17 February 2015 3:33 pm
யாருடைய ஆணைக்கோ கட்டுப்பட்டாற்போல் ஆடாது அசையாது நின்றிருந்த ஒட்டகத்தையும் அது பிணைக்கப்பட்டிருந்த வண்டியையும் பார்த்து கை தட்டிக் குதூகலித்தனர் பிள்ளைகள். அது போன்ற வண்டியை அதுவரை அவர்கள் கண்டதில்லையாதலால் மகிழ்ச்சியையும் மீறிய வியப்பு அம் முகங்களில். தங்கும் விடுதியின் வரவேற்பறையில் அறைச் சாவியை ஒப்படைத்து விட்டு வந்த குணாவிற்கும் மஞ்சுளாவிற்கும் அதே ஆச்சரியம். ஏதோ உலக மகா அதிசயம் இடம் பெயர்ந்து கண் முன் காட்சியானது போல்! ஜெப்பூரினின்று இதோ இந்த புஷ்கர் சேரும் வரை இவ்வகையிலான ஒட்டக வண்டி கண்ணில் படவில்லை. இதை விடப் பேரச்சம் என்னவெனில் இப்போது இவர்கள் ஏறி உலா வரப்போகும் வண்டியை ஓட்டுபவன் பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவனாக இருந்ததுதான்.வண்டி அங்கிருந்து நகர்ந்த போது பயமாகத்தான் இருந்தது. ஆனால் தாறுமாறாய் ஓட்டம் எடுக்கவில்லை அது. மெதுவாக மிக மெதுவாக… இரு மருங்கும் கள்ளிச் செடிகளும் புதர்களும் மணற்திட்டுகளுமாய் ஒரே நேரத்தில் ஒரு வண்டி மட்டுமே செல்லக்கூடியதாய் இருந்த சீரற்ற பாதையில் சீராகவே செல்லுமளவில் மிக லாவகமாய் வண்டியைச் செலுத்தினான் அச்சிறுவன்.துமாரா நாம் கியா ஹை பேட்டா?"உங்களுக்கு இந்தி தெரியுமா எனும் வியப்பு கொண்டவன் போல் சட்டெனத் திரும்பிப் பார்த்தான் சிறுவன்."சோனு""படிக்கலயா?" கேட்கலாமா வேண்டாமா என வெகுவாய்த் தயங்கி.. கேட்டே விட்டான் குணா."ஓ… அஞ்சாம் கிளாஸ் பாஸ்" மீண்டும் தலை திருப்பி கழுத்திலிருந்த கருப்புக் கயிறும் காது வளையமும் அழகாய் ஆடப் பெருமையுடன் சொன்ன சிறுவன் இன்னும் நிதானமாகிவிட்ட ஒட்டகத்தின் முதுகில் கையிலிருந்த குச்சியால் அடித்தான். கூம்பாய் உயர்ந்திருந்த செதில் சற்றே நெளிந்ததே தவிர முக்கல் இல்லை முனங்கல் இல்லை ஒட்டகத்திடம்."அடிக்காதப்பா.. பாவம்..""வலிக்காதும்மா. இலேசாத் தட்டினேன். இது என் செல்லமாச்சே. அடிப்பனா?" குச்சியைக் கீழே வைத்து விட்டு அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து செல்லம் கொஞ்சினான். "சரி.. இன்னிக்கு ஸ்கூலுக்கு போகலயா..? தசரா லீவா?""போறதில்ல. அஞ்சாம் கிளாஸோட நிறுத்திட்டாரு எங்கய்யா. என் கையப் பிடிச்சி இதோ இந்தக் குச்சியைக் குடுத்துட்டாரு.." இதைச் சொல்லும் போது முகத்தில் எவ்விதமான சலனமோ வருத்தமோ தென்படவில்லை."அவர் நிறுத்திட்டா.. நீ சும்மா இருந்தியா.. சண்டை போடணுமில்லே. படிக்கணும்னு ஆசையா இல்லயா உனக்கு?" சினமும் ஆதங்கமுமாய்க் கேட்டான் குணா."இல்லாமப் போகுமா… ஆனா அது முடியாதே""உங்கப்பா என்ன செய்யறார்?""இப்ப நாம போறம் இல்ல.. அங்க வாத்யம் வாசிக்கிறாரு. அண்ணன் டோலக் அடிப்பான். உங்களைப் போல அங்க வர்றவங்க காசு குடுப்பாங்க.."இந்தப் பையனின் பங்காய் இந்த ஒட்டக வண்டியை ஓட்டினால்தான் இவன் குடும்ப வண்டி கொஞ்சம் முன்னால் நகரும் என்பது புரிந்தது குணாவிற்கு."பாவம் இல்லங்க.. சின்ன பையன். நம்ம பிள்ளைங்க ஏரோப்ளேன், ஸ்டார் ஹோட்டல், ஐ பாட், ஐஸ்கிரீம், பிரியாணின்னு அனுபவிக்கறாங்க. அதெல்லாம் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் படிப்பு கூட இல்லாம.. மனசுக்கு ரொம்பவே சங்கடமா இருக்குங்க.."இதேதும் கவனத்தையே தொடாத ஒன்பதும் பதினோரு வயதுமான இவர்களின் பிள்ளைகள் வண்டியின் பின்பக்கம் கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு விளையாட்டும் பாட்டும் அரட்டையும் சாக்லேட்டும் பெப்சியுமாய் தம் உலகத்தில் இருந்தனர்.அடர்த்தியான பாலைவனத்தினின்று புஷ்கர் சற்றே தொலைவிலிருந்தாலும் பாலையின் அடையாளத்தை வெளிப்படுத்தியபடி மணல் வெளியும் மணற்திட்டுகளுமாய் படர்ந்திருந்த அந்த சுற்றுலா மையத்தை அடைத்தது வண்டி. உல்லாசப் பயணிகள் திரண்டிருந்த அந்த இடம் ஒரு திறந்தவெளி "மேளா" போல் தென்பட்டது. ஒட்டகச் சவாரிக்காக மற்றும் கதிரவன் மேற்கில் மறையும் தடைகளற்ற காட்சி அழகைக் காணவென்றே மக்கள் குவியும் அம் மைதானம் அளவற்ற ஆனந்தங்களுக்கான அடையாளமாய்த் திகழ்ந்தது.பயணிகளை முதுகில் ஏற்றிக் கொண்டு அங்குமிங்கும் உலா வந்து கொண்டிருந்த அலங்கரித்த ஒட்டகங்கள்? தங்கள் முறைக்காகக் காத்திருந்த நீண்ட வரிசையில் ஓட்டமாய் ஓடிச் சேர்ந்து கொண்டனர் குணாவின் பிள்ளைகள். பூம் பூம் மாட்டுக்காரர் வாசிக்கும் கருவி போன்ற வாத்தியத்துடன் நடு வயது ஆள் ஒருவர் சோனுவை நோக்கி வர.."மேரா பாப்" என்றான் சோனு.பெரிய தலைப்பாகை அணிந்திருந்த தலை குனிந்து "நமஸ்தே சாப்" என்று சொல்லி வாத்தியத்தை இசைக்கத் தொடங்கினார் அந்த ஆள். செவிக்கு இனிமையான ராஜஸ்தான் நாட்டுப்புறப் பாட்டு. வாசிப்பு முடிந்ததும் நூறு ரூபாய்த் தாளை அன்பளிப்பாய்க் கொடுத்தான் குணா."ரொம்ப நல்லா வாசிச்சீங்க. வந்து.. நீங்க தப்பா நினைக்கலன்னா… சோனுவை ஏன் ஸ்கூலுக்கு அனுப்பறதில்லே? அங்க பாருங்க. இவன் வயசுப் பிள்ளைங்க எவ்வளவு மகிழ்ச்சியா ஜாலியா இருக்காங்க? அதெல்லாம் முடியாவிட்டாலும் படிக்கவாவது வைக்கலாமில்லையா. பாவம்.. மனசுக்குள்ள எப்படிக் குமஞ்சிட்டிருக்கானோ…"வாய்விட்டுச் சிரித்தார் அவர். "அதெல்லா நினைச்சுப் பார்க்கக் கூட இவனுக்குத் தெரியாது சாப். அப்படித்தானே பேட்டா?" சோனுவை இழுத்துத் தன்னோடு இறுக்கிக் கொண்டார்."தெனமும் மூணு வேளை வயிறு நிரம்பினா அதுவே பெரிய கொண்டாட்டம் சாப் எங்களுக்கு"- நிறுத்திய வாத்தியத்தை மறுபடியும் ஆரம்பித்தபடி இன்னொரு குழுவை நோக்கி நடந்தார் வாத்தியக்காரர்.கதிரவன் பூமியின் இன்னொரு திசை நோக்கி மெல்ல மெல்லப் பயணிக்கும் கம்பீரக் காட்சி கண்ணை விட்டு மறைந்தும் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு அவசரம் அவசரமாய் வண்டியில் ஏறினார்கள். அந்த ஊரில் இருக்கும் பிரம்மாவுக்கான ஒரே கோயில் செல்லும் பரபரப்பு.வரும்போது வளவளவென வாய் ஓயாது பேசிக் கொண்டு வந்த சோனு மிக அமைதியாக வண்டியைச் செலுத்தினான். களைப்போ என்னவோ ஒட்டகம் பத்தடிக்கொரு முறை மெதுவான நடையை இன்னும் மெதுவாக்க.. தட்டிக் கொடுத்து அதை உற்சாகப்படுத்தும் முனைப்பேதுமின்றி சோனு..ஓடி ஆடிச் சோர்ந்து போயிருந்த பிள்ளைகளும் பேச்சையும் கும்மாளத்தையும் குறைத்திருக்க, அமைதியான திரும்புப் பயணம். கொஞ்ச நேரம்தான்… மீண்டும் உயிர்ப்பு பெற்றது அவர்கள் ஆட்டமும் அரட்டையும். சோனுவிடம் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. ஒட்டகத்தின் மெத்தனத்திற்கேற்ப அவனும் அதே தன்மையில் அதே இறுக்கத்துடன் உலகத்தின் ஒட்டு மொத்தமான விரக்தியையும் முகத்தில் ஏந்தியபடி…"வண்டி ஏன் இவ்வளவு ஸ்லோவாப் போகுதுப்பா? இப்படியே நகர்ந்து நகர்ந்து ஒட்டகம் ஒரேடியாப் படுத்துடுமாப்பா?"ஒட்டகம் படுக்கறதோ இல்லையோ, சோனு மனதளவில் படுத்துவிட்டான் எனத் தெளிவாய்ப் புரிந்தது குணாவிற்கு. தன் கையாலாகாத கரிசனமும் ஒன்றுக்கும் உதவாத அனுதாபமும் விளைவித்த கைங்கரியத்தை நினைத்து ஏகத்துக்கு வருத்தப்பட்டான்.அவர்கள் சேர வேண்டிய இடம் அடைந்ததும் அவசரப்படுத்தினான் சோனு. "ஜல்தி இறங்குங்க சாப். அடுத்த சவாரி ஏத்தணுமில்ல.." அவர் முகத்தைப் பார்க்காமல் கூறியவன் வண்டியின் கீழ் பகுதியில் இருந்த பையிலிருந்து தழைகளை அள்ளி ஒட்டகத்தின் வயிறு நிரப்பும் முனைப்பிலாழ்ந்தான்.- சாந்தா தத்"