17 March 2015 7:14 pm
வகுப்பு கலகம் மூழும் போல் தெரிகிறது" என்று கூறியபடி வந்து அமர்ந்தார் அருள். அருள் மாவட்ட ஆட்சியர் ஆவார்! "அப்படித்தான் தோன்றுகிறது" எனக் கூறியவாறு அவர் எதிரே உட்கார்ந்தார் மாவட்ட வருவாய் துறை அதிகாரி பொன்னன்."எல்லாம் காதல் செய்யும் வினை!" என்று கூறி பெரு மூச்சு விட்டார் அருள்."திரைக் காட்சியும் தொலைக்காட்சியும் காதல் காதல் என்று கூத்தாடி இளையோர் மனதை உழையய்யடிக்கிறது" என்று ஆற்றாமைப்பட்டார் வருவாய் அதிகாரி. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாள். கல்லூரிப் படிக்கிறாள். அவளும் காதல் வலையில் சிக்கி சீரழிவாளோ எனும் அச்சம் அவர் மனதில் இருந்தது."வாலிபருக்கு காதல் வேண்டும்! காதலே வாழ்க்கையாகாது! என்றார் அருள். அவருக்கும் ஒரு மகன் உண்டு."காதலிக்கும் இளையோருக்கு வாழ்வியல் நடைமுறைப் பாடம் புரிவதில்லை! பள்ளிப் பருவத்தில் கற்பதே நன்று!" என்று கூறினார் பொன்னன்."நாம் விரும்பி என்செய்வது! பிரித்தாளும் சூழ்ச்சி திறன் கட்சியரிடமல்லவா ஆட்சி சட்டம் அதிகாரம் இருக்கிறது! அதை செயல்படுத்தும் ஊழியர்தாம் நாம்! என்று ஆற்றாமையொடு கூறினார் அருள்."கட்சி எல்லாம் சாதியமைப்பின் மறுபதிப்பு! சாதியே அவற்றின் பின்புலம்! இந்நிலையில் நாம் எவ்வொரு முடிவு எடுத்தாலும் கட்சி குறுக்கிடும்! என் செய்வது! ஆழ்ந்து எண்ணி முடிவெடுத்து செயல்படுவதே நன்று" என்றார் பொன்னன்."எவ்வளவுதான் எண்ணி முடிவு எடுத்து சரியானதை சொன்னாலும் ஏற்காமல் மறுப்பவரை என்செய்வது!" என்று உள்ளுள் குமுறினார் அருள்."காதலி கடைசி நேரத்தில் அவனை வாரியடித்துவிட்டாள்! அவனோ சாலை ஓரத்தில் பிணமாய் கிடக்கிறான்! எப்படி இறந்தான் என்பது மருமமாய் இருக்கிறது" என்று உரைத்தார் பொன்னன்."இதில் மருமம் ஒன்றுமில்லை. அவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளான்! எதோ ஊர்தி அடித்து தள்ளியது போல் தூக்கி வீசிச் சென்று உள்ளனர்! உடலம் தடயமியல் அறிக்கை துல்லியமாய் உறுதிப்படுத்துகிறது" என்று உறுதியோடு சொன்னார் அருள்.அப்போது அலுவலக உதவியாள் அவரரைக்குள் எட்டிப் பார்த்தார். அவர் பெயர் மணியரசு.அவரை உற்று நோக்கினார் அருள்."காவல் துறை கண்காணிப்பாளர் வரலாமா? என்று கேட்கிறார்" என உரைத்தார் அலுவலக உதவியாள்."வரச்சொல்" என்றார் அருள்.அறைக்குள் வந்து வணங்கி நிமிர்ந்து நின்றார் காவல்துறை கண்காணிப்பாளர் எழில்!"உட்காருங்கள்" என்று அருள் கூற, எழில் நாற்காலியில் அமர்ந்தார்."பதற்றமாய் தெரிகிறீர்கள் ஏதேனும் தகவுகள் உண்டா?" என்று வினாவினார் அருள்."ஆமாம் காதலனொடு செல்வதற்கு மறுப்புரைத்து பெற்றோரோடு சென்றிருக்கும் பெண் கிணற்றில் பிணமாய் மிதக்கிறாள்" என்று கலவரத்தோடு கூறினார் எழில்!என்னே! என்று மற்ற இருவரும் அதிர்ந்தனர்."அவள் இறப்பில் ஏதேனும் மருமம் உள்ளதா? தடயம் ஏதேனும் கிடைத்ததா?" எனக் கேட்டார் அருள்.அவள் அணிந்து இருக்கும் உள்ளாடைக்குள் கண்ணாடி இழைத்தாள் உறையில் ஒரு "தாள் மடல்" மடிப்புற்று இருந்ததாம். அதை என்னிடம் சேர்ப்பித்துள்ளனர். இதோ இதுதான் அது! என்று மடிந்திருக்கும் தாளை நீட்டினான் எழில்.அருள் அதை பெற்று மடிப்பு பிரித்து படித்து திருப்பி பொன்னன் கையில் கொடுத்தார். அவரும் அதை படித்து அதிர்ந்தார்."இச்செய்தி ஊடகங்களுக்கு தெரிந்தால் நாடே அமளி துமளிப்படும்" என்றார் ஆற்றாமையொடு அருள்."என்செய்வது இப்போது" என்று திகைப்போடு கேட்டார் பொன்னன்."முதல்வருக்கு இதுகுறித்து சொன்னேன். நீங்களே எப்படியாவது எல்லாவற்றையும் சரி செய்யுங்கள்." இதில் என்னை நேரடியாய் தொடர்பு படுத்தாதீர்கள் என்று கூறி விட்டார்! பொறுப்பு நம் தலையில் சுமத்தப்பட்டு விட்டது" என்றார் அருள்."ஏன் இவ்வாறு தட்டிக் கழிக்கிறார் முதல்வர்?" என்று புரியாமல் கேட்டார் பொன்னன்."எல்லாம் சாதி அரசியல் கட்சிகளின் நெருக்கடியும், அச்சுறுத்தலும்தான்" என்றார் அருள்."என்னே சாதியோ கட்சியோ; இடையில் நெருக்கப்படுவது நாம்தான்! நல்லது விளைந்தால் அரசுக்குப் பாராட்டு! தீமை ஏற்பட்டால் நமக்கு கெட்ட பெயர், இடமாற்றம், அலைக்கழிப்பு, உழைச்சல் எல்லாம்!" என்றார் பொன்னன்."அயலயல் ஊரைச் சேர்ந்தவரைக் கூட்டி வைத்துப் பேசி காதலித்தவர்களை குடும்பம் நடத்துவதற்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள்! என்று பக்குவமாய் விளக்கிக் கூறினேன். சட்டப்படி அவர்களை பிரித்தால் இயலாது. அவர்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்தோர். ஆகையால் அவர்களை பிரிப்பது முடியாது என்று கூறி அமைதிப்படுத்தி எழுதியும் வாங்கினோம்" என்று உரைத்து நிறுத்தினார் அருள்!"சாதிக்கட்சி அதில் புகுந்து குழப்பத்தை உருவாக்கிவிட்டது! இருசாரரும் மனம் மாறி மோதிக் கொண்டனர். வழக்கு மன்றத்தில் காதலித்திருக்கும் பெண் மிரட்டப்பட்டதால் பிறழ்ந்து உரைத்து காதலனொடு செல்லுதல் முடியாது என்று கூறி விட்டாள்! ஆனால் அவள் "மடல் தாளில்" பெற்றோரும் சாதி அமைப்பினரும் சாதிக் கட்சி பெருமுகர்களும் பெற்றோரையும், மற்றோரையும் கொன்று விடுவதாய் அச்சுறுத்தியதால் வழக்கு மன்றத்தில் பிறழ்ந்து கூறியதாகவும் எழுதி இருக்கிறாள்! அவளுடையக் காதலனையும் கொன்று விடுவோம் என்றும் அச்சுறுத்தியதாயும் எழுதி உள்ளாள்." என்றும் மனம் நொந்து தொடர்ந்து உரைத்தார் அருள்."தாம் கொல்லப்படுவோம் என்று தெரிந்துதான் மடல்தாள் எழுதி மறைத்து வைத்துள்ளாள்! அதே போன்று கொல்லப்பட்டு விட்டாள்!" என்று துன்பியல் வருத்தத்தொடு சொன்னார் பொன்னன்."காதல் இணையர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டு உள்ளனர்! ஆனால் தனித்தனி இடங்களில் வீசி எறியப்பட்டுள்ளனர்" என்று அவர்களின் உரையாடலில் கலந்து கொண்டார் எழில்."சாதி வெறியுடைய இரு வகுப்பு பெருமுகரும் இச்செயலில் இணைந்து செயல்பட்டதாய் உளவுத்துறை மூலம் தகவு கிடைத்துள்ளது! என்று தொடர்ந்து கூறினார் எழில்."எவ்வாறு" என வினாவினார் மாவட்டாட்சியர் அருள்."இரு வகுப்பாரும் தனித் தனியே கூட்டம் போட்டுப் பேசி உள்ளனர். சாதி அமைப்பின் கட்டுக் கோப்பை உடைவதற்கு விடக் கூடாது! அப்படி விட்டால் நம் போன்றவர் ஆளுமை செலுத்த முடியாமல் ஆக்கப்படும்! ஆகையால் அவர்களை கொன்று விட்டால் சிக்கல் தீர்ந்து விடும்! நாம் எப்போதும் போல் சாதிக் கட்சி ஆளுமை நடத்தலாம். இதுதான் ஒரே வழி! நம் சாதி கட்டுக்கோப்பை காப்பதற்கு வேறு வழி இல்லை என்று பேசி முடிவு எடுத்து திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்" என்று துயரத்தோடு கூறினார் எழில்."தனித் தனியே கூட்டம் போட்டு முடிவு எடுத்து இரு வகுப்பு பெருமுகர் சிலர் கூடிப் பேசி இதை செயல்படுத்துவதற்கு கூலிப்படை அமைத்துள்ளனர்! கூலிப்படையினர் பணம் பெற்றுக் கொண்டு அரக்கத்தனமாய் காதலர்களை கொன்றுள்ளனர். கூலிப் படையினரை வளைத்து பிடித்து சிறைப்படுத்தி விட்டோம்! அவர்களும் தாம் நடத்தியவற்றை விளக்கமாய் கூறிவிட்டனர். சாதி வெறி கொலை வெறியாய் மாறி இரு நல்லுயிர்களை பறித்து கூத்தாடி இருக்கிறது" என்று நொந்து உரைத்தார் தொடர்ந்து எழில்."இதில் ஈடுபட்டு இருக்கும் பெருமுகர் யார் யார் என்று துப்பு கிடைத்ததா? எனக் கேட்டார் அருள்."கிடைத்தது! இரு மாபெரும் அரசியல் கட்சி தலைவர்களும் பெருமுகர்களும் இச்செயலில் பின்புலமாய் செயல் பட்டுள்ளனர்" எனக் கூறினார் எழில்."அவர்கள் யார் யார் என்று தெரிந்ததா?" எனக் கேட்டார் அருள்."தெரிந்தது! சாதிக் கட்சி பெருமுகர் இருவர் மக்களிடம் பிரபலமானவர்! கட்சி தலைவர். இருவரும் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்! நால்வரையும் நெருங்கினால்.., நெருங்கினால் நம் பதவி பறிபோய் விடும்! நம் பிழைப்பும் கெடும்! நம் குடும்பத்தை நம்மால் காப்பாற்றுதல் முடியாது" என்று துன்பியலொடு கூறினார் எழில்."மனச் சான்றழித்து நடுநிலையற்று நாம் செயல்படுவது சரியாகுமா?" என்று துக்கத்தோடு கேட்டார் அருள்."சரியன்று! ஆனால் முதல்வருக்கும் இச்செய்தி தெரிந்து இருக்கும்! அவர் நம்மை பொறுப்போடு செயல்படும்படி கூறி தம் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டார்! அவர் நினைத்திருந்தால் சாமர்த்தியமாய் இச்சிக்கலை பிசிறறுத்து தீர்த்து இருக்கலாம்! அவருக்கும் உடன் மனப்பாடு இல்லை என்னும் போது என்செய்வது" என்று கூறினார் வருவாய்துறை அதிகாரி பொன்னன்."நான் எதிர்பார்த்ததை விடவும் கலகம் பெரிதளவு நடப்பதற்கு மேலும் சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார் அருள்."வழக்கு மன்றமாவது சூழ்நிலை சான்றுகளை வைத்து ஆராயாமல் பின்புலம் நிகழ்வுகளை தீராய்ந்து தீர்ப்பு சொல்லி இருக்கலாம்" என்றார் எழில்."இது மாமன்னர் காலத்து ஆட்சியன்று; மக்களாட்சி! ஆங்கிலேயர் அடிப்படை தற்சார்பு சட்டங்களை அப்படியே வழிமொழிந்து வழியமைத்து நடத்தும் அரசின் வழக்கு மன்றம் ஆட்சி! இதில் தீராய்வு சீராய்வை எதிர்பார்த்தால் முடியாது! என்றார் அருள்.அப்போது உதவியாளர் உள் நுழைந்து உதவி கண்காணிப்பாளர் வந்திருப்பதை உரைத்தார்! "வரச் சொல்"உதவி கண்காணிப்பாளர் குமரப்பன் பதட்டதோடு உள்ளே நுழைந்து "ஐயா பல்வேறு ஊர்களில் சாதிக் கலகம் மூண்டும் ஊரெல்லாம் பற்றி எரிகிறது!" என்று கூறினார்."என்னே" எனப் பதறி எழுந்தார் அருள். எல்லாரும் எழுந்தனர்! எல்லாரும் வெளியே வந்தனர்; அவரவர் சிருந்துகளில் ஏறினர்; சீறிப்பாய்ந்து விரைந்து சென்றதவை.ஒவ்வொரு ஊராகச் சென்று கலகத்தை அடக்குவதற்கு உரித்தாகும் உத்தரவுகளை இட்டார் ஆட்சியர் அருள்! அமைதி ஏற்படுத்துவதற்கு முனைந்தார் அருள்.ஓர் ஊரில் சாதி வெறி கொண்டோர் சிலோர் அவரை எதிர் கொண்டனர். சாதி வெறி பெருமுகரில் ஒருவர் கூவினார் "இந்தாள்தான் சாதி அமைப்பை உடைக்குமாறு காதலருக்கு திருமணம் செய்து வைக்கும் படி கூறியவன்! இவனை விடாதீர்கள்"வெறி கொண்டு சாதி அமைப்பைச் சேர்ந்திருக்கும் ஒருவன் குத்தீட்டியை அருள் மார்பில் பாய்ச்சினான்! அவர் குருதி வெள்ளத்தில் சாய்ந்தார். தமிழம் மக்களின் வீரமும் காதலும் சாய்ந்தது!- அ.ம.பெ.காவளர் தமிழறிவன்."