உறவு என்றொரு சுழல் - தமிழ் இலெமுரியா

15 November 2013 12:30 am

தாராவி மாற்றுக் குடியிருப்பு தெருக்களில் சூசையப்பரை பார்க்காதவர்கள், யாரும் இருக்க முடியாது. தெருக்களில் நடமாடுபவர்களில் அவர் தனியாகத் தெரிவார். அப்படியொரு கடைந்தெடுத்த பருமன், உயரம். உடலுக்குத் தகுந்தவாறு சுறுசுறுப்போ, ஓடியாடி வேலை செய்வதையோ யாரும் பார்த்திருக்க முடியாது. அப்படி அவரின் செயல்பாடுகள் அமைதியாக இருக்கும். வீதிகளில் நடப்பதும், தெரிந்தவர்களைப் பார்க்கும் போதும், அதே அமைதியையே கடைப்பிடிப்பார். அவரின் பொழுதுபோக்கு தெருவோரங்களில் உட்கார்ந்து சீட்டு விளையாடும் கூட்டத்தில் நின்று வேடிக்கைப் பார்ப்பது. அவர்களிடம் இருந்து நெருப்பு வாங்கி பீடி பற்ற வைத்துக் கொள்வார். சீட்டு விளையாடுபவர்களில் யாராவது பீடி கேட்டால் கொடுத்து உதவுவார். அவர்களுக்குள் வாக்குவாதமோ, அடிபுடிச் சண்டையோ வந்தால் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுவார். இரண்டடுக்கு பேருந்து ஓட்டுனராக வேலை செய்கிறார். கூடுதலான நாட்கள் ஓட்டுநர் சீருடையோடுதான் தாராவி தெருக்களில் பார்க்க முடியும். வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்ததும் கைப்பையையும் சாப்பாட்டுப் பாத்திரத்தையும் போட்டு விட்டு சாராயக்கடை, கள்ளுக்கடை என்று போய்விடுவார். மூக்கு முட்டக் குடிப்பார். எந்த அலம்பலும் இல்லாமல் பொழுதை ஓட்டி விடுவார். போதை அதிகமாகி தெருவோரம் விழுந்து கிடந்ததாகவோ யாரும் சொல்ல முடியாத அளவுக்கு நடந்து கொள்வார். சூசையப்பர் கிறித்து பிறப்பு, குருத்தோலை ஞாயிறு போன்ற பெருநாட்களில் புத்தாடை உடுத்தி வாய்நிறைய வெற்றிலைக் குதப்பி கண்சிவக்கக் குடித்து பொழுதைப் போக்குவார். குழந்தைகள் வந்து சாப்பிடக் கூப்பிட்டாலும், செல்ல மறுப்பார். எனக்கு தெரியும். நீங்க போங்க." குழந்தைகளை அதட்டுவார். பெருநாட்களை ஓய்ந்து கிடக்கும் தருணத்தில் வீட்டுக்குப் போய் அவரே போட்டுச் சாப்பிடுவார். மனைவி பரிமாறி சூசையப்பர் சாப்பிடக் குழந்தைகள் யாரும் பார்த்ததே இல்லை. குழந்தைகள் பரிமாறினால் சாப்பிடுவார். இல்லையானால் அவரேதான் போட்டுச் சாப்பிடுவார். சாப்பிட்டு முடிந்ததும் அவரே தட்டைக் கழுவிச் சரியான இடத்தில் வைப்பார். நான்கு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையுமாக வீட்டில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தாலும், தனது பங்கிற்கு ஒரு முக்கல் முனங்கலோடு முடித்துக் கொள்வார். வெளியுலகத்திற்கு அமைதியானவராய்த் தெரிந்தாலும் வீட்டுக்குள் அந்த அமைதியை கடைபிடிக்க முடியாமல் சிரமப்படுவார். மனைவி மக்கள் மீது எரிந்து விழுவார். உறவினர்கள் யாராவது "என்ன சூச, அத்தப் பொண்ணுன்னுதானடே கட்டிகிட்ட. இப்பம் ஏம்டே ஒங்களுக்குள்ள ஒத்துப் போக மாட்டேங்கிது." எனக் கேட்டால், ஏன் அவா உங்கக்கிட்ட ஏதும் சொன்னாளா "இல்லேடே. அவா ஒண்ணும் சொல்லல. ஓங்க வீட்ல ஒருத்தரோட ஒருத்தரு சரியா பேசிகிட மாட்டீங்களாமே அதான் கேட்டேன்." "இன்னா பாருங்க, ஊரு ஓறவுன்னு வந்தா ஊர் கதைய பேசுவோம். உலகக் கதைய பேசுவோம். அதவுட்டுட்டு அடுத்த வீட்டு அடுப்பாங்கரையை உத்து பார்க்க ஆசை படுறது நல்லால்ல" இப்படி தன்னைப் பற்றியும், தன் குடும்ப வாழ்க்கைப் பற்றியும் அறிய நினைப்பவர்களிடம் முகத்தில் அடித்தது போல் பேசி விடுவார். கடைக்குட்டி கரோலின் பிறந்த பிறகே அவர்களின் அந்தரங்க வாழ்க்கை  துண்டித்து போனது. இசைதெறிக்க ஓடும் சிற்றாறு போல கலகலத்த அவர்கள் வாழ்க்கை குட்டையாய் தேங்கி ஓசைமலடாய் கிடக்கிறது. விடிவதும் அடைவதும் வேண்டாத ஒன்றாய் நடக்கிறது. சூசையப்பருக்கும் அந்தோணியம்மாளுக்கும் இடையில் உள்ள பிணக்கு எத்தனைக் காலம்தான் என்று அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியாது. அதற்கான ஆணிவேர் எங்கே குத்து முனை ஊன்றி நிற்கிறது என்பது மிகப்பெரிய கமுக்கம். அந்த கமுக்கம் சிராய்ப்பு ஏற்பட்டு அதன் நாற்றம் வெளியில் கசிந்ததே இல்லை. மாதா மாதம் சம்பளம் வாங்கியதும் தனக்கு ஒருமாத செலவுக்கு தனியாக எடுத்துக் கொள்வார். மீதி பணத்தை "துட்டு" ட்ப்பாவில் வைத்து விடுவார். அதை எடுத்துதான் அந்தோணியம்மாள் செலவு செய்ய வேண்டும். தட்டுபாடு ஏற்பட்டால் மூத்த மகளிடம் சொல்லிதான் வாங்க வேண்டும். தனக்கான பணச் சிக்கலை தீர்த்துக் கொள்ள சீட்டு பிடித்து நடத்தினாள். கைகளில் பணம் புரள ஆரம்பித்தது. பணத்தைப் பிரித்து சரியாக சீட்டுப் புள்ளிகளுக்குக் கொடுத்தாள். தன் சீட்டை எடுத்து வட்டிக்கு விட்டாள். இவையெல்லாம் சூசையப்பருக்கு பிடிக்கவே இல்லை. ஆனாலும் அவர் அதை தடை செய்யவில்லை. மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை வீடு முழுக்க பெண்களாய் நிறைந்து கிடப்பது சூசையப்பருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதை தணித்துக் கொள்வதற்கு கூட இரண்டுமுறை சாராய கடைக்குச் சென்று விடுவார். அந்தோணியம்மாளுக்கு சீட்டுப் புள்ளிகள் கூடிக் கொண்டே போனது. சீட்டுக் கழிவு (கமிசன்) பணமும், வட்டிப் பணமும் அவளை இன்னும் செல்வச் செழிப்பாக்கியது. பக்கத்தில் விலைக்கு வந்த வீட்டை வாங்கினாள். அதை கொஞ்சம் எடுத்துக் கட்டி குடி புக பால்காய்த்தாள். தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து பால் காய்ப்பு நிகழ்ச்சியை அக்கம், பக்கம் மெச்ச நடத்தினாள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவர்களின் பிணக்கையோ, உறவறுந்து வாழும் வாழ்க்கையோ தெரியாது. குழந்தைகளை ஒருவர் மாற்றி ஒருவர் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள். பொறுப்பான கணவன் மனைவியாகவே வெளியில் காட்டிக் கொள்வார்கள்; நடந்து கொள்வார்கள். வீட்டுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பார். அவரின் துணிமணிகளை யாரையும் துவைக்க விட மாட்டார். கண்டிப்பாக அந்தோணியம்மாள் துவைத்தால் அன்று நாள் முழுவதும் சண்டைதான். சண்டையென்றால் நேரடியாக எதுவும் திட்டவும், கோவப்படவும் மாட்டார். அந்த துணியை மறுபடியும் துவைப்பார் அல்லது சலவை நிலையத்தில் கொண்டு கொடுப்பார். "எந்த நாயும், கழுதைகளும் என் துணிமணிகளை தொடக் கூடாது" என்பார். அதில் கண்டிப்பும் கோபமும் நின்று நீறும். குழந்தைகள் யாரேனும் துவைத்தால் கொஞ்சம் சிரித்தபடி "இன்னைக்கு யாரு தொவைச்சா? செல்வியா? பரவாயில்லயே நல்லா தொவச்சிருக்காளே. அப்பாவுக்கு இனிம வேல கொறஞ்சிரும் என்ன…?" செல்வியின் தலையை அன்புடன் ஆதரவாய் தடவிக் கொடுப்பார். பாசம் காட்ட ஆரம்பித்து விட்டால், அன்று முழுவதும் வீட்டிலேயே இருப்பார். தான் பிறந்து வளர்ந்த கதையைச் சொல்வார். ஊரில் தான் காடாய் செடியாய் அலைந்தது, அணில்களையும், எலிகளையும் வேட்டையாடி சுட்டுத் தின்னது, கண் கலங்க குளத்தில் குளித்து சகதிக் கரையில் படுத்துக் கிடந்தது என்று ஒவ்வொன்றாய் சொல்வார். சொல்லச் சொல்ல தானும் குழந்தையாக மாறிப்போவார். சூசையப்பருடன் குழந்தைகள் சேர்ந்து விளையாட ஆரம்பித்தவுடன் பக்கத்து வீடுகளில் போய் அமர்ந்து கொள்வார். குழந்தைகள் வளர, வளர தாயின் பக்கமே அதிகம் சேர்ந்தது. தாய் சொல்வதே கட்டளைக் கல். சூசையப்பர் குடும்பத்திற்கு உதவாத குடிகாரராகவே தெரிந்தார். குழந்தைகள் மீது எவ்வளவுதான் அன்பாகவும், பாசமாகவும் இருந்தாலும் "இன்னைக்கி தண்ணி அதிகமாயிற்றோ அதான் பாசம் பொத்துக்கிட்டு வருதோ?" என ஏளனம் செய்தார்கள். உள்ளம் தளர்ந்து எத்தனையோ காலம் ஆயிற்று. குடியால் இப்பொழுது உடலும் தள்ளாட ஆரம்பித்தது. செய்யும் வேலை கையில் இருக்கும் அமுதசுரபி. அதுபோனதும் வாழ்க்கையில் எல்லாமே வற்றிப் போகிறது. கோவக் கனல் கூட நீறாகி தணிகிறது. கைக்குள்ளும், கால்களுக்குள்ளும் குஞ்சும் குறுமானுமாய் கிடந்த குழந்தைகள் வளர்ந்த பெண்களாய் சமைந்து நின்றனர். படித்து வேலைக்குப் போயினர். குடிப்பதற்கு பணம் வேண்டி பிள்ளைகளிடம் கையேந்தினார் சூசையப்பர். பிள்ளைகள் சம்பளம் எடுத்து அம்மாவின் கையிலேயே கொடுத்தனர். அந்தோணியம்மாவோ சூசையப்பருக்கு திட்டித் திட்டியே குடிக்கப் பணம் கொடுத்தாள் குழந்தைகளின் மூலமாக.  தெரு முனையோடு அவரின் வெளியுலகத் தொடர்பு எல்லை முட்டி நின்றது. வீட்டில் நாலு குமரிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்யலாம் போல் வாலிபத்தோடு நின்றார்கள். ஒரு பெண்ணுக்குக் கூட திருமணம் நடக்கும் முன்னே சூசையப்பர் காடேகி விடுவாரோ என்று எண்ணத் தோன்றியது. நாளுக்கு நாள் அவரின் நிலைமை பரிதாபமானது. பழைய வீட்டிலேயே அவர் படுத்துக் கிடந்தார். வீட்டுக்கும் வெளித் திண்ணைக்குமாய் அவர் நடமாட்டம் சுறுங்கியது. பழைய வீட்டுக்கு மகள்கள் யாருமே அதிகமாய் வருவதில்லை. சாப்பாடு கொடுக்கவோ, மருந்து கொடுக்கவோ, குளிபாட்டித் துணி மாற்றவோ என இப்படி வேலையின் பொருட்டே மகள்கள் வந்து போவார்கள். அந்தோணியம்மாள் எட்டிப் பார்ப்பதே இல்லை. இந்த அளவுக்கு தவங்கிய பின்னும் அந்தோணியம்மாள் பணிவிடை செய்வதை அவர் விரும்பவில்லை. கடைசி மகள் கரோலினை மிகவும் நேசித்தார். குழந்தைப் பருவத்தில் அவரோடு ஒட்டியிருந்த குழந்தையவள். எங்கு போனாலும் கரோலினை தோளில் தூக்கிக் கொண்டு போவார். அவள் எது கேட்டாலும் தன் சக்திக்கு மீறி வாங்கிக் கொடுப்பார். அவர் வெளியிலிருந்து வரும் வரைக்கும் சாப்பிடாது. அவர் வந்து ஊட்டி விட்டால்தான் சாப்பிடும். அவருக்கும் அவளுக்கு ஊட்டி விட்ட பின் சாப்பிட்டால்தான் மனம் நிறையும். பத்துக்குப் பதினைந்து வீட்டுக்குள் படுக்க இடம் இல்லை என்று வெளியே கயிற்றுக் கட்டிலில் படுப்பார். கரோலினும் அவருடனே வந்து படுத்துக் கொள்வாள். இரவு நெடுநேரம் கழித்து மூத்தவள் செல்வி வந்து தூக்கிச் செல்வாள். வளர, வளர கரோலின் நிறைய கேள்வி கேட்டாள். "ஏம்பா நீங்க அம்மா கிட்ட பேசமாட்டங்றீங்க? அம்மாவும், நீங்களும் எப்பம்பா சண்டை போட்டிங்க? அம்மாகிட்ட பேசுங்கப்பா. வேணும்னா அம்மாவ ஒருநாள் அடி, அடின்னு கொல்லுங்க, அதுக்கப்புறம் பேசுங்கப்பா" கெஞ்சுவாள்; கட்டளை போடுவாள். அனைத்திற்கும் சிரிப்பதும் மழுப்புவதுமாகவே பதில் சொல்வார். "அப்பா… என்ன செல்வியக்கா கறுப்பி, கறுவண்டு, காக்காச்சின்னு பட்டபேரு வைச்சி கூப்பிடுதாப்பா. நம்ம வீட்டுல நாமட்டுதான் கறுப்பா பெறந்திருக்கேனாம். என்ன கறுப்பா பெத்ததுக்குதான் அம்மாகிட்ட நீங்க பேச மாட்டேங்றீகளாம். அப்படியாப்பா?" இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவரின் முகத்தோற்றம் மாறும். கண்கள் சிவந்து நீர் மல்கும். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு "இல்லடித்தங்கம், அப்படிலாம் ஒண்ணும் இல்லையே… அவா கிடக்கா கிறுக்கு மூதி. அவளுக்கென்ன தெரியும். கறுப்பா இருந்தாலும் நீ எங்கம்மால்ல. உன்ன மாதிரிதான் எங்கம்மாவும் கறுப்பு. என்ன ஒரு கறுப்பு அம்மா பெத்தா, நான் ஒரு கறுப்பு அம்மாவ பெத்திருக்கேன் சரிதானா?" கரோலின் மீது சூசையப்பர் கொண்ட பாசத்தைப் பார்த்து அந்தோணியம்மளுக்கே வியப்பாய் இருக்கும். "இந்த மனுசன புரிந்து கொள்ளவே முடியலையே…" என மலைத்திருக்கிறாள். கரோலின் பேருகாலம் முடிந்து நான்கு ஆண்டு கழித்துதான் அந்தோணியம்மாள் பம்பாய் வந்தாள். அவளைத் தொடர் வண்டி நிலையத்திலிருந்து அழைத்து வர சூசையப்பர் செல்லவில்லை. அந்தோணியம்மாளே வண்டி பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீட்டில் திறவுகோல் வாங்கி கதவைத் திறந்து வீட்டுக்குள் போனாள். வீடு குப்பைக் காடாய்க் கிடந்தது. சட்டி, பெட்டியை ஒதுக்கி வைத்து வீட்டை தூத்துத் துடைத்து துப்புரவு செய்தாள். மணி இரவு ஒன்று ஒன்றரையானது. இன்னும் அவரைக் காணவில்லை. மனம் இனம் புரியாத பயத்தால் நிலைகொள்ள மறுத்தது. குழந்தைகள் அங்கும் இங்குமாய் படுத்துத் தூங்கின. குழந்தைகளைத் தூக்கி சரியான இடத்தில் கிடத்தினாள். குழல் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. சுவரோரமாய் உட்கார்ந்து பெரும் மூச்சு விட்டாள். பார்வை கலங்க நீர் திரண்டது கண்களில். திருவிழாவிற்கு ஊருக்கு அழைத்துப் போகும் போது எத்தனை அன்பாய், ஆதரவாய் தன்னை அழைத்துக் கொண்டு போனார். குழந்தைகளுக்கு துணிமணி, கொலுசு தனக்கும் சேலை, வளையல், கொலுசு என தன்னை இன்பத்தில் ஆழ்த்தி அழைத்துப் போனார். தான் இடும் அன்புக் கட்டளைக்கு அடிபணிவதே இன்பம் என்று இருந்த கணவர் சூசையப்பர் எப்படி மாறி விட்டார் என நினைத்துக் கண்ணீர் வடித்தாள். அக்கம் பக்கத்து பேச்சொலிகள் அடங்கின. மின் விசிறி காற்றை அறுத்து வீசும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. மின்விசிறியின் காற்றும், சத்தமும் அவள் தனிமையை பயமுறுத்தின. தனிமை கண் திறந்து நினவுகளைத் துழாவின. அய்யோ கணப்பொழுது இன்பம் சுரந்த அந்தக் காட்சி சுடராய் விரிந்து சுழியமாய் ஏதுமற்றுப் போகிறது. பொருளற்ற வெறுமை போல, முள்வாங்கியால் பிடுங்க முடியாத இற்றுப்போன முள்ளாய் அந்த வலி உறுத்திக் கொண்டே இருக்கும் வலியது. வாழ்வின் கடைசி மணித்துளி வரைக்கும் தொடரும் வலியோயிது? விடியற்காலம் நான்கு மணி, கதவைத் தட்டும் ஓசை, தூக்கமின்றி உறுத்திய கண்ணோடும், மனதில் மானாவாரியாய் கொட்டிக் கிடக்கும் ஆவலோடும் எழுந்து போய் கதைவைத் திறந்தாள். வெளியே தள்ளாடிய நிலையில் கணவன். முகம் மழித்து பல நாட்கள் ஆகியிருக்கும். குடியினால் முகம் செத்து உணர்வுகள் வறண்டு கிடந்தன. பார்வையோடு பார்வை பொருந்த மறுத்தன. இருவரின் பர்வையும் பொருந்த முடியாத உணர்வுகள் விலகிக் கிடந்தன. அடர்ந்த காட்டில் மின்னல் தெறிப்பாய் சோகமுகத்தில் புன் சிரிப்பேற்றி "எங்கப் போயிருந்தீங்க… ஆதரவாய் கைத்தாங்கலாய் உள்ளே அழைக்க முயற்சித்தாள். மிக நிதானமான அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்து காரி உமிழ்ந்தார். வறண்டிருந்த விழிகளில் கண்ணீர் மேவி வழிந்தது. இதை எதிர் பார்த்தவள் போல் முகத்தை புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டு "சரி.. வாங்க.. உள்ள வாங்க பேசிக்கலாம்" என்று மறுபடியும் கைத்தாங்கலாக உள்ளே அழைத்தாள். "ஏய்… கைய விடு. குடிச்சிட்டு வந்திருக்கேன்னு நெனைக்காத. குடிச்சாலும் நல்லா ஓர்மையோடுதான் இருக்கேன். ஒனக்கும் எனக்கும் எனும எந்த ஒட்டுமில்ல, ஒறவுமில்ல. இந்த பிள்ளைகளுக்காவ வீட்டுக்கு வந்து போயி இருப்பேன்; அவ்வளவுதான்".  கடலுக்குள் எரிமலை வெடித்து பிழம்பு சூடாறிப் போவதைப் போல் அவரின் உள்ளத்து வேதனை நெருப்பை பக்கத்து வீடுகளுக்குக் கேட்காமல் அந்தோணியம்மாளுக்கான வேதனையோடு மட்டும் சொல்லி முடித்தார். வீட்டுக்குள் சென்றவர் எந்தக் குழந்தைகளின் முகத்தையும் பார்க்கவில்லை. முழுக்கால் சட்டையைக் கழற்றி விட்டு அசையில் கிடந்த வேட்டியைக் கட்டிக் கொண்டார். மேல்ச்சட்டையை கழற்றி அதே அசையில் தொங்க விட்டார். அப்படியே சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து விட்டார். "இனி உடல் சாய்ந்து கொள்ளச் சுவரும், உள்ளம் சாய்ந்துக் கொள்ள சாராயமும்தானோ…" நினைத்துக் கொண்டே தூங்கிப் போனார். இப்படிக் காலம் கல்லாய் சமையுமென்று எண்ணினாள் இல்லை. புனலின் குளுமையில், நீச்சலின் இன்பத்தில் தன்னை மறந்து சுழலில் சிக்கிக் கொள்வதைப் போல வாழ்க்கைக் கருஞ்சுழியில் மாட்டிக் கொண்டாள். சூசையப்பர் இரண்டு மூன்று நாட்களாகவே எதுவுவே சாப்பிடுவதில்லை. தண்ணீர் கூடக் குடிப்பதில்லை. படுத்தப் படுக்கையாகவே கிடந்தார். குடும்பத்துக்குள் ஒரு மெல்லிய பதற்றம் தெரிந்தது. இவர் இப்படியே கிடந்தால் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் முடிந்து போவார். சாகும் வரைக்கும் அம்மாவிடம் பேசாத, ஒட்டு உறவு இல்லாத இந்த வீம்பு வாழ்க்கை என்ன மகிழ்ச்சியை, மனநிறைவை தந்திருக்கும்? தங்களுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் குடியைத் தவிர வேறு எதனுடனும், எவருடனும் ஒரு தொடர்போ, நட்போ வைத்திருந்ததாய் பார்க்க முடியவில்லை. தனக்கான மகிழ்ச்சியையும், வலியையும் யாருடனும் பகிர்ந்து கொண்டது கிடையாது. நகரத்தில் ஓலங்கள் அடங்கிக் கிடக்கும் நள்ளிரவு நேரங்களிலும் எழுந்து இருளோடு இருளாய் அரவமின்றி உட்கார்ந்து இருப்பார். "என்னப்பா இந்த சாமத்துல எந்திச்சி உக்காந்திருக்கிய. எதாவது வேணுமாப்பா?" எனக் கேட்டால் "இல்லம்மா.. ஒண்ணும் வேண்டாம். நீ படுத்துக்க. சவம் எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது. அதான், வேரென்ன கொள்ளையா எனக்கு" என்பார். கட்டிலை சுற்றி பிள்ளைகள் எல்லாரும் அமர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரின் வாழ்க்கை முடிந்து போய்விடும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சூசையப்பர் கண் திறந்து பார்க்கிறார். கண்களில் கண்ணீர் படர்ந்து இமைவேவி வழிந்து காது மடல்களை நனைக்கிறது. உறவுக் கயிற்றின் கடைசித் தும்பு அறுபடும் நேரம். அழகியலும், அருவெறுப்பும் பொருளற்று போகும் நிலை. பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்துச் சென்றனர். அதில் ஒருவர் "யாராவது நெருங்கிய சொந்தக்காரங்க இருந்தா சொல்லி அனுப்பக் கூடாதா? என்றார். "சொல்லிருக்கு மாமா. எங்க அத்த ஒரு ஆளு குசராத்துல இருக்காங்க. அந்த அத்தையும் மாமாவும் வந்துக்கிட்டு இருக்காங்க. இதுக்கு முன்னால அவங்க வந்தது கிடையாது. நாங்க பார்த்ததும் கிடையாது. எங்க அப்பாவுக்குத்தான் யாரையுமே பிடிக்காதே. இப்ப கூடப் பாருங்க வேணுமின்னேதான் இப்படி வதைச்சிகிட்டு கிடக்காரு. எங்க கரோலின் சத்தம் போட்டிருக்கா. இனும கட்டில்ல வெளிக்கிருந்தீங்கன்னா கால புடிச்சி வெளிய இழுத்துப் போட்டிருவேன்னு திட்டிருக்கா, அதற்காகத்தான் பச்சத் தண்ணீர் கூட குடிக்காம இப்படி கொல பட்டினியா கெடந்து வதைக்காரு" என்றாள். சூசையப்பரின் தங்கை வளர்மதி வந்து சேர்ந்தாள். "அண்ணே.. சூசையண்ணே…" கூப்பிட்டுக் கைகளால் தொட்டு அசைத்தாள் எந்த அசைவுகளும் இல்லை. துக்கம் தொண்டையைக் கிழித்துக் கொண்டு பேரழுகையாக வெளிப்பட்டது. அதுவரை வாய்விட்டு அழாமல் இருந்த அந்தோணியம்மாளும் அழுதாள். அவள் அழுகுரலோடு பிள்ளைகளின் அழுகுரலும் சேர்ந்து கொண்டன. வீட்டுக்குள் ஒரு மூலையில் சூசையப்பர் புகைப்படமாய் காட்சியளித்தார். இருபுறமும் மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. ஆளுக்கொரு பக்கமாய் அமர்ந்திருந்தனர். வளர்மதி கரோலினை அருகே அழைத்தாள். "நீதான் அப்பாவ மோசமா திட்டினியா? எங்க அண்ணன் எப்பேர்பட்ட ஆள் தெரியுமா? அவரை மாதிரி ஒரு அப்பனுக்குப் பிள்ளைகளா பெறக்கிறதுக்கு நீங்கள்ளாம் போனபெறவியில புண்ணியம் செய்திருக்கணும். ஒன்னப் பார்க்கும் போது எங்க சின்னண்ணனே பொண்ணா பொறந்து வந்த மாதிரி இருக்கு. நீ பெறக்கும் முன்னே அவனத் தின்னுட்டுப் பெறந்தவதான…" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தோணியம்மாளைப் பார்த்தாள் வளர்மதி. அந்தோணியம்மாள் அழுது கொண்டிருந்தாள், ஒரு பிணம் அழுவதைப் போல…- இறை ச.இராசேந்திரன்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி