15 December 2016 6:59 pm
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அமைதியான சாலை. சாலையின் இருபுறமும் மரஞ் செடிகளுடன் கூடிய மாட மாளிகைகள். அங்கிருந்த மாடி வீடுகளிலேயே மிகவும் ஆடம்பரமாக கட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் மகிழுந்து நுழைந்தது.மகிழுந்திலிருந்து இறங்கிய தமிழச்சியைப் பார்த்து, ஓட்டுநர் ஐயா உள்ள இருப்பார்; போய் பாருங்க" என்று கூறிவிட்டு, மகிழுந்தை நிறுத்தகத்திற்கு கொண்டு சென்றார்.வீட்டின் முகப்பறையில் கரைபடியாத வெள்ளை வேட்டி சட்டை உடுத்திய இரண்டு, மூன்று நபர்கள் அமர்ந்திருந்தனர். இவர்களில் யார் நம்மை அழைத்து வரக் கூறியிருப்பார் என தமிழச்சி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், அவளைக் கண்டதும் இருவர் எழுந்து "நாங்க உங்கள அப்பறம் வந்து சந்திக்கிறோம் தலைவரே" என்று கூறி அங்கிருந்து விடைபெற்றனர்.முகப்பறையின் நடுவே கம்பீரமாக அமர்ந்திருந்த அவரைப் பார்த்து தனது கை சைகையால் "வணக்கம்" கூறினாள் தமிழச்சி."வாம்மா உட்காரு.." என்று சிரித்த முகத்துடன் வரவேற்றவர், என்னை யார் என்று தெரிகிறதா?" என்று வினவினார்."தெரியும்! நம்ம தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்" என்று தமிழச்சி சொன்னதும் முகம் மலர்ந்தார். "என்னை ஏன் அழைத்து வரச் சொன்னீர்கள்?""உனது கல்லூரியில்தான் என் மகனும் படிக்கிறான் தெரியுமா?" என்றார்."ம்.. தெரியும்!. ராஜபாண்டியன், மூன்றாம் ஆண்டு வணிகவியல்" என்றாள் தமிழச்சி."நல்லதும்மா நான் இப்ப அவன் விசயமாத்தான் உன்கிட்ட பேசலாம்னு உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னேன்" என்றபடி சற்று தயக்கத்துடன் தமிழச்சியின் முகத்தைப் பார்த்தார்."தமிழச்சி என் மகன் உன்னை விரும்புறதை உன்னிடம் சொல்லவில்லையா?""ஏன் இல்லை? இரண்டு வருடங்கள் கேட்டுக்கிட்டே இருக்கிறார். நானும் சளைக்காது விருப்பம் இல்லை என கிளிப் பிள்ளையாய் சொல்லிக்கிட்டே இருக்கேன்""உனக்கே இது அநியாயமா தெரியலையா? நான் நேரடியாகவே கேட்கிறேன். என் மகனுக்கு என்ன இல்லை.. அழகு இல்லையா?""இருக்கு..""சொத்து பத்து எதுவும் குறையா?""இல்லை.. ரொம்பவே இருக்கு" என்று வீட்டை ஒருமுறை நோட்டமிட்டபடி கூறினாள். "சரி அப்புறம் ஏன் பிடிக்கலன்னு பிடிவாதமா இருக்கம்மா..""ஒரு ஆணைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் பெண்ணிற்கு பல காரணங்கள் இருக்கலாம்..""ஏதாவது ஒன்றை சொல்லு""முதலில் எனக்கு படிப்பு முடிந்ததும் நான் மேற்படிப்பு படிக்கணும். அடுத்து மக்கள் தொண்டாற்றும் சமுகவாதியாக பணியாற்றிட விரும்புறேன்""ரொம்ப நல்லது. முதலில் திருமணம் செய்து கொண்டு நீ விரும்பியபடி படிக்கவும் சமுகப் பணியை எனது அரசியல் வாரிசாக இருந்தும் செய்யலாமே"அதைக் கேட்டு லேசாக இதழோரம் புன்னகைத்தாள் தமிழச்சி. "என்ன பதில் சொல்லாமல் சிரிக்கிறாய்" என கடுகடுப்புடன் வினவினார் எம்.எல்.ஏ."மன்னிக்கனும். முதல்ல இன்னைக்கு நம் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தொண்டர்கள், உங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகள் யாராவது தங்கள் கட்சியின் தலைவர் பெயரை அடைமொழி இல்லாது மேடைகளில் சொல்லிப் பேச முடியுமா?" என்று தமிழச்சி கேட்டாள்."அதை விடும்மா.. அரசியல் பற்றி இப்ப பேச வேண்டாம். என் மகனை திருமணம் செய்ய உனக்கு விருப்பம் இல்லையா?""ஐயா, மனிதனுக்குரிய பண்போ, ஒழுக்கமோ எதுவுமில்லாத ஒரு பொறுப்பிலாத ஒருவனை அவன் விரும்புகிறான் என்பதற்காக நான் எப்படி சம்மதிக்க முடியும்"சுருக்கென்று தைத்த இந்த பதிலால், என் மகனை எதன் அடிப்படையில் இப்படி சொல்றே"பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியைக்கு காதல் கடிதம் தந்தது.. எந்த தேர்வினையும் படித்து எழுதித் தேர்வு பெறாதது.. வகுப்புக்கு செல்லாமல் வெளியே சுற்றுவதும் ஆசை வார்த்தையால் இணங்கச் செய்து பெண்களை ஏமாற்றுவதும்.. என படபடவென்று பட்டியலிட்டு வெடித்தாள் தமிழச்சி."ஆம்பளப் பிள்ளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பானுங்க.. இப்படி அவன் திரிவதை திருமணத்திற்கு பிறகு குணவதியான உன்னைப் போன்ற பெண்ணாலே மாற்ற வேணும்னுதான் உன்னை அவனுக்கு அவன் விரும்பியபடி திருமணம் செய்து வைக்கலாமென்று உன்கிட்டே பேசிகிட்டு இருக்கேன்" என குற்ற உணர்வு எதுவுமில்லாமல் சாதாரணமாக கூறினார் எம்.எல்.ஏ."மற்ற பெண்களைப் போல காதல் பேசி மடக்க முயன்று, முடியாமல் போனதும் கல்யாணம் என்ற பேரில் தான் விரும்பியபடி உங்க மகன் என்னை அடைய முயல்கிறார். நீங்களும் அதற்கு உடந்தையாக இருக்கிறீர்கள்.." பட்டென்று பதில் வந்தது தமிழச்சியிடமிருந்து."நீ என்னம்மா நினைச்சுட்டு இருக்கே. எனக்கு இருக்கிற வசதிக்கும் செல்வாக்குக்கும் எங்க சாதியிலே பெண்ணை கொடுக்க நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு நிக்குறாங்க.. சரி நம்ம பையன் விரும்புறானேன்னு சாதி பார்க்காம.. சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கலாமேன்னு வந்தா.. நீ வாய்க்கு வந்தபடி எடுத்தெறிஞ்சு பேசுற.." என கண்கள் சிவக்க வெடித்தார். "உங்க சாதி மறுப்பு கொள்கை ஏன் உங்க மகள் விசயத்திலே பின்பற்றப்படவில்லை" என சூடாகக் கேட்டாள் தமிழச்சி.தமிழச்சியின் கேள்விக்கு பதில் சொல்லாமல், நாங்க விரும்புறதை அடையனும்னு ஆண்கள் எது வேண்டுமானாலும் செய்வோம். ஒன்னுமில்லை, உன்னை தூக்கிட்டு போய் திருமணம் செய்தாலும் சரி, இல்லை அவன் ஆசைப்பட்டபடி அனுபவித்து கைவிட்டாலும் சரி அதை ஒரு குற்றமாக இந்த சமுகம் சொல்லாதபடி செய்து விடுவோம்"உங்க உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. என்னை தூக்கிட்டு போய் கட்டாயத் திருமணம் செய்ய முடியாது. அப்படி நடந்தா உங்க எல்லாத்தையும் கூண்டில் ஏற்றி ஊரே நாறும்படி செஞ்சிடுவேன். அதே மாதிரி என்னை உங்கள் மகன் பாலியல் தாக்குதல் செய்ய முயன்றால் அவனை குடும்பமே நடத்த தகுதியில்லாதவனாக ஆக்கிவிடுவேன். இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் விட்டுட்டு உங்களைப் போல காசு, பணம் மட்டுமே வாழ்க்கையென்று நினைக்கிற குடும்பத்தில் சம்மதம் செஞ்சு சந்தோசமா இருக்க பாருங்க. என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுறாளேன்னு கோபப்படாதீங்க. எங்க அம்மா இல்லாமல் தனி மனிதனாய் வளர்த்து ஆளாக்கிய என் அப்பா பெண்ணை ஒரு மனுசியாக பார்க்கும் ஆண்களை மதிக்கவும் போகப் பொருளாக பார்க்கிற போக்கிரிகளை களை எடுக்கவும் யோசிக்காதே! என்று சொல்லி, சொல்லி வளர்த்து அனைத்து சுதந்திரமும் எனக்கு தந்துள்ளார்.அதனால்தான் நான் படித்து முடித்து விட்டு சமுகத்தில் உள்ள போலி அரசியல் வாதிகள், சமுகவாதிகள், ஆணாதிக்கவாதிகள் போன்றவர்களை எனது தகப்பனார், என் கல்லூரி முதல்வர், நல்லெண்ணம் கொண்ட பேராசிரியர்கள் வழிகாட்டுதலோடு இளைய தலைமுறையினரை ஒன்று திரட்டி இந்த சமுகப் பிணிகளை களைந்திடும் பெண்ணாக செயலாற்றிட விரும்புகிறேன் என்று ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறிய தமிழச்சி, அவ்வழியில் வந்த தானியை நிறுத்து ஏறிச் சென்றாள்.அவளை பின்தொடர்ந்து வந்த எம்.எல்.ஏ., தானியின் பின்புறம் இருந்த சொற்றொடரை படித்தபடி திகைத்து நின்றார். வாசகம் "தவறை, தவறு எனச் சுட்டிக் காட்டாததும் தவறே" – யாரோ – ஆதிலெமு, மதுரை"