14 April 2014 5:30 am
புவனா.. இப்ப நீ எங்கே இருக்கே? வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது.காலேஜ்லம்மா என்றாள் சாந்தமாக."காலேஜ் விட்டாச்சா?"விட்டாச்சும்மா"என்ன காரியம்டி பண்ணிருக்கே? பண்ணி என்பதை உச்சரிக்கையில் பற்களை கடித்துக் கொண்ட சத்தம் கேட்டது."என்னதும்மா"பொண்ணு பார்க்க வந்திருக்குறாங்க."எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்மா….."என்னடி கிண்டலா?"என்னதும்மா?"நான் அப்பவே சுடிதார் வேண்டாம், வேண்டாமுனு தலையில் அடிச்சுக்கிட்டேன். நீ கேட்டுத் தொலைச்சியா?"அதனாலே என்னம்மா?"அதனாலே என்னவா? என் மானம் கப்பல் ஏறுது."புரியும் படிதான் சொல்லேம்மா?"ரெண்டு பேரு உன்னை பொண்ணு பார்க்கணுமுனு வீட்ல வந்து உட்கார்ந்திருக்கிறான்க…" என்றபடி வாயிலிருந்த காற்றை புஸ் புஸ் என வெளியேற்றினாள்."அம்மா!" என்றபடி அப்பாவை நினைத்துப் பார்த்தாள். பயத்தில் அவளுக்கு அட்ரீனஸ் சுரந்தது.உன் அப்பன் வீட்டுக்கு வருவதற்குள்ள நீ வீடு வந்து சேரு. பெத்த தோஷத்துக்கு கொஞ்சம் வேகமா வந்து என் மானத்தை காப்பாத்து… அலைபேசி உறவு சட்டெனத் துண்டித்துக் கொண்டது, என்ன செய்யலாம்? என்கிற கவலை புவனாவை சங்கிலிகளாக முறுக்கிக் கொண்டது……………………. நேற்றைக்கு முந்தைய நாள் பாக்கியம் சுடிதாரை உடுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தாள். அதை உடுத்துவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. அவளது அத்தனை உடைகளும் துவைக்கப்பட்டு மொட்டை மாடியில் காய்ந்து கொண்டிருக்கின்றன. ஈரமில்லாமல் இருப்பது பட்டுச்சேலை மட்டுமே. அதுவும் பீரோலுக்குள் இருக்கிறது. அதை எடுத்து உடுத்திக் கொள்ள அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. அடிக்கிற வெயிலில் ஒரு மணி நேரத்திற்குள் அத்தனை உடைகளும் காய்ந்து விடும். அதுவரைக்கும் மகளுடைய சுடிதாரை உடுத்திக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தாள் அவள்.இதற்கு முன் வரை அவள் சுடிதார் உடுத்தியதில்லை. உடுத்தித்தான் பார்ப்போமே… என நினைத்ததுமில்லை. அவளைப் பொறுத்தவரை சுடிதார் என்பது பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பட்டா செய்து கொடுக்கப்பட்ட உடையென்றே அவள் கருதி வந்தாள். அந்த நிலைப்பாட்டை பிறகு அவள் மெல்ல மாற்றிக் கொண்டாள் என்றாலும் சுடிதார் என்பது தனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே எண்ணினாள். அன்றைக்கு அதை உடுத்தியாக வேண்டிய கட்டாயம்.நீண்ட நேரமாக சுடிதாரை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த அவள் பிறகு அதை உடுத்தத் தொடங்கினாள். உடுத்திக் கொண்டே கண்ணாடியை நோக்கி ஓடி வந்தாள். இன்னும் அதை முழுமையாக உடுத்திக் கொள்ளவில்லை. வேகமாக மேலாடையை இழுத்து விட்டு, வட்டமான கழுத்தை இரு விரல்களால் நீவி விட்டுக்கொண்டாள். அப்படியும் அவளுக்குத் தெரியாமல் புஜத்தை ஒட்டியிருந்த ஆடை, மயில் தோகையைப் போல தூக்கிக் கொண்டு இருந்தது. ஆடை உடுத்தி, கூந்தலை சீவு, சடைப் பின்னி, பவுடர் பூசி, பொட்டு வைத்துக் கொள்ள பத்து நிமிடங்கள் போதுமானது. ஆனால் அன்றைய தினம் அவள் சுடிதாரை உடுத்தத் தொடங்கி அரை மணி நேரமாகி விட்டது. முழுமையாக உடுத்திக் கொண்ட திருப்தி அவளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. கண்ணாடியில் தன்னை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.பாக்கியம் புவனாவின் அம்மா. வயது, தாய்மை, முதிர்ச்சி எல்லாவற்றையும் மீறி அவள் இளமையாக இருக்கிறாள். பாக்கியத்தையும், புவனாவையும் ஒன்றாக நிற்க வைத்துப் பார்த்தால் பார்த்திபன் கனவு சினேகாவைப் போல ஒரு கரு இரட்டையர்களாகவேத் தெரிவார்கள். ஹைகூ வரிகளில் சொல்ல வேண்டுமெனில், பாக்கியத்தின் வண்ண நகல் இந்த புவனா அல்லது புவனாவின் அசல் இந்த பாக்கியம் என்றும் கூட வைத்துக் கொள்ளலாம். உயரமும் சரி, பருமனும் சரி கத்தரித்து படைத்ததைப் போல அப்படியொரு கச்சிதம். இப்போது பாக்கியத்திற்கு முப்பத்தாறு வயது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பார்க்க அவள் புவனாவேதான்.இருவரையும் எல்லா கண்ணாடிகளும் கருப்பாகவே காட்டும். கறுப்பு என்றால் இதுவரைக்கும் எந்தக் கவிஞனும் வர்ணிக்காத அழகுக் கறுப்பு. கறுப்பில் பல பேதங்கள் வந்தாகி விட்டது. ஆப்பிரிக்கக் கறுப்பு, கென்யக் கறுப்பு, மேற்கு வங்காளக் கறுப்பு……… அதில் இவர்கள் இந்தியக் கறுப்பு. இவர்களைப் போல அழகுப் பெண்கள் இந்த உலகில் மொத்தம் பத்து பேர் இருந்தாலே அதுவே அதிகம்தான்.பென்சில் வடிவம் போல் பிசிரற்ற உடல்வாகு. உச்சித்தலையில் நேர் வகிடு எடுத்து தலை வாரினால், தலையில் வாழை இலையை விரித்து வைத்தது போல இருக்கும். சுருண்டு நெற்றியில் விழும் அழகிய முடிகள் சாரைப்பாம்பாக பின்னால் தொங்கும் கூந்தல். துறு துறுக்கும் கருவண்டு கண்கள், தேங்காய்ச் சில் போல வெளீர் பற்கள்.புவனா கல்லூரி முடிந்து வரும் நேரம் இது. அவள் வருவதற்குள் சுடிதாரை கழட்டி வைத்து விட வேண்டும் என நினைத்தாள் பாக்கியம். சுடிதார் உடையில் தன்னை பார்த்து விட்டால்? பிறகு என் பாடு மகுடியிடம் பாம்பு படும் பாடுதான். உன்னை விடுவேனா என்பாள். அப்படி இப்படினு நிற்க வைத்து அவளுடைய மொபைலில் படம் பிடித்து விடுவாள். பிறகு அதைக் கழுவி, பிரேம் போட்டு மாட்டி விடுவாள். வெளியே எங்கும் கிளம்பினாலும் சுடிதார்தான் உடுத்தி வர வேண்டும் என கட்டாயப்படுத்துவாள். என்றவாறு மகளைப் பற்றிய நினைவுகள் கரைந்து கொண்டிருந்தன."அம்மா… செமையா இருக்கேம்மா" என்றபடி காணாததை கண்டது போல சிலையாக நின்று போனாள் புவனா. இவள் அம்மா தானா? அவளால் அனுமானிக்க முடியவில்லை. இரு கண்களையும் ஒருமுறை தேய்த்து விட்டுக் கொண்டாள்.மகளைக் கண்டதும் பாக்கியம் இரு கண்களையும் கைகளால் மூடிக் கொண்டாள். உடல் சங்கோசத்தாலும், நாணத்தாலும் உள்ளே ஒடுங்கிற்று. விரல் இடைவெளியில் மகளைப் பார்த்தாள். உடலை முறுக்கிக் கொண்டு சுவற்றில் ஒண்டினாள். இதற்கிடையில் புவனாவின் மொபைல் பாக்கியத்தை பளிச் பளிச் என படம் பிடித்தது."எப்படிம்மா.. இப்படி? என் கண்ணே பட்டிடப் போகுதும்மா…"கண்களிலிருந்து கையை எடுத்தவள் மோகனப் புன்னகையோடு "சும்மா.. உடுத்திப் பார்த்தேன்" என்றபடி பின்புறமாகக் கைகளைச் சேர்த்து இறுக்கி உடலை நெளித்த போது முகத்தில் வெட்கம் அப்பிக் கொண்டது. "அம்மா.. கண்ணாடியில பாரும்மா. என்னமா இருக்கே தெரியுமா? என்றபடி அம்மாவின் தோளைப் பற்றி குலுக்கினாள்.பாக்கியத்தின் கூந்தலை கம்பளித் துண்டு சுற்றியிருந்தது. அதன் நுனியில் கோர்த்திருந்த தண்ணீர் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. அம்மாவின் கூந்தலை வேகமாக துவட்டி விட்டாள் புவனா. இயந்திரம் போல இயங்கி சடுதியில் துவக்காலில் நெருப்பு மூட்டி அம்மாவின் கூந்தலில் சாம்புராணி புகைக்காட்டினாள். சுவாசத்தையே புனிதமாக்குவது போன்றிருந்தது அந்த மணம். அம்மாவின் முகத்தை திருப்பி அப்படியும், இப்படியுமாக பார்த்தாள்."அம்மா… ஒரே ஒரு குறை. அப்படியே இரு" என்றவள் ஓடி அலமாரியில் இருந்த சீப்பை எடுத்து வந்து சீவி விட்டாள். மறுபடியும் அம்மாவின் முகத்தை பார்த்தாள். தன் நெற்றியில் உள்ள பொட்டை எடுத்து அம்மா நெற்றியில் ஒட்டி அம்மாவை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அளந்து பார்த்தாள். இப்போதைக்கு அவள் வயதை இருபத்திரண்டு வயதுக்கு மேல் மதிக்க முடியாது. மகளை விடவும் பல மடங்கு அழகாக தெரிந்தாள்."அம்மா.. இனி உனக்கு எப்போதும் சுடிதான்.."உன் அப்பனுக்கு தெரிஞ்சா என் கழுத்தைத் திருகி உன் கையில் கொடுத்திடுவாரு."கொடுப்பாரு, கொடுப்பாரு. அவரு மட்டும் ஜீன்ஸ் பேன்ட் போடலாம்; டி-சர்ட் போடலாம். காலேஜ் பையன் பாதிரி ட்ரஸ் பண்ணலாம்! நீ மட்டும் பண்ணக் கூடாதா..? நீ இன்னைக்கு சுடிலதான் இருக்கணும்…"பாக்கியம் அந்தத் திருவிளையாட்டுக்கு இடம் கொடுக்காமல் சட்டென மாடிக்கு ஓடிச் சற்று நேரத்திற்குள் தமிழ் பெண்ணுக்குரிய தேசிய உடைக்குத் திரும்பினாள்.சற்று நேரத்தில் புவனாவின் அலைபேசி ரீங்காரமிட்டது. எடுத்துப் பார்த்தாள். அழைத்துக் கொண்டிருப்பது அவளுடைய அப்பாவாக இருந்தது. அலைபேசியை எடுத்து காதில் வைத்தவள் "சரிங்கப்பா.. சரிங்கப்பா.. சரிங்கப்பா.." என்றவாறு இருந்தவள், தொடர்பு துண்டித்துக் கொண்டதும் அவளை தலை கால் புரியாத மகிழ்ச்சி ஆட்கொண்டிருந்தது.ஏன்டி இப்படிக் குதிக்கிறே?"ஆபிஸ்ல நாளைக்கு இன்ஸ்பெக்சனாம். அப்பா இன்னைக்கும், நாளைக்கும் வீட்டுக்கு வர மாட்டாங்களாம். காலேஜ்ல நாளைக்கு நடக்குற பேரன்ஸ் மீட்டிங்க்கு உன்னை அழைச்சிட்டு போகச் சொன்னாரு.."அதுக்கு ஏன் இப்படி குதிக்கணும்?"காரணம் இருக்கே"அதத்தான் கேட்குறேன்?"நாளைக்கு என் கூட நீ காலேஜூக்கு வரப் போறே. எந்த ட்ரெஸ்ல வரப்போறே. சுடி, சுடி, சுடிதார்ல. வரப்போற" என்றவாறு கண்களையும் உதடுகளையும் படக் படக் என அடித்துக் கொண்டாள். பாக்கியம் முகத்தில் அநாயாசமும், ஆச்சரியமும் தொத்திக் கொண்டது."நாளைக்கு நீ காலேஜ்க்கு வரத்தான் போறே. அதுவும் சுடிலதான் வரப் போற" என்றபடி விரல்களைச் சொடுக்கியவள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்த சுடிகளை பொறுக்கினாள். ஒவ்வொன்றாக எடுத்து அம்மாவின் கழுத்தருகே கொண்டு சென்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக ரசித்தாள். கத்தரிப்பூ, சாம்பல் நிற ஜோடி அம்மாவிற்கு பொருத்தமாக இருந்தது. அதை அவசரமாக இஸ்திரி செய்தாள்.மறுநாள் கல்லூரிக்குள் இருவரும் நுழையும் பொழுது புவனாவின் தோழிகள் அவர்களை சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒருத்தி கேட்டாள். புவனா.. உனக்கு ரொம்பதான் தைரியம்ஏன்…? என்றவாறு நெற்றியைச் சுழித்தாள்.பெற்றோரை அழைச்சிக்கிட்டு வரச் சொன்னால், நீ உன் சிஸ்டரை அழைச்சிக்கிட்டு வாறீயே"பாக்கியம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் புவனா முந்திக் கொண்டாள். அக்கா காலேஜை பார்க்க ஆசைப்பட்டாள், அதான் அழைச்சிக்கிட்டு வந்திட்டேன் "என்றபடி வலது புறம் நாக்கைக் கொண்டு சென்று கன்னத்தை வெளியே குவித்தாள். அவளுக்குச் சிரிப்பு வந்து கிச்சு கிச்சு மூட்டியது.பாக்கியம் வெளிப்படையாகச் சிரிக்கவே செய்தாள். மேலும் பல தோழிகள் சூழ்ந்து கொண்டார்கள்.இரண்டு பேரும் இரட்டையர்களோ? எத்தனை வயது வித்தியாசம்? அக்கா கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுடி புவனா? அக்காவுக்கு ஏற்ற மாப்பிள்ளை எங்க ஊர்ல ஒருத்தர் இருக்கார் வந்து பார்த்திட்டு வரச் சொல்றேன். அக்காவைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டு, பிற்பாடு நீ கல்யாணம் பண்ணிக்கோ புவனா. அவசரப்பட்டு ரெண்டு பேரும் கல்யாணத்தையும் ஒன்னா வச்சிறச் சொல்லிடாதே… இப்படியாக விட்டேறித்தனப் பேச்சுகள் கரைய புவனா தொண்டை வரைக்குமா வந்த சிரிப்புகளை கடித்து உள்ளுக்குள் இறக்கிக் கொண்டாள். பாக்கியம் வாயைத் திறக்கவில்லை. பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல உம் மென ஓரிடத்தில் உட்கார்ந்து போனாள்.பல நாட்கள் அந்த சம்பவங்களை அம்மாவுடன் பகிர்ந்து கொண்டு முடியும் மட்டும் சிரித்தாள் புவனா. படுக்கையில் வளைந்து, உருண்டு புரண்டு சிரித்தாள். தூங்கு போதும் வாயில் சிரிப்பு உடைந்து கிடக்கும். சாப்பிடும் போது புரை ஏறும். தண்ணீர் குடிக்கும் போது வாயிற்க்குள் குமிழ் பறியும். குளியலறையில் என்ன, சமையலறையில் என்ன அம்மாவையும், தோழிகளையும் நினைத்து நினைத்து சிரித்தாள்.ஒரு நாளைக்கு எப்படியும் ஐந்தாறு தடவைச் சொல்லி தலையில் செல்லமாக கொட்டு வாங்கிக் கொள்வாள். "அம்மா… உன்னை இன்னைக்கு பொண்ணுப் பார்க்க வாறாங்க" என்றபடி மூக்கு விடைக்க . கன்னம் சிவக்க சிரித்தாள்.உனக்குத்தாண்டி இப்ப ஒன்னும் புரியல… அதைத் தவிர பாக்கியம் ஒன்றும் சொல்ல மாட்டாள். இருப்பினும் அவளது கண்கள் சிரிக்கும்.கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தாள் புவனா. அவள் பார்வைக்கு முன் வீடு இருந்தது. புத்தக மூட்டையை தோளில் கிடத்திக் கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்தாள், அம்மாவைத் தேடினாள்.பாக்கியம் ஒரு மூலையில் இடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள். அவளது இரு கன்னங்களும் கண்ணீரால் நனைந்து போயிருந்தன. மூக்கை சிந்திய படியும், கண்களை துடைத்த படியும் அவள் உட்கார்ந்திருந்தாள். இது நாள் வரைக்கும் பாக்கியம் அழுததில்லை. அழுதும் புவனா பார்த்ததில்லை. இன்று உடைந்து, நிலைகுலைந்து போய் உட்கார்ந்திருக்கிறாள்.அம்மாவை ஏறிட்டுப் பார்த்தாள் புவனா. அவளது முகத்தில் கோபம், வெறுப்பு, எரிச்சல் அனைத்தும் துலக்கமாகத் தெரிந்தன."அம்மா…"எப்போதுமாக இருக்கும் அம்மாவின் வசீகர முகம் உற்சாகமின்றிருந்தது. கன்னத்தில் கண்ணீர் சங்கமித்துக் கொண்டிருந்தன. முந்தானையால் கன்னங்களை துடைத்தபடி புவனாவை ஏறிட்டுப் பார்த்தாள்."அம்மா… சாரிம்மா"அவள் எதுவும் பேசவில்லை. பெருமூச்சை சிறு சிறு மூச்சுகளாக விட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவைப் பற்றி நெருக்கமாக உட்கார்ந்தாள். அவளது தோளைக் குலுக்கினாள்."என்னமா நடந்தது?"சொல்ல வாயெடுத்தாள் பாக்கியம். வார்த்தைகள் வந்து விழவில்லை. வெறும் வாயை மென்றாள்."வந்தவங்க எங்கேம்மா? என்றபடி வாசல் வரைக்கும் ஓடி நின்று நான்கு புறமும் பார்த்தாள்.பிறகு பொண்ணு பிடிக்கலைனு ஓடிட்டாங்களோ?" என்றபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.பாக்கியத்தின் நாசித் துவாரங்கள் விடைத்து, முகம் கலையிழந்திருந்தது. அம்மாவை இந்த கோணத்தில் பார்க்கையில் புவனாவுக்கு சிரிப்பு வந்தது. உதடுகளை உதறியபடி மெல்லச் சிரித்தவள், மீதச் சிரிப்புகளை விழுங்கிக் கொண்டாள். சற்று முன் வரை பாக்கியம் முகத்தில் இருந்த கடு முகம் இப்போதைக்கு இல்லை. கன்னங்களின் திசுக்கள் புன்னகையால் மலரத் தொடங்கின.முப்பத்திரண்டு பற்களும் தெரியும் படி வாய்விட்டுச் சிரித்தாள் புவனா. பதிலுக்கு பாக்கியம் சிரித்தாள். அந்த இடம் சில்லரைக் காசுகள் சிதறுவதைப் போல கல கலவென இருந்தது. இருவரும் நீண்ட நேரம் மாறி மாறி சிரித்துக் கொண்டிருந்தார்கள். சிரிப்பிற்கிடையில் புவனா அம்மாவின் கழுத்தைக் கவனித்தாள். தங்க சங்கிலிக்குப் பதிலாக மஞ்சள் கயிறு கழுத்தில் ஒட்டிக் கிடந்தது.- அண்டனூர் சுரா."