நியாயம்தானே! - தமிழ் இலெமுரியா

16 August 2014 9:46 am

நான் ஒரு எழுத்தாளன். முற்போக்கு எழுத்தாளர் சங்க துணைத் தலைவன். எழுத்தாளர்கள் எல்லாருமே முற்போக்கு எழுத்தாளர்கள்தான். அவர்களுள் முற்போக்கு – பிற்போக்கு எனப் பிரிப்பது பேதமை. என் கொள்கைப் படி நான் பத்மாவை மணந்தேன். அவள் ஏற்கனவே ஒருவரை மணந்து, அவரை மணவிலக்கு (விவாகரத்து) செய்திருந்தார். நான் அவளை என் மனைவியாக ஏற்றுக் கொண்டு மறுமணம் செய்து கொண்டேன். நானும் பத்மாவும் கடந்த ஓராண்டு காலமாக இனிமையாக வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு வாரமாகத்தான் என் மனதில் ஒரு சிக்கல். பத்மா நாள்தோறும் மாலை 5.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு வந்து விடுவாள். கடந்த ஒரு வாரமாக, குறிப்பாக மூன்று நாட்களாக அவள் வீடுக்கு வரும் நேரம் ஏழு, எட்டு என ஆகிறது. அவ்வளவு நேரம் கழித்து அவள் வரக் காரணம் என்ன? அவள் அலுவலகம் சரியாக 5 மணிக்கு மூடி விடுவார்களே! ஏன் இப்போதெல்லாம் 8 மணிக்கும் 9 மணிக்கும் இரவில் வருகிறாள். அவளை விசாரித்தேன். அலுவலகத்தில் அதிக வேலை என்றாள். அது சரியல்ல. அவள் அலுவலகம் 5 மணிக்கு சரியாக மூடிவிடுவார்கள். பின் ஏன் இந்த தாமதம்? அவள் எதையோ மறைக்கிறாள். அதைக் கண்டு பிடித்தாக வேண்டும். அதற்கு வழி? ஒரு நாள் நானே அவள் அலுவலகத்திற்கு போய் மறைவாக ஒரு இடத்தில் நின்று கொண்டேன். பத்மா அலுவலகத்திலிருந்து 5 மணிக்கு வெளியே வருகிறாள். நடந்து மூன்று வழிச் சாலையைக் கடந்து போகிறாள். நானும் அவள் அறியாமல் அவள் பின்னால் தொடர்ந்து போனேன். அவள் ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தாள். நானும் அவள் அறியாது பின் தொடர்ந்தேன். அவள் ஒரு அறையில் நுழைந்தாள். அங்கே படுத்த படுக்கையாக கிடப்பது அவளது முதல் கணவன். யாரை மணவிலக்கு செய்து விட்டு வந்து என்னை மணந்தாளோ அதே பழைய கணவன்! அவருக்கு இவள் மருந்து கொடுக்கிறாள். தலையணையை புரட்டி வைக்கிறாள். ட்ரிப்ஸ் (சொட்டு மருந்து) சரியாக இறங்குகிறதா? என்று பார்க்கிறாள். டாக்டர் வந்தவுடன் அந்த முன்னாள் கணவன் உடல்நலம் பற்றி கேட்கிறாள். அரை மணி நேரம் அவனுக்கு பணிவிடை செய்து விட்டு வெளியே வந்த அவள், நேராக எங்கள் வீட்டுக்கு வருகிறாள். நான் அவள் அறியாமல் ஒரு தானியில் (ஆட்டோவில்) ஏறி அவளுக்கு முன் வீட்டை அடைந்து விட்டேன்.  பத்மா வீட்டில் நுழைகிறாள். நான் அவளை எதிர்த்து ஏன் இவ்வளவு தாமதம் (லேட்)?" என்று கத்தினேன். அவள் தயங்கி நின்றாள். "உண்மையைச் சொல். எங்கே போய் விட்டு வந்தாய்! எனக்கு பொய் சொன்னால் பிடிக்காது" என்று கத்தினேன். முதலில் அவள் சற்று தயங்கினாள். "நீ சொல்கிறாயா? இல்லை நீ போன இடத்தை நான் சொல்லட்டுமா?" என்று இடித்தது போல உருமினேன். அவள் சொல்ல ஆரம்பித்தாள். "என் ஜாதகம் தோஷ ஜாதகம்; எனக்கு திருமணம் ஆகாமல் என் தந்தை தவித்தார். அப்போது என் முதல் கணவர் அவரை சந்தித்தார். அவர் குடும்பத்தாரிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டார் எனது தந்தை. என் நட்சத்திர பிரகாரம் எனக்கு மூல நட்சத்திரம். ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்பது அந்த நாளிலிருந்த வழக்குச் சொல்!. அதையெல்லாம் மறந்து அவர் என்னைத் திருமணம் செய்து கொண்டார். அவரது வீட்டாரின் எதிர்ப்பை அவர் பொருட்படுத்தாமல் எனக்கு வாழ்க்கை தந்தார். பின்னால் அவருக்கு கெட்ட உறவுகள் (சிநேகிதங்கள்) வந்தடைந்தன. குடி, சூது, வேறு பெண்கள் சேர்க்கை என பல பழக்கங்களுக்கும் அவர் ஆளானார். அந்த துன்பங்கள் தாளாது நான் அவரை மணவிலக்கு செய்தேன். பின்னர் முற்போக்கு எழுத்தாளராகிய நீங்கள் என்னை மணந்தீர்கள். ஒரு காலத்தில் எனக்கு வாழ்வு தந்த அவர் இன்று சாகக் கிடக்கிறார். முடியப் போகிற அவரது வாழ்க்கைக்கு கடைசி நேரத்தில் யாராவது சிறு சிறு சரீர உதவி செய்தால் அவர் மரணம் நிம்மதியாக முடியும். அந்தக் காரணத்தால்தான் அவருக்கு சிறு உதவி செய்ய முற்பட்டேன். இது தவறா?" என்று அவள் கேட்டு நிறுத்தினாள். நான் அவளை உணர்ந்து "நீ செய்ததுதான் சரி! என் சந்தேகம் பைத்தியக்காரத்தனம்" என்றேன்.- முக்தா வீ.சீனிவாசன்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி