15 July 2014 3:44 am
மாலை ஒளி மயங்கியதும் வானத்தில் பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்கள் சுடர் விட்டு மின்னிக் கொண்டிருந்தன. காந்தா சாய்வு நாற்காலியில் சாய்ந்த வண்ணம் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.உலகம் பாவம் செய்யாதே என்று சொல்லவில்லை; ஆனால் செய்வதை இரண்டு பேருக்குத் தெரியாமல் செய் என்று தான் சொல்கிறது" என்ற வரிகளைப் படித்ததும் அவளுடைய மனதில் மின்வெட்டுகள் தெறித்தோடின.புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, எழுந்து சாளரத்தின் ஓரமாகப் போய் நின்றாள்.எதிரே எல்லையற்ற பரந்த வெளியான நீலவானம் சரிகைத் துணிகளால் அலங்கரிக்கப் பெற்ற கருநீலப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தது."நான் செய்த பாவத்தை இரண்டு பேர்களுக்குத் தெரியாமல் மட்டும் செய்திருந்தால், இன்று…"கருநீல விழிகளில் நீர் தளும்பியது.அவளுடைய எண்ணங்கள் எதிர் நீச்சுப் போட ஆரம்பித்தன."காந்தா!""என்ன கண்ணா!""உன் அழகை அனுபவிக்கவே நான் பிறந்திருக்கிறேன் போலும்!""நீ என்ன சொல்லுகிறாய்?""நம் மாணவ உள்ளதிலே மலர்ந்திருக்கும் காதல் மலர் வாடிவிடக் கூடாது என்றுதான் சொல்லுகிறேன்.""நீ எதைச் சொன்னாலும் எனக்கு இனிக்கத்தான் செய்கிறது. ஆனால்…""உன்னை மறந்து விடுவேனென்று நினைக்கிறாயா?""இல்லை!""இல்லையென்றால் ஆனால் எதற்கு?""நாம் மணமக்களாக ஆனால் எவ்வளவோ ஆனந்தமாக இருக்கலாமே என்று தான் சொல்லுகிறேன்.""உன் நிகழ்காலக் கனவு வருங்காலத்தில் நினைவாகும். இப்பொழுது மட்டும்…""கண்ணா!""காந்தா!"கண்ணனுடைய கைகள் அவள் கழுத்தின் கீழ் சுருண்டு வளைந்தன. காந்தாவின் இதழ்களிலே இன்ப வெறி கூத்தாடியது. ……………………….. "ஐயோ, அம்மா!""என்னடி?""…………..""உனக்கு உடம்பு என்ன செய்கிறது?""வலி தாங்க முடியவில்லையே…""என்ன, வலியா?""ஆமாம் அம்மா… மருத்துவரைக் கூட்டிக்கொண்டு வாயேன்.""நீ நாசமாய்ப் போக! இந்தக் காரியம் இரண்டாம் பேருக்குத் தெரியக் கூடாதடி!""என் உயிரே போய்விடும் போலிருக்கிறதே!""வெளியில் தெரிந்தால் நம் குடும்பத்தின் கௌரவம், மானம் எல்லாமே போய்விடுமே…"சிறிது நேரம் அமைதி. பிறகு பலமான ஒரு கூக்குரல்.காந்தா கிரீச்சிட்டாள்.குழந்தை பிறந்துவிட்டது!காந்தாவின் தாய் கைகளைப் பிசைந்து கொண்டாள். அவளுடைய சிந்தனை தறிகெட்டு ஓடியது. மனதில் ஒரு பயங்கரமான எண்ணம் படமெடுத்துச் சீறியது."வீல்..ல்..ல்.."குழந்தையின் கழுத்தை அறுத்திக் கொன்று விட்டாள் அவள். காந்தா நினைவிழந்து கிடந்தாள். ………………….. கால வெள்ளத்தில் ஆண்டுகள் மூழ்கின. காந்தாவைப் பார்க்கப் பிள்ளை வீட்டார் வந்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் பலமான பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.விசயம் விபரீதமாகியது.பெண் பார்க்க வந்தவர்கள் வந்த வழியாகப் போய் விட்டார்கள். காந்தா கண்ணீர் வடித்தாள். கண்ணன் அவளுடைய வாழ்வுக் கிண்ணத்தில் கக்கிய நஞ்சு குடும்பத்தையே நச்சுப் பொய்கையாக்கி விட்டது.காந்தா உள்ளத்தை கல்லாக மாற்றிக் கொண்டாள். கல்லும், முள்ளும் அள்ளிக் கொட்டப் பட்டிருந்த தன்னுடைய வாழ்வில் ஒரு புதிய வழியைக் காண ஆரம்பித்தாள்.கண்மூடிச் சமூகத்திற்கு அவள் வைரியானாள். வாழ்விலே வளம் பெருக்க வளையாமல் நிமிர்ந்து நின்றாள்.சிந்தனையிலே உருவான சிற்பங்கள், பெண்ணினத்தைத் தாக்கவரும் கொடிய பழக்க வழக்கங்களைப் பேனா முனையால், கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வெடுக்கு வெடுக்கெனக் கடித்துக் கொண்டிருந்தாள். அனுபவம் அவளுக்கு ஆழ்ந்த அறிவைக் கொடுத்தது. …………………….. சாளரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த காந்தாவின் பார்வை விண்ணகத்தைத் துழாவியது.கீழ்க்கோடியில் சிறிது நேரத்திற்கு முன், கண் சிமிட்டுக் கொண்டு கர்வத்துடன் ஒளி வீசிய ஒரு நட்சத்திரம் நிலை பெயர்ந்து கீழே விழுந்தது.அதன் ஒளி மறையும் வரையில் அவள் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று உள்ளத்தில் ஒரு கற்பனை தோன்றியது. திரும்பி வந்து அவளுடைய குறிப்புப் புத்தகத்தில் பின் கண்டவைகளை எழுதலானாள்:"விண்மீனும் பெண்ணும்"பூமியில் உதிர்ந்த நட்சத்திர மலர்களை வானம் மறுபடியும் தன்மீது எடுத்து ஒட்ட வைத்துக் கொள்ளுவதில்லை. செடி, கொடி, மரங்களும் அப்படித்தாம்.அதேபோலச் சமூகமும் வாழ்க்கையில் வளங்கெட்ட பெண்களை ஏற்றுக்கொள்ள எளிதில் இடங்கொடுக்க மறுத்து விடுகிறது!அது ஏன்?பெண் பாவம் செய்து விட்டாளென்பதற்காகவா? அப்படியென்றால் அவளைப் பாவம் செய்யத் தூண்டியது யார்? பெண் சமூகமே பாவத்தின் பிரதிபிம்பமென்று இகழ்ந்து கூறும் இதிகாச புராணங்கள் தாமே சாவித்திரியையும், நளாயினியையும் உருவாக்கி விட்டன!பெண்களுடன் சமூகம் கண்ணாமூச்சி ஆடுகிறது. அதிலே அகப்பட்டவளைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது அது. பெண்ணும், நட்சத்திரத்தைப் போன்றவளே, வானத்திலிருக்கும் வரையில்தான் அதற்கு மதிப்பு. அது பூமியில் விழுந்து விட்டால் வெறும் கல்!விண்மீனின் அழகைப் பருகிய மனிதன், தன் காலடியில் கிடக்கும் கல்லைப் பற்றிச் சிந்திப்பதில்லை.ஒன்று வீழ்ந்ததும், மற்றதைப் பார்க்க ஆரம்பிக்கிறான் அவன்.ஆனால், பெண்கள் அதைபோல நடந்து கொள்ள இயலுமா?சருக்கு நிலத்திலே சதிராடும் சமூகமே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?அவள் அதை எழுதி முடித்துவிட்டுச் சிரித்தாள். வானத்தில் நிலவும் சிரித்துக் கொண்டே வெளியேறியது.- இளமைப் பித்தன்"