும் கலை அவ்வளவு எளிதில் யாருக்கும் கை வந்து விடாது. அம்மா கதை சொல்லும் பாணியே அலாதியாய் இருக்கும். சலிப்போடும் சங்கடத்தோடும் சொல்ல வேண்டுமே என்ற கட்டாயம் போல் இல்லாமல் கதை என்று கேட்டு விட்டால் போதும் அதற்காகவே காத்திருந்தது போல குழந்தையோடு குழந்தையாய் குதூகலித்து அனுபவித்து சொல்வது அலாதியாய் இருக்கும்.அப்புறம் அப்பாயி… அடமூக்கன் புது பொண்டாட்டிகிட்ட எப்படி பேசினான்.. நிசா சிரித்துக் கொண்டே கேட்க, அம்மாவும் மூக்கிலேயே அடமூக்கனைப் போல பேசிக்காட்ட நிசா பெரிதாய் சிரிக்க.. அம்மாவும் கூடவே சிரிக்க.. என் மனதில் பெருமூச்சு எழுந்தது.அம்மாவுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால் மிகப் பெரிய குழந்தை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் பரிமளத் திரிப்பாள். சொல்லச் சொல்ல குறையாமல் கதைகள் அம்மாவின் கற்பனையில் உருப்பெற்றுக் கொண்டே இருக்கும் அதிசயம் எனக்கும் கூட இப்போதுதான் தெரிகிறது. அவள் பட்ட, பட்டுக் கொண்டிருக்கும் அடிகளையும் வேதனைகளையும், குழந்தைகளைச் சாக்கிட்டு கதைகளை உருவாக்குவதில்தான் தணித்துக் கொண்டாளோ என்னவோ?எத்தனை கடினம் வந்தாலும் அசைந்து கொடுக்காமல் மன உறுதியோடு அம்மா இருப்பதற்கு காரணம் கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை நான், இப்போது என் மகள்.தன் மழலையாலும் ஸ்பரிசத்தாலும் அம்மாவின் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருக்கும் மகாராசி…பேசாம போய் படுத்துகிட்டு கத கேட்கறாளாம் கத… ஒழுங்கா படிச்சுக்கிட்டு இருந்தவள, கத சொல்லி சொல்லி கெடுத்து குட்டிச் சுவராக்கியாச்சி. இனி கிட்ட படுக்க வச்சு வச்சு உடம்புக்கு ஏதாவது வரட்டும். அப்புறம் நா மனுசியா இருக்க மாட்டேன். அம்மாவை விரல் நீட்டி எச்சரித்து விட்டு நிசாவைத் தர தரவென இழுத்துப் போகும் ரம்யாவை இயலாமையோடும் எரிச்சலோடும் பாத்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியாது.நிற்காமல் ஓடும் டிவியால் கெடாத மகள் கதை கேட்டா கெட்டுப் போகப் போகிறாள்.பெட்ரூமில் மகளின் விசும்பலும் பக்கத்து அறையில் அம்மாவின் மௌனமான கண்ணீரும் என்னை பைத்தியமாக்கியது.மாமியாரை சொந்த அம்மாவாய் வேண்டாம் மனுசியாய் கூட மதிக்க மறுக்கும் என் மனைவியின் வார்த்தை நெருப்பில் அம்மா நேரடியாய் கருகினாள் என்றால் என் மகளோ மன ரீதியாய்ப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது சமீப காலமாய் எனக்குள் பெரும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அத்தோடு என் வேலையில் கவனம் செலுத்த முடியாது மனச் சோர்வுக்கு ஆளாகியிருப்பதும் கவலையளித்தது.பக்கத்து நகரத்தில் வேலை என்றாலும் சொந்த ஊர், வீடு, அம்மா என்று வேர்களை பிடுங்கிக் கொண்டு போக மனமில்லாமல் கிராமத்திலேயே தங்கி விட்டதில் மிகப் பெரிய கோபம் அவளுக்கு.திருமணம் ஆன கையோடு டவுனுக்கு தனிக் குடித்தனம் போய்விடலாம் என்று கல்யாண புரோக்கர் சொல்லியிருந்தாராம்.இப்படீன்னு இருந்தா இந்தக் கல்யாணத்துக்கு எங்கப்பா ஒத்துக்கிட்டு இருக்கவே மாட்டாரு. கண்டவங்களுக்கும் வடிச்சுக் கொட்டி சேவகம் பண்ணோணும்கற தலையெழுத்து எனக்கு இல்ல. பக்கத்துல தனியா வீட்ட பாருங்க. சாப்பாட்டுக்கு மத்த செலவுக்கு வேண்டியது கொடுத்திடலாம். எங்கப்பாம்மா தனியாதான் இருக்காங்க என்றாள் கறாராய்.உங்கண்ணன் வெளியூர்ல வேலை செய்கிறார். நாம உள்ளூர்ல இருந்துகிட்டு அம்மாவ தனியா இருக்கச் சொன்னா எனக்கு மட்டுமா கேவலம். உனக்கில்லையா? அதான் நாமளும் டவுனுக்கு குடிபோயிரலாம்னு சொல்றேன். உங்க காதுல ஏறவே மாட்டேங்குது.நாலு கி.மீ தூரத்தில் உள்ள அலுவலகத்திற்கு சொந்த வீட்டில் இருந்து போவதை விட்டுட்டு வாடகை வீட்டில் ஏன் போய் இருக்க வேண்டும்.அவள் எய்த எல்லா அம்புகளும் தோற்றுப் போய் அம்மாவை தனியாய் அனுப்ப மாட்டேன் என்று நான் உறுதியாய் நின்றதால் அவள் கோபம் இப்போது முழுவதுமாய் அம்மா மீது திரும்பியிருக்கிறது.கார் வாங்கிய அன்று… அம்மா ரொம்பவே மகிழ்ச்சியுடன் பேசினாள்.பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள் கூட இல்லாமல் நடந்தே போன மகன் இன்று ஆளாகி கார் வாங்கி விட்டதில் ஏகப்பட்ட பெருமை. ரம்யா நச்சரித்து அவள் அப்பா வாங்கிக் கொடுத்தது என்று அம்மாவுக்கு தெரியாது. பாவம்.. அந்த அற்ப மகிழ்ச்சியைக் கூட கெடுப்பானேன் என்று நானும் சொல்லவில்லை.மொத மொத நம்ம சாமி கோயிலுக்குப் போய் நாலு சக்கரத்துக்கும் எலுமிச்சம் பழம் வச்சி பூசை பண்ணி வண்டிய எடுத்துக்கிட்டு வாங்க என்று அம்மா எதார்தமாய் சொல்ல…ஆமா. பாடுபட்டு சம்பாரிச்சு கார் வாங்கிக் குடுத்தங்க சொல்லிட்டாங்க.. அப்படியே செஞ்சிடுவோம்.. நக்கலாய் சொன்னவள். இது எங்கப்பா வாங்கிக் கொடுத்த கார். எங்க குலதெய்வம் கோயிலுக்குத்தான் மொதல்ல போகனும். பெருசா சம்மாரிச்சு குடுத்தவங்காட்ட யோசன சொல்ல வந்துட்டாங்க.ஆமா. எம்பட ஆயுசுல பெருசா சம்பாரிச்ச எம்மகனையே உசுரோட உங்கிட்ட தூக்கி குடுத்துட்டு நிக்கறேனே. என்னய சொல்லோனும். அம்மா கண்ணீருடம் ஆரம்பிக்க… அம்மா பேசாம இரேம்மா என்றேன் ரம்யாவுக்கு பயந்து கொண்டு.நானும் பேசாம இருந்து இருந்துதாண்டா பார்க்கறேன். பைத்தியம் புடுச்சுடுமாட்ட இருக்குது. காலத்துக்கும் காசு கஷ்டம் நீ தலையெடுத்த பிறகாவது நிம்மதியா இருக்கலாம்னு இருந்தேன்.இப்ப என்னால் உனக்கும் சேர்ந்து கஷ்டம்… அழுது கொண்டே முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டு உள்ளே போக எனக்குள் பெரும் போராட்டம்.அப்பா இறந்த பிறகு என்னை ஆளாக்க அம்மா பட்ட பாடு… துயரத்தில் நான் துவண்டுவிடாமல் இருக்க அம்மா எடுத்துக் கொண்ட முயற்சிகள்.. பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாய் வந்த போது கட்டியணைத்து முத்தமிட்ட தருணம்… வேலைக்கான ஆர்டரை கையில் கொடுத்த போது அப்பாவின் படத்துக்கு முன் வைத்து நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து விசும்பிய காட்சி.. புகைப்படங்களாய் நெஞ்சில் பதித்து விட்ட நினைவுகளைச் சிதைக்கும் வல்லமை மனைவி என்ற ஆயுதத்துக்கு உண்டா? முதன் முதலாய் என் நெஞ்சில் கொஞ்சம் அச்சம்.சீக்காளி குழந்தையான என்னை வளர்க்க அம்மா பட்ட கடினம் படைச்சவனுக்குத்தான் தெரியும் என்று பக்கத்து வீட்டு பாட்டி அடிக்கடி சொல்லும். கதை சொல்லி சோறூட்டி, கதை சொல்லி குளிக்க வைத்து, கதை சொல்லி தூங்க வைத்து என்று கதைகள் மூலமாகவே அப்பா இல்லாத துயரத்தை மறக்க வைத்து ஆளாக்கியவள். இன்று நான் சம்பாதித்து நல்ல வேலையில் இருக்கும் போது எவ்வளவு நிம்மதியாக இருக்க வேண்டும்.. ஆனால் அவமானங்களிலும் வேதனைகளிலும் அல்லவா காலம் தள்ளுகிறார். பெற்ற மகனாய் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறிய எனக்கு என்ன தண்டனை?இரண்டு நாட்களாய் அம்மாவுக்கு சரியான காய்ச்சல். இரத்தக் கொதிப்பு வேறு அதிகமாகி விட்டதால் எழவே முடியவில்லை. நானே கொஞ்சம் அரிசியை பொடித்து கஞ்சி வைத்துக் கொடுத்து, முகம் துடைத்து தலைவாரி புடவை கட்ட வைத்து கைத்தாங்கலாய் கார் பக்கத்தில் அழைத்து வந்து நிறுத்திவிட்டு கார் சாவியை எடுக்கப் போனால்.. கார் சாவி ரம்யா கையில்.டாக்டர் 10 மணிக்கு வரச் சொல்லியிருக்கார். சாவிய குடு. இப்ப கிளம்பினாதான் சரியா இருக்கும் சாவியை வாங்க கையை நீட்டினேன்.ஏன் உங்கம்மா பஸ்ல போனதே இல்லையா? இத்தன நாளும் கார்லதான் போய்கிட்டு இருந்தீங்களா ரெண்டு பேரும். சாதாரண காய்ச்சல் இங்கியே நர்ஸ கூப்பிட்டு ரெண்டு ஊசிப் போட்டா சரியா போயிர போகுது. அதுக்கு போயி ஃபுல் செக் அது இதுன்னு அலையறிங்க. தண்டத்துக்கு.. எல்லாம் பஸ்லேயே போகலாம் போங்க.என்ன அநாகரிகம் இது. பெண்மைக்கே உரிய அடிப்படை இரக்கமும் இங்கிதமும் இல்லாமல் தன்னைச் சுற்றி முள்வேலி அமைத்துக் கொண்டு… யதார்த்தமாய் யாரும் தன்னை அணுகினால் குத்திக் கிழித்துக் கொண்டு… இப்படியும் ஒரு பெண்ணா…கைத்தாங்கலாய் அம்மாவை பேருந்து நிறுத்தம் வரை அழைத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றி இறக்கி அப்பாயிண்ட்மெண்ட் நேரம் தவறியதால் மீண்டும் காத்திருந்து… திரும்பும் போது கார் என்னாச்சு என்று கேட்டவர்களுக்கெல்லாம் அசட்டுத்தனமாய் சிரித்து சமாளித்து… ரம்யா கார் சாவியை குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள் என்பது அம்மாவுக்கு தெரிந்தும் ஏதும் பேசாமல் மௌனமாகவே ஒரு நாள் முழுதும் என்னோடு கழித்த அம்மாவின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் குழம்பித் தவித்தேன். இப்படி ஒரு பையனைப் பெற்றதற்கு பெறாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்திருப்பாளோ…நடு இரவு வரை உறக்கம் வரவில்லை. மேலே காலை போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த மகளின் கால்களை அம்மாவின் கால்களாய் நினைத்து வெகுநேரம் பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன்.விடிந்தது. மனச்சோர்வுடனேயே அலுவலகத்துக்கு புறப்பட்டு வாசல் வரை வந்தவனை ரம்யாவின் குரல் நிறுத்தியது ஏங்க! கார் சாவி… மறந்துட்டு போறீங்க.. கையில் சாவியுடன் வந்தாள்.இருக்கட்டும் ரம்யா. இத்தனை நாளும் கார்லயா போய்கிட்டு இருந்தேன். சும்மா பஸ்லயே போறேன். இது வரை இதயத்தை அழுத்திக் கொண்டிருந்த சுமை விலக, இலகுவாய் கம்பீரமாய் உணர்ந்தேன்.- சுரபி விஜயா செல்வராஜ்