15 October 2015 1:55 pm
வாருங்கள்! வாருங்கள்! இப்படி உட்காருங்கள். இதை உங்கள் சொந்த வீடு போல நினைத்துக் கொள்ளுங்கள். வீடு விலைக்கு வாங்கத்தானே வந்திருக்கிறீர்கள்? ஆமாம். எனக்குத் தெரியும். இல்லாவிட்டால் மனித சந்தடியை விட்டு ஒதுங்கி இப்படித் தனியாக வாழும் இந்த நரைத்துப் போன கிழவியைத் தேடி எதற்காக வருகிறீர்கள்! பக்கத்து கிராமத்தில் விசாரித்து வழி கேட்டுக் கொண்டு வந்தீர்களா? சரி சரி. நான் இந்த வீட்டை பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு நயா பைசா குறைந்தாலும் கொடுக்க மாட்டேன். ஆனால் இந்தத் தொகை அதிகமல்லவென்று எனக்குத் தெரியும். யாராவது ஒருவர் இந்த வீட்டின் உண்மையான மதிப்பைத் தெரிந்து, நான் கேட்கும் விலையைக் கொடுக்க முன் வருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. வீடு பேய்வீடு போலப் பயங்கரமாக இருக்கிறதென்று நினைக்கிறீர்களா? உண்மையில் இது மிகவும் உறுதியான கட்டடம். பக்கத்துக் கிராமத்துக்காரர்கள், அந்த வீட்டில் உயிரோடு இருப்பவர்கள் யாரும் இல்லை. அங்கே வசிக்கும் கிழவி உண்மையில் ஒரு பேய்" என்று கதை விட்டிருப்பார்களே! எனக்குத் தெரியும். நீங்கள் இல்லை என்று தலையாட்டினால் நான் ஒத்துக் கொள்வேனா? இப்படியே கதை கட்டி விட்டு இந்த வீட்டை விற்க முடியாமல் கடந்த பத்தாண்டு காலமாக அவர்கள் இடையூறு செய்து வருகிறார்கள். ஆனால் உங்களைப் போன்ற ஒருவர் இதை வாங்கியே தீருவது என்ற உறுதியுடன் வருவார் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்! இந்த வீடு என் வீட்டுக்காரருக்கு அவருடைய நண்பரான ஜமீன்தார் ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்தது. அவர்கள் இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கம். என் பிள்ளை ஐந்து வயது பையனாக இருக்கும் போதே அவர் கண்ணை மூடி விட்டார். அப்புறம் எனக்கு அவன் ஒருவன்தான் துணை. அவனை, பக்கத்தூர் பள்ளிக்கு அனுப்பினேன். நன்றாகத்தான் படித்தான். ஆனால் பெரிய பையனாக ஆக ஆக அவன் போக்கு மாறியது. இரவு வேளைகளில் வீடு திரும்பாமல் எங்கோ சுற்றத் தொடங்கினான். நான் பயந்தேன். கவலை பட்டேன். அப்புறம் ஒருநாள் அவன் ஊரை விட்டே மறைந்து விட்டான்… என்ன? சொல்வதைக் கேட்டு வருகிறீர்களா? என்னடா இந்தக் கிழவி பெரிய தொண தொணப்பாக இருக்கிறாளே என்று நினைக்கிறீர்களா? அடேடே! நான் ஒரு முட்டாள்! வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்க மறந்துவிட்டுக் கதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேனே… என்ன சாப்பிடுகிறீர்கள்? டீ சாப்பிடுகிறீகளா? வேண்டாமா? சரி சர்பத் சாப்பிடுங்கள். நன்னாரி சர்பத் வைத்திருக்கிறேன். நன்றாக இருக்கும் உடம்புக்கும் நல்லது.இந்தாருங்கள் சர்பத் சாப்பிடுங்கள்! அவசரப்படாமல் மெல்லச் சாப்பிடுங்கள். ம்.. என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? எழுபது வயதாகி விட்டதல்லவா? அடிக்கடி மறதி வந்து விடுகிறது.. ஓ! ஆமாம். காணாமல் போன என் மகனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். காணாமல் போன அவன் நான்கு ஆண்டுகள் கழித்து திடீரென்று ஒரு நாள் இரவு வீடு வந்து சேர்ந்தான். சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இதோ இப்பொழுது போர்த்திக் கொண்டிருக்கிறேனே இந்தக் கம்பிளிச் சால்வை கூட அவன் வாங்கி வந்ததுதான். மும்பையில் பெரிய வியாபாரி ஒருவரோடு கூட்டாக வியாபாரம் செய்து வருவதாகச் சொன்னான் என் பிள்ளை. உங்களைப் போலத்தான் நல்ல உயரம். உங்களைப் போலவே சூட்டும் கோட்டும் அணிந்து கொண்டு ராசா மாதிரி இருப்பான். "வயதான காலத்தில் இந்தக் கிழவையை விட்டு விட்டுப் போய்விடாதே மகனே" என்று புலம்புவேன். "இனி இங்கேயே இருப்பேன் அம்மா" என்று ஆறுதல் சொன்னான். அடே! என்ன இது? கதை கேட்கும் மும்முரத்தில் சர்பத்தை அரைவாசி அப்படியே வைத்து விட்டீர்களே! சாப்பிடுங்க! சாப்பிடுங்க! இங்கேயே இருப்பேன் என்று சொன்னானா? நான்கு நாட்கள் கழித்து இரவு வேளையில் ஒரு ஆள் அவனைத் தேடி வந்தான். இருட்டில் அவனைச் சரியாக நான் பார்க்கவில்லை. நான் என் அறையில் தூங்கும் போது ஏதோ ஓசை கேட்டு விழித்துக் கொண்டேன். கதவைத் திறக்க முயற்சி செய்தேன். அது வெளிப்பக்கம் தாழிடப்படிருந்தது! நான் சத்தமிட்டு என் பையனை அழைப்பதற்குள் அவனுக்கும் புதிய மனிதனுக்கும் வாய்ச்சண்டை பலமாகி விட்டதைக் கேட்டேன்! அதிலிருந்து எனக்குச் சில விசயங்கள் தெரிய வந்தன. அவர்கள் சேர்த்த பணத்தை முழுவதும் ஒரு பொட்டியில் போட்டு அவன் என் மகனிடம் கொடுத்தனுப்பிவிட்டு, இப்பொழுது பங்குபோட வந்திருக்கிறான்! அதிகப் பங்கு அவனுக்கு வேண்டுமாம். எனக்குத் தலை சுற்றியது. வயிற்றைக் குமட்டியது. என்ன செய்வது? என் பிள்ளை சம்பந்தப்பட்ட விசயமாயிற்றே! எப்படியாவது போய்ச் சமாதானம் செய்யலாமென்றால் வெளியில் தாழ் போட்டுவிட்டார்கள். வெளியில் அவர்கள் சச்சரவு இன்னும் அதிகமாகக் கேட்டது. அதில் இன்னொரு விசயம் தெரிந்தது. என் மகன் பணப் பெட்டியை எங்கோ இந்தக் கட்டடத்தில் ஒளித்து வைத்து விட்டிருக்கிறான்! புதிய மனிதன் "அதைக் கொண்டு வா!" என்கிறான். என் மகன் ‘மாட்டேன்’ என்கிறான். சிறிது நேரத்தில் ‘கப்’பென்று சந்தடி ஓய்ந்து விட்டது! என்ன ஆயிற்று? அவர்கள் இருவரும் எங்கே சென்றார்கள்? தெரியவில்லை. பயங்கர அமைதி நிலவும் அந்தப் பாதி இரவைக் கழித்தேன். அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? ஐயா! மறுநாள் காலை என் மகன் மார்பில் கத்தியால் குத்துண்டு கிடந்தான்! கொலைகாரக் கூட்டாளி மறைந்து விட்டான்! போலீஸ் வந்தது. படம் பிடித்தது. அங்குல அங்குலமாக நிலத்தை அளந்தது. ஊரையே விசாரித்தார்கள். கொலைகாரன் எங்கே கிடைக்கப் போகிறான்? நான் அனாதையானேன். கொலைகாரன் என்றைக்காவது ஒரு நாள் அந்த பெட்டியைத் தேடி வருவான் என்று நான் எதிர்பார்த்தது…"ஏன் அய்யா! அப்படி முகத்தைச் சுளிக்கிறீர்கள்? சர்பத் கசக்கிறதா? கசக்காமலிருக்குமா? நான் அதில் விசத்தையல்லவா கலந்திருக்கிறேன்! என் மகனைக் கொன்ற உன்னைப் பழிக்குப் பழி வாங்க!" கவிஞர் புவியரசு, சென்னை"