11 January 2015 5:04 pm
ஆலயமணியின் ஓசை – அது சிவன் கோயில் உள்ளே தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!" என்று ஓங்கி ஒலித்த குரல் ஒலிகள்.சற்று நேரத்தில் கோயிலிலிருந்து வெளி வந்தார் சொக்கலிங்கம். நிமிர்ந்து பார்க்க வைக்கும் உயர்ந்த தோற்றம். சிவந்த மேனி – நெற்றியில் திருநீரு. தும்பைப்பூ நிறத்தில் வேட்டி, சட்டை; தோளில் சரிகைக் கரை போட்ட துண்டு. சிவப்புக் கயிற்றில் கோக்கப்பட்ட ஒன்றை உருத்திராட்சமும் பக்கத்தில் சிறுமணிகள் தங்கத்தால் கட்டப்பட்ட மாலையும் பெரிய தங்கச் சங்கிலியும் கழுத்தில் மின்னியது.சட்டைப் பொத்தானிலிருந்து நீண்ட தங்கச் சங்கிலி அதில் இணைக்கப்பட்ட நேரங்காட்டி சட்டைப் பைக்குள் இருந்தது.கோமேதகக் கற்கள் பதிக்கப்பட்ட மோதிரம் ஒரு கை விரலில் – வெளிர் மஞ்சள் பெரிய ஒற்றைக் கல் மோதிரம் மறு கை விரலில்.காலில் வெள்ளை நிறத்தில் சிங்கப்பூர் செருப்பு. நடந்து வருகிறார் இதுதான் ராஜ நடையோ?தெருவில் அவரது வயலில் வேலை செய்வோர் கையெடுத்து வணங்கிச் செல்கின்றனர். புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறார்.சில வீட்டு நகரத்தார் பெண்கள் அவரைப் பொறாமை கலந்த பார்வையால் சுட்டெரித்து விட்டு தலையை நொடித்துக் கொண்டு உள்ளே செல்கிறார்கள். அவர் எதையும் சட்டை செய்யவில்லை.வீடு நெருங்குகிறது. உயரமான படிக்கட்டுகள். சுவற்றில் இருமருங்கும் பளிங்குக் கற்கள் பதிப்பு. தேக்கு மரத்தால் அழகாக வடிவமைக்கப்பட்ட கதவு. குமிழ்களும், கைப்பிடியும் தங்க முலாம் பூசப்பட்ட நேர்த்தி. இருமருங்கும் பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்ட வண்ண மயில்கள்.ஒரு தெருவிலிருந்து மறு தெரு வரைக்கும் முகப்பு, ரெண்டாங்கட்டு, மூணாங்கட்டு, சமையற்கட்டு, தோட்டம் என்று நீண்டு செல்லும் வழிகள்.பட்டாம் பூச்சியென ஒரு சிறுமி குதித்தோடி வருகிறாள். தந்தையைப் பார்த்த பூரிப்பு அவள் முகத்தில். வெல்வெட் பாவாடை சட்டை, கழுத்தில் அணிந்திருந்த மாங்காய்ச் சரமும், காதில் அணிந்திருந்த கற்கள் பதித்த தொங்கட்டானும் அவள் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதுவும் சேர்ந்து ஆடியது.ஓடிச்சென்று தந்தையின் விரலைப் பற்றியவள் மீண்டும் இல்லம் நோக்கி ஓடி வருகிறாள்.ஆத்தா! அப்பச்சி வந்திட்டாக!சமையற் கட்டிலிலிருந்து வெளிவந்த அம்மையார். செக்கச் சிவந்த மேனி, முகத்தில் மஞ்சள் குளிப்பு, நீண்டு அடர்ந்த கருங் கூந்தலில் ஈரம் சொட்டியது. வட்ட வடிவமான அளவான குங்குமப் பொட்டு, காதில் வைரக் கம்மல், மூக்கில் இருபுறமும் வைர மூக்குத்திகள், கழுத்தில் எவ்வளவு நகை இருந்தாலும் மஞ்சள் கயிற்றுக்கே மரியாதை என்று சொல்லி அணிந்திருக்கும் தாலிக் கயிறும், ஒற்றைத் தங்கச் சங்கிலியும்."பால் நகையாள் – முத்துப் பல் நகையாள் – கால் நகையால் தன் கழுத்து நகை இழந்த கண்ணகிக்கு கால் நகையெனும் சிலம்பால் வந்த துன்பத்தை எண்ணி நகரத்தார் பெண்கள் யாரும் காலில் கொலுசு அணிய மாட்டார்கள்.மீனாட்சி அம்மையாரும் காலில் கொலுசு அணியவில்லை. அவர் நடந்து செல்லும் போது கால் விரலில் இருந்த மெட்டி இனிய ஓசையை எழுப்பியது.இரண்டு கைகளிலும் இரண்டிரண்டு தங்க வளையல்கள். இதைத் தவிர வேறு எதையும் அணிய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் பாங்கு.அட்டிகை முதல் அத்தனை ஆபரணங்களும் சுருக்குப் பையில் போடப்பட்டு எப்போதும் பெட்டியில் தூங்கிக் கொண்டுதான் இருக்கும்.சொக்கலிங்கம் முற்றத்து நாற்காலியில் அமருகிறார். சுவையான "டிகாக்சன்" காப்பியை அவரிடம் தருகிறார் மீனாட்சி. தந்தையைச் சுற்றி கண்ணகி, ஞானமணி, மல்லிகை, கண்ணன். பிள்ளைகளிடம் விளையாட்டுப் பேச்சு. எங்கும் சிரிப்பொலி.வெளியே வேலையாளின் குரல். சொக்கலிங்கம் எழுந்து தோட்டப் பகுதிக்குச் செல்கிறார்.வெளியே சின்னான். கருத்த உழைத்த மேனி இடுப்பில் துண்டு. கைகளைக் கட்டிக் கொண்டு தலைகுனிந்து பேசினார்.ஆண்டே! அறுவடைக்கு நெல்லு தயாராயி நிக்குது; எப்ப வேலயத் தொடங்கலாம்? அப்படியே கடலயத் தோண்டி எடுக்கச் சொல்லட்டா?சின்னா! எத எப்பிடிச் செய்யனும்னு ஒனக்குத்தான் நல்லாத் தெரியும். இதுல நா என்ன சொல்றது? நீ என்ன நெனக்கிறியோ அத செய்யிப்பா! செலவுக்கு எவ்வளவு வேணும்னு கேளு. தந்துடறேன்.இன்னம் ஒரு மாசந்தே அடுத்து நான் சிங்கப்பூர் பொறப்படனும். உள்ளே திரும்பி, மீனாட்சி சின்னானுக்கு குடிக்க கொண்டாங்க.அண்ணே! காப்பிதண்ணி தரட்டா?அய்யய்யோ! ஆத்தா! என்னப் போயி அண்ணேண்னு சொல்றிகளே, நாங்கள்லா கீழ்சாதி தாயி!என்னண்ணே கடவுள் படச்ச படைப்புல கீழ்சாதி, மேல்சாதி? எல்லாருமே மனுசங்கதான்னே. நீங்க ஒழக்கிறீங்க; நாங்க செலவு பண்றோம். இதுல என்னண்ணே இருக்கு? சரி காப்பித் தண்ணியக் குடிங்க!தாயி! எனக்கு காப்பித்தண்ணி குடிச்சா தாகந்தீராது. சின்ன வெங்காயம், மோர் கலந்த நீராகாரங் குடுங்க தாயி.மீனாட்சி ஒரு பாத்திரம் நிறைய கொடுக்க குடித்து விட்டு சின்னான் பாத்திரத்தைக் கழுவ எடுத்தான்.அண்ணே! நீங்க வயசுல மூத்தவங்க. வச்சிட்டுப் போங்க! வள்ளி கழுவுவா.ஆத்தா! அவுகலுங் கழுவக் கூடாது. எங்கள் விட சாதியில் அவுக கொஞ்ச ஒசத்தி!என்னாண்ணே! ஒங்களோட பெரிய இதாப் போச்சு! குறத்தி வேலாயி வந்து நின்றாள்.ஆத்தா! பிள்ளைங்களுக்கு தலைக்கு எண்ணெய் தேய்க்கட்டா? சுடுதண்ணி அண்டாவுல கொதிக்கப் போகுது.சரி வேலாயி! இந்தா எண்ணெய் என்று பித்தளைப் பாத்திரத்தில் பூண்டு, கறிவேப்பிலை போட்டு கொதிக்க வைத்து ஆறிய நல்லெண்ணெய்யை எடுத்துக் கொடுத்தாள் மீனாட்சி.பிள்ளைகள் நால்வரும் மனையில் அமர குறத்தி வேலாயி அவர்களுக்கு எண்ணெய் தேய்த்தாள்.ஆத்தா! நா உத்தரவு வாங்கிக்கிறேன்! என்றான் சின்னான்.அண்ணே! நாளக்கி வரும் போது நீங்க எனக்கு ஒரு கணக்குத் தரனும்.என்னாங்க ஆத்தா! அடிமை நா காத்திருக்கேன். பெரிய வேலைண்ணே – சாதாரணமா நெனக்காதீங்க! இது வயல்ல உழுகுற வேலையில்ல, அதவிடப் பெரிய வேலை.அது என்ன? சொக்கலிங்கமும் கண்களை அகல விரித்து மீனாட்சியைப் பார்க்கிறார்.இந்த நாட்டில எவ்வளவு சாதி இருக்கு; ஒவ்வொரு சாதிக்கும் இடையில எவ்வளவு தூரம் இருக்கு? இந்தக் கணக்கு எனக்கு வேணும்ணே… கட்டாயம் வேணும்.ஆத்தா! நானென்ன செய்வேன்னு கத்திக் கொண்டே ஓடினார் சின்னான்.பாத்திரங்களைக் கழுவி முடித்த வள்ளி, ஆத்தா! பாத்திரமெல்லாங் கழுவிட்டேன். பக்கத்து வீட்டு இருளாயிக்கு எந்த நேரம்னு இல்ல. இடுப்பு வலில இருக்கா. நா போயிட்டு வரவாத்தா!மொதல்லயே சொல்ல வேண்டியது தானே? சீக்கிரம் ஓடுடி. பாவம் அவ! பாத்திரம் கழுவுறதுக்கு என்னடி அவசரம் ஓடு! ஓடு.உணவுப் பொருள்களைக் கையில் எடுத்துக் கொண்டு மருத்துவச்சி வள்ளி வேகமாக ஓடினாள்.வெளியில் மாட்டு வண்டிச் சத்தம். கண்ணகி! ஆத்தா அடுப்பு வேலையா இருக்கே; வெளில தர்மர் மாமா வண்டி வருதா பாரு!ஆத்தா! அவுகலே தா. ராக்கு அத்தையுங் கூட வந்திருக்கு. மாமா சட்டி, பானை எல்லாத்தையு எறக்குறாரு. தாத்தா, பாட்டியும் வந்திருக்காக.மீனாட்சி வெளியே ஓடி வருகிறாள். வாங்கப்பா! அம்மா வாங்க! தம்பீ! ராக்கு! வாங்க வாங்க…ஆமாத்தா! கோயில் திருவிழா வரப்போகுதுல்ல. அதாங்.. ரெண்டு வண்டில கொண்டாந்திட்டோம்.ஆத்தா! ஒங்களுக்கு என்னா வேணும்?சித்தப்பு! எல்லா இருக்கு. சோத்துப் பானை ஒன்னும், மீன் குழம்புச் சட்டி ஒன்னும் வையுங்க போதும்.எவ்வளவு பாத்திரமிருந்தாலும் மண்சட்டில சமச்சாத்தே ருசி!அப்படியே தோட்டத்துல மாட்டுத் தொழுவத்தில் நாலு தொட்டி வச்சிடுங்க போதும். எறக்கிட்டு சாப்பிட வாங்க!கோழிக் குழம்பு, அவிச்ச முட்டையோடு மணக்க, மணக்க சாப்பாடு பரிமாற அத்தனை பேரும் சாப்பிட்டு முடித்தார்கள்.அக்காவுக வீட்டுக்கு வந்தாலே எங்க பசியெல்லாம் பறந்து போயிறுது என்றான் தர்மர் என்கிற உடையார்.எம்மக கைப்பகுவம் யாருக்கும் வராது என்றார் பொன்னுத்தாயி.உண்ட களைப்பில் அனைவரும் உறங்கி எழுந்து மறுபடி வண்டியில் மண்பாண்டங்களை அடுக்கிக் கட்டி மாட்டை வண்டியில் பூட்டிக் கிளம்பினர்.ஆத்தா! எல்லார் பசியும் போக்கிட்டே. எங்க குடும்பம் எங்க காலம் வரைக்கும் ஒம் வாசல்லதான் வண்டி கட்டி வந்து நிக்கும். வரட்டுமா ஆத்தா!வாங்க! பிரிவு வேதனை தருகிறது. அனைவரும் உறவு சொல்லிப் பிரிகிறார்கள். மீனாட்சி மனதில் ஏதோ சிந்தனை. பர்மாவின் ரங்கூனிலே பிறந்து இந்தியருக்கு வாழ்க்கைப்பட்டேன். எல்லாரும் உறவு என்றாலும் ஏதோ ஒன்று எனக்குத் துன்பத்தையும் தருகிறதே என்ன செய்வது?அண்ணமண்டி… என்ன செய்யிறீங்க? தெய்வானை ஆச்சி உள்ளே நுழைந்தார்.இருக்கே… வாங்க!ஏம்மீனாட்சி! என்ன யோசன? வர்றது வரட்டும் விடு!அண்ணமண்டி எத விடச் சொல்றீக?எங்க சாதியில பொண்னெடுக்காம எங்கண்ணே குடியானவ சாதியில ஒங்களக் கட்டிக்கிட்டதால எங்க சொந்த பந்தமெல்லாம் எதிரியாத்தான் பாக்குறாங்க… ஒங் கொணத்தப் பாக்கலியே…நா என்ன செய்யனும்னு நெனச்சிகிறாக?ஒண்ணுமில்ல.. ஒனக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான எல்லாத்தையும் செஞ்சி ஒன்ன வௌக்கிட்டு எங்க நகரத்தார் சாதியில பெண் பார்த்து அண்ணனுக்குக் கட்டலாம்னு பேசிக்கிறாங்க.ஒங்க அண்ணன் என்ன சொல்றாரு? தெய்வானை ஆச்சியின் மகள்கள் சிட்டாளும், சிகப்பியும் உள்ளே நுழைகிறார்கள்.எங்க அம்மான் நல்ல மனிதர். ஒரு வார்த்தைதான் சொன்னார். ஓங்கி அடிச்சாப்பல.. பூர்வீக சொத்துகள் எல்லாத்தையும் எடுத்துக்குங்க.. எம் மனைவி மீனாட்சியும் என் குழந்தைகளுமே எனக்கு சொத்து. உழைக்க ஒடம்புல இன்னும் வலு இருக்குன்னார்.தெய்வானையைத் திரும்பிப் பார்த்தாள் மீனாட்சி. அவர் மட்டுமில்ல நாணும் ஒழைக்கத் தயாராயிருக்கே என்கிற மீனாட்சியின் குரல் ஓங்கி ஒலித்தது."கிணற்றின் ஆழத்தையும், கயிற்றின் நீளத்தையும் பார்க்காமல் விட மாட்டேன்"அந்த நேரம் மீனாட்சியின் நெற்றித் திலகமும் அவள் பார்வையின் நிறமும் ஒன்று போலத் தெரிந்தது.அவுக.. பேசிக்கிட்டதத்தான் நாஞ்சொன்னே… இதுல எந்தப்பு எதுவுமில்லத்தா… என்றாள் தெய்வானை.தட்டில் தேன் குழலும், மணகோலமும் எடுத்து தெய்வானை முன் வைத்தாள் மீனாட்சி.தெய்வானையின் பார்வை அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் மீது படிந்தது.மீனாட்சி! ஒம் பொண்ணோடு விளையாடுற பிள்ளங்க யாரு?ஒருத்தி சுப்பிரமணிய அய்யரின் மகள் அலமேலு. இன்னொருத்தி மருத்துவச்சி மகள் சிந்தாமணி.அய்யர் பொண்ணு சரி. மருத்துவச்சி மகள உள்ள விடலாமா?ஏ! அண்ணமண்டி.. சிந்தாமணி உள்ள வௌயாடினா முற்றம் தேய்ந்து போகுமா?பிள்ளைமார் குடும்பத்துல பிறந்த நீயா இப்புடிப் பேசுறே? நீங்க சொல்லித்தா எனக்கே நினைவுக்கு வருது… இப்படி பேசாதீங்க அண்ணமண்டி.போதும்த்தா.. போதும். வெறுப்போடு எழுந்து சென்றாள் தெய்வானை.ஆத்தா! ஐயா இருக்காங்களா? கருப்புச் சட்டையோடு மருதுபாண்டி வந்து நின்றார்.உக்காருங்க! ஐயா கிட்ட சொல்கிறேன்.சொக்கலிங்கம் வெளிய வந்து.. வாங்க மருது! வாங்க! உக்காருங்க.. என்ன விசயம். என்னப்பார்க்க வந்திருக்கிங்க?அய்யா! பொண்ணுக்குக் கல்யாணமுங்க..நல்லது மருது!எல்லாச் செலவையும் ஓரளவு சரி பண்ணிட்டேன். இன்னங் கொஞ்சந் தேவைப்படுது. அய்யாவுக குடுத்தா மறுமாசம் திருப்பித் தந்திடறேன்.அதுக்கென்னப்பா… திருப்பியெல்லாந் தர வேண்டாம். நா ஒம்பொண்ணு கல்யாணத்துக்கு குடுத்ததா இருக்கட்டும்.இல்லங்க அய்யா.. நா ஒரு சுயமரியாதைக் காரன்னு ஒங்களுக்குத் தெரியும். திருப்பித் தருவதுதான் முறை. சரியான நேரத்துல நீங்க செய்யிற உதவிய நா என்னைக்கும் மறக்க மாட்டேன்.மருதுவை பெருமிதத்தோடு பார்த்து விட்டு இருங்க வர்றேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் சொக்கலிங்கம். அந்த சமயம் உள்ளே நுழைந்தார் மணியரசு. அவர் வந்தவுடன் ஏதோ ஒரு நெடி. அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால்போட்டு அமர்ந்தார்.கையில் பணத்தோடு வந்தார் சொக்கலிங்கம். "மனுசனுக்கு மனுசன் உதவாதவன் இந்த மண்ணுல இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?"மருது எழுந்து பணத்தைப் பெற்றுக் கொண்டார். மணியரசு நாற்காலியில் அமர்ந்தவாரே பேசினார்.மருது! செட்டியார்கிட்ட கூடக் கொஞ்சங் கேளு. பள்ளிக்கூடம், கோயில், அன்னதானமுன்னு அள்ளிக் குடுக்குறவுக தானே? நமக்குக் கொடுத்தா குறஞ்சா போகப் போகுது?மருது யாரு இவரு?என்னுடைய நண்பர் தானுங்கய்யா.. பேரு மணியரசு.அய்யா என்ன செய்றீங்க?சமுதாயத் தொண்டு.என்ன தொழில் செய்றீங்கனுன்னு கேட்டேன். பதில் இல்லை. பெற்றோர், மனைவி, குழந்தைகளெல்லாம் எப்பிடி பராமரிக்கிறீங்க?எல்லா நடக்குங்க… நம்ம என்ன செய்ய போறோம்? அதது நடக்கும் என்றார் மணியரசு.உங்கள் நண்பர்களுக்காவது உதவி செய்வீங்களா? அவுகவுக தன்னப் பாத்துக் கிட்டாலே போதும்! அடுத்தவுகல எதுக்கும் எதிர்பார்க்கக் கூடாது. அதுதான் பகுத்தறிவு!நல்லதுங்க! மருது உன் நண்பர் எப்படி?அய்யா! இவரப் பாத்து எதையும் முடிவு செஞ்சிடாதீங்க.. நல்ல நாத்துக்கு நடுவுல களைகளும் இருப்பது போல இப்படிப்பட்ட போலிகளும் அதிகமாகத் திரியுறாங்க! பகுத்தறிவுக்கும் பண்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க. இவுங்களக் களையெடுத்தாத்தான் சமுதாயம் உருப்படும்.மருது! நாஞ் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க? எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்."மனிதனுக்கு மனிதன் மரியாதை தரணும்; சாதி பேசப் படாது. கேட்டு வருபவருக்கு வைத்துக் கொண்டே இல்லையென்று சொல்லக் கூடாது. முடிஞ்ச வர உழைக்கணும். தன் பெற்றோரை, பெண்டு, பிள்ளைகளைக் காப்பாற்றும் கடமை உணர்வு வேணும்."அடுத்தவர் எப்படி நடந்துகனும்னு நீ நினைக்கிறியோ அது போல நாமும் நடந்துக்கணும்".அப்பிடி இந்த உலகத்தில் எல்லாரும் நடக்க ஆரம்பிச்சுட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.பகுத்தறிவு இயக்கம் கண்டு பாடம் நடத்தத் தேவையில்லையே? உங்களைப் போல உள்ளவங்களுக்கு வேலையே இருக்காது என்று சொல்ல இருவரும் மகிழ்வோடு சிரித்தனர்.போலி அங்கே தலை குனிந்து நின்றது.- புலவர் கண்மணி"