தசரதபுரம் - தமிழ் இலெமுரியா

17 June 2014 8:37 am

ஸ்ரீ இராமனின் முகம் இருளடைந்துப் போனது. ஏன்? அப்படி அவள் என்ன சொல்லி விட்டாள்? யாரும் அவள் என்ன சொன்னாள் என்பதைப் பற்றி மட்டும் பேசவே மறுத்தார்கள். அதைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் ராமனுக்கு கோபம் வந்ததுதான் மிச்சம். மீண்டும் மீண்டும் கேட்டால் ராஜாங்க காரியங்களில் பெண்கள் தலையிடுவதை ஏன் விரும்பவில்லை என்று மேலோட்டமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடன் வாதம் செய்வது எந்த வகையிலும் பலன் தரப் போவதில்லை. தசரதபுரம் திறப்பு விழா நிகழ்ச்சி அடிக்கடி அவள் நினைவில் வந்தது. அன்று, சீதா தேவிக்கு ஜே! தசரத ராமனுக்கு ஜே! கூட்டம் அலை மோதியது. எப்போதும் கூடும் கூட்டத்தை விட அதிகக் கூட்டம். அது தனக்கு வந்தக் கூட்டமில்லை. பட்டத்து ராணியும் பேரழகியுமான தன் மனைவி சீதாவைப் பார்க்க வந்திருக்கும் கூட்டம் என்பதை ராமனும் அவனுடன் இருந்த அவன் சகோதரர்களும் நன்கு அறிந்திருந்தார்கள். இலங்கையிலிருந்து வந்த பின் சீதாவுடன் ராமன் பங்கேற்கும் இரண்டாவது நிகழ்ச்சி இதுதான். முதலில் பட்டாபிஷேகம். அதில் அந்தணர்களும் மற்ற தேசத்து ராஜ குடும்பங்களும் முன்னிலை வகித்த்ச்ததால் எங்கேயோ தூரத்தில் நின்றுதான் சீதாப்பிராட்டியை பொதுமக்கள் பார்த்தார்கள். அனால் இந்த நிகழ்ச்சி அப்படியல்ல. இது பொதுமக்களுக்கான நிகழ்ச்சி. தசரதபுரம் திறப்பு விழா. வழியெங்கும் தோரணங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்க ஜனக்கடலைக் கடந்து மெல்ல ஊர்ந்து வந்தது சீதா அமர்ந்திருக்கும் தேர். ஆயிரம் அந்தணர்கள் வளர்த்த ஹோமத்தின் முன்னால் சீதாவும் ராமனும் பூசைக்கு உட்கார்ந்தார்கள். சீதா அருகிலிருக்கும் போதெல்லாம் சூரியனுக்கு அருகிலிருக்கும் நட்சத்திரமாகத்தான் சுருங்கிப் போவதாக உணர்ந்தான் ஸ்ரீராமன். அதனாலேயே அவளைப் பொது நிகழ்வுகளுக்கு அழைத்து வருவதில் அவனுக்கு அப்பஐ ஒன்றும் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. ஆனால் தசரதபுரம் திறப்பு விழாவுக்கும் கிரஹப் பூசைக்கும் சீதாப்பிராட்டியுடன் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று மந்திரிகள் ஆலோசனை சொன்னதால் தவிர்க்க முடியவில்லை. பூசை முடிந்து ஒவ்வொரு பெண்களுக்கும் பூவும் புத்தாடையும் தங்கத் தட்டில் வைத்து வழங்கினார்கள். ஒவ்வொருவராக வந்து வாங்கிக் கொண்டார்கள். அதிலும் சீதாதேவியை பக்கத்தில் பார்க்கும் அதிர்ஷ்டத்தை நினைத்து அங்கிருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதில் ஒரு பெண் மட்டும் வரிசையில் வந்து வாங்க மறுத்தாள். அவளிடம் மற்ற பெண்கள் எவ்வளவோ சொல்லியும் அவள் பிடிவாதம் பிடித்தாள். சத்தமாக அந்தப் பெண்களை நோக்கி கத்த ஆரம்பித்தாள். அவள் அந்தப் பெண்ணை மட்டுமல்ல பட்டத்துராணி சீதாப்பிராட்டியையும் சேர்த்துதான் திட்டுகிறாள் என்பது மட்டும் சீதாவுக்கு புரிந்தது. ஆனால் அவள் என்ன சொல்லி ஏசினாள் என்பதோ வேறு எதுவுமோ அவளுக்குப் புரியவில்லை. அவள் பேசிய மொழி வேறாக இருந்தது. அவளை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போர்வீரர்கள் இழுத்துக் கொண்டு போனார்கள். அவள் தசரதபுரத்தின் ஒவ்வொரு வீட்டு மேற்கூரைகளும் இடிந்து விழுந்தது போல கத்தினாள். தசரதபுரம் கட்டிக் கொடுத்த பெருமையில் பூரித்திருந்த ஸ்ரீராமனின் முகம் இருளடைந்து போனது. அப்படி அவள் என்ன சொல்லி இருக்கக் கூடும்? இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் போலிருந்தது. லட்சுமணிடம் கேட்டால் அயோத்தியின் வருங்கால அரச வாரிசை சுமக்கும் காலத்தில் தேவையில்லாமல் இம்மாதிரியான சின்னச் சின்ன விடயங்களை நினைத்து மனசைக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை சொன்னான். தசரதபுரம் அயோத்தியின் நகர் புறத்தைத் தாண்டிய ஒரு ஒதுக்குப் புறத்தில் கட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து பல பணிப் பெண்கள் அரண்மனை வேலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அதிகமாக அவர்கள் பேசியோ வீண் வம்பளப்பதோ இல்லை. அவர்கள் உண்டு அவர்கள் வேலைகள் உண்டு என்றிருந்தார்கள். அவர்களிடம் போய் நாட்டின் அரசி தசரதபுரம் பற்றி விசாரிக்க முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சீதா. அப்போதுதான் அவளுடைய நெருங்கிய தோழியும் இலங்கையிலிருந்து அவளுடன் வந்தவளுமான மேகலாவின் ஞாபகம் வந்தது. மேகலாதான் சரியான ஆள். ச்சே எப்படி இந்த எண்ணம் முதலில் வரவில்லை என்று எண்ணிக் கொண்டே சீதா மேகலாவைக் கூப்பிட்டாள். மேகலா இலங்கை அசோகவனத்தில் சீதையைக் கவனித்துக் கொள்ள இலங்கை அரசனால் நியமிக்கப்பட்ட பெண். ரொம்பவும் நல்லவள். இலங்கை அரசன் ராவனேஸ்வரனால் தனக்கு எதுவும் ஆபத்து வந்து விடுமோ என்று சீதை பயப்படும் போதெல்லாம் ஆறுதல் சொன்னவள். நம்பிக்கைத் தந்தவள். அம்மாதிரியான செயலை எங்கள் நாட்டில் செய்வதில்லை அரசி என்று உறுதியாகச் சொன்னவள். எல்லாம் முடிந்து இலங்கையிலிருந்து சீதா புறப்படும் போது கண்ணீருடன் நின்ற அவளைப் பார்த்து போகிறேன்" என்றுதான் சொல்லப் போனாள். ஆனால் அவளையும் அறியாமல் "வருகிறாயா" என்று கேட்டு விட்டாள். மேகலாவும் உடனடியாக சீதையுடன் கிளம்பி வந்து விட்டாள். அவளைப் பணிப்பெண் என்று சொல்வதில்லை யாரும். சீதையின் நெருங்கிய தோழியாகவே எல்லாரும் மதித்தார்கள். "என்ன தேவி, கூப்பிட்டீர்களா?" "மேகலை, தசரதபுரம் பார்த்தாயா?" "இல்லை தேவி, நீங்கள் தான் அரசருடன் செல்லும் போது இந்த தோழியை மறந்து விட்டீர்களே" என்று மேகலைச் சொல்லவும், அவள் தன் மீது குற்றம் சுமத்துகிறாளா? அல்லது சாதாரணமாக நடந்ததைச் சொல்கிறாளா? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.இப்போதெல்லாம் இப்பஐ யார் பேசினாலும் பேசும் சொற்களின் அர்த்தங்கள் மாறி அவளை அலைக்கழித்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. "தசரதபுரம் பற்றி உனக்குத் தெரிந்ததைச் சொல் மேகலை" என்று அதிகாரம் தொனிக்கும் குரலில் கொஞ்சம் அடக்கி கேட்டாள் சீதை. "என்ன சொல்லட்டும் தேவி, அயோத்திய பேரரசின் அந்தப்புரத்தில் அடைப்பட்டுக்கிடந்த சிறை எடுத்து கொண்டு வரப்பட்ட அண்டை நாட்டு பெண்களின் குடியிருப்பு என்று சொல்லட்டுமா? பிதா செய்த பெண் பாவத்தைப் போக்க மகன் செய்திருக்கும் நல்ல காரியம் என்று போற்றட்டுமா? உடல் அழகும் வனப்பும் மறைந்து உதிர்ந்து போகும் இலைகளுக்கு ஸ்ரீராமனின் அரசு வழங்கியிருக்கும் சலுகை என்று சொல்லட்டுமா? எப்படிச் சொன்னாலும் அரசி… எதுவுமே இழந்து போன அவர்கள் வாழ்க்கையை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியுமா சொல்லுங்கள்?" "ஏன் அவரவர் நாடுகளுக்கு அவர்களைத் திருப்பி அனுப்பிவிட வேண்டியதுதானே! ஆண்களுக்குள் நடக்கும் போரும் அதன் வெற்றி தோல்விகளுக்கும் அப்பாவிப் பெண்களைப் பலிகடாக்குவது எவ்வளவு கொடுமை… அந்தக் கொடுமையை அனுபவித்த எனக்குத்தான் தெரியும் அந்த வலியும் வேதனையும் என்னவென்று" பெருமூச்சுடன் சொன்ன சீதையைப் பார்த்து காயப்பட்ட புன்னகையைத்தான் தரமுடிந்தது மேகலையால். "என்ன மேகலை ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாய்?" என்று கேட்கும் சீதையிடம் என்ன சொல்ல முடியும்? சிறை எடுத்தது இராவணனேஷ்வரன் அல்ல, சிறைப்பட்ட இடம் எங்கள் அசோகவனம் அல்ல என்பதை எப்படி சீதையிடம் சொல்வது? யோசித்தாள் மேகலை. அவரவர் பிறந்த நாட்டுக்கு அனுப்புவதாகத்தான் இருந்தது. ஆனால் இந்தப் பெண்கள் மறந்து விட்டார்கள். அந்தப்புரத்தில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுடன் அவர்களை ஏற்றுக் கொள்ளுமா அவர்கள் நாடு? என்று மெதுவாகச் சொல்லிவிட்டு சீதையின் கூந்தலில் மலர்ச் சூட்டினாள் மேகலை. சீதையின் கூந்தலில் சூடிய மலரின் மணம் காற்றுடன் கலந்து மென்மையாக சீதையின் அந்தப்புரத்தைக் கடந்து தசரதபுரத்தை நோக்கிப் பயணித்தது. சீதையை நோக்கி கத்திய அந்தப் பெண்ணின் முகம் மீண்டும் மீண்டும் அவளை நோக்கி வந்தது. தசரதபுரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள், வாள் பயிற்சி, வேல் பயிற்சி, விற்பயிற்சியில் குதிரை ஏற்றத்தில் என்று நடமாடும் வாலிபர்கள்… எல்லார் முகத்திலும் ராமனின் சாயல்… ஆயிரம் ராமர்கள் தசரதபுரத்தில்… இதில் எங்கே இருக்கிறான் எனக்கே எனக்கான என் இராமன்? ஒவ்வொரு முகமாகத் தேடுகிறாள் சீதை… அருகில் போய் கண்ணோடு கண் நோக்கிப் பார்க்கும் போது இவன் தன் இராமனில்லை என்று புரிகிறது. ஓடிப்போய் இன்னொரு தோள் பார்க்கும் போது முகம் சாய்த்து உறங்கிய தோள்கள் இவன் தோள்களில்லை என்று உள்ளுணர்வு சொல்கிறது. உள்ளங்கைகளைப் பிடித்து உதடுகளால் பேசும் போது அந்தக் கைகளில் ரேகைகள் இவை என் இராமனின் கைரேகைகள் இல்லை என்று கண்டு கொள்கிறது காதலில் மூடியிருந்தக் கண்கள். அருகில் வந்து ஸ்ரீராமன் அணைக்கும் போது தீப்பட்ட விரல் போல சட்டென விலகிக் கொள்கிறது சீதையின் மனம். மூடிய இமைகள் திறக்கவில்லை. உடல் அனலாகக் கொதிக்கிறது. எப்போதாவது கண் திறக்கும் போது அருகிலிருக்கும் யாரையும் அடையாளம் காணாமல் வெற்றிடத்தை நிரப்பியிருக்கும் காற்றைப் போல அசையாமல் இருக்கிறது அவள் பார்வை. அவளுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எந்த மருத்துவராலும் கண்டு கொள்ள முடியவில்லை. உண்மையைச் சொல்லியிருக்க வேண்டாமோ.. என்று குற்ற உணர்வில் அவளருகில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் மேகலை. சீதையின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் நலம் கருதி அவளை அயோத்தியிலிருந்து வேறு எங்காவது அழைத்துச் செல்வது நல்லது என்று பிள்ளைப்பேறு மருத்துவர்கள் சொன்னார்கள். சீதையின் பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லலாமே என்று லட்சுமண் சொன்னான். எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சீதையுடன் மேகலையும் கூடவே தேரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். லட்சுமண் தான் தேரை ஓட்டினார். காட்டுப் பகுதி. இருட்டுவதற்குள் மிதிலை போய்விட வேண்டும் என்று வேகமாக குதிரைகளை விரட்டினான் லட்சுமண். குதிரைகள் களைத்துப் போயின. கொஞ்சம் நிறுத்தி குளத்தில் தண்ணீர் காட்டினான். தேரிலிருந்து இறங்கினாள் சீதை. எதுவும் சொல்லாமல் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தவளைக் கண்டு ஓடி வந்தான் லட்சுமண். எங்கே போகிறீர்கள் அரசி…? அசோகவனத்திற்கு… சீதைக்குப் பித்தம் கலங்கி விட்டதா என்று லட்சுமண் நினைத்தான். உங்கள் தசரத அரண்மனை வாசத்தில் என் குழந்தைகளை பிரசவிக்க எனக்கு விருப்பமில்லை லட்சுமணா… என்னைத் தடுக்காதே… தெளிவாக வந்த சீதையின் சொற்கள் அயோத்தி பேரரசை நடு வீதியில் நிறுத்தி சாட்டையால் அடித்தது போலிருந்தது… மேகலைப் பின் தொடர தெற்கு திசையை நோக்கி அடர்ந்தக் காட்டில் இருட்டில் நடக்கும் சீதையைப் பார்த்துக் கொண்டிருந்தான் லட்சுமண்.- கவிஞர் புதிய மாதவிகதையாசிரியர் கவிஞர் புதிய மாதவி மும்பையில் வாழ்ந்து வரும் ஒரு முன்னணி எழுத்தாளர். சமுகத் தளத்தில் சாதி, மதம், ஆணாதிக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக தன் கருத்துகளை அச்சமின்றி, ஆழமாகப் பதிவு செய்பவர். இவருடைய முதல் நூலான "சூரியப் பயணம்" தொடங்கி திறனாய்வுக் கட்டுரைகள், குறுநாவல்கள், சிறுகதைகள் என பல நூல்கள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்துள்ளன. அண்மையில் வெளியான "பெண் வழிபாடு" என்ற நூலிலுள்ள "தசரதபுரம்" என்கிற சிறுகதை இங்கு எடுத்தாளப் பெற்றுள்ளது. ஆங்காங்கே பல அயல்மொழிச் சொற்கள் இடம் பெற்றிருப்பினும் கருத்தாக்கம் கருதி நூலில் உள்ளவாரே வெளியிடப்பட்டுள்ளது.(-ஆசிரியர்)."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி