11 September 2016 2:00 pm
மரகதத் தொங்கலாய்த் தொங்குகின்றன வேப்பமரத்தின் காய்கள். காட்டுப் பூக்களின் வாசம் கும்மென்று ஏறுகிறது மூக்கில். குபீரென்று கிளம்புகின்றன பறவைகள். காலைக் குளிரும் இதமான சூரிய ஒளியும் புத்துணர்ச்சியைப் பாய்ச்சுகிறது நெஞ்சில். கண்சிமிட்டும் நெருஞ்சிப் பூக்கள் பாதை ஓரத்திலேயே பதிய வைக்கிறது மனதை. காலைக் காட்சிகளில் ஆழ்ந்துவிட்ட அறிவழகன் திடுக்கிட்டு திரும்பினான்.‘யார்ப்பா இன்னும் ஒரு டிக்கெட்டு’. அது தான்தான் என்று அறிந்ததில் மிகவும் வெட்கமாகி விட்டது அவனுக்கு. நடத்துனரின் முணுமுணுப்பு காதுகளை எட்டவில்லை என்றாலும் முகத்தின் கடுகடுப்பு கூடவா மறைந்து விடும்!சீட்டை வாங்கி சட்டைப் பையில் திணித்துக் கொண்டான். மீண்டும் சிந்தனையில் இறங்கத் தொடங்கினான்.‘‘அப்பாவுக்கு ஒடம்புக்கு முடியல! அவர பெரிய மருத்துவமனையில் கொண்டு போய் நல்லாக் கவனிக்கணும். அக்காவுக்கு மொதல்ல காதுக்காவது வழி பண்ணனும். கூரையைப் பிரிச்சிட்டு ஓடு போட்டுடணும். புத்தகங்களுக்கு மாசா மாசம் கொஞ்சம் ஒதுக்கணும், வாரத்துக்கு ரெண்டொரு தடவையாவது நூலகத்துக்குப் போயிவரணும், பாவம் அம்மா! எத்தனை நாளைக்குத்தான் கொல்லை கொல்லையா, தோட்டந் தோட்டமா கூலி வேலைக்கு போவா? மொதல்ல அத நிறுத்தணும், நல்லது பொல்லாததுக்குப் போகணும்னா கூட அம்மாகிட்ட நல்லதா ஒரு புடவை கூட இல்லை.எப்படியும் ஒருநாற்காலியாவது வாங்கிப் போடணும்; யாராவது வந்தாலும் பாயத்தானே போட வேண்டியிருக்கு. அது கூட பல்லு பல்லா பேந்து கிட்டு வருது.’’தலை வளைந்த நெல் வயல்கள், மதர்த்துத் திமிறித் தோகை விரிக்கும் கரும்புக் கூட்டம், விரல் விரலாய்க் காற்றில் அலையும் குச்சிச்செடிகள் என்று பின்நோக்கி வர பேருந்து முன் நோக்கிச் சென்றது.‘யார் சார் தீர்த்தமலை? எழுந்து வாங்க சீக்கிரம்!’ பெரிய கோயிலின் கோபுரம் பேருந்து திரும்பும் போதே கண்ணில் பட்டது. திரும்பி வந்து கடை வீதியும் நிறுத்தமுமான பொன்னையன் கடை முன்பு நின்றது. படையெடுத்து வருவதுபோல் வரும் பெருங்கூட்டம் ‘திபுதிபு’வென்று உள்ளே பாய்ந்தது. எப்படியோ ஒரு வழியாகக் கூட்டத்தைத் துளைத்துக் கொண்டு சாலையில் கால் வைத்தான் அறிவழகன்.பொரி வாங்குங்க? கற்பூரம் வாங்கிங்க" இப்படியான பல குரல்கள் சாலையோரக் கட்டில் கடைகளிலிருந்து மொய்த்தன. ஒரு தேநீர் கடைக்குச் சென்று உயர் நிலைப்பள்ளிக்கு எப்படிப் போகணும்’ என்று கேட்டான். ‘இப்படியே நேரா போனா ஒருபெரிய புளியமரம் அதுக்கு முன்னாடியே தெரியும் சார். பக்கந்தான். நேரா மேற்க போங்க!’சுற்றுச் சுவருக்கு உள்ளும் புறமுமாய் படர்ந்து விரிந்து கொண்டிருந்தது அந்தப் பெரிய புளியமரம். அதன் அருகிலேயே நுழைவாயில், நுழைவாயிலை நெருங்கிதும் வேகமாய் ஓடிவந்த மாணவன் ஒருவன் அறிவழகனைப் பார்த்ததும் ஓட்டத்தைக் குறைத்து, சிரித்த முகத்துடன் அருகில் வந்தான். நெடுநாள் பழகிய உரிமையோடு வந்ததுபோல இயல்பாய் இருந்தது அவனது செய்கை. ‘என்ன புதுசா வந்திருக்கியா? எந்த வகுப்பு’ -அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை. ஒரே திகைப்பு. தன் இளமை மீது ஒரு வித கர்வம் படர்வதாய் உணர்ந்தான். மகிழ்ச்சி ஒரு புறம், வியப்பு ஒரு புறம். ஒருகணம் எதுவும் தோன்றாமல், பின் ஒரு புன் சிரிப்பை மெதுவாக அவிழ்த்து, ‘ஆமா! புதுசாத்தான் சேர வந்திருக்கேன்’‘பத்துதானே’‘பத்துதான்.’‘ஏன், உங்க ஊர்ல எடம் இல்லியா?’‘இங்கே நல்லா சொல்லித் தர்றாங்களாம்! பயிற்சி முறைகளும் எளிமையா இருக்காம்! அதான் இங்கேயே வந்திட்டேன்.‘பராவால்ல! எனக்கொரு நண்பன் கெடச்சுட்டே’ தோள் மீது கைபோட்டான். அவனோ மெதுவாக நெளிந்து நளினமாய் விலகி இவன் கைகளைப் பற்றி குலுக்கி, ‘மிகவும் சந்தோசம் அப்புறம் பார்க்கலாம்’ என்று கழண்டு கொண்டான் அறிவழகன்.விசாரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் நேரே தென்பட்டது அலுவலகம். பாதையின் இருபுறமும் புங்கமரமும் வேம்பும் கிளைத்துக் குடை போல் விரிந்து குளிர்ச்சியைக் கொட்டிக் கொண்டிருந்தது. அலுவலக முன்புறக் கூரையின் மீது இளஞ்சிவப்பு பூக்கள் சிலுப்பிக் கொண்டு காற்றில் அசைந்தன. காக்கிச்சட்டை, அதை உள் செலுத்திய காக்கிக் கால்சட்டை அணிந்த ஒருவர் இடுப்பில் பெல்ட். லேசாக ஒடுங்கிய கன்னத்தை மறைத்துகொண்டு படர்ந்த பெரிய மீசை அது முடியும் இடத்தில் ஒரு மச்சம். அவர் அருகே வந்து ‘என்ன வேணும்’ என்பது போன்ற ஒரு பார்வையை விட, ‘புதுசா சேர வந்திருக்கிற….! அங்கே போ பி. டி. கிட்ட விண்ணப்ப படிவம் இருக்கு. காசு குடுத்து வாங்கிட்டு நெறைச்சு கொடு! போய் வாங்கிட்டு வா! ’‘வந்துங்க’‘என்ன வந்து போயி! சொல்றேன் இல்ல! சும்மா தொந்தரவு பண்ணாதே போப்பா!’‘இல்லீங்க! நான் புதுசா சேர வந்திருக்கிற வாத்தியாரு’‘அடடா! வாத்தியாரா? பாத்தா மாணவன் மாதிரித் தெரியறீங்க சார், (இப்போது மரியாதையுடன்) கோவிச்சுக்காதீங்க! வாங்க! வாங்க!’ அலுவலகத்தில், ‘அய்யாதான்.. நேத்திக்கு வந்துச்சிங்களே.. அப்பாயின்மென்ட் ஆர்டர் அது இவங்கதான்.’ ‘வாங்க!சார்! வாங்க! வாங்க!‘வணக்கம்’அலுவலகத்துக்குள்ளே ஒரு சின்ன தடுப்பு. அதற்குள்ளேதான் தலைமையாசிரியர் தடுப்புக்கு முன்னே வலதுபுறமும் இடது புறமும் எழுத்தரும், இளநிலை உதவி எழுத்தரும் இருந்தனர்.’‘சரவணா அந்த வருகைப் பதிவேட்டை எடு!’‘உட்காருங்க சார்!’‘பரவாயில்லைங்க!’தலைமை ஆசிரியரின் தலைக்கு மேலே சுவரில், காந்தி, காமராசர், அண்ணா, எதிர்பக்கம் பாரதியார், அம்பேத்கர் படங்கள், அடுத்து பள்ளி ஆண்டுவிழா குறித்த படங்கள் என அறை படங்களால் சூழப்பட்டிருந்தது. ‘பாருங்க சார் நீங்க மிகவும் இளைஞராக இருக்கிறீங்க, பணியை நல்லா செய்யணும். சுறுசுறுப்பா இருக்கணும். நேரத்துக்கு வந்துடணும். என்ன! எந்தச் சிக்கலானாலும் நேரே எங்கிட்டே வந்துடுங்க! இப்ப நேரம் என்ன? ஓ… நல்ல நேரந்தான் சரவணா கோபிகிட்டே இவருக்கு ஆறாவது சி டைம் டேபிளைக் குறிச்சி கொடுக்கச் சொல்லு’சரவணனுடன் அறிவழகன் பக்கத்து அறைக்குச் சென்றான் அங்கே கோபி என்பவர் இருந்தார். அவருக்கு பெரிய கண்கள். புருவ மத்தியிலிருந்து இறங்கி வளையும் தடித்த மூக்கு. புதியதாய்ப் போட்ட வெற்றிலைச் சிவப்பு, கூடவே அறையைத் தூக்கும் ஒரு நறுமண வாசனை. அவர் அறிவழகனைப் பார்த்து, ‘யாரு புது அப்பாயின்ட்மென்ட்டா?’ ‘வாங்க உக்காருங்க, நேத்திக்குத்தான் ஆர்டரைப் பார்த்தேன்… நீங்கதானா அது! இருங்க வர்றேன்’. பின்பக்கம் திரும்பி சன்னல் கம்பிகளுக்கிடையில் ‘சிதுக்’ என சாற்றைத் துப்பிவிட்டு ‘பேரு… ஞாபகத்திலே இருக்கு… சரி! நீங்களே சொல்லிடுங்களேன்.’‘க.அறிவழகன்’‘அறிவழகனா?’ எந்த ஊரு!’‘திப்பிரெட்டி அள்ளி!’‘திப்பிரெட்டிப் பட்டிம்பாங்க!’‘பட்டி பட்டிங்கறதெல்லாம்தான் அள்ளி அள்ளின்னு மாத்திட்டாங்களே!’பொம்மிடியிலிருந்து மேற்கே ரெயில்வேப் பாலத்துக்கு கீழே போவுமே அதுலியே போனா முன்னாடி பண்டார செட்டிபட்டி. அடுத்த ஊரு திம்பிரெட்டிப் பட்டி. பாப்பிரெட்டிப் பட்டி தாலுக்கா. சரிதானே!’‘ஆமாங்க’‘அந்த ஊர்ல முனுசாமிக் கவுண்டரத் தெரியுமா உங்களுக்கு?’‘தெரியுங்க’‘ அவருக்கு என்னா ஆகணும் நீங்க!’‘இல்லிங்க அவங்க வேற நாங்க வேறங்க!’‘அப்படியா’பால் சொசைட்டிக்கு மேற்கே ஒரு பச்சை மாடி இருக்குதே!’‘வரத ரெட்டியாருங்க!’‘அவருக்குச் சொந்தமா நீங்க!’‘இல்லைங்க!’‘பார்த்தா சின்ன பையன் மாதிரி இருக்குற!’ சரி! என்று அறிவழகனை தமது கண்களால் அளந்தவர், ‘ராஜமாணிக்கம் கண்டக்டர் என்னா வேணும்!’அறிவழகன் பொறுமையுடன் ‘தெரியுமுங்க! சொந்தம்லாம் இல்லீங்க!’அவர் தொடர்ந்து, ‘நெல்லு மிசன் வச்சிருக்கிறானே தங்கவேலு அவன் உங்க ஆளா?’‘ ரொம்ப வேண்டியவருங்க!’‘அப்படியா?’‘ பொம்மிடி பள்ளில உங்க ஊர்காரரு ஒருத்தர் தமிழ் பண்டிதரா இருக்காரே அவரு பேரு… தெரியுமா அவர’‘தெரியும் சார் ! அவரு பேரு வடிவேலுங்க.’‘ஆம்! வடிவேலு. வடிவேலு அவர் தம்பி மாதிரியே இருக்கிறியே!’ ‘இல்லைங்க எங்க வீட்ல நான்தாங்க மூத்தவன்!’என்று சொன்ன அறிவழகன் பொறுமையிழந்தவனாய், ‘ஏன் சார் சுத்தி வளைச்சி மூக்க தொடணும்? நான் என்ன சாதின்னு தெரிஞ்சுக்கணும் அவ்வளவுதானே!’எனச் சொன்னவன் தன் சாதிப் பெயர் தொண்டைக் குழி வரை வந்ததை விழுங்கியவனாய் நெஞ்சு நிமிர்ந்து சொன்னான் ‘நான் மனித சாதி!’ – இரவீந்திர பாரதி"