15 December 2015 4:58 pm
அஞ்சல் ஊழியர் கண்ணன் அன்று வந்திருந்த அஞ்சல்களுக்கெல்லாம் அவசர அவசரமாக முத்திரையைப் பதித்துக் கொண்டிருந்தார்.அஞ்சலட்டையை முகவரியைப் படிப்பதோடு முதலிலும் கொஞ்சம் கண்ணோட்டம் செலுத்துவார். அது அவருக்கு வழக்கமாய்ப் போய்விட்டது. அதோடு திறந்த அஞ்சல் என்று வருவதைத் திறந்து பார்த்து விடுவார். அதனால் நேரமானாலும் யாரும் கேட்பாரில்லை. அன்றைக்கு வந்திருந்த அஞ்சலட்டை ஒன்று அவர் கண்களை உறுத்தியதாலோ என்னவோ ஊன்றி, ஊன்றி ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்துவிட்டு அதைத் தனியாக எடுத்துத் தம் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு மீதமுள்ளவைகளுக்கும் முத்திரையைப் பதித்து முடித்தார். பின்னர் முகவரியை வரிசைப் படுத்தி முறையாக அடுக்கிக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்.உள்ளூரில் கொடுக்கப்பட வேண்டிய அஞ்சல்கள் ஒரு பத்துத் தேரும். அதைக் கொடுத்து முடித்துவிட்டு, அடுத்து அங்கிருந்து இரண்டு கல் தொலைவிலிருந்த கம்பளியூருக்கு மிதிவண்டியை இயக்கினார்.மணி முற்பகல் ஒன்பது. காலை நேர வெய்யில் கடுமையாகக் காய்ச்சத் தொடங்கியது. வெய்யலுக்கே பெயர்போன பங்குனி மாதத்தில் சொல்லவா வேண்டும்?வியர்வை ஒழுக அந்தக் காக்கி சீருடைக்குள் புழுங்கியவாறு தம் பணியை வழக்கம் போல மேற்கொண்டிருந்தார். அது கூட அவருக்கு இப்பொழுது உறைக்கவில்லை. தாம் தனியாகச் சட்டைப் பையில் எடுத்து வைத்த அஞ்சலட்டையால் தான் அவர் மனம் அதிகமாகப் புழுங்கிக் கொண்டிருந்தது. அது சட்டைப் பையில்தான் இருக்கிறதா? என்று தடவிப் பார்த்துக்கொண்டார்.வேக வேகமாக ஒருகல் தொலைவு வந்து விட்டிருந்தார். அந்த இடத்தில் வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்காகப் பழங்காலத்தில் கட்டிவிடப்பட்ட ஒரு பாழடைந்த மண்டபம் (தற்போதெல்லாம் அந்தச் சுற்று வட்டாரச் சமூக விரோதிகளின் இரவு நேர விடுதியாகப் பயன்படுகிறது.) நான்கைந்து புளிய மரங்களுக்கு நடுவில் சாலையோரமாக அமைந்திருக்கிறது. எந்த வெய்யிலிலும் இந்த இடத்தில் சற்றுக் குளுமை நிலவும். கண்ணன் இந்தக் குளுமைக்கு ஏங்கினவராக மிதிவண்டியை விட்டு இறங்கி மண்டபத் திண்ணையில் தூண் ஓரமாக அமர்ந்து உடுப்புகளைத் தளர்த்தி விட்டு ஊதிக் கொண்டவர், உடனே தம் சட்டைப்பையில் வைத்திருந்த அந்த அஞ்சலட்டையை எடுத்துக் கொண்டு உற்று நோக்கினார்; படித்தார். பிறகு பக்குவமாக சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார்.ஆட்டுமாட்டுக் கும்பலும் அதற்குப் பின்னால் சில மேய்ப்பவர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். இனி உட்கார்ந்து கொண்டிருந்தால் அவர்களோடு பேச முடியாது என்று எண்ணியவராய் மிதிவண்டியை இயக்கத் துவங்கினார். அவர்கள் அவருக்கு வழக்கம்போல் வணக்கம் வைத்தார்கள். கண்ணனும் வணக்கம் வைத்துக்கொண்டே விரைந்தார். அஞ்சல் ஊழியர் கண்ணன் என்றால் அறியாதவர்களே இருக்கமாட்டார்கள். அந்தச் சுற்றுவட்டாரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அறிவார்கள். அவரும் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகுவார். ஏனென்றால் அவர் அந்த மருதூருக்கு அஞ்சல் நிலையம் தொடங்கிய காலத்திலிருந்து வேலை பார்க்கிறார்.கம்பளியூருக்குள் நுழைந்ததுமே கோயிலும் அதைச்சூழ அரசு வேம்பு மரங்களும் அதன் கீழ் அமர்வதற்குத் திண்ணைகளும் அரங்குபோல் காட்சியளிக்கும். அது அந்த ஊரின் தலைவாசல் என்று சொல்லப்படும், கிராம சபைகளும் அங்குதான் நடக்கும். எப்போதும் எந்த நேரமும் நான்கைந்து பேராவது அந்தத் திண்ணைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அதில் சிறியவர்களும் பெரியவர்களும் இருப்பார்கள். அன்றும் அப்படியே அஞ்சல் ஊழியர் கண்ணன் வருகிறார் என்றதும் எல்லோரும் வருகை கூறி வணக்கம் தெரிவித்தார்கள். கண்ணனும் மிதிவண்டியை விட்டு இறங்கிப் பதில் வணக்கம் வைத்தார். அன்று கம்பளியூருக்கு உரிய ஐந்து அஞ்சல்களை ஒரு இளைஞரைக் கூப்பிட்டு பெயரைப் படித்துக் கொடுத்தார். அந்த இளைஞர் அதை உரியவர்களிடம் சேர்த்துவிடச் சென்றார்.நமக்கு இன்றைக்கு ஒன்னும் வரலீங்களா மாப்ளெ…" மச்சுவீட்டு மாடசாமி கேட்டார்."வந்திருக்குங்க மாமா, வாங்க வீட்டுக்குப் போகலாம்." கண்ணன் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு முன்னால் நகர்ந்தார்."வீட்டுக்கு வந்து கொடுக்கிற அளவு அப்படி என்ன முக்கியமான கடிதமோ?" என்று வியப்போடு வினவினார் மாடசாமி."முக்கியமான கடிதந்தான். அதோடு உங்களையும் வீட்டில் வைத்துப் பேச வேண்டும்.""அப்ப சரி" என்றார் மாடசாமி. வீட்டின் வாசல் கதவு பூட்டியிருந்தது. அதைச் சாவி போட்டுத் திறந்து வைத்துவிட்டு கண்ணனை உள் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். மிக விரிவான பரப்பளவில் வீடு அமைந்திருந்தது."வீட்டில் யாரும் இல்லீங்களா மாமா?" என்றார் கண்ணன். "ஆமாங்க மாப்பிள, அத்தையும் பொன்னியும் வடக்குத் தோட்டத்துக்குப் போயிட்டாங்க. பொழுது சாயும் போதுதான் வருவாங்க." என்றார் மாடசாமி.வீதி வெளியிடங்கள் வெறிச்சென்றிருந்தது. அமைதியும் தனிமையும் தாங்கி மாடசாமியின் மச்சுவீடு ஒத்தையாக நின்றது. அதன் பின்புறம் மக்கள் நடமாடும் பெரியவீதி பாய் விரித்தாற்போல் பரந்து நீண்டு கிடந்தது.கண்ணனைக் கூடத்தில் போட்டுவைத்திருந்த நாடாக் கட்டிலில் உட்காரப் பணித்து விட்டு சமையல் அறைக்குள் போய் ஒரு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் மாடசாமி. அந்தச் செம்பில் இருப்பது தண்ணீர் என்று தெரிந்ததும் நெஞ்சம் கொஞ்சம் நெகிழவே செய்தது. ஏனென்றால் முன்பெல்லாம் தண்ணீர் என்று கேட்காமலே மோராக வரும். கண்ணனுக்கு மாடசாமியின் வறுமை நிலை தெரிந்தது.ஆவலோடு தண்ணீரை வாங்கி தாகம் தீரக் குடித்தார். உடல் புழுக்கம் சற்றுத் தணிந்தது போலிருந்தது. தொண்டையைக் கணைத்துக் கொண்டார். அதிலிருந்து இனி அவர் தனக்கு வந்ததாகச் சொன்ன கடிதத்தைக் கொடுக்கப்போகிறார் என்பதைப் புரிந்து கொண்ட மாடசாமி கண்ணனோடு கட்டிலில் நெருங்கி உட்கார்ந்தார். கட்டில் ‘கிரீச்’ என்றது. அவருடைய முகத்தில் ஆச்சரியம் கட்டியிருந்தது. ஆனால், அஞ்சல் ஊழியர் கண்ணன் முகத்தில் அவல இருளே சூழ்ந்திருந்தது.உடனே கண்ணன் தம் சட்டைப் பைக்குள் கையைவிட்டு ஓர் ஆயிரம் ரூபாய்த் தாளை எடுத்து மாடசாமியின் கையில் திணித்தார்."என்னங்க மாப்ளெ இது.""ஆமாம். இத வச்சுக்குங்க. ஆறு மாதத்துக்கு முன்பு ஓர் அவசரச் செலவுக்கு உங்ககிட்ட வாங்கினது.""அதை நா இப்பக் கேட்கலையே…""ஆமாம். அப்படியே எல்லார்க்கும் இல்லையென்று சொல்லாமல் மற்றவர்களிடமெல்லாம் கடன்வாங்கிக் கொடுத்துக் கௌரவத்தை வளர்த்தீங்க. இன்று உங்களுக்குக் கொடுத்தவங்க கேட்கறாங்களே… இதோ இந்த அஞ்சலட்டையைப் படித்துப் பாருங்க.‘‘அன்புள்ள மாடசாமிக்கு வணக்கம்!நான் உனக்குக் கொடுத்த கடனையெல்லாம் வசூலித்துத் தரச் சொல்லி என் இரண்டு மகன்களும் கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களால் வசைமொழியை கேட்கமுடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் போல் தோன்றுகிறது. நீயும் பலதடவை கேட்டும் அதோ இதோ என்று காலத்தைக் கடத்துகிறாய். நான் கண்ணை மூடிவிட்டால் என் மகன்கலால் உனக்குக் கெடுதல் விளையக்கூடாதே என்றுதான் பார்க்கிறேன். உயிருள்ள போதே என் கடன்களைத் தீர்ப்பாய் என நம்புகிறேன்.’’ இப்படிக்கு, முத்தையா, மூலனூர்."என்னங்க மாப்ளெ என் ஆருயிர் நண்பர் இப்படி உள்ளம் உடைந்து போய் எழுதியிருக்கிறாரே! என் இளைமைக் காலம் முதல் கொண்டு பள்ளித் தோழராய்க் குடும்ப நண்பராய் விளங்கும் இவர் எத்தனையோ இழப்புகளில் இன்னல்களில் கர்ணனாய் இருந்து உதவியவர். இன்று இவருக்கே இப்படி ஒரு நிலையா? இவரிடம் நான் பட்ட கடனுக்கும் மற்றவர்களிடம் பட்ட கடனுக்கும் என் சொத்துகளையெல்லாம் விற்றால்தான் முடியும்.சாண் ஏறினா முழம் சருக்குகிற நிலைமை. விவசாயம் கைகொடுக்கவில்லை.கண்வள்ளிக் கிழங்கைக் காடுபூராவும் பயிரிட்டுப் பராமரித்து அது மழையில்லாமல் காய்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டது. முத்தையா கடனோடு மற்றவர்கள் கடனும் மலைபோல் வளர்ந்து விட்டது.அப்பப்ப மூலனூர்ச் சந்தைக்கு முருங்கைக்காய் கொண்டுபோய் விற்றுவரும் பணத்தில் தான் வீட்டுச்செலவைத் தாட்ட வேண்டியுள்ளது.இனி தாமதிக்காமல் முத்தையாவுக்கும் மற்றவர்களுக்கும் நிலத்தையே எழுதி வைத்து விட வேண்டியதுதான் சரியான தீர்வாகத் தெரிகிறது.ஊரிலேயே மச்சுவீடு கட்டி மச்சுவீட்டு மாடசாமிங்கற பெருமையை ஏற்படுத்தி வைத்த நம் முன்னோர்களுக்குத் தாழ்வு வரக்கூடாது என்று பார்க்கிறேன். அவர்களின் நம்பிக்கை, நாணயம் என்ற நல்ல பெயருக்குக் களங்கம் வரக்கூடாது என்று பார்க்கிறேன். அதோடு ஒரே மகள் அவளும் திருமணமாகாமல் இருக்கிறாள். அவளை நல்லபடியாக அனுப்பிவைக்க வேண்டிய தலையாய பொறுப்புக் காத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டியாகிக் கொண்டிருக்கும் அரசன் மகள் கதிதானோ அவளுக்கு…" என்று மாடசாமி புலம்பிக் கொண்டிருந்தார்."மாமா, வருத்தப்படாதீங்க. உங்க பெயரைச் சொன்னாலே எத்தனையோ பேரிடம் இருந்து உதவி கிடைக்கும். நான் வருகிறேன். நேரமாகிறது" என்று அஞ்சலர் கண்ணன் பயணமானார்.மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வீதியில் ஆழ்ந்த சிந்தனையோடு நடந்தே சென்று ஊர் எல்லையைக் கடந்து சாலைக்கு வந்து மிதிவண்டியில் ஏறலானார். ஊருக்குள் வாகனத்தை இறங்கித் தள்ளிக்கொண்டு போவது ஒரு பண்பாடாக இருந்தது.அஞ்சல் ஊழியர் கண்ணனின் மனத்திரையில் அவர் நினைவு தெரிந்த காலம் முதல் அறிந்து வைத்த பெருமைகளெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கொண்டேயிருந்தது. மச்சுவீட்டு மாடசாமியும் மற்றவரிடம் கடன்பட்டிருக்கிறாரே என்றதை அறிந்த போது அவரைப் பற்றி உயர்வாக எண்ணி வைத்திருந்த அஞ்சல் ஊழியர் கண்ணனுக்கு வேதனையாக இருந்தது. ஒரு மாத காலத்திற்குப் பிறகு மச்சுவீட்டு மாடசாமி தாம் வாங்கியிருந்த கடன்களை எல்லாம் தம் சொத்துகளை விற்றுத் தீர்த்துவிட்டார் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். ஒரு காலத்தில் அரசனாக வாழ்ந்தவர் இன்று ஆண்டியாகும் நிலைமைக்கு வந்துவிட்டாரே! என்று சில பேர் சொல்லி வருந்தினார்கள்.அன்றைய செய்தித் தாளை அஞ்சல் ஊழியர் கண்ணன் திறந்து பார்த்த போது அந்தச் செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.குடும்பத்தோடு விவசாயி தற்கொலை! என்றிருந்தது, அதில் மாடசாமியின் முழுப்படமும் பதிவாகியிருந்தது. – க.அ.பிரகாசம், கொடுமுடி"