என் அன்புத் தோழியே! - தமிழ் இலெமுரியா

16 February 2016 9:40 pm

பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க நினைக்கும் போது உன் மனைவியை மனதில் வைத்துக் கொண்டு கொடுக்காதே.. தாயையும் சகோதரியையும் மனதில் வைத்துக் கொண்டு கொடு"நேற்று இரவு பெண்கள் பத்திரிகை ஒன்றில் படித்த தந்தை பெரியாரின் வாசகங்களை மனதில் அசைப்போட்டபடி வேகமாய் நடந்தேன்.இருளும் வெளிச்சமும் கலந்த கலவையான விடியல் பொழுதில்… சுதந்திரமாய் கை வீசி நடப்பது எனக்கு பிடிக்கும். அந்த நேரத்தில் பரிசுத்தமான மனநிலை தவழும்.ஆனால் நேற்று தேவியை சந்தித்ததில் இருந்து பல நினைவுகள், சம்பவங்கள், மகிழ்ச்சிகள், கசப்புகள் மனதைக் குடைந்து கொண்டிருக்கிறது..தெய்வானையம்மா கூட நேற்றில் இருந்து ஐந்தாறு தடவை கேட்டுவிட்டார்கள் ‘என்ன எஸ்த்தர்..? உடம்பு கிடம்பு சரியில்லையா? எப்போதும் போல் இல்லையே நீ’ என்று…எனது மன சஞ்சலத்தை எவ்வளவு நுட்பமாய் கவனித்து இருக்கிறார்கள் என்று வியப்பேற்பட்டது.தன்னையே இவ்வளவு தூரம் கவனிப்பவர்களுக்குத் தன் மகள் தேவியைப் பற்றி நினைக்கத் தோன்றாமலா இருக்கும்?நேற்று குழந்தையின் பிறந்தநாளிற்காக புதுத்துணி எடுத்துக் கொண்டிருந்த போது அங்கு தேவியைச் சந்திக்க நேர்ந்துவிட்டது..பத்தாயிரத்துக்கும் குறையாத பட்டுப் புடவையும் வைர நகைகளுமாய் மின்னினாள். ஏற்கனவே ஊர் பெரியதனக்காரரின் ஒரே செல்ல மகள். புகுந்த வீடும் செல்வச் செழிப்பில் இவர்களை விட பல மடங்கு பெரியது.. கேட்க வேண்டுமா? உடம்பு ஊதிப்போய் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டிருந்தாள்.‘அட! எஸ்த்தர்.. இங்கயா இருக்க நீ… எங்க வீட்டுக்காரரோட குல தெய்வம் கோயில் இங்க.. வெள்ளங்கோவில்லதான இருக்குது.. மாசா மாசம் கோயிலுக்கு வந்துகிட்டு இருக்கேன் உன்ன பார்க்கவே இல்ல பாரு’.. என்றாள் வியப்போடு. ஒரு கணம் என் இளம் வயது இனிய தோழியாகவே தெரிந்தாள் அப்போது.‘நா இங்க வந்து ஆறு மாதம்தான் ஆகிறது. வீட்டுக்காரர் பேங்கில் ஒர்க் பண்றார். நா மூலனூர் யூனியன் அலுவலகத்துல வேலை செய்யறேன்’ என்றேன்.‘ஆமாமா.. உங்கள மாதிரி நடுத்தரக் குடும்பங்களுக்கு ரெண்டு பேர் சம்பாதிச்சாதான் குடும்பத்த நடத்த முடியும்.. உக்காந்து சாப்பிட காடு தோட்டமா விளையுது. ஒரு குழந்தைக்கு மேல கூடுதலாக ஒரு நபர் சேர்ந்தாகூட திண்டாட்டம்தான்’ என்றாள், நான் இன்னும் மாறவே இல்லையே என்பதைப் போல…சிறு கோபம் எனக்குள் எட்டிப் பார்த்தாலும் அவளைச் சீண்டிப்பார்க்கும் ஆவல் எனக்கும் ஏற்பட்டு விட, ‘பக்கத்துலதான் வீடு வாயேன் ஒரு காப்பி சாப்பிட்டு வரலாம்.. காப்பி கூட கொடுக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமில்லை’ என்றேன், வரமாட்டாள் என்று தெரிந்தும்.‘நானா? இப்பவா? கோயிலுக்கு வந்திருக்கேன்.. கிடா வெட்டி அன்னதானம் கொடுக்கறதுக்காக.. மாமனார் மாமியாரெல்லாம் கோயில்ல இருக்காங்க. என் மாமனார் எங்கப்பாவை விட இன்னமும் தெய்வ பக்தி மிகுந்தவர். உங்க வீட்டுக்கு வர்றதெல்லாம் பிடிக்காது’… தாழ்ந்த ஜாதியென்று ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருக்கும் என் வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் ஓடி வந்து விளையாடிய இளமைக் கால தோழியா இவள்!நானும் இவளும் பாவாடை சட்டை சிறுமிகளாய் அமராவதி ஆற்றில் குதித்தாடிய நினைவுகளுக்குள் மூழ்கினேன். அமராவதி ஆற்றின் கரைகளில் எங்களின் காலடி படாத இடமே இல்லை! இப்போதைய வறண்ட ஆறு போல் இல்லாமல் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். குள்ளாண்டிப்பாறை, குருவிப்பாறை, வண்ணாம் பாறை என்று பசங்களோடு போட்டி போட்டுக் கொண்டு பெரிய பெரிய பாறை முகடுகளில் நின்று மிக ஆழத்தில் ஓடும் நீரில் மகிழ்ச்சி பெருக குதித்து நீந்தி வருவோம்.ஊரிலேயே பாரம்பரியமான பெரியதனக்காரர் தேவியின் அப்பா, பட்டத்தரசி கோயிலுக்குப் பூசை செய்பவர். கோயில் சாட்டின் போது மரக்கட்டை செருப்பு (அதை பாதுகை என்றுதான் தேவி சொல்வாள்) அணிந்து கொண்டு சாட்டையால் அடித்துக் கொண்டு சாமியாடுவார், தேவியின் அப்பா. அனைவரும் காலில் விழுந்து கணக்கு கேட்பார்கள்.பக்கத்து ஊரில் ஆசிரியராய் வேலை பார்க்கும் என் அப்பா, அம்மா கூட தேவியின் முன் கைகட்டி பேசும் போது அவளுடனான எனது நட்பு அப்போது எனக்கு பெருமையாய் இருந்தது!ஐயன் கோயில் மார்கழி பூசையின் போது அதிகாலை நெற்கதிர்கள் சரிந்து கிடக்கும் வரப்பில் புற்கள் மேல் பூத்திருக்கும் பனிப் பூக்களை சிதறடித்து ஓடி மூச்சிறைக்க நிற்போம். வெளியே நிற்கும் எனக்காக பூசாரியிடம் சண்டையிட்டு இரண்டு கைகளிலும் சூடான பொங்கலை ஏந்தி வருவாள் தேவி. அவள் உள்ளங்கை இரண்டும் கன்றி சிவந்து போய் இருக்கும்.கொண்டைய நாயக்கன் காட்டில் கோரைக்கிழங்கு பிடுங்கி மாலைகளாய் கோத்தணிவோம். காளான் பிடுங்கி வந்து தேவி வீட்டு பொடக்காலியில் வறுப்போம். மழைக் காலங்களில் காடெங்கும் பரவிக் கிடக்கும் பண்ணை, தொய்யல், கீரைகளை பறித்து வந்து தேவியின் அம்மாவிடம் கொடுப்போம் (காய்கள், கீரைகள், காளான் போன்றவற்றை நான் தொட்டால் தீட்டில்லையாம்) கீரையை அவித்து உப்பும் பச்சை மிளகாயும் சேர்த்து கடைந்து பொட்டுக் கடலை மாவு சேர்த்து தேவியின் அம்மா உருட்டி கொடுத்த கீரை உருண்டையின் ருசி என் நினைவடுக்குகளுக்குள் இருந்து கொண்டு அவ்வப்போது நாக்கை சப்புக் கொட்ட வைப்பது உண்மை.எங்கள் நட்பு இப்படி இறுகிக் கிடந்த போதும் சிற்சில சம்பங்கள் அவளிடம் இருந்து என்னை விலகியோட வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளுடைய சுபாவம் மாறிக் கொண்டு வந்தது மிகத் தாமதமாய்த்தான் புரிந்தது எனக்கு.என் தோளில் கை போடுவதையும் என்னைத் தொட்டுப் பேசுவதையும் தவிர்த்தாள்.. ஆனால் என்னுடைய கணக்கு நோட்டை வாங்கி வீட்டுக் கணக்குகளைச் செய்வதை மட்டும் கடைசி வரை அவளால் தவிர்க்க முடியவில்லை!ஒருசமயம் உத்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். நானும் தேவியும் எதிர் எதிர் அணித் தலைவிகள். ஊரின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து எதிர் எதிர் திசையில் புறப்பட்டுச் செல்லும் இரு அணிகளும் வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் எல்லைக்குள் கைகளால் மண்ணை அள்ளி இறுகப் பிடித்து சுண்டு விரலால் லேசாய் தளர்த்தி சிறு சிறு குவியல்களாய் உத்து வைக்க வேண்டும்.பின் ஒரு அணியினர் வைத்த உத்தை மறு அணியினர் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியாத இடங்களில் வைத்த உத்துக்களின் எண்ணிக்கையே அந்தந்த அணிகளின் மதிப்பெண்.இப்படித் தேடித்தேடி யாரும் கண்டு பிடிக்க முடியாத இடமாய் வைத்துக் கொண்டே போனதில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தேவி வீட்டுப் பொடக்காலியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பித்தளை பானைகளை நிமிர்த்தி உத்து வைத்து விட்டு அவசரமாய் மூடிக் கொண்டிருந்த போது தேவியின் அப்பா வந்துவிட செய்வதறியாது திகைத்துப் போனேன்! நான் செய்தது தவறு என்பது போல் என் உடம்பு நடுங்கியது.‘ஏ முண்ட… பாத்திரத்தை தொட்டுத் தூக்கற அளவுக்கு துளுத்துப் போயிட்டா?’ கீழே கிடந்த பனை நாரை எடுத்து என் கெண்டைக் காலில், இல்லை.. பிஞ்சு நெஞ்சில் சரமாரியாய் விழுந்தன அடிகள்! மறுநாள் ஊர்க் கூட்டத்தில் என் அப்பாவும் அம்மாவும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்!அடுத்த நாள் அந்த பானைகளை தீயிட்டு கருக்கி பின் கழுவி வைத்ததாகச் சொன்ன தேவி, இன்னொன்றும் சொன்னாள், ‘என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்புப்பா… எங்கப்பா பூஜை செய்யறவரு.. தீட்டாயிடாதா.. சாமி குத்தம் ஆயிடுமில்ல’.. என்றாள் நான் வளர்ந்து விட்டேன் என்பதற்கு சாட்சியாய்.ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல இவளுக்கு மூளையே வளரவில்லையோ என்று அஞ்சும்படி அவளுடைய அப்பா புராணம் இருக்கும். மேல்நிலைப் படிப்பை முன்னிட்டு தாராபுரம் செல்ல பேருந்தில் ஏறி, இறங்கி பள்ளி செல்லும் வரை அவள் அப்பா அவளுக்குத் தரும் செல்லம் பற்றியும் அவர் சாமியாடி கணக்குச் சொல்லும் திறமை பற்றியும் அன்றாடம் சலிக்காமல் சொல்வாள்.ஆனால் அம்மா பற்றி மறந்தும் கூட ஒரு வார்த்தை சொல்ல மாட்டாள். அம்மா என்று ஆசையாய் ஒரு நாளாவது கூப்பிட்டிருப்பாளா? என்பது கூட சந்தேகம்தான். அவளுடைய அப்பாவும் சரி, அப்பத்தாவும் சரி, இவளும் சரி எந்த உரிமைகளுமற்ற அடிமை மாதிரிதான் அவள் அம்மாவை நடத்தினார்கள்.கணவன் இல்லாமல் ஒற்றை ஆளாய்ப் போராடி மகனை வளர்த்த தேவியின் அப்பத்தா எங்கே மருமகள் பையனை மயக்கி தன்னிடம் இருந்து பிரித்து விடுவாளோ என்ற அச்சத்தில் மகனையும் பேத்தியையும் மருமகளோடு பேசக்கூட விடாது வைத்திருப்பது எத்தனை கொடுமை என்று ஊர் முழுதும் பேசும்.வளர்ந்து விட்ட பிறகு தேவியின் வீட்டு வழிக்கு அதிகம் போகாதிருந்த நான் என்னுடைய கணக்கு நோட்டு அவளிடம் இருந்ததை வாங்கி வருவதற்காக அவள் வீடு வரை போக வேண்டியிருந்ததால் அரை மனதோடு புறப்பட்டேன். ஆனால் அங்கு கண்ட காட்சி என்னுடைய பல நாள் தூக்கத்தை தொலைத்து விட்டது. முருங்கைக் காட்டோரத்தில் தேவியின் அம்மாவை அடித்தபடி தேவியின் அப்பத்தா, ‘தூ.. மர நாசுவனுக்கு பொறந்த முண்ட.. உனக்கு அவ்வளவு தூரம் பன்னாடு வந்திருச்சா.. புருசங்கூட பேசக் கூட விடமாட்டேங்கறா கெழவின்னு ஊரெல்லாம் சொன்னயாமா?கொஞ்ச நாளா பூவும் பொட்டும் பட்டுத் துணியுமா நீ மினுக்கிக்கிட்டு திரிஞ்சப்பவே நெனச்சேன்.. ஆடு மேய்க்கற கழுதைக்கு என்ன அலங்காரம்னு.. இப்படியெல்லாம் இருந்து எம்பட பயன மயக்கீறலாம்னு திட்டம் போட்றாத.. பொம்பள சீலைக்கு மயங்கறவனில்லை அவன்..தேவடியா கூட வேணும்னாலும் தாட்டுவேன் ஆனா, உங்கிட்ட பேச உடமாட்டேன்’ ஆமா… பட்டத்தரசி கோயிலில் தேவியின் அப்பா கூட அந்த ஆட்டம் ஆடியதில்லை! தேவியின் அப்பாவும் தன் பங்குக்கு தன் அம்மாவை திருப்தி படுத்தும் பொருட்டு தலையைப் பிடித்து இழுத்து காலால் உதைத்து தள்ளினார்..என் கண்முன்னே நடந்தேறிய இந்தக் கொடுமை என்னை கடுமையாய் பாதித்தது. கண்களில் கண்ணீர் திரண்டது. ஆனால் தேவியோ எப்போதும் நடப்பதுதானே என்ற அலட்சியத்தோடு எதுவுமே நடவாதது போல் கணக்கு நோட்டை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனாள். இப்போது அவளுடனான நட்பு அருவருப்பாய் தோன்றியது எனக்கு.சாமியாடுபவர் என்று எல்லாரும் இந்த ஆள் காலில் விழுகிறார்களே.. சாமியாட இந்த ஆளுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஒரு பொம்பளய உதைச்சு உதாசீனப்படுத்துகிறவன் கிட்ட சாமி இருக்குமா? அதுவும் பெண் சாமி!சாமி பற்றியும் ஜாதி பற்றியும் பெண்கள் நிலை குறித்தும் ஏகப்பட்ட ஐயப்பாடுகள் எனக்குள் தோன்றின!இந்த நிகழ்ச்சி தேவியின் அம்மாமேல் எனக்கு இனம் புரியாத பரிவு ஏற்படக் காரணமாகிப் போனது. தனியே ஒப்பாரிப்பாட்டு பாடிக் கொண்டு ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவரிடம் வெகு நேரம் ஆறுதலாய்ப் பேசிக் கொண்டிருப்பேன்! ‘பாத்தியா எஸ்த்தரு எம்பட நெலமைய.. எனக்கு கேக்கறதுக்கு ஒரு நாதியும்மில்லைனு தானே ஆயாளும் மகனும் இந்த ஆட்டம் போடறாங்க! நா பெத்த மக! அவ எங்கூட பேச மாட்டீனு மூஞ்சிய திருப்பிக்கறா.. அவளத் தொட்டுப் பார்த்து எத்தன நாளாச்சு தெரியுமா?’ தாய்மையின் பரிதவிப்போடு கண்கலங்கி அழுபவரை என்ன சொல்லித் தேற்றுவது.. என்று தெரியாமல் நானும் கூடவே கண்கலங்குவேன்!எனக்காக முளைகட்டிய கம்போ, வறுத்த நிலக்கடலைப் பருப்போ, முந்தானையில் முடிந்து வைத்திருந்து கொடுப்பார்கள்!பள்ளியிறுதி வகுப்போடு தேவிக்கு திருமணம் செய்து விட்டார்கள். நானோ படித்து முடித்து வேலையில் அமர்ந்து திருமணம் முடிந்து விபத்தொன்றில் அப்பா அம்மாவைப் பறிகொடுத்த பின் அந்த ஊருடன் ஆன எனது பந்தமும் விட்டுப் போய்விட்டது.. ஆனாலும் தேவியின் அம்மா பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும்.கடந்த ஆறு மாத காலமாய் தேவியை இனி எப்போதுமே சந்திக்க வைத்து விடாதீர் என்று கர்த்தரிடம் யாசித்துக் கொண்டிருந்தேன்.. காரணம், எதிர்பாராத இடத்தில் ஆதரவற்று நின்ற தேவியின் அம்மாவை அழைத்து வந்து என் வீட்டோடு வைத்திருந்ததுதான்.சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள், கணக்கு வழக்குகள் பற்றி ஆய்வு செய்யும் பொருட்டு அலுவலக வேலையாய் அடிக்கடி கிராமங்களுக்குச் செல்வதுண்டு.அப்படி இரு இண்டீரியரான கிராமத்தில் சுய உதவிக்குழு கூடியிருந்த மரத்தடியில் வாடிய முகமும் வற்றிய தேகமுமாய் தேவியின் அம்மா!என்னைக் கண்டதும், ‘எஸ்த்தரு.. எஸ்த்தரு.. எல்லாரும் என்னய விட்டுட்டுப் போயிட்டாங்க. விட்டுட்டுப் போயிட்டாங்க!’ என்று குழந்தையைப் போல திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவரை ஆசுவாசப்படுத்தி விட்டு அருகில் இருந்தவர்களிடன் விசாரித்தேன்!‘இந்தம்மா வசதியான வீட்டு பொம்பளையாமா.. புருசன் வேறொருத்தியச் சேத்துக்கிட்டு இந்தம்மாவை இந்த கோயில்ல கொண்டு வந்து விட்டுட்டு, மனசு சரியில்லாம இருக்கறா.. கொஞ்ச நாள் இங்க இருக்கட்டும் சாப்பாட்டுச் செலவுக்கு மாசா மாசம் பணம் கொடுத்து விடறன்னுட்டு போன ஆளு வரவே இல்லையாம். நாங்களாச்சும் கொண்டு போய் உங்க ஊர்ல விடறோம் வாங்கன்னு கூப்பிட்டா பயந்துகிட்டு வரமாட்டேங்குது. பாவம் ரொம்ப பசிச்சா மட்டும்தான் நாங்க கொடுக்கறத வாங்கிச் சாப்பிடும் மத்த நேரமெல்லாம் இப்படியே வெறிச்சுப் பாத்துக்கிட்டே உக்காந்திருக்கும்’… என்று சொல்லவும் துடித்துப் போய்விட்டேன்.உடனே கணவரோடு அலைபேசியில் கலந்து பேசி, வண்டி கொண்டு வரச் சொல்லி என் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்.இந்த ஆறுமாதங்களாய் விபத்தொன்றில் பெற்றோரை இழந்து விட்ட எனக்கும் அனாதையாய் விடுதியில் வளர்ந்து தாய்ப் பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த என் கணவருக்கும் அம்மாவாய் எங்களோடு ஒன்றி விட்டார் தேவியின் அம்மா.பழைய நினைவுகளில் இருந்து மீண்டவளாய்… ‘அம்மாவும் கோயிலுக்கு வந்திருக்காங்களா?’ பதில் என்னவாய் இருக்கும் என்ற ஆவலில், தேவியின் கண்களையே பார்த்தேன்.‘அம்மாவா! அது பெரிய கதை. அம்மா இப்ப எங்க இருக்குதுன்னே தெரியல. மனசு சரியில்லாம இருக்காங்க, கோயில்ல கொஞ்ச நாள் இருந்தா நல்லதுன்னு தூரத்துச் சொந்தக்காரங்க பராமரிக்கற கோயில்ல விட்டுட்டு வேணுங்கற வசதி செஞ்சு குடுத்துட்டு வந்தோம்.. திடீர்னு அப்பாவுக்கு பாராலிஸிஸ் அட்டாக் வந்து ஒரு கையும் காலும் வராம போயிடுச்சு, அப்பத்தாவுக்கும் வயசாகி கெடையாக் கெடக்குது.. அம்மாவ கூட்டியாரலாம்னு போனா அங்க இல்ல.. எங்க போச்சுன்னு தெரியலைன்னுட்டாங்க! எங்க அம்மாவால எங்க குடும்பத்துக்கு எப்பவுமே உபயோகமில்லை. இப்ப எல்ல பொறுப்பும் எந்தலைலதான் விழுகுமாட்ட தெரியுது’ என்று ஒருவகை அங்கலாய்ப்புடன் புறப்பட்டு போனவளை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு என் ஸ்கூட்டியைக் கிளப்பி கவனமுடன் சாலையை கடந்தேன். வீட்டு வாசலில் தெய்வானையம்மா, என்னை எதிர்பார்த்து நின்றிருந்தார். "இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை, சர்ச்சுக்குப் போக நேரமாச்சே, எங்க போயிட்டே எஸ்த்தரு" என்றவரின் கையில் மெழுகுவர்த்தியும் நெற்றியில் விபூதியும். என்னையும் அறியாமல் உதட்டோரத்தில் புன்சிரிப்பும் விழியோரத்தில் கண்ணீரும் எட்டிப் பார்த்தது. – சுரபி விஜயா செல்வராஜ், கோவை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி